தானிய வணிகர் ஒருவர் தன்னை உறுத்தி சிதைக்கும் பிரச்னைகளுக்கான
தீர்வை வேண்டி ஞானியிடம் சென்றார். மனதிலும் உடலிலும் பதட்டம் வழிய வந்த வணிகரை அமர
வைத்து அவரது சிக்கல்களை சொல்லக் கேட்டார் ஞானி.
“ கொஞ்ச காலமாகவே எனக்கு எல்லா வகையிலும் சிக்கல்களுக்கு
மேல் சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றது. தானியக்கிடங்கு தீப்பற்றிக் கொண்டதில்
கோடிக்கணக்கில் இழப்பு. தீர்த்த பயணம் சென்ற இடத்தில் புனித நீராடும்போது ஆற்றில் மூழ்கி
இறந்து போனாள் என் மனைவி.
தொழிலுக்கு உதவியாக இருக்குமே எனக்கருதி எனது மூத்த
மகனை வெளிநாட்டிலுள்ள புகழ்பெற்ற வணிக பயிலகத்தில் ஏராளமாக செலவு செய்து படிக்க வைத்தேன்.
அவனும் அதில் சிறப்பாக தேர்ச்சி பெற்று நாடு திரும்பி வந்து எனது தொழிலுக்கு பெரும்
உதவியாக இருந்து வந்தான்.
அவன் எங்களுக்கு ஒரே பிள்ளை. அம்மா ஆற்றில் மூழ்கி
இறந்த துயரத்தை தாங்கவியலாமல் அவனது மன நிலை பிறழ்ந்து விட்டது.
இந்த தொடர் துயரங்களினால்
எனது உடல் நலம் அடிக்கடி குலைகின்றது. இதை பயன்படுத்தி எனது பணியாளர்கள் மோசடி செய்கின்றனர்.
இது இப்படியே போனால் நான் உயிரைத்தான் விட வேண்டி வரும் என ஞானியின் கரங்களை பிடித்து
கதறினார்.
அவருக்கு ஆறுதல் சொன்ன ஞானி, வணிகர் நிதானமடையும்
வரை காத்திருந்து விட்டு தனது வீட்டிற்கு வெளியே அவரை அழைத்து சென்றார்.
கொஞ்ச தொலைவு நடந்த இருவரும் பெரும் திடலொன்றினை
அடைந்தனர். அங்கு நிறைய மரங்கள் நின்றன. திடலின் ஓரத்தில் கழித்துக் கட்டப்பட்ட ஏராளமான வீட்டுப் பயன்பாட்டு
பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. தரை
முழுக்க காய்ந்த இலை சருகுகள், பறவைகளின் உதிர்ந்த சிறகுகள் பரவிக்கிடந்தன.
அங்கிருந்த பாறை திண்டில் இருவரும் அமர்ந்தனர். அது
மாலை நேரம் . கதிரவனின் சிவப்பொளியும் இதமாக இருந்தது. காற்றின் அசைவில்லை அந்த திடலில்
இவர்கள் இருவரையும் தவிர வேறு யாருமில்லை.
ஞானி ஏதாவது சொல்வார் என என காத்திருந்தார் வணிகர்.
அவரோ மௌனப் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.
கொஞ்ச நேரத்தில் காற்று வீசத் தொடங்கியது.
சிறு குழந்தையைப் போல தவழத் தொடங்கிய காற்று மெல்ல வலுக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில்
திடலுக்குள் வட்டச்சுழலாக சுழன்றது காற்று. தரையிலிருந்த சருகுகளையும் பறவைகளின் சிறகுகளையும்
காற்றானது தனது அரூபக்கரங்களால் எல்லா திசைகளிலும் தூக்கி எறிந்தது. அவையோ மிக உயரத்தை
எட்டின. திடீரென திடலின் பக்கவாட்டில் இறங்கின. தரையை தழுவிக் கொண்டு மையத்தில் பல்வேறு
கோலங்களில் பறந்தலைந்தன.
இவையனைத்தையும் இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே
திடலின் ஒரு ஓரத்திலிருந்து பெருத்த ஓசை கிளம்பியது. அந்த ஓசையுடன் கண்ணாடிச் சில்லுகள்
உடைந்து சிதறும் ஓசையும் பின் தொடர்ந்தது. வணிகர் பதற்றத்துடன்
ஞானியைப் பார்த்தார். அவரோ மாறாப் புன்னகையுடன் திடலையே பார்த்துக் கொண்டிருந்தார்.
தொடர்ந்த காற்றின் வீச்சில் சருகுகளும் சிறகுகளும் திடல் முழுக்க மிதந்து கொண்டிருந்தன. அரை நிமிட உக்கிர நடனத்திற்குப்
பிறகு மெல்ல தணியத் தொடங்கியது காற்று . படிகளில் இறங்கி வரும் குழந்தையைப் போல சருகுகளும்
சிறகுகளும் வான் வெளியிலிருந்து கிறுகிறுவென சுழன்று சுழன்று தரையில் இறங்கி முன்னும்
பின்னும் உருண்டு புரண்டு மீண்டும் பழைய நிலையை அடைந்தன.
வணிகரின் கையை பிடித்து எழுப்பி ஓசை வந்த இடத்தை
நோக்கி அழைத்து சென்றார் ஞானி. மூலையில் குவிக்கப்பட்டிருந்த பழைய பொருட்களிலிருந்துதான்
அந்த ஓசை கேட்டது. கண்ணாடி பதித்த மரப்பேழையொன்று காற்றின் வேகத்தில் குப்புற சரிந்து
தரையில் மோதி உடைந்து ஐந்து துண்டுகளாய் கிடந்தது. கண்ணாடி சில்லின் சிதறல்களும் அருகே
விரவிக் கிடந்தது.
இப்போது ஞானி பேசத் தொடங்கினார்:
“ வாழ்வில் வரும் துன்பமும்
இன்பமும் காற்றின் அரை நொடி சுழற்சிக்கு சமமானதே. மரப்பேழைக்கும் சருகு சிறகுக்கும்
சேர்த்து ஒன்று போலவே காற்று வீசியது. ஆனால் ஆனால் அதன் பின் விளைவுகள் ஒன்று போல இல்லை.
காற்று எத்தகைய கொடும் வடிவமும் பூண்டு வரட்டும். அதன் வீச்சுக்குள் உன்னை உதிர்ந்த
சருகு போல ஒரு சிறகு போல ஒப்படைத்து விடு . வாழ்வின் மிகப்பெரும் அலைக்கழிப்பு கூட
உனக்கு இனிய மிதத்தல் பட்டறிவாக மாறும். “
https://tamil.thehindu.com/society/spirituality/article24469518.ece?utm_source=spirituality&utm_medium=sticky_footer
No comments:
Post a Comment