படுக்கையில் புரண்டு புரண்டு கிடந்தேன். இளம் வெயில் கீற்றானது சன்னல் கிராதிகளினூடாக கடந்து வந்து அறைக்குள் கட்டம் செவ்வகம் என வரைந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒரு வேலையும் இல்லை. வெளியே தெருவில் பள்ளி ,கல்லூரி பேருந்துகளின் ஹர்ர்... ஹர்ர்... என்ற இரைச்சல் எரிச்சலை ஊட்டியது . மிதந்து அலையும் கழுகு போல மனம் இலக்கின்றி அலைந்து அலைந்து சலித்துக்கொண்டிருந்தது.
“வாப்பா போன்
அடிக்குது” என்றவாறே என் கையில் போனை திணித்து விட்டு பள்ளிக்கூடத்திற்கு
கிளம்பிக் கொண்டிருந்தான் என் இளைய மகன் .
“ ஹலோ யாருங்க
?
சார் வணக்கம்
! நான் திருனவேலியிலேந்து சிவராமன் பேசறேன். நீங்க பாலை கபீர் சாருங்களா ?
ஆமா சார் .. சொல்லுங்க
...
தோழர் மகேஷ்
ஒங்க நம்பர கொடுத்தாரு.
ஆங்,,, சரி சரி..
ஏதோ பட ஸ்கிரீனிங்க் விஷயமாக உங்கள கான்டாக்ட் பண்ணுவாங்கனு சொன்னாரு.
ஆமா ஸார்.
வர்ற 26 ஆம் தேதி எங்க பரணி பிலிம் ஸொசைட்டி சார்புல ஷாஹித் ஆஸ்மி படம் போடறதா
இருக்கோம். படம் முடிஞ்ச பின்னாடி நீங்க அது பத்தி பேசுனா நல்லா இருக்கும்.
படம்
எதப்பத்தி சார்.
அது ஒரு
பொலிட்டிக்கல் ஃபில்ம் சார்.
ஓகே சார். நான் கண்டிப்பா வர்றேன். அதுக்கு முன்னாடி
படத்தோட டிவிடிய கொரியர்ல அனுப்பிடுங்க சார்.
கண்டிப்பா..
அட்ரஸ வாட்ஸ் அப்ல அனுப்பிடுங்க. நான் டிவிடிய இன்னைக்கே அனுப்பிடறேன்.”
அவர் சொன்ன
மாதிரியே அடுத்த நாளே நேர்த்தியான தடித்த
பழுப்பு உறையில் டிவிடி வந்து சேர்ந்தது. படத்தை ஒரே மூச்சில் பார்த்து
முடித்தேன்.
படம்
உண்டாக்கிய அதிர்வுகள் மனம் முழுக்க கொப்பளித்துக் கொண்டிருந்தது.
இந்த நினைவுகள்
தணியும் முன்னரே லேப்டாப்பில் அது பற்றிய எனது எண்ண ஓட்டத்தை ஒரே மூச்சில் எழுதி
முடித்தேன்.
அடுத்த நாள்
சிவராமனின் போன் வந்தது.
“ சார் , படத்த
பாத்தியேளா ? ரொம்ப டிஸ்டர்ப் பண்ணியிருக்குமே ?
ஆமா சார்.
படம் முடிஞ்ச பொறவு ஒரு நா முழுச அதே நெனவாவே இருக்கு. எனக்கு எழுத வர்ற அளவுக்கு
பேச வராதுதான். ஆனாலும் இந்த படத்த பாத்த பொறவு அதப்பத்தி பேசிறனும்னு முடிவு
பண்ணிட்டேன் சார்.
ரொம்ப நல்லது
சார். நிகழ்ச்சிக்கு மறக்காம வந்திருங்க. ஒங்களுக்கு பஸ்ஸ விட
திருச்செந்தூர்லேருந்து வர்ற திருனவேலி பாஸஞ்சர் ட்ரெயினல வந்தா பாளயங்கோட்டயில
எறங்கிருங்க. அங்கேயிருந்து நம்ப வீடு
பக்கம்தான் “.
ஆமாஞ்சார்.
மதியானம் ரெண்டு மணிக்கு வண்டி . அதுல ஏறுனா மூணு மூணரை மணி போல பாளயங்ககோட்ட
வந்துரும். எறங்கறதுக்கு முன்னாடி போன் பண்ணுறேன்
ஓகே சார்.
````````````````````````````````````````````````````````````
மறு நாள் காலை
அதிகாலை தொழுகையை தொழுது விட்டு வீட்டுக்குள் வரும்போது டீயை அலுமினிய
பாத்திரத்திற்குள் வடித்துக் கொண்டிருந்த என் மனைவி , ஏங்க அபூபக்கருட மச்சினன் வீட்டு கலியாணம் இன்னிக்கு
காலய்லனுதானே சொன்னீங்க , போறீங்களா ? என கேட்டாள்.
டீ குடிக்க
முன்னாலயே மதியான சாப்பாட பத்தி பேசுறீய என்ன விஷயம் ? போவாம இருந்தா இங்க செலவு மிச்சம் பிடிக்க
ஏலாதுல்ல என்றேன்.
காலய்லிலேயே ஒன்னு கிடக்க ஒன்னு பேசாதீங்க . ஆமா
ஒங்க ஒரு வேள சோத்துக்காச வச்சு சொத்தா சேர்க்க முடியும். ஆளப்பாருங்களேன் தொடர்ந்து
கலியாண சாப்பாடா இருக்கே. அதான் ஒங்க உடம்புக்கு ஒத்துக்குமோ ஒத்துக்காதோன்னு
தெரியலியேன்னுதான் கேட்டன். நல்லதுக்கு காலமில்ல. போனா போங்க போகாட்டி கெடங்க
எனக்கென்ன ”
சும்மா
இருந்தவளை சீண்டிய நிறைவில் “சரி சரி பேச்ச உடு “ என்றவாறே கோப்பையில் டீயை ஊற்றிக்கொண்டே அடுப்பங்கரையை
விட்டு வெளியேறினேன்.
பேப்பர்
படித்து ஒரு குட்டித்தூக்கம் போட்டு குளித்து முடிக்கவும் மணி பத்தே முக்கால் ஆகி விட்டது.
பிரின்ஸ்
தெருவிற்கு கிளம்பினேன். அபூபக்கர் வீடு அங்குதான் உள்ளது.
அவன்
வீட்டிற்கு முன்னால் யாரையும் காணோம். கலியாணம் பெரிய பள்ளிவாசலில்.வைத்து
நடைபெறுவதாக சொன்னார்கள். காலையில் டிஃபன் எதுவும் சாப்பிடாததால் வயிற்றுக்குள்
பசியானது பெரும் படலம் போல கிளம்பி வயிற்றை கீறிக் கொண்டிருந்தது.
தெரு முனையில்
அபூபக்கர் வெள்ளை பைஜாமுவும் குர்த்தாவும் போட்டு காலை லேசாக வளைத்தவாறே நடந்து
வந்து கொண்டிருந்தான்.
“ காக்கா !
கலியாணத்துக்கு வந்தீங்களா ?
தவிர்க்க
முடியாத சின்ன வேலையினால வர முடியலப்பா.
அதான
பாத்தேன். கலியாணத்துக்கு போறது டைம் வேஸ்டு. சாப்பாட்டுக்கு போறதுதான் கடமங்கற
கொள்க உள்ள ஆளாச்சே நீங்க.
கண்டுபிடிச்சாட்டானே
கள்ளன் என நினைத்த நான் சரி சரி ரொம்ப பேசாதே நா திருனவேலிக்கு போவ வேண்டியிருக்கு
சீக்கிரம் சோத்த போடு என்றேன்.
திருநவேலியில
என்ன விசேஷம்.... ?
.... பட
ஸ்கிரீனிங்குக்கு போறேம்பா.
ஆமாமா... இன்னிக்கு தமிழ் இந்துல இன்றைய நிகழ்ச்சி
பகுதியில ஷாஹித் ஆஸ்மினு ஏதோ படம் போடறதாகவும் அதப்பத்தி எழுத்தாளர் பாலை கபீர்
உரையாற்றுவார்னும் போட்டிருக்கே. ஓய் பேப்பர்காரன்
பவரா எழுத்தாளர்னு போட்டுட்டா நீர் எழுத்துக்காரனா ஆவீருவிரோ ? ஒவ்வொரு பத்திரிக்கைகக்கும்
நீர் ஒம்ம கட்டுரைய அனுப்பி அதப் போட வைக்கரதுக்கு படுற பாடு எனக்குள வேய்
தெரியும்.
சரி சரி ரொம்ப
பேசாதே முதல்ல சோத்த போடு
மாடில பொண்
ஊட்டுக்காரங்களுக்கு மொதல்ல சாப்பாடு வைக்கிறாங்க அங்க போங்க காக்கா என்றவுடன்
ஏணிப்படிக்குள் கால் வைத்தேன்.
மிக குறுகலான
படிகள். பிடிமானத்திற்காக உத்தரத்திலிருந்து கயிற்றை தொங்க விட்டிருந்தார்கள். அது
பாடம் பண்ணிய பழம் பாம்பு போல இழை பிரிந்து ஆடிக் கொண்டிருந்தது.
மாடிக்குள்
பத்து பேர் அளவில் இரண்டு இரண்டு பேராக உட்கார்ந்திருந்தனர்.
தாலங்களில் இரண்டு
பேர் உண்ணத்தக்க அளவில் நெய்ச்சோறு பரத்தப்பட்டிருந்தது. அந்த சோற்று குவியலில்
பதிக்கப்பட்ட கிண்ணங்களில் களறிக்கறியும் , சிறு பருப்பு கடைசலும் எலுமிச்சை அடை
ஊறுகாயும் கலந்த கத்தரிக்காய் கறியும் மெலிதான
ஆவி பறக்க பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன.
நானும் ஒரு
வயதான மனிதரை தேடிப்பிடித்து உட்கார்ந்தேன். திருமண விருந்துகளில் தாலத்தில்
எனக்கான பங்கை பாதுகாக்க நான் வழமையாக கடைப்பிடிக்கும் உத்தி.
ஆனால் இந்த
முறை எனது உத்தியை தோற்கடித்துக் கொண்டிருந்தார் அந்த வயசாளி. “கறி பழம் போல வெந்திருக்கிதுல்லே “ என சொல்லிக்கொண்டே தனது உடைந்த அரைப்பல்லைக்காட்டி
சிரித்த அவரின் வாய்க்குள் கறித்துண்டுகள் பல்லில் படாமல் நேரே அவரின் குடலுக்குள்
லாகவமாக சென்று கொண்டிருந்தது. இடைவேளை எதுவுமின்றி ஒரே சீராக அவரின் கையும்
வாயும் ஒத்திசைவோடு இயங்கிக் கொண்டிருந்தது. சுதாரித்துக் கொண்டு என் பங்கு கறியையும்
சோற்றையும் முன்னெச்சரிக்கையுடன் என் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டேன்.
சாப்பிட்டு
விட்டு எழுந்திருக்கவும் மதிய தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. கீழே அபூபக்கரிடம்
சொல்லி விட்டு கிளம்பும்போது அங்கு நல்ல கறுப்பு நிறத்தில் நெற்றியில் பூத்த
வியர்வையுடன் கூச்சமான சாயலுடன் நின்றிருந்த புது மாப்பிள்ளையிடம் “ இவர்தான்
எழுத்தாளர் பாலை கபீர் “என அறிமுகப்படுத்தினான். கீழ் உதட்டை வளைத்து அரைப்புன்னகை
புரிந்த பையனிடம் , கலியாணமெல்லாம் சிறப்பாக முடிந்ததா ? என கைகுலுக்கி விசாரித்து
விட்டு வீடு நோக்கி நடந்தேன்.
மஞ்சள்
நீக்கம் செய்யப்பட்ட முழு வெள்ளை வெயிலும் வெக்கையும் தெருக்களின் அகல நீளத்தில்
ஒரு அங்குலம் கூட விடாமல் முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. எதைப்பற்றியும்
கவலைப்படாத சிறுவர்கள் கோல் போஸ்டுக்கு அடையாளமாக இரண்டு செருப்புகளை மண்ணில் புதைத்து
கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
`````````````````````````````````````````````````
வீட்டில் ஒரு
மணி நேரம் தூக்கத்திற்குப்பின்னர் காயல்பட்டினம் ரயில் நிலையம் வந்து சேர்ந்த போது
மதியம் 1:45 மணி. டிக்கட் கவுண்டர் அருகே மடு தொங்கிய செவலை நிற நாய் ஸ்டேஷனின்
மொத்த அமைதிக்குள் தூங்கிக் கொண்டிருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் அப்போதுதான் வந்து
கவுண்டரின் இரும்புக் கதவை திறந்தார். அதன் ஓசையில் லேசாக கண் விழித்து பார்த்த
செவலை மீண்டும் தூங்கத் தொடங்கியது. கவுண்டரில் நான்தான் முதல் ஆள்.
பாளையங்கோட்டைக்கான
பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு பிளாட்பார்மில் உள்ள சிமெண்ட் பெஞ்சில்
உட்கார்ந்தேன். எதிர்த்தாற் போல இருந்த சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில்
சீமைக்கருவேல மரம் மண்டியிருந்தது.
விர்ரென
பறந்து வந்த ஊர்க்குருவி இணை கருவேல மரத்தின் உச்சியில் இலைகளற்று நீண்டிருந்த
ஒற்றை கிளையில் உட்கார்ந்தன. தனிமைக்கு
பங்கம் என உணர்ந்ததினாலோ என்னவோ சில வினாடிகளில் கிர்ச் கிர்ச் என ஒலி
எழுப்பியவாறே அரை வட்டத்தில் இரண்டு முறை
தலையை சுழற்றி விட்டு அந்தர வெளியில் விருட்டென அவை பறந்து கரைந்தன.
எம்பி
ஆளுங்கட்சிக்காரன் எவனையொல்லாமோ பிடித்து ஊர்க்காரர்கள் தில்லி வரை ரயில்வே அமைச்சரிடம்
போய் மனு கொடுத்தும் ஒன்றும் நடக்காமல் போய் கடைசியில் அனைத்து கட்சிகளும் ரயில்
மறியல் போராட்டம் என அறிவித்த பிறகு வந்து சேர்ந்த ஆஸ்படாஸ் மேற்கூரையும் கறுப்பு
நிற சலவைக்கல் தளமும் விளக்குகம்பத்தில்
ஒட்டியிருக்கும் பிட் நோட்டீஸ் போல இருந்தன.
இரவு பெய்த
கோடை மழை தெறிப்பின் அடையாளமாக மழை நீரானது சிறிய அளவில் சலவைக்கல்லில்
தேங்கியிருந்தது. சலப்... சலப்... என ஒலி
எழும்ப தேங்கிக் கிடந்த தண்ணீரை மிதித்தவாறே பத்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
வந்து கொண்டிருந்தான்
எல தண்ணிய
சவட்டிட்டு எங்கல போறே பெஞ்சு இங்க கெடக்குல்லா. இதுல உக்காருலெ.... என்றவாறே கக்கத்தில் வைத்திருந்த ஓலைபெட்டியை சிமிண்ட்
பெஞ்சின் மறுமுனையில் கீழ் ஓரத்தில்
இறக்கி வைத்து விட்டு வந்து உட்கார்ந்தார் பெரியவர். அவருக்கு வயது எழுபதிற்கு
மேல் இருக்கும் . சட்டை அணியாத மேனி . தொப்பையும் கூனும் இல்லாத பனங்கட்டை போன்ற நிமிர்ந்த
உடல். வெளுத்த தலையில் தேய்த்திருந்த எண்ணை காதின் மேல் மடலில் மினுமினுத்துக்
கொண்டிருந்தது.
ஓலைப்பெட்டியிலிருந்து
முறுகிய பதநீர் வாசம் வந்து
கொண்டிருந்தது. அந்த மணத்தில் லயித்தவனாய் அந்த ஓலைப்பெட்டியையே பார்த்துக்
கொண்டிருந்தேன்.
“ வேறொன்னுமில்லய்யா.. எங்க வெளயில உள்ள
பனமரத்துல எறக்குன பதனில காச்சுன கருப்பட்டி. . திருனவேலிலதான் மவள கட்டிக்
கொடுத்திருக்கேன். போவும்போது வெறுங்கையா போவப்படாதுல்லா. அதான் ஒரு சிப்பம் கருப்பட்டிய
எடுத்துட்டு பேரனயும் கூட்டிட்டு போறேன் .
பெரியவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே
தட தடவென அதிர்ந்தவாறு இரண்டு ஓரங்களிலும் தூசியையும் துண்டுக்காகிதங்களையும்
சேர்த்து கிளப்பிக் கொண்டு திருநெல்வேலி
பாசஞ்சர் ட்ரெயின் வந்து சேர்ந்தது.
வண்டிக்குள்
பெரிதாக கூட்டம் ஒன்றுமில்லை. மொட்டை அடித்து தலை நிறைய சந்தனம் பூசிக் கொண்டு
நான்கைந்து பேர் உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் இருந்தனர்.
மேலிருக்கையில் அவர்களின் பைகளுடன் அரை மூடித் தேங்காய் , பழம் , விபூதி
பாக்கட்டுகளுடன் சங்கர் ஸ்டால் , பந்தல் மண்டபம் , திருச்செந்தூர் என லேபிள் ஒட்டிய பஞ்சாமிர்த குப்பியும் இருந்தன.
நான்
அவர்களைத்தாண்டி அடுத்த இருக்கையில் ஒரு
வயதான பெண்மணியும் இளம் கணவன் மனைவியும் அவர்களின் ஐந்து வயது மதிக்கத்தக்க மகனும்
இருந்தனர். அவர்கள் பக்க வாட்டு இருக்கையில் உட்கார்ந்திருந்ததால் எனக்கு சன்னலோர
இருக்கை கிடைத்தது .
அதில் போய் வசதியாக
அமர்ந்தேன். மூன்று மாத இதழ்களை கையோடு கொண்டு வந்திருந்தேன். சன்னலோர காற்றும்
வாசிப்பும் ஒன்று சேர நினைவுகள் தூக்கத்திற்குள்
நழுவிக் கொண்டிருந்தது.
ஹய் ஹொய்
தங்கர தக்கா... ஹய் ஹொய் தங்கர
தக்கா...
என ஏற்ற
இறக்கத்துடன் ஒலித்த சிறு குரலில் தூக்கம் தொலைந்தது.
பக்கத்து
இருக்கையில் இருந்த ஐந்து வயது சிறுவனின் கொண்டாட்ட ஒலிதான் அது . மேல்
பெர்த்துக்கும் கீழ் பெர்த்துக்கும் இடைப்பட்ட ஏறு கம்பியில் ஒரு காலை நுழைத்து
மறு காலை கீழே தொங்கப்போட்டுக்கொண்டு தாறுமாறாக ஆடிக் கொண்டே ரயிலின் தண்டவாள
லயத்துக்கு ஏற்ப தலையை ஆட்டிக்கொண்டு
எழுப்பிய கூச்சலை பல சைகை காட்டியும் அவனது அப்பாவால் நிறுத்த முடியவில்லை.
எரிச்சலாகிப்போன
அப்பாக்காரன் , ஏய் கணேஷ். கைகட்டி
அமைதியா ஒக்காரு என கண்களை உருட்டிச் சொல்லவும் ஆர்ப்பரித்துக்
கொந்தளித்துக்கொண்டிருந்த வெந்நீர் சட்டியில் குளிர் நீரை ஊற்றினால் போல அந்த
சிறுவன் அப்படியே அடங்கிப்போய் உட்கார்ந்தான்.
கீழ் உதட்டை பிதுக்கி
மேலுதட்டின் மீது வைத்தான். இடது கையை நெஞ்சின் குறுக்காக கட்டி வலது கையின்
ஆட்காட்டி உதட்டின் மீது வைப்பதும்
எடுப்பதுவுமாக இருந்தான் சிறுவன்.
அவனை கொஞ்ச
நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்த அப்பாக்காரன் தனது சிரிப்பை அடக்க
முடியாமல் அந்த சிறுவனை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து , என் செல்லம் , நீ கத்தினதினாலதான் அப்பா சத்தம் போட்டேன். இனி
அப்படி செய்யாத கண்ணு...
போப்பா ஒன்னோட
நானு காய் .... என முகத்தை திருப்பிக் கொண்டான் சிறுவன். “ போ... நான் ஒன்னோட
கத்து.... “ என பிணங்கும்போது என்னிடம் கூறும் எனது இளைய மகனின் முகம்தான் நினைவிற்கு
வந்தது. எல்லா குழந்தைகளின் சேட்டைகளும் குறும்புகளுமான உலகம் ஒன்றுதான் போலும். .
மனம் அப்படியே குளிர்ந்து லேசானது போல் இருந்தது.
இஞ்சி டீ சூடா
பருப்பு வட வட போளீய்.... எனக்கூவியவாறே வலது கையில் ஒரு தட்டத்தையும் இடது கையில்
டீ கேனையும் ஏந்திபடியே வெள்ளை சட்டையும்
வேஷ்டியும் உடுத்திய நடுத்தர வயது மனிதர் வந்து கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து
பருப்பு வடையின் பொறித்த மணமும் காற்றில் மிதந்து வந்தது. கலியாண விருந்தினால்
வயிறு மந்தமாக இருந்தாலும் மூக்கு சும்மா இருக்க விடுவதில்லை. ஒரு வடை , ஒரு போளி
, டீயை வாங்கிக் கொண்டேன்.
மிதமான
சூட்டில் இருந்த பருப்பு போளி வடையுடன் சூடான இஞ்சி டீ கலவை தந்த கிறக்கத்தின்
நடுவே ரயில் செய்துங்க நல்லூரை தாண்டி விட்டது.
போன் ஒலித்தது.
சிவராமன்தான். சார் , வண்டி எங்க வந்திருக்கு ? சிறீவைகுண்டம் தாண்டியாச்சா அப்ப
சரி . என் அண்ணன் பையன் நம்பர உங்களுக்கு எஸ்ஸமெஸ் அனுப்பியிருக்கேன். பாளயங்கோட்டை ஸ்டேஷனுக்கு வெளியே நிப்பான்.
கான்டாக்ட் பண்ணிக்கோங்க....
மூணரை மணிக்கு
பாளையங்கோட்டை ஸ்டேஷனுக்குள் மெல்ல
அசைந்து நுழைந்தது ரயில். வெளியே வெயில் அவ்வளவாக இல்லை. பிளாட்பாரத்தை விட
பள்ளத்திற்குள் கிடந்த ரயில் நிலையத்தின் அலுவலக வாசலில் ஸ்டேஷன் மாஸ்டர் நின்று
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கையில் பச்சை சிவப்பு என எந்தக்கொடியும்
இல்லை. முதுகுக்கு பின்னே ரயில் மீண்டும் ஊர்ந்து செல்ல தொடங்கியிருந்தது.
ஸ்டேஷனுக்கு
வெளியே ஹீரோ ஹோண்டா பைக்குடன் வெள்ளை நிற டீஷர்ட் போட்ட ஒரு இளைஞன் நின்று
கொண்டிருந்தான். என்னை அடையாளங்கண்டு மெலிதாக புன்னகைத்தான்.
தம்பி நீங்கதானே பூபதி ? ஆமா சார் ஒங்கள
கூப்புட்டு வரச்சொல்லி சித்தப்பாதான் அனுப்பிச்சாங்க.
ஆறேழு நிமிட
ஓட்டத்திற்குப் பிறகு பாளையங்கோட்டை மேட்டுத்திடல் அருகில் உள்ள சலனமில்லாமல்
நீண்டு கிடந்த தெருவிற்குள் நுழைந்த பைக் “மணி பவனம் “ என எழுதியிருந்த ஒரு வளாகச்சுவரின்
வெளியே நின்றது.
சூடான
வெண்ணிறத்திலிருந்து இளஞ்சிவப்பு நிறத்திற்கு உடை மாற்றிக் கொண்டிருந்த அந்தி
வெயிலும் தெருவின் அமைதியும் அந்த சுற்றுப்புறத்தையே பொதிந்து கொண்டிருந்தன.
இருபுறமும் செடிகொடிகள்
நிறைந்திருந்த ஏணிப்படிகள் வழியாக முதல் மாடியில் இருந்த போர்ஷனின் வாயிலில்
இருகரம் கூப்பி நின்றார் சிவராமன்.
மெலிந்த தேகம். முன் வழுக்கை . பிரஷ் போல இருந்த மீசை வாயைத் தொட்டுக்
கொண்டிருந்தது. சிரித்த முகத்துடன் , வாங்க சார்.. என வரவேற்றார்.
முன் ஹாலில் மூங்கிலாலான
சாய்விருக்கையும் சிறு மேசையும் போடப்பட்டிருந்தது.
வலது பக்கம் இருந்த மர மாடத்தில் சிவராமன் அவரின்
பணிக்காலத்தின் போது வாங்கிய நட்சத்திர செயல்பாட்டிற்கான விருதுகள் , பாரதியாரின்
படம் , குழந்தை பொம்மை , பித்தளையில் செய்யப்பட்ட புத்தர் முகம் ஆகியவை இருந்தன.
பரஸ்பர குசலம்
விசாரிப்பிற்குப் பிறகு மெதுவாக பேச்சு ஸ்கிரீனிங் பக்கம் திரும்பியது.
நான் கையோடு கொண்டு
வந்திருந்த ஷாஹித் பட இறுவட்டை திரும்ப அவரிடம் கொடுத்தேன்.
அதை வாங்கி
மேசை மேல் வைத்து விட்டு “சார் ! ரிட்டயர்மெண்டுக்குப்பிறகு மிச்சம் இருக்குற
காலத்தல மனசுக்கு பிடிச்ச விஷயங்கள முழுசா செய்யனும்னு நினச்சிக்கிட்டுருந்தேன். அதோட
குரல் வளயில ஆறு மாசத்துக்கு மின்னாடி கேன்ஸர் வந்திடுச்சி. பேச முடியாம போச்சி .
பேப்பர்ல எழுதிக்காட்டியும் சைகையிலயுந்தான் எல்லா கம்யுனிக்கேஷனும் நடந்துது. கிட்டதட்ட ஒரு ஊமயாவே ஆயிட்டன்னா பாருங்களேன். எங்
கொரலத்தவிர எல்லாத்துட கொரலயும் கேட்க முடிஞ்சுது. நான் இத்தன வருஷமா பேசுன என் பேச்சு கூட எனக்கு மறந்துடிச்சானா
பாருங்களேன்... என கலகலத்து சிரித்தார்..
சார்
சாப்பிடுங்க! என்றவாறே சிறு தட்டில் ஓமப்பொடியையும் காஃபியையும் கொண்டு வந்து
வைத்தார் சிவராமனின் மனைவி.
ஓமப்பொடி
கீற்று ஒன்றை பாதி ஒடித்து வாயில் போட்டவாறே , “ மும்பை டாடா கேன்ஸர்
இன்ஸ்டிடியுட்டுல ஆறு மாச டிரீட்மெண்டுக்குப்பிறகு இப்ப சரியாடிச்சி.’ என்றார்.
எல்லாத்தையும்
சேத்து யோசிச்சு பாத்தேன். வாழ்க்கனு நான் வாழ்ந்ததுலாம் சின்ன நூல் கண்டு போல
தோணிச்சு. ரிட்டயர்மெண்ட் டைம் வார
வரய்க்கும் பொறுக்க முடியல. ரண்டு வருஷத்துக்கு முன்னாடியே நான் வீஆரெஸ்
வாங்கிட்டேன். பரணி ஃபிலிம் சொசைட்டி வேற அப்படியே தூர்ந்து போய் கெடக்குது. அதுக்கு உயிர் குடுக்கணும். அதோட சூழலியல்
தொடர்பான வேலய்களும் வேற வேலகளும் கெடக்குது என்றவர் தனக்கு முன்னால் இருந்த காஃபியை எடுத்து
உறிஞ்சினார்.
சார் உங்களுக்கு
எத்தனை கொழந்தைங்க ?
ஒரு பையன் ,
ஒரு பொண்ணு. ரெண்டு பேரயும் படிக்க வச்சு கலியாணமும் பண்ணி வச்சாச்சு. பையன்
சென்னையில ஒரு தனியார் கம்பனியில வர்க் பண்றான். நல்ல சம்பளம்.
மகள்
வந்து ஜார்க்கண்டுல ஆதிவாசி பகுதில ஒரு
காந்தியன் மெடிக்கல் என்ஜிஓல சர்வீஸ் பண்றா.
அப்ப
என்ஜிஓன்னா சம்பளம் பெரிசா இருக்காதே ! எப்படி சமாளிக்கிறாப்புல ?
உண்மதான்.
அடிப்பட வாழ்க்க தேவைகள ஓட்டீறலாம். மேல் மிச்சமா எதுவும் சேத்துக்க முடியாது.
காந்தியவாதிங்க அப்படித்தானே .ஆனா அவளுக்கும் அப்படி சர்வீஸ் பண்றதுதான்
பிடிச்சிருக்கு. நாங்க தூர தூரமா இருந்தாலும் என்னோட பென்ஷன் பணம் , பையனோட
சம்பளம் , மகளோட சம்பளம் எல்லாத்தயும் ஒன்னாக்கி அவங்க அவங்களுக்கு மாசா மாசம்
என்னென்ன எவ்வளவு தேவையோ அவ்வளவு எடுத்துக்கிருவோம். .
சபாஷ்
சிவராமன் ! காந்தீய கம்யூன் வாழ்க்கை . ஒன்னு வீட்டுக்கு இன்னொன்னு சமூகத்துக்குனு
நல்லாதான் பிரிச்சிருக்கீங்க சார்...
தரையைப்
பார்த்துக் கொண்டு அமைதியாக புன்னகைத்தவாறு இருந்தார் சிவராமன்.
````````````````````````````````````````````````````````````````````````
ஹாலில்
மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி ஐந்தரையாகியிருந்தது.
ஆறு மணிக்கு
ஸ்டாட் பண்ணுவாங்க. நாம் மெதுவா நடந்தே போயிடலாம் என்றவர் உள்ளறைக்குள் சென்று
லுங்கியில் இருந்து பேண்டுக்கு மாறினார். வெளியே வரும்போது கை நிறைய நூல்களை
கொண்டு வந்தார்.
வச்சிகிடுங்க
சார் ! என்று நீட்டினார் . பிரவுன் நிற மேல்தாள் கொண்ட சூழலியல்
அமைப்பொன்று வெளியிட்ட சிறு சிறு மலிவு விலை .வெளியீடுகள்.
பாரதியார்
படம் போட்ட மஞ்சள் நிற ஜோல்னாப்பையை தோளில் மாட்டினார் சிவராமன் .காம்பவுண்டு
கேட்டின் ஓரமாக வெள்ளையும் செவலையும் கலந்த நாய் ஒன்று பாதி கண்ணை சோம்பலுடன்
திறந்து மூடியபடி படுத்துக் கிடந்தது. தெருவின் நடுப்பாதிக்கு மேல் வெயில் சரிந்து
கிடந்தது.
சார்!
ஸ்கிரீனிங்க் ஸ்பாட் நடக்குற தொலைவுதான்.
நாம போற வழியில ஆஷ் தொரயிட கல்லறய பாத்துட்டு போலாமா என என்னிடம் சம்மதம்
கேட்டார்.
ஆஷ் துரை
இங்குதான் அடக்கமாயிருக்கின்றார் என்ற செய்தி எனக்கு புதியதாகவும் ஆர்வத்தைக்கிளப்புவதாகவும்
இருந்தது.
அது எந்த
எடத்துல இருக்கு சார்.. ?
பாளையங்கோட்ட
மிலிட்டரி லைன் இங்கிலீஷ் சர்ச் கல்லறை தோட்டத்துக்குள்ள ஒரு
எடத்துலதான் அவர அடக்கியிருக்கு...
அன்று
ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் பாளையங்கோட்டையின் சாலைகள் கழுவித்துடைத்தாற் போல
ஓசையும் பரபரப்பும் ஒழிந்து போய் இருந்தன.அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை வெயிலின்
கசகசப்பு நிறைத்திருந்தது.
பழரசக்கடையுடன்
ஒட்டி இருந்த நிறுத்தத்தில் வந்து நின்ற
தனியார் பேருந்தில் மொத்தம் அய்ந்தாறு பேர்களே இருந்தனர். கடைசி படிக்கட்டில் பாதி தொங்கியவாறே .... சங்க்சன்...
அய்க்ரவுண்ட்... பாள பஸ் ஸ்டாண்ட்... என மாறி மாறி கத்திக்
கத்திக் கொண்டிருந்தார் கண்டக்டர்.
பேருந்து
நிறுத்ததிலிருந்து ஐந்து நடையில் நிமிட தனியார்
எம்.ஆர்.அய். ஸ்கேன் சென்டர் இருந்தது . அதன் முகப்பில் மனித உறுப்புகளின் படத்தை
வண்ண வண்ணமாக வரைந்து அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது. ஸ்கேன் சென்டரை ஒட்டினாற்
போல வளைந்து திரும்பி வலது ஓரம் சில அடிகள் நடந்தவுடன் இங்கிலீஷ் சர்ச் கல்லறையின் முகப்பு தென்பட்டது.
பார்வைக்கு பள்ளிக்கூட முகப்பு போல இருந்தது.
சிமிண்ட்
பாதையெங்கும் மஞ்சள் நிற மலர்கள் புதியதாகவும் பாதிவாடிய நிலையிலும் உதிர்ந்து
கிடந்தன. வேறு குப்பைகள் எதுவுமில்லாமல் நடைபாதை தெளிவாக இருந்தது.
வலப்பக்கமாக
எழுதப்பட்ட ஆங்கில “எல்” வடிவில் உறுதியாகவும் அகலமாகவும் பெரும்பாலான கல்லறைகள்
அமைக்கப்பட்டிருந்தன. சில கல்லறைகள் கிடைமட்டமாக மட்டுமே இருந்தன. எல்லா கல்லறைகளிலும்
அடக்கப்பட்டவரைப்பற்றிய குறிப்புகள் இருந்தன. அகோர பசி அடங்கிய சாந்தம் கொண்ட
விலங்கு போல கல்லறைக்குள் அலைந்த காற்றில் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது மரணம்
.
நாங்களிருவரும்
முழு கல்லறை தோட்டத்தையும் வலம் இடமாக சுற்றி சுற்றிப்பார்த்தும் ஆஷின் கல்லறையை
மட்டும் காணவில்லை. விளக்கம் கேட்கவும் அங்கு யாருமில்லை.
நாங்கள்
தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த போது கல்லறை தோட்டத்திற்குள் நடுத்தர வயது பெண்மணி ஒருவர்
நுழைந்தார். மெதுவாக அவரை அணுகி விபரம் கேட்டோம். மௌனமாக அவர் கை காட்டினார்.
வாயிலுக்குள் நுழைந்தவுடன் இடது ஓரத்திலேயே கம்பீரமாக அவரது கல்லறை நின்றிருந்தது.
பெரும் வரலாறு ஒன்று சில அடி நிலத்திற்குள் நந்தி போல உறைந்து அமர்ந்திருந்தது.
எங்களுக்கு
பின்னால் கல்லூரி மாணவர்களிருவர் வந்து சேர்ந்தனர். அதில் வெள்ளை நிற பைஜாமவும்
குளிர் கண்ணாடியும் அணிந்திருந்தவன் கண்ணாடியைக்கழற்றி பைஜாமாவில் துடைத்தவாறே எங்கேயோ குளிர் நாட்டுல பொறந்தவன்... இங்க வந்து குண்டடிபட்டு செத்து இப்பிடி வெந்து
புழுங்குற மண்ணுக்குள்ள படுத்துக் கெடக்கணும்னு கனவுல கூட நெனச்சிருப்பானாப்பா ...
ஹ்ம்ம்ம் . இதான் விதிங்கறது... என
நண்பணிடம் சன்னமான குரலில் சொல்லிக் கொண்டிருந்தான்.
``````````````````````````````````````````````
திரையிடல் நிகழ்வு
திட்டமிடப்பட்டிருந்த இடம் ஒரு தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி பள்ளிக்கு சொந்தமானது .
அதன் நுழை வாயிலில் நின்று கொண்டிருந்த ஒன்றிரண்டு பேர் சிவராமனை பார்த்து புன்னகைத்து
வணக்கம் தெரிவித்தனர்.
அவர்களில் முன்
நெற்றி வழுக்கையான ஒரு ஆள் விலை உயர்ந்த மஞ்சள் நிற பருத்தி சட்டையும் பேண்டும்
அணிந்திருந்தார். என்னைப் பார்த்து
புன்னகைத்தவாறே வந்தார்.
மாமா ! நீங்க
காயல்பட்னமா ?
ஆமா ! எப்படி
கண்டு பிடிச்சீங்க ? என்றவாறே கை குலுக்கினேன்.
என்ன மாமா
அப்படி கேட்டுப்புட்டீங்க . நாங்க கொழும்புல சைவ சாப்பாட்டுக்கட வச்சுருக்கம்ல..
உங்கூருக்காரங்கள்ளாம் அங்கதான கல் யாபாரம் பண்றாங்க ..
உங்க பேரு
ராதாகிருஷ்ணன்..
கொழும்புல
எங்க கட?
வெள்ளவத்தய்ல
சீ சைடுலதான் கட..
ஒங்க ஊரு அலீ
ஹாஜியார் காலய்ல பேருவளய்க்கு கல் வாங்க போறதுக்கு மின்னாடி நம்ப கடையில வந்துதான்
ஆப்பமும் சொதியும் உளுந்த வடையும் சாப்புட்டுட்டு போவாங்க ...
அப்படியா ... கொழும்புலேருந்து எப்ப வந்தீங்க
நான் வந்து ரொம்ப
வருஷங்களாச்சு மாமா
அப்ப கட
அத அண்ணன் தம்பிலாம் பாத்துக்கறாங்க
நீங்க ஏன்
போறதில்ல
மாமா... எனக்கு சொந்த ஊரு பாளயங்கோட்டக்கி பக்கத்தில
உள்ள ரெட்டியார் பட்டி.
எங்களுக்கு ஏகப்பட்ட நிலபொலங்க சொத்துக இருக்கு. அத
அனுபவிச்சால போதும் மாமா. இனிமே என்னத்துக்கு போட்டு காசு காசுன்னு அலயனும்.
எம்பாலிசி
என்ன தெரியுமா மாமா நான் கோயில் கொளத்துக்குல்லாம் போறதுல்ல. பசிச்சவங்களுக்கு
சாப்பாடு போடுவன்.அன்பே சிவன்தாங்குற நம்பிக்க உள்ளவன் நானு...
வாங்க டீ
குடிச்சுக்கிட்டே பேசுவோமே என்றேன்.
மாமா இந்த
தெரு முனய்ல ஒரு டீக்கடயில சுசியமும் டீயும் நல்லாருக்கும் என்றவர் அங்கு கூட்டிச்
சென்றார்.
அவர் சொன்னது
போலவே சுசியத்தின் உள்ளடக்கமான கடலை பருப்பு மசியல் தேன் போல இளகியிருந்தது .
டீக்கடையிலிருந்து
திரும்ப வந்துக் கொண்டிருக்கும்போது சிவராமன் தன்னுடைய ஜோல்னா பையிலிருந்து
ஃப்ளெக்ஸ் ஒன்றை எடுத்துக் கொண்டிருந்தார். பயிற்சி பள்ளியின் முன் பக்கம் ஓடும்
சாக்கடை வாறுகாலின் சிமிண்ட் தளத்தில் குறுக்காக காலை வைத்துக் கொண்டு ஃப்ளெக்ஸ்
பதாகையை கட்டினார். பரணி ஃப்லிம் சொஸைட்டி , திருநெல்வேலி என நீல வெள்ளை நிறத்தில்
எழுதியிருந்த அதன் ஒரு பக்க முனை சற்றே தொய்ந்த நிலையில் இருந்தது.
```````````````````````````````````````````````````````````````````````````````````
எல்லா
ஏற்பாடுகளும் முடிந்து திரைக்காட்சி தொடங்கும்போது மாலை ஏழு மணியாகி விட்டிருந்தது. ஒற்றை ட்யூப்
லைட்டின் வெளிச்சத்தில் ஹாலின் மையத்தில் மட்டும் இருள் மந்தமாகி வட்ட வடிவில் விலகி
நின்றது.
கல்லுரி
மாணவர்கள் , நடுத்தர வயதைக்கடந்தவர்கள் , பெண்கள் என முப்பது பேர் அளவில்
வந்திருந்தனர்.
முதல்
வரிசையிலிருந்த பெஞ்சில் போய் அமர்ந்தேன். ஹாலின் ட்யூப் லைட்டு அணைக்கப்பட்டு படம்
தொடங்கியது.
மும்பையின் பெரு
ஓட்டத்தின் சிறு இழையில் ஷாஹித் ஆஜ்மியின் கீழ் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தின்
அன்றாட வாழ்க்கை ஊர்ந்து செல்கின்றது.
திடீரென ஒரு
நாள் உடைந்து விழும் குடத்திலிருந்து சிந்தும் நீர் மண் விரைந்து
கசிந்து தரைக்குள் இறங்குவது போல சக மனிதன் மீதான வெறுப்பானது மும்பையின் தெருக்களையும் வீடுகளையும்
குடும்பங்களையும் படர்ந்து பிடிக்கின்றது.
வன்முறை எதிர்
வன்முறை என்ற அதிவேகச் சுழலில் ஷாஹித் ஆஜ்மியினதும் அவனது குடும்பத்தினதும்
வாழ்க்கையிலிருந்து அன்றாட சராசரி அமைதியான வாழ்க்கை உள்ளிழுக்கப்பட்டு
அமிழ்த்தப்படுகின்றது.
புனையப்பட்ட
வழக்கொன்றில் காவல்துறையின் சித்திரவதை , சிறைத்தண்டனை என சிக்கித்தவிக்கிறான்
ஆஜ்மி. அவனுக்கு சிறையில் முதிர்ந்த நல்ல
மனிதர் ஒருவரின் தொடர்பு ஏற்படுகின்றது. பழிவாங்கும் கனலை அவனது உணர்வு
நிலைகளிலிருந்து மெல்ல கழுவி துடைத்து அறிவார்ந்த வழியில் நீதிக்காக போராடுவதை
கற்பிக்கின்றார் அவர்
ஷாஹித்
ஆஜ்மியின் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கப்பட்டு வெளியில் வந்த பின்னர்
அவன் சட்டம் பயின்று வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொள்கின்றான்..
பொய்
குற்றச்சாட்டின் பேரில் சிறையில் தள்ளப்பட்ட அப்பாவிகளுக்காக வாதாடி விடுதலை
பெற்றுத்தருகின்றான். அவர்கள் அப்பாவிகள்தான் என்பதை முதலில் தான் நேரடியாக
விசாரித்தறிந்த பிறகே அவன் அவர்களுக்காக போராடுகின்றான்.
சொத்து
பிரிவினை வழக்கு தொடர்பாக அவனை அணுகும் மணவிலக்கு பெற்ற பெண் வாடிக்கையாளர்
ஒருத்தியை காதலித்து மணந்து கொள்கின்றான். இதில் அவனது குடும்பத்தினர் அவனுடன்
முரண்படுகின்றனர்.
வழக்கறிஞர்
வாழ்க்கை , தாயுடன் முரண் , இனிய
மனைவியுடனான தித்திக்கும் இல்லறம் என்ற அவனது முக்கோண வாழ்க்கை பயணத்தில்
நான்காவது கோணம் ஒன்று வடிவங் கொள்கின்றது.
பொய்
வழக்குகளை நீதிமன்றத்தில் ஷாஹித் ஆஜ்மி உடைத்தெறிவதால் ஆத்திரமுற்ற ஒரு பிரிவினர் பொது
இடத்தில் அவமானப்படுத்துகின்றனர் அவனை கொல்லபோவதாக மிரட்டுகின்றனர்.
இந்த
நெருக்கடி அவரது இல்லற வாழ்க்கைக்குள்ளும் ஊடுறுவுகின்றது. கணவனுக்கும்
மனைவிக்கும் இடையே சூடான விவாதம் நடக்கின்றது.
“ ஷாஹித் இந்த
கேசிலிருந்து நீ வெளியே வா
ஏன் எதுக்காக
வெளியேறனும்?
வெளிய வரணும்னா வெளிய வந்துதான் ஆகணும்
அதான் ஏன்னு
கேக்கறேன்மா ? என தன் மனைவியை இரு கைகளாலும் வளைத்து பிடித்தவாறே அவன் கேட்டான்.
இதொன்னும்
வெளயாட்டில்லீங்க நமக்கு நம்ம வாழ்க்க வேணும்
சரி இந்த
கேசுல நான் அவங்கள கைவிட்டுட்டா அவங்க எங்க போவாங்க ?போலீஸ் கிட்டயா போவாங்க ? அவங்களுக்கு
யாரு இருக்காங்க ?
ஆமா...
அவங்களுக்கு யாருமில்ல... ஆனா நமக்குத்தான் முழு ஒலகமும் இருக்கே ?... “ என கழுத்தை வெட்டித் திருப்பிக்கொண்டு கணவனின்
கைகளிலிருந்து சரிந்து திமிறி வெளியேறி பக்கத்து அறைக்குள் சென்றவள் பெட்டியில்
துணிகளை அடுக்கிக் கொண்டு பிறந்த வீட்டிற்கு கிளம்புகின்றாள்.
புயல் போல்
கிளம்பிச்செல்லும் மனைவியைப் பார்த்துக் கொண்டே நிற்கின்றான் ஷாஹித் ஆஸ்மி.
இந்த
நேரத்தில் எனக்கு மிக அருகாமையிலிருந்து விசும்பல் ஒன்று ஒரு ஒற்றை பீரிடலுடன் வலுவாக
வெளிக்கிளம்பி அதே வேகத்தில் அடங்கி விட்டது.
நான் திரும்பிப்
பார்த்தேன். அந்த முக்கால் இருட்டில் குரலுக்கான முகம் தெரியவில்லை.
படம்
நிறைவடைந்த பின்னர் என்னை பேச அழைத்தனர். நான் முன்னரே எழுதி மொபைலின் ஃபைலுக்குள்
சேமித்து வைத்திருந்த இரண்டு பக்க கட்டுரையை ஒரேயடியாக வாசித்து முடித்தேன்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விவாதத்தை தொடங்கி வைக்க
பலரும் அதை ஒட்டி பேசினர். சிவராமனின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது.
````````````````````````````````````````````
இரண்டு
நாட்கள் கழிந்தது.
சிமிண்ட் தரையின்
சுகத்தை கோடையில்தான் அனுபவிக்க முடியும் போல. பாய் விரிக்க சோம்பல்பட்டு வீட்டின்
தரையில் படுத்துக் கிடந்தேன். நான்கைந்து நாட்களில் சென்னைக்கு கிளம்ப வேண்டும்
என்ற நினைப்பே எரிச்சலை உண்டாக்கியது.
சென்னை
மண்ணடியில் இரும்பு மொத்த மார்க்கட் உள்ள ஜோன்ஸ் தெருவில்தான் எனது ரூம் இருக்கின்றது. நீள அகலமான இரும்பு தகடுகளும் கம்பிகளும்
உருட்டுத்தடிகளும் நிறைந்த ரெக்ஸின் போர்வையுடன் தூசி படிந்து பல மாநில
பதிவெண்களுடன் நிற்கும் லாரிகள்.
காலில் சுருள்
சுருளாய் தடித்து புடைத்த நரம்புகளும் முந்திய நாள் இரவின் போதையால் வெளிறிய
சிவப்புடன் கூடிய கண்களைகொண்ட சுமை தொழிலாளிகள் அந்த வண்டிகளின் விலாப்புறங்களில்
நிற்பார்கள் . அவர்கள் .புளிச் புளிச் என துப்பிய பான் பராக் எச்சிலின் தடங்கள் ,
உலர்ந்த மூத்திர திட்டுகளையெல்லாம் தாண்டி
மூன்று மாடி ஏறி ரூமில் போய் இறங்கி அப்பாடா என பாத்ரூம் குழாயைத் திருகினால் தண்ணீர் வராது .மண்டை
காய்ந்து விடும்.
முதல் மாடியில் உள்ள ஆஃஃபீஸில் உள்ள
கணக்குப்பிள்ளையை கேட்டால் அவரின் குட்டை கழுத்துக்கு மேல் பாங்காக
உட்கார்ந்திருக்கும் வட்ட தலையை
உயர்த்தாமலேயே “ பாய் ! மோட்டார் காயில் எரிஞ்சு போய் ரெண்டு நாளாச்சு. என்பார்.
ஹவுஸ் ஏஜன்டுக்கு போன் பண்ணினால் பிளம்பருக்கு சொல்லியாச்சு. நாளக்கி வந்து பாப்பாரு என்ற பதில் கிடைக்கும்.
“ நாளய்க்கி “ என்பதுடன் மூன்று தினங்களை கூட்டிக்கொள்ள வேண்டியதுதான். இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை கட்டாயமாக இந்த
சிக்கல் வந்து போகும்போது பைப்பை
திருப்பினால் அனிச்சை செயல் போல நீர் பீறிடும் என் சொந்த வீட்டின் அருமையை மனதில்
தளும்பச்செய்யும்.
தூசும்
புழுதியும் ஓசையும் ஒன்றுடன் ஒன்று கலந்து பெருங்குரலெடுத்து கத்தும் சென்னை
வாசிகளும் ஒட்டு மொத்த சென்னையின் கரைச்சல் சித்திரம் மனதின் முன் எழுந்து வந்த
போது “ மனுசன பழசாக்கிப்போடுற இந்த ஊருக்கு போகணுமாக்கும் “ என மனதிற்குள் ஆயாசம்
மூண்டது.
“ ... என்ன
செய்ய . பொறந்த ஊரு எல்லாத்துக்கும் அழகானதுதான். ஆனா இங்க பொழப்பு இல்லியே “ என்ற
உள் மன உணர்த்தல்தான் மனதின் உள் விவாதத்தில் இறுதியாக நிலைத்து நின்றது.
சென்னைக்கு
டிக்கட் போடுவதற்காக ட்றாவல் ஏஜண்ட் ரியாழிடம் போனில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே
சிவராமனின் எண் செல் பேசியின் திரையில் நீல வண்ணத்தில் மேலும் கீழுமாக அசைந்து
ஒளிர்ந்தது. டிக்கட் விஷயமாக பேசி முடித்தவுடன் சிவராமனை அழைத்தேன்.
‘’வேறொன்னுமில்ல
சார் . ஒரு நியூஸக் கேக்குறதுக்குத்தான் போட்டேன். டிவியும் பாக்க முடியல.
என்ன பிரச்சின...
ஏன் டீவிய பாக்க முடியல
அதுவா .
காலய்ல முழிச்ச உடனே இரட்ட இரட்டயா தெரிஞ்சுது. நான் கண்ணாடி செக் பண்ணி பல
வருசமாச்சு. அதுனால அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு போனேன். அங்க கண்ணுல மருந்த விட்டு
செக் பண்ணிணாங்க.
என்ன
சொன்னாங்க..
நாளக்கி மறுபடியும் வரச்சொல்லியிருக்காங்க
அவங்க மருந்துட
பவர்னால சரியாவே பாக்க முடியல்ல. ஏற்கனவே
இருக்குற கோளாறோட இதுவும் சேந்துக்கிட்ட உடனே கிட்டதட்ட முக்கால் குருடனாவே ஆன
மாதிரி இருந்திச்சி .ஒரு மாதிரியா சமாளிச்சுக்கிட்டு பஸ்ஸ பிடிச்சி வீடு வந்து
சேந்தேன்.
தனியாவா
போனீங்க
ஆமா .
ஏன் சார்
இப்படி பண்ணுறீங்க...
என்ன பண்றது யாரயும்
டிஸ்டர்ப் பண்ண விரும்பல.
அத விடுங்க .
கண்ணுல டிஸ்டர்புங்கறதுனாலதான் டீவிய பாக்க முடியல அதனால யாகூப் மேமன் தூக்கு
செய்திய தெரிஞ்சுக்க முடியல. மகேசுக்கு போன் போட்டேன். அவரு ராஜஸ்தான் டூர்ல
இருக்காராம். ட்ரெய்ன்ல போறதுனால சிக்னல் தெளிவா இல்ல. அதான் ஒங்களுக்கு
போட்டேன்’.
யாகூப் மேமன
காலய்லேயே தூக்குல போட்டுட்டாங்களே...
அப்படியா .., என
சில நொடிகள் மௌனமாக இருந்தவர் .. கலாம்
இறந்த பரபரப்புக்குள்ளாற மேமன தூக்குல போட்ட நியூச பொதச்சாச்சில்லயா. என சிரித்தார்.
இது தொடர்பாக
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவர் போனை வைக்கும் முன்னர் .. சார் நீங்க அரவிந்து
ஹாஸ்பிட்டலுக்கு நாளக்கி போறப்போ. தனியா மட்டும் போகாதீங்க என கூறி போனை வைத்து
விட்டேன்.
இரண்டு
நாட்கள் வேறு வேறு வேலைகளில் கழிந்து விட்டது. மூன்றாவது நாள் மதியம் வாக்கில்
சிவராமன் நினைவு வரவே மனிதர் கண்ணுல பிரச்னன்னு சொன்னாரே என்னன்னு கேப்போம் என
போனை எடுத்தேன்.
எதிர்
முனையில் ஒரு இளைஞனின் சோர்வு தட்டிய குரல் கேட்டது. சிவராமன் சார் இருக்காரா
எனக்கேட்டேன்.
இருக்காங்க .
நான் அவர் பையந்தான் சார் பேசறேன் என்றது அக்குரல்.
மறு நாள்
அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு போனதாகவும் .கண்களில் ஒரு பிரச்சினையும் இல்லை எனவும் ஒரு
நரம்பியல் டாக்டரிடம் காட்டச்சொன்னதாகவும் அப்படிக்காட்டியதன் பேரில் மூளையில்
புற்று நோய் கட்டி இருப்பதாகவும் அவர் இனிமேல் ஒரு வாரம் வரை உயிரோடு இருப்பது
கடினம் எனவும் என அந்த நரம்பியல் நிபுணர் கூறி விட்டாராம்
.
முதலில் அந்த கட்டி அவரின் பார்வையை பறித்தது.
பின்னர் அவரின் நினைவுகள் பெரும்பாலும் அழிந்து விட்டன. யாருடைய பெயரும் அவரின்
நினைவில் இல்லை. கையும் காலும் செயலிழந்து விட்டதாகவும் சென்னை குன்றத்தூரில்
தேர்ந்த ஒரு அக்யூ பங்சர் மருத்துவர் இருப்பதாகவும் அவரிடம் காட்டினால் குணம்
கிடைக்கும் எனவும் உடனே புறப்பட்டு வரும்படி மகேஷ் மாமா சொன்னதாகவும் சிவராமனின்
மகன் சொன்னான்.
நடுவீட்டில்
நின்று கொண்டிருந்த எனக்கு தலை கிறு கிறுவென சுத்தியது. அப்படியே நடு திண்ணையில்
படுத்து விட்டேன். மாடியிலிருந்து ஒரு அணில் இன்னொரு அணிலை துரத்தியபடி “ ற்றிக்
ற்றிக் “ என குரலெழுப்பியவாறே என் பாதங்களின் மேல் விழுந்தடித்துக் கொண்டு ஓடின,
வீட்டின்
பின்புற ஓடையில் பக்கத்து வீட்டு நாழிரா உடன் கதை அளந்து கொண்டிருந்த என் மனைவி மணியை
பார்ப்பதற்காக திரும்பிப் பார்த்தவள் என்
நிலையைக்கண்டவுடன் “ ... என்னங்க.. என்ன
செய்யுது... “ என பதறியவாறு ஓடி வந்தாள்.
நான்
ஒன்றுமில்லை என கை சைகையால் தெரிவித்தவுடன் சற்றே நிம்மதி அடைந்தவளாக .. உடுத்து வெளியே
கிளம்பிய மனிதன் இப்படி நடு திண்ணையில் படுக்கிறாரே என்னடான்னு மனசு பதறிட்டு...
என பட படத்தவளிடம் சிவராமன் விஷயத்தை சுருக்கமாக சொன்னேன்.
என்னங்க செய்ய
அது ஒரு மனுசண்ட நசீபு ( தலை விதி ) என்றவாறே பக்கத்து வீட்டு நாழிரா அருகில்
சென்றவள் விட்ட இடத்திலிருந்து பேச்சை தொடங்கி விட்டாள்.
````````````````````````````````````````````````````
ஒரு
விருந்தாளி வருவது போல மரணம் முன் தேதியை சொல்லி வருமா ?
இன்ன தேதியில்
வந்து உங்கள் அன்புக்குரியவரை என்றென்றைக்குமாக நான் என்னோடு கூட்டிக் கொண்டு போவேன்
என்ற அதன் மொழியில் தொனிக்கும் உறுதியும் அச்சுறுத்தலும் பயங்கரமும் வீட்டின் சக
உறுப்பினர்களின் நாக்கில் மரணத்தின் சுவையை ஒரு துளி சொட்ட விட்டு இந்தா சுவைத்துக் கொள்
என்பது போல இருக்கின்றதே....
முந்தாநாள் வரை
நம்மோடு பேசிக்கொண்டிருந்தவரை இனி ஒரு போதும் பார்க்க முடியாமல் ஆகிவிடும் என்கிற
நிஜம் என்னை அப்படியே நடு திண்ணையில் உறைய வைத்து விட்டது.
என்னையறியாமல்
என் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சிமிண்ட் தரையில் விழுந்தது. என் கை விரல்கள்
அனிச்சையாக அதில் அலைந்து கொண்டிருந்தது.. சுவர் கடிகாரத்திலிருந்து எழும்பிய
வினாடி முள்ளின் க்றக் க்றக் என்ற ஓசையானது எலும்பைக்கடிக்கும் நாயைப் போல மணித்துளிகளை நொறுங்க கடித்து தின்றுக்
கொண்டிருந்தது.
`````````````````````````````````````````````````````````````````````
சென்னைக்கு
சென்ற பின் ஒரு வாரம் கழித்து மகேஷைப்பார்க்க கோடம்பாக்கம் போனேன். . மகேஷ் எனக்கு
சில வருடங்களாக தெரியும் . என் சம வயதுக்கார். மகேஷ் தேர்ந்த ஒரு
ஒளிப்படக்கலைஞரும் ஆவணப்பட இயக்குனரும் கூட. மகேஷ் வழியாகத்தான் எனக்கு சிவராமன்
பழக்கம்.
வீட்டில்
மகேஷ் மட்டும்தான் இருந்தார். அவரைச் சுற்றிலும் ஸ்பைரல் பைண்டிங் நூல்களும் குறுவட்டுக்களும்
சிதறி கிடந்தன. நீண்ட நோட்டின் தாள்கள் மின்விசிறியின் காற்று இறைப்பில்
படபடத்துக் கொண்டிருந்தன. நான் வரும் முன் எழுதிக்கொண்டிருந்திருப்பார் போல.
வேலய்ல குறுக்க வந்துட்டன் போல என்றேன்
அதொன்னும் பிரச்னயில்ல..
பிடிச்சா எழுதுவேன் . இல்லன்னா வண்டிய
எடுத்துக்கிட்டு சூழலியல் அகழ்வாராய்ச்சினு ஊர் ஊரா சுத்துவேன் . இல்லாட்டி ஷோஃபால
படுத்துக்கிட்டு கிளாசிக்கல் ஃபில்ம் பாப்பேன். யாரு நம்மள கேக்குறது. எனக்கு
நாந்தான் ராஜா மேற்கு தொடர்ச்சி மலய பத்தின டாகுமெண்டரிக்கான ஸ்கிரிப்ட்
எழுதிக்கிட்டிருந்தேன். நேஷனல் ஃபிலிம்
டிவிஷனுக்கு அனுப்பனும். அது கெடக்கட்டும் அப்புறம் எழுதிக்கிறலாம்.
சிவராமன்
சாரோட செய்திய கேட்டீங்களா ? என கேட்டுக் கொண்டே சமையல் கட்டுக்குள் சென்று இரண்டு
பீங்கான் கோப்பைகளில் பிளைன் டீ ஊற்றிக் கொண்டு வந்தவர் மீண்டும் தொடர்ந்தார்
“ கேட்டீங்களா
கபீர் ! சிவராமன் ரொம்ப மன உறுதியானவர். மொத தடவ அவருக்கு கொரல் வளயில கேன்ஸர் வந்தப்போ
கொஞ்சங்கூட கலங்கல. அவரோட ஃபேமிலியும் அவர பாக்க வந்தவங்களுந்தான் அழுதழுது மாஞ்சி
போனாங்க . அவர் என்னவோ மொகத்துல புன்னக மாறாமத்தான் இருந்தாரு.
அவரு
ட்ரான்ஸ்ஃபர் ஆன அத்தன ஊருங்களுக்கும் நான் போய் தங்கியிருக்கேன். யார்ட்டயும்
சொல்ல முடியாத ரகசியங்களயும் மன வேதனகளயும் அவரு எங்கிட்ட சொல்லியிருக்காரு.
அவருக்கு எந்த அளவுக்கு மன உறுதியோ அந்த அளவுக்கு கொழந்த மனசுங்கூட.
ஒரு தடவ
அதாவது இது நடந்து இருவது வருஷமிருக்கும். அவர் பேங்க் மேனேஜரா இருந்த பிராஞ்ச்சுல
உள்ள கேஷியர் இருபத்தையாயிரம் ரூபாயை எப்படியோ தவற விட்டுட்டார். கேஷியர் என்னவோ
நல்ல மனுஷன். எப்படியோ பணம் தவறிப்போச்சு.. அன்னிய நெலவரத்துக்கு அவர் வாங்குற சம்பளத்த விட அது பல மடங்கு தொகை.
இத்தனய்க்கும்
அவருக்கு கலியாணம் கட்டிக்கொடுக்குற வயசுல இரண்டு பெரிய பொண்ணுங்க. ஒரே ஒரு ஆம்பள
பையன்தான். ஆனா விதிட வெளயாட்டப்பாருங்க அந்த பையனுக்கு மூள வளர்ச்சி இல்ல. அந்த
கேஷியர் இது எல்லாத்தயும் ஒன்னா சேத்து நெனச்சுருப்பாரு போல. பணம் கொறஞ்சது
தெரிஞசு போன ஒரு மணி நேரத்துல அவர் ஹார்ட் அட்டாக் வந்து அங்கேயே சரிஞ்சுட்டாரு.
ஒடனே சிவராமன்
என்ன பண்ணாரு தெரியுமா ? இறந்து போன அந்த கேஷியர் தவற விட்ட தொகய தன்னோட
பொண்டாட்டியோட நகய வித்து அன்னிக்கு சாயங்காலம் கணக்க முடிக்கிறதுக்குள்ள கட்டிட்டாரு.
அடுத்த நாளே அந்த கேஷியரோட மொத்த குடும்பமும் சிவராமன் கால்ல விழுந்து கதறி நன்றி
சொன்ன காட்சி இருக்கே. அத நான் சாவுற வறய்க்கும் மறக்க முடியாது கபீர். ஒருத்தன
ஒருத்தன் கவுத்துற ஒலகத்துல இப்டி ஒரு மகாத்மா என்றவாறே மகேஷ் கண்களைத் துடைத்துக்
கொண்டார். அப்போது அவர் கையில் இருந்த கோப்பை சரிந்து தேநீரானது அவரின்
லுங்கியிலும் தரையிலுமாக கொட்டியது.
.
விடைபெறுமுன் சிவராமன் தங்கிருந்த வீட்டின் முகவரியை அவரிடமிருந்து வாங்கிக்
கொண்டேன். சூளை மேட்டில் சிவராமன் தங்கியிருந்த வீடு இருந்தது.
சூளை மேடு
சென்ற போது மாலை வெயில் அவ்வளவாக இல்லாவிட்டாலும் வீசிய காற்று இதமாக இல்லை.
முதுகுகளில்
ஆமை ஓட்டைப்போல தோள் பைகளை சுமந்து கொண்டும் காதுகளில் இயர் ஃபோனை
மாட்டிக்கொண்டும் எலக்ட்ரிக் ரயிலையும்
பேருந்தையும் பிடிக்க தெருக்களில்
தன்னுணர்வின்றி விசை பொம்மைகள் போல விரையும் கொத்து கொத்தான மக்கள் திரள். அவர்கள் யார் மீதும் மோதாமல் செல்வதே பெரும்
சாதனை போல இருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் பெரும் மக்கள் திரளை
சென்னை நகரம் டினோசர் போல விழுங்கிக் கொண்டும் து[ப்பிக்கொண்டும் இருக்கின்றது.
நுங்கம்பாக்கம்
ரயில் நிலையத்திலிருந்து கால் மணி நேர நடையில்தான் சிவராமன் தங்கியிருக்கும் வீடு
இருந்தது. வாசலில் நான்கைந்து இணை ஷூக்களும் செருப்புகளும் கிடந்தன. கறுப்பாக
நடுத்தர உயரத்துடன் ஒரு இளைஞன் வாசலுக்கு வந்து “ அய்யா வாங்க “ என்றான்.
சிவராமனின் ஒடுங்கி நீண்ட முகச்சாயலை அப்படியே நகல் எடுத்த மாதிரியான முகம்.
பிளாஸ்டிக்
சேரைக் காட்டி இருங்க சார் என்றவன் .. அப்பா உள் ரூமுல இருக்கார். கூப்பிட்டு
வாரேன் என்றான்.
நான்
உட்கார்ந்த சேரின் வலது இடதாக நான்கு நான்கு சேர்கள் இருந்தன. அதில் நடுத்தர வயதைச்
சார்ந்த இரண்டு பேரும் முப்பதுக்கும் நாற்பதுக்கும் உட்பட்ட வயது மதிக்க தக்க சிவப்பு
டீ ஷர்ட் அணிந்த ஒருவரும் இருந்தனர்.
சார் லக்ஷ்மி
விலாஸ் பேங்குலயா ஒர்க் பண்றீங்க எனக் கேட்டார் எனது இடது புறமிருந்தவர்.. இல்ல
சார் நான் பிஸினஸ் பண்ணுறேன். சிவராமன் சார எப்படி பழக்கம்னா பரணி ஃபில்ம்
சொஸைட்டில நடந்த ஒரு ஸ்கிரீனிங்கிற்கு என்ன அவர் கூப்பிட்டிருந்தார்....
இதற்கிடையே
சிவராமனை கைத்தாங்கலாக அவரது மகனும் மகளும் கூப்பிட்டு வந்தனர். அரைக்கை பனியனும்
முழங்கால் வரை நீண்ட தொள தொளவென இருந்த
அரை டிரவுசரும் அணிந்திருந்தார்.
குரல் வந்த
திசை நோக்கி கும்பிட்டு “ சார் வாங்க ! என்றார். முகத்தில் அதே மாறா புன்சிரிப்பு.
கண்களுக்குள் கருவிழிகள் இலக்கில்லாமல் அலைபாய்ந்தன. மற்ற நண்பர்கள் இருந்த பக்கமும்
திரும்பி வணக்கம் தெரிவித்தார்.
மனதிற்கு
மகிழ்ச்சியாக இருந்தது. அக்யூ பங்சர் சிகிச்சையில் அவரது நினைவு
திரும்பியிருப்பதோடு கைகால்களும் இயங்க தொடங்கி விட்டன. ஆனால் கண் பார்வை மட்டும்
திரும்பவில்லை.
சிவராமன்
வந்து அமர்ந்ததும் அங்கு கலகலப்பு கட்டியது.
இதற்கிடையில்
சிவராமனின் மகள் எவர்சில்வர் டம்ப்ளர்களில் ஆவி பறக்க தேநீரை எடுத்து வந்தாள்.
எடுத்துக்குங்க
மாமா !
வந்திருப்பவர்களின்
பரஸ்பர அறிமுகம் நடந்தது.
ஒருவர்
கல்வித்துறை சார்ந்த களப்பணியாளர். பெயர் அறிவுழகன். சென்னை வாசி. என சொன்னார். இன்னொருவர் பெங்களூருவில் பாதுகாப்புத்துறை
தளவாட உற்பத்தி துறையில் இருப்பதாகவும் சொன்னார். சிவப்பு டீ ஷர்ட் அணிந்தவர் வேறு
எங்கோ பார்த்தபடி அமைதியாக இருந்தார்.
அவரை சிவராமனே
அறிமுகப்படுத்தினார். ... சார் வந்து பார்ட்டில ஃபுல் டைமரா இருக்கார்.
பார்ட்டினா
அவருக்கு புரியாதுல்ல என்றார் பெங்களூருகாரர்.
சாரி
சார். எம் எல்லுல வினோத் மிஸ்ரா பார்ட்டில
இருக்கார். இப்போதுதான் சிவப்பு டீ ஷர்ட்காரர் என்னைப்பார்த்து புன்னகைத்தார்.
நீங்கள்ளாம்
திருனவேலியா ...
?
பெங்களூருக்காரர
தவிர மத்தவங்களுக்கு திருனல்வேலிதான் பூர்வீகம் பெங்களூருக்காரருக்கு தஞ்சாவூர் பக்கம். ஆனா பெங்களூரு போறதுக்கு
முன்னாடி திருனவேலி வண்ணாரப்பேட்டையில நா வேல பாத்த பேங்குல அவரும் ஒர்க் பண்ணாரு.
அப்பயிலேந்தே நாங்க ரெண்டு பேரும் நல்ல
நெருக்கமாயிட்டோம்.
பெங்களூர்க்காரரை
மெதுவாக உற்சாகம் தொற்றிக்கொள்ள தொடங்கியது. வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்தவர்
வாசலுக்கு வெளியே போய் துப்பி விட்டு வந்தார்.
எது எங்கள
நெருக்கமாக்கிச்சுன்னு கேளுங்களேன்...
ம் சொல்லுங்க
நாங்க
பார்ட்டி சார்பாக கலை நிகழ்ச்சி ஒன்ன திருனவேலி
டவுனுல நடத்துனோம்.
அன்னய்க்கு அங்கு ஆளுங் கட்சில தீவிரமா இருந்த அங்குள்ள
வி.ஐ.பி. ஒருத்தரு நிகழ்ச்சிய நிறுத்தச் சொன்னாரு
இல்ல சார் .
இது தனியாளு நடத்துறதில்லீங்க .எங்க கட்சியிலிருந்து முடிவு பண்ணுன விஷயம்
என்னலே .பெரிய
......... கச்சி மண்ணாங்கட்டி கச்சி நிறுத்துல
நெகழ்ச்சியனு அவர் மெரட்டவும் ரெண்டு பக்கமும் வார்த்த தடிச்சு போச்சு. பேச்சு பேசினாப்புல இருக்க அந்த விஐபி தன்னோட
கார் டிக்கிய தொறந்து அதுலேருந்து மளார்னு ஒரு வீச்சரிவாள எடுத்தாரு.. சுத்தி
நின்னு வேடிக்க பாத்தவங்கல்லாம் கையில உள்ளது கால்ல உள்ளதயல்லாம் வுட்டுப்போட்டு
வெருண்டு ஓடிட்டாங்க
இப்ப `ரோட்டுல சிவராமனும் அந்த விஐபி மட்டும்தான்
தொடய்க்கி மேல
வேஷ்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டு உருளைக்கட்டு மாதிரி இருந்த ரெண்டு காலயும்
அகட்டி அகட்டி நடந்து வந்த அந்தாளு தன் கைய்ல
அருவாள நிமித்தி வச்சிருந்தான். சிவராமன் சாருக்கு அந்தாளுக்கும் அர
அடிதான் இடவெளி.
சிவராமன் சார்
தன்னோட சட்ட பட்டன மள மளனு கழற்றுனாரு .
இந்த
நிகழ்ச்சி இங்கதான்யா நடக்கும் ஒன்னால முடிஞ்சா என்ன வெட்டுயா பாக்கலாம்னு சொல்லி
எலும்பு எலும்பா தெரிஞ்ச அவரோட மாரக்காட்டிக்கிட்டு நின்னாரு
ஒரே செகண்டுதான்
அந்தாளு மொகம் வெளுத்து பெறகு செவந்திடுச்சி அவரு கைய்ல பிடிச்சிக்கிட்டிருந்த
அருவாளு அப்படியே ஐஸ்ல வச்ச மாதிரி நின்னுக்கிச்சி.
பச்ச பச்சயா
சிவராமன் சார ஏசுன அந்தாளு தன்னோட அடியாட்கள பாத்து அந்த மேடய பிச்சு வீசுங்கடானு
சொல்லிக்கிட்டே கீழே குனிஞ்சு ஒரு கல்ல எடுத்து மேடய பாத்து வீசுற சாக்குல தன்னோட
காரப்பாத்து போய்ட்டான்
அப்புறம்
என்னாச்சு
அடியாளுங்க
அங்க போட்டிருந்த நாலஞ்சு சேர ஒடச்சி நிகழ்ச்சி அறிவிப்பு தட்டிய கிழிச்சிப்போட்டு
போய்ட்டாங்க. ஆனா நிகழ்ச்சி அரை மணி நேரம் லேட்டா நடந்தாலும் அங்கதான் நடந்திச்சி.
பெங்களூர்க்காரரு
அப்படியே பேச்சை நிறுத்தி விட்டு மீட்டப்பட்ட பழைய நினைவுகளுக்குள் ஆழ்ந்து
போனார்.
மெல்ல
சிரித்துக்கொண்டே அது நடந்து முப்பது வருஷமாச்சி என சொன்ன சிவராமன் பட்டென தன்
தலையை குனிந்தவாறே இரண்டு கைகளாலும் அதனை மெல்ல கொஞ்ச நேரம் நீவினார் . பின்னர் அவர் ஏதோ ஒன்றின் உரையாடலை கவனமாக கேட்பது போல
இருந்தது.
என்ன ஆச்சு சார்
என அறிவழகன் கேட்டார்.
தலையில் உள்ள
புற்று நோய் கட்டி அவருக்குள் தாங்கவியலாத வேதனையை கிளப்பிக் கொண்டே இருப்பதினால்
அவர் சரியாக தூங்கி பத்து நாட்களாகுவதாகவும் வேதனை உண்டாகும்போதெல்லாம் அவர் தன்
தலையை தடவுவதாகவும் அவரின் மனைவி
கூறினார்.
அனைவரின்
முகத்திலும் கையாலாகாத வேதனை படர்ந்தது.
சில
நொடிகளுக்குள் அதிலிருந்து மீண்ட சிவராமன் எந்த வித முகச்சலனத்தையும் காட்டாமல் விட்ட
இடத்திலிருந்து பேசுவது போல தொடர்ந்து பேசத் தொடங்கினார்.
இந்த ஒலகத்துக்கு
வந்ததுலாம் திரும்ப போய்த்தான் ஆகணும் இல்லியா . இது வரய்க்கும் கடவுள் நம்பிக்க ,
சடங்கு இல்லாம வாழ்ந்துட்டேன். இனிமயும் அப்படித்தான். பெறகு என்னோட கண்ணை தானம்
பண்ணனும். கடசியா சடங்கு இல்லாமதான் பண்ணனும்.
கட்சிக் கொடிய போட்டு விட்டுருங்க. இதுலாம் நடக்கறதுக்கு நீங்கள்லாம்தான்
ஹெல்ப் பண்ணனும் என லேசாக சொல்லி முடித்தார்.
அவர் சொற்களின்
பாரம் அங்குள்ள சூழலுக்கு மேல் வந்து அமர்ந்து கொண்டது
அந்த கனத்தை
உடைக்க விரும்பியவனாய் நான் சொன்னேன், ...
சிவராமன் சார் , பரணி ஃபிலிம் சொஸைட்டி வேலய இனிமதான் மும்முரமா
பாக்கணும்னு நீங்கதான சொன்னீங்க .அக்யூ பங்சர்ல மீண்டு வந்திடுவீங்க. உங்களுக்கு இப்ப
எவ்வளவோ இம்ப்ரூவ் ஆயிருக்கே..ஷாஹித் படம் மாதிரி இனி எவ்ளவோ போட வேண்டி இருக்கே .ஒங்க
வாழ்க்கயிட தொடர்ச்சிதான் ஒங்க மக. அதுலாம் வளந்து வாறப்போ பாக்குறதுக்கு நீங்க
இருக்கணுமில்லே
எனது இடது பக்கம் இருந்த அறிவழகன் , ஆமா சார் , இப்ப சென்றல்ல இருக்கற கவன்மெண்ட்
வளர்ச்சினு வளர்ச்சினு சொல்லியே ஆட்சிய
பிடிச்சாங்க... இந்த பித்தலாட்டத்தயெல்லாம் ஆவணப்படுத்தியிருக்காங்க.
அதயெல்லாம் கொண்டு வரணுமே. அதுக்குள்ள
நீங்க என்னமோ அடுத்த ஊருக்கு போற மாதிரி அவசரப்படறீங்களே ...
அறிவழகன் சார்
நீங்க சரி சொன்னீங்க. இவனுங்க பேசறது அம்புட்டும் பொய்தான் . பொய்தான் அவங்களுக்கு
கைமொதல் அது இல்லன்னா அவங்க கத தீக்கங்கு
மேல விழுந்த மெழுகு உருண்ட மாதிரிதான் என மெல்ல அதிர்ந்த சிரிப்புடன் சொன்ன சிவராமன்
இவங்கட பொய்கள ஒடக்கிற படம்தான் ஷாஹித். என சொன்னவர் அதைப்பற்றி கொஞ்சம் விரிவாக
பேசத்தொடங்கினார்.
`அந்த ஷாஹித்
ஆஜ்மி தனக்கான வாழ்க்கய தொடங்க ட்ரை பண்றதுக்குள்ளயே அடுத்தவங்களுக்கா வேண்டி
அவருட வாழ்க்கயே முடிஞ்சி போச்சே... மாமனுசன்தான் அவன் என சொல்லிக்கொண்டிருக்கும்போதே
குலுங்கி அழத் தொடங்கினார் சிவராமன்.
````````````````````````````````````````````````````````````````````````````
இரண்டு
நாட்களாகவே சிவராமனின் நினைவாகவே இருந்தது.
மூன்றாம் நாள்
அவருடைய மகளிடமிருந்து போன் வந்தது.
போன் பேசி
முடித்தவுடன் போக்கறியாமல் அலைந்த என் கண்கள் எதிர் வீட்டு மாடியின் மேல் போய் நின்றது.
அந்த மாடியின்
மூன்று மூலைகளில் சிவப்பு நிற முக்கோண கொடி சரிகை பார்டருடன் கட்டப்பட்டிருந்தது.
வீசிக்கொண்டிருந்த காற்றில் கொடிகள் மட்டும் அப்படியே உறைந்திருந்தன.
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
இந்த கதை
காயல்பட்டினம் இணைய தளத்தில் 10/11/2016 அன்று இலக்கியம் பகுதியில்
வெளியிடப்பட்ட்து.
No comments:
Post a Comment