ஒரு குழந்தையின்
கனவு, நினைவுகளுக்குள் நாம் போவது எப்படி
?
அப்படி ஏதாவது
அனுபவம் உங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கின்றது என்பதை உங்களிடம்
சொல்லத்தான் வேண்டும்.
அண்மையில்
சென்னையில் நடந்த புத்தக கண்காட்சிக்கு சென்று நூல்களை வாங்கி விட்டு
வெளியேறும்போது வாயிலில் ஒருவர் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை விற்றுக்
கொண்டிருந்தார்.
அவர்
முன் நீர் நிரம்பிய வட்டில் ஒன்று
இருந்தது. தகரத்தினால் செய்த சிறு படகினுள் சிறு கொழுந்தாக தீ எரிய அப்படகு “ டர்ர்ர்....
“ என ஒலி எழுப்பிக் கொண்டே அந்த
வட்டிலை சுற்றி சுற்றி வந்தது .
என் இளைய மகன்
அப்துல்காதிருக்காக அதை உடனே வாங்கிக் கொண்டேன்.
அந்த படகை
கையில் வாங்கியவுடன் எனது சிறு வயதின் நினைவுகள் உள்ளத்தின் ஆழ இடுக்குகளிலிருந்து
மெல்ல மேலெழும்பத் தொடங்கியது.
எனக்கு வயது
பத்து இருக்கும்போது குற்றாலத்தில் எனது வாப்பா இதே போன்ற ஒரு படகை வாங்கி
தந்தார்கள் . எனது உம்மா வீட்டில் உள்ள பெரிய வட்டிலில் இந்த படகை விட்டு ரொம்ப
நேரம் விளையாடியிருக்கின்றேன்.
கிட்டதட்ட
முப்பத்தெட்டு வருடங்கள் கழித்து அதே தகர படகை
காணும்போது எனது சிறு பருவம் , குற்றாலம் ,எனது தந்தை , எனது உம்மா வீடு , அன்று
உயிரோடு இருந்த உறவுகளின் இன்றைய இல்லாமை
, அந்த படகின் நினைவாகவே இரவும் பகலும் அலைந்தது என அனைத்தும் ஒரு நொடியின்
சொடுக்கலில் கண் முன் நிகழ் காட்சியாய் விரிந்தது.
இந்த தகரப்
படகை வாங்கிய செய்தியை அந்த இரவே என் மகனிடம் தெரிவித்தேன். அவன் மறுநாள் காலையில்
படுக்கையிலிருந்து எழுந்தவுடன் தான் கண்ட கனவில் இந்த படகு வந்ததாக சொன்னான்.
அதோடு படகு பாதுகாப்பாக இருக்கின்றதா ? என்பதையும் என்னிடம் கேட்டு
உறுதிப்படுத்திக் கொண்டான்.
சிறு திரியின்
நெருப்புச் சூட்டில் ஓடும் சின்ன தகர படகின் வழியாக என் இளமைக்கால வாழ்க்கைக்குள்
திரும்பி போய் வந்த கையோடு என் சிறிய குழந்தையின் கனவுக்குள்ளும் என்னால் நுழைய
முடிந்திருக்கின்றது.
எனது மகன்
இந்த படகை வைத்து விளையாடும்போது முப்பத்தெட்டு வருடங்களுக்கு முந்தைய எனது
வாழ்க்கையும் அவனது படகில் போய் ஏறிக்கொள்ளும்.
வாழ்வின்
நினைவுகளும் கனவுகளும் அதன் மேல் ஏறியவுடன் தகரத்தினால் ஆன அந்த
விளையாட்டுப்பொருள் காலப்படகு ஆக மாறி விட்டது.
எனது கடந்த
காலத்திற்குள்ளும் என் குழந்தையின் கனவுக்குள்ளும் எதிர்காலத்தில் அவனிடம்
சேமிப்பாக இருக்கக்கூடிய நினைவுகளின் சிற்றறைகளுக்குள்ளும் போக உதவிய அந்த
காலப்படகின் விலை என்ன தெரியுமா ?
வெறும் அய்ம்பத்து அய்ந்து ரூபாய்கள் மட்டுமே.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இது mrpamaran இணைய தளத்தில் 25/01/2015 அன்று
வெளிவந்துள்ளது.
http://www.mrpamaran.com/?p=7212
No comments:
Post a Comment