Wednesday, 13 November 2019

காற்று ஓடம் - சிறார் கதை



அப்பா தினசரி வாசிக்கும் நாளிதழை வாங்க கடை வீதிக்கு பவ்வர் சென்று கொண்டிருந்தான். அப்போது திடீரென காற்று மிக வேகமாக சுழன்று வீசியது.


 காற்றின் சுழலில் சாலை ஓரத்தில் கிடந்த பழைய காகிதங்கள் வட்டமடித்து உயரம் உயரமாக பறந்து சென்றன. அந்த காகித குவியலில் ஒரு துண்டானது  அங்கிருந்த பல மாடி கட்டிடத்தின் முகப்பில் இருந்த மணிக்கூண்டில் போய் ஒட்டிக் கொண்டது.

அதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் பவ்வர். அந்த காகிதத்தின் சுழற்சி ஏற்றம் அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது.
கடைக்காரர் கொடுத்த மீதி சில்லறையையும் நாளிதழையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினான் பவ்வர்.
அன்று விடுமுறை நாள்.

அம்மா அவனுக்காக காலை உணவாக முறுவலான கேழ்வரகு தோசையையும் தினை வெல்ல பாயசத்தையும் செய்து  உணவு மேசையின் மேல் வைத்திருந்தாள். பவ்வர் அப்பாவிடம் நாளிதழை கொடுத்து விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே போனான்.

பவ்வர் சாப்பிடாம எங்கப்பா போற என்ற அம்மாவின் குரலுக்கு இதோ வந்திடேறம்மா என்றான். பவ்வர் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் செல்லப்பிள்ளை. அதே நேரத்தில் அன்றாடக் கடமைகளில் அவனது பெற்றோர் அவனுக்கு செல்லம் காட்ட மாட்டார்கள் ..

அம்மாவின் கண்டிப்புக்கு அஞ்சி பவ்வர் காலை உணவை சாப்பிட்டான். சுவையாக இருந்தது. அம்மா பாயசம் இன்னும் கொஞ்சம் தாம்மா என்ற பவ்வரின் ஆசையான குரலுக்கு பாயாச சட்டியையே எடுத்து வந்து பரிமாறினாள் அம்மா. சாப்பிடு ராசா என்றாள்.

காலை உணவை உண்ட பவ்வர் நேராக நண்பர்களுடன் கால் பந்து விளையாட சென்றான். நண்பர்களின் உற்சாக ஆரவாரம் சிரிப்பு இவற்றில் பவ்வர் கலந்து கொண்டாலும் அவனது மனம் முழுக்க காற்றில் சுழன்ற அந்த காகிதத்தையே சுற்றி சுற்றி வந்தது. தான் ஒரு காகிதமாக இருந்திருந்தால் காற்றடிக்கும் நேரத்தில்  எளிதாக பறந்து விடலாமே எனவும் எண்ணினான்.
அன்றைய நாள் முழுக்க விளையாட்டு , நண்பர்கள் , கேலி , கிண்டல் என கழிந்தது. மாலை மங்கி இரவானது. வீட்டுப்பாடம் , இரவு உணவு எல்லாம் முடிந்து பவ்வர் படுக்கைக்கு போகும் நேரம்.

மாடியில் அவனுக்கு என தனி அறை உண்டு. அந்த அறையின் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்று படுக்கையை சீராக விரித்தான்.
பவ்வருக்கு எப்போதும் ஒரு வழமை உண்டு. உறங்க போவதற்கு முன்னர் பல் துலக்கி கை கால்களை கழுகி விட்டு இறைவனை வேண்டுவான்.
அன்றைக்கும் வழமை போல அவனுடைய உறக்கத்திற்கு முன்னதாக வேண்டினான். இறைவா ! அந்த சுழலும் காகிதம் காற்றில் மிதந்தது போல காற்றின் முதுகில் என்னையும் தூக்கிச் செல்ல அருள வேண்டும் என மனம் உருகினான்.

அறையின்  மற்ற விளக்குகளை அணைத்து விட்டான். நீல நிறத்திலான இரவு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அவனது படுக்கையின் கால் மாட்டுக்கு நேரே அகலமான சன்னல் இருந்தது. அறையினுள் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்காக அதை எப்போதும் திறந்தே வைப்பான்.
படுக்கையில் கிடந்தபடியே சன்னல் வழியே தெரிந்த வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அன்று வானம் தெளிவாக இருந்தது. நிலவு இல்லாததினால் விண்மீன்கள் பல கோலத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அதிலேயே மனம் ஒன்றி நன்கு தூங்கி விட்டான்.

திடீரென அவனுக்கு தூக்கம் கலைந்தது. பக்கத்து மேசையில் இருந்த  மணியை பார்த்தான். நள்ளிரவு 1:15 மணி. தாகமாக இருந்தது. அறையின் மூலையிலுள்ள மண் பானையிலிருந்து தண்ணீர் குடித்தான். நீர் சில்லென்றிருந்தது. குடித்து விட்டு குவளையை பானையின் மீது மீண்டும் வைக்கும்போது சன்னலின் மீது தொங்கும் திரைச்சீலை மீது அவன் பார்வை விழுந்தது.

இளம் மஞ்சள் நிறத்திலிருந்த அந்த திரைச்சீலையின் வழியாக புகை போல ஒன்று அறைக்குள் கசியத் தொடங்கியிருந்தது. அந்த புகையின் நிறம் பச்சையாக இருந்தது. திரைச்சீலையில் எதுவும் தீப்பிடித்துள்ளதா என்ற சந்தேகத்தில் அவன் அதை உயர்த்திப்பார்த்தான்.

அவன் நினைத்த மாதிரி தீ ஒன்றும் பிடிக்கவில்லை. அந்த புகை போன்ற படலம் சன்னலின் இரும்பு வளையத்திலிருந்து அறைக்குள் நழுவிக்கொண்டிருந்தது. இப்போது அதன் நிறம் நீலமாக இருந்தது. சன்னலின் வெளியே எட்டிப்பார்த்தான்.

 அப்போதுதான் இந்த படலமானது வெட்ட வெளியின்  அந்தரத்திலிருந்து சன்னலை நோக்கி மிதந்து வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த பவ்வருக்கு சற்று அச்சமாக இருந்தது.அந்த படலத்தை பேய் என நினைத்துக் கொண்டான். சட்டென தான் படுத்து கிடந்த கட்டிலுக்கு அடியில் போய் ஒளித்துக் கொண்டான்.

அந்த புகைப்படலத்தையே வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் பச்சை , நீலம், ஒரேஞ்ச் , மஞ்சள் , சிவப்பு என பல வண்ணக்கலவையாய் அந்த படலம் அறை முழுக்க பரவி விட்டிருந்தது. முதலில் பார்க்க புகை போல இருந்தாலும் கூர்ந்து பார்க்கும்போது அது புகை கிடையாது என்பதை புரிந்து கொண்டான்.. அந்த படலம் கண்ணாடி போல தெளிவாக இருந்தது. அந்த படலத்தின் வழியாக மறு பக்கம் இருந்த அறையின் சுவர் , மண் பானை போன்றவற்றை பவ்வரினால் தெளிவாக பார்க்க முடிந்தது.

புகையும் இல்லை. பேய்க்குரிய பயங்காட்டும் அடையாளங்களும் இல்லை. அப்படி  என்றால் இது என்னவாக இருக்கும் என பவ்வர் குழம்பிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அந்த கண்ணாடி போன்ற படலமானது ஒரு வளையம் போல வேகமாக சுழன்றது. இப்போது அந்த படலம் இருந்த இடத்தில் மனிதன் உருவில் ஒன்று நின்று கொண்டிருந்தது.
அந்த உருவத்திற்கு நிறம் எதுவும் இல்லை. தூய்மையான நீரைப்போல இருந்தது.

பவ்வர் கண்ணா ! பயப்படாதே ராசா !! என்றவாறே குனிந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்த பவ்வரைப் பார்த்து இதமாக சிரித்தவாறே இரு கைகளையும் நீட்டியது அந்த உருவம்.

இனி தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட பவ்வர் கொஞ்ச நஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கட்டிலிலிருந்து வெளியே வந்தான்.

நீ யார் ? எனக்கேட்டான்.

 நான்தான் காற்று அண்ணன் . என்னை காற்று ஓடம் என்றும் சொல்வாங்க. நீ நேற்று இரவு படுக்கப்போகும்போது  கேட்ட வேண்டுதலானது எனது காதுகளிலும் விழுந்தது. உன் ஆசையை நிறைவேற்றி வைக்கணும் போல இருந்தது. அதனால்தான் நான் இங்கே வந்தேன் என்றது காற்று ஓடம்.
பவ்வரின் பயம் எல்லாம் கரைந்து உருகி காணாமல் போய் விட்டது. மகிழ்ச்சியில் அவனுக்கு கைகால் விளங்கவில்லை. ஹை ஹை என குதித்தான்.

காற்று அண்ணா நீ என்னை எங்கே கூட்டிசெல்வாய் ? உடனே கூட்டிசெல்லேன் என நச்சரிக்கத் தொடங்கினான் பவ்வர்.

பொறு தம்பி பொறு எனக்கூறியவாறே யானை போல குனிந்து நின்றது காற்று ஓடம். அதன் முதுகு பக்கத்திலிருந்து  சதுர வடிவிலான மூடி ஒன்று படக்கென திறந்தது. அதற்குள் இருக்கை ஒன்று இருந்தது. அதில் பாய்ந்து ஏறி அமர்ந்தான் பவ்வர். அமர்ந்ததும் நீர்க்குமிழிக்குள் ஒரு பொம்மை போல அவன் காட்சியளித்தான்.

ஜிவ்வென கிளம்பிய காற்று ஓடமானது சன்னலுக்குள் இருந்த இரும்பு வளையத்தின் வழியாக தன்னை குறுக்கிக்கொண்டு வெளியே பாய்ந்தது காற்று ஓடம்.

அவ்வளவு பெரிய உருவமாகிய தன்னை எப்படி அந்த சிறிய வளையத்திற்குள் அடிபடாமல் காற்று ஓடமானது குறுக்கி சுருக்கி எடுத்துச் சென்றது என வியந்தான் பவ்வர். அந்த சந்தேகத்தை அதனிடமே கேட்டும் விட்டான்.

அதுவா ! நீருக்குள் மூழ்கும் ஒருவர் அதில் மிதப்பது போல காற்றுக்குள் கலந்தவுடன் நீயும் காற்றின் எடையற்ற தன்மையை பெற்று விடுவாய். என்றது.

வீட்டு மாடியின் நேர் மேலே எம்பி உயர்ந்து கொண்டிருந்த ஓடத்திலிருந்து கீழே பார்க்கும்போது பவ்வருக்கு பயத்தில் வயிற்றை கவ்வியது. அவனது வீடு , பள்ளிக்கூடம் , விளையாட்டு திடல் ஆகியவை வெறும் சதுரக் கட்டங்களாக தெரிந்தன.

வானமும் பூமியும் இருண்ட கடலுக்குள் மூழ்கியது போல இருந்தது. மிகப்பெரிய உயரமும் எங்கும் நிறைந்திருந்த இருளும் பவ்வருக்குஒரு வித திகிலை உண்டு பண்ணியது.

தன்னுடைய முட்டாள்தனமான ஆசையினால் ஒரு ஆபத்தான பயணத்தில் மாட்டிக்கொண்டோமோ என்ற அச்சம் மனதை குடைந்தது. நம்மை ஏற்றிச்செல்லும் இந்த அண்ணன் உண்மையிலேயே காற்று அண்ணன்தானா அல்லது ஏதும் பேய் பிசாசா என்ற சந்தேகம் பவ்வர் மனதில் எழுந்தது. அப்பா அம்மாவின் அன்பு முகங்கள் நினைவிற்கு வர அச்சத்தினாலும் ஏக்கத்தினலும் விசும்பத் தொடங்கி விட்டான்.

பவ்வரின் விசும்பல் ஒலியை கேட்ட காற்று அண்ணன் திரும்பி பார்த்தார். பயமா இருக்கா பவ்வர் என்ற அவரின் கேள்விக்கு அவன் ஆமாம் என்று தலையாட்டினான். உடனே அவனின் வீட்டை நோக்கி பறக்கத்தொடங்கினார்.

 வீட்டின் மொட்டை மாடிக்கே காற்று ஓடம் திரும்பி வந்ததை பார்த்த பவ்வருக்கு பயமும் ஐயமும் தெளிந்து காற்று அண்ணனின் மீது நம்பிக்கை பிறந்தது. என்ன தம்பி இப்போதாவது என்னை நம்புகின்றாயா ? எனக்கேட்டார். கண்களை துடைத்துக் கொண்டே சிரித்த பவ்வர் என்னை மன்னித்து விடுங்கள் காற்று அண்ணா என கெஞ்சினான்.
சரி சரி இந்தா பிடி என அவனுக்கு ஒரு தங்க நிறத்தில் இருந்த மண மிக்க பழுத்த மாம்பழத்தை பரிசாக கொடுத்தார் காற்று அண்ணா. அதை ஆசையாய் வாங்கி பார்த்து உடனேயே சாப்பிடவும் தொடங்கினான். மிக்க சுவையாக இருந்தது.

என்ன புறப்படலாமா ? இனி அழ மாட்டியே என காற்று அண்ணா கேட்க சம்மதத்தின் அடையாளமாக  பவ்வர் தலையை இங்கும் அங்கும் அசைத்தவுடன் ஜிவ்வென காற்று ஓடம் கிளம்பியது.

கீழே கட்டம் கட்டமாக கிடந்த வயல் வெளிகள் , வரி வரியாக தளம் போட்டது போல அசைவற்று கிடந்த கடல் பரப்பு , கரிய மணல் குவியல்களைபோல நிற்கும் மலைகள்  என அனைத்தையும் காற்று ஓடம் நிதானமாக கடந்து சென்றது.

மலையின் முகட்டையும் கடலின் அலைகளையும் பசுமையான பயிர்களின் முனைகளையும் பவ்வர் தொட்டு பார்க்க வசதியாக காற்று ஓடமானது அவற்றின் மிக அருகில் சென்றது.

கடல் நீர் இளஞ்சூடாகவும் , மலை முகடு மேடு பள்ளங்களுடன் கடினமாகவும் , பயிர் முனை குளிர்ந்த பனித் துளிகளுடனும் இருந்தது.
இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கவும் தொடவும் முடிந்ததில் பவ்வருக்கு மிக்க மகிழ்ச்சி.

பவ்வர் உன்னை எந்த இடத்திற்கு கூட்டிக் கொண்டு போக வேண்டும் என காற்று அண்ணா கேட்க கொஞ்சமும் தாமதிக்காமல் மேகம் என விடையளித்தான் . ஏற்கனவே இந்த விடையை அவன் சிந்தித்து வைத்திருந்தான். யாரும் போகாத இடமாக இருக்க வேண்டும் என்பது அவனது ஆசை.

வானத்தின் மிக உயரத்தில் வெண் பனியையும் பஞ்சையும் மொத்தமாக ஒரு இடத்தில் கொட்டி வைத்தது போல பென்னம் பெரிய மேகம் ஒன்று நிலை கொண்டிருந்தது.

அதற்கு கீழே குட்டி குட்டியாக திட்டு திட்டாக நிறைய மேகங்கள் இருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் விட அந்த பென்னம் பெரிய மேகத்திற்கு செல்லத்தான் அவனுக்கு கொள்ளை ஆசை.

பென்னம் பெரிய மேகத்தை நெருங்கியதும் காற்று ஓடம் பிரேக் போட்டு மெல்ல நின்றது. மேகத்தின் வாயிலை தனது கைகளால் காற்று அண்ணா தட்டினார்.

யாரது என ஒரு உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. நான்தான் காற்று அண்ணா ! பூவுலகின் குட்டி விருந்தாளியோடு வந்திருக்கின்றேன். கதவை திறங்கள் .
வெண்பஞ்சால் ஆன கதவு மெல்ல திறந்தது. மேகக்காவலாளி உள்ளிட்ட அனைத்து பொருட்களுமே அங்கு தூய்மையான கண்ணைப்பறிக்கும் வெண்ணிறத்தோடு இருந்தது. பவ்வரின் கண் கூசியது. மெல்ல கண் பழகியது.

அங்குள்ள மேகக்குழந்தைகள் ஓடி வந்து பூவுலக அண்ணா என அவனை சுற்றி குதூகலத்துடன் ஆட்டம் போட்டன.

காற்று அண்ணா பவ்வரை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
அங்கு விளையாடுவதற்கு எல்லா விதமான வசதிகளும் இருந்தன. பவ்வர் ஆசை தீர மேகக்குழந்தைகளுடன் விளையாடினான்.

இடையில் அவனுக்கு தாகம் ஏற்பட்டது. தண்ணீர் என அவன் முணு முணுத்ததுதான் தாமதம் உடனே குவளை பனித்துளிகள்  நிரம்பிய. சிறிய வெண் முத்துக் குவளை அவனுக்கு கொடுக்கப்பட்டது. அதில் இருந்த தண்ணீர் இதமான குளிர்ச்சியாகவும் பன்னீர் மணத்துடனும் இருந்தது. அதன் குளிர்ச்சியிலும் மணத்திலும் அவன் கிறங்கிப் போய் இருந்தான்.
 பூவுலக அண்ணா உங்களை அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க என மேகப்பிஞ்சு ஒன்று வந்து அழைத்தது.

உணவுக்கூடத்தில் முகில் அம்மா மிக்க அன்புடன் பவ்வரின் தலையை வருடி வரவேற்றார். ராசா ! இது உன் வீடு மாதிரி. நீ என்ன வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றார்.

உணவு அறையில் மிதக்கும் தட்டுக்கள் இருந்தன. அதில் அவனுக்கு பிடித்தமான மாம்பழம் ,சப்போட்டா ,ஆப்பிள் , மாதுளை ,திராட்சை , பலா , கொய்யா , கிர்னி, வில்வம் என பெயர் தெரிந்த தெரியாத பழ வகைகள் அங்கு இருந்தன. பால் , தித்திப்பு , பனிக்கூழ்  சேர்த்த விதம் விதமான பழக்கலவைகளும் இருந்தன.

இதில் எதை சாப்பிடுவது என்றே அவனுக்கு தெரியவில்லை. மகிழ்ச்சியின் உச்சத்தில் பசியே இல்லாமல் போய் விட்டது. ஒப்புக்கு ஒவ்வொன்றிலும் கொஞ்சம் சுவைத்தான். எண்ணற்ற பழ வகைகளை காணும்போது அவனுக்கு தனது அப்பா , அம்மா , தம்பி , தங்கைகளின் நினைவு வந்தது. அவர்களையெல்லாம் விட்டு விட்டு தான் மட்டும் தனியாக சாப்பிடுகின்றோமே என எண்ணினான்.

அவனது மனதில் ஓடும் எண்ணத்தை புரிந்து கொண்ட முகில் அம்மா உடனே அவனுக்கு எல்லா பழ வகைகளும் அடங்கிய பொதி ஒன்றை பரிசளித்தார். பவ்வர் ராசா இதை உன் வீட்டில் உள்ளவங்களுக்கு எங்களது அன்பளிப்பாக கொடு என்றார்.

இதற்கிடையில் மேகக்குழந்தைகள் வாங்க பவ்வர் அண்ணா நாம போய் சுற்றிப்பார்க்கலாம் என அழைத்தனர். அவனும் உற்சாகமாக கிளம்பினான்.

மேகத்தின் ஒரு ஓரத்தில் வட்ட வடிவிலான பெரிய பெரிய பாண்டங்கள் இருந்தன. அந்த பாண்டங்களுக்குள் குழாய்களிலிருந்து  நீராவி இறங்கிக்கொண்டிருந்தது. அந்த குழாய்களின் மறுமுனையோ கண்ணுக்கு தெரியவே இல்லை. நிலவின் ஒளியில் அவை கலங்கிய மஞ்சள் நிற நீரினால் ஆன  அதல பாதாளத்தில் முங்கியது போல இருந்தது.

பவ்வர் ஒன்றும் புரியாதவனாய் இவையெல்லாம் என்ன என்று கேட்டான்.
இந்த குழாய் கீழே கடல் வரைக்கும் போகும். அதிலிருந்து ஆவியாகி குழாய் வழியாக வரும்  நீர்தான் பெரிய பாண்டங்களில் சேகரிக்கப்படுகின்றது.
எங்க மேக வீட்டிற்கு மேலே மழைக்கான அலுவலர் ஒருத்தர் இருப்பார். அவருடைய உத்தரவு வந்தவுடன் இந்த மண் பாண்டத்தை பூமியைப்பார்த்து நாங்கள் திறந்து விடுவோம்.  அப்போதுதான் பூமியில் மழை பெய்கின்றது என்றது ஒரு மேக பிஞ்சு.

திடீரென மணி ஓசை கேட்டது. காற்று ஓடத்தின் ஹார்ன் ஒலிதான் அது.  பவ்வர் ராசா இப்போது மணி 04:30 . புறப்படும் நேரமாகி விட்டது.  ரெடியாகு என்றார் காற்று அண்ணா.

பவ்வருடன் கூட மேகக்குழந்தைகளின் முகங்களும் வாடி விட்டது.
கண்ணுங்களா வருத்தப்படாதீங்க . பூமியில் குப்பையை கண்ட இடத்தில்  போடாமல் , தண்ணீரை வீணாக்காமல் மரம் நட்டு யாரெல்லாம் நீரூற்றி அம்மா அப்பாவிற்கு நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்கின்றார்களோ அவர்கள் அவ்வளவு பேருக்கும் இந்த மேக வீட்டின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்றார் முகில் அம்மா .

மேகக்குடும்பத்தார் சார்பாக பவ்வருக்கு மேகப்பஞ்சினால் செய்த கால்பந்து ஒன்று பரிசளிக்கப்பட்டது.

பரிசுப்பொருட்களை சுமந்து கொண்டு மனதே இல்லாமல் பவ்வர் காற்று ஓடத்தில் ஏறி வீடு வந்து சேர்ந்தான்.

அவன் தன் பரிசுப்பொருட்களை கட்டிலில் வைத்து விட்டு திரும்பி பார்த்தான்.

காற்று ஓடமானது அதன் வடிவத்தை கலைத்து கொண்டு தெளிந்த கண்ணாடி படலம் போல ஆனது. பின்னர் வண்ண வண்ண புகை போல மாறியது. கொஞ்ச நேரத்தில் வண்ண புள்ளிகளாய் அந்தரத்தில் கரைந்து விட்டது.

ஒரு வேளை அது அவனது அடுத்த வேளை வேண்டுதலுக்காக வெட்ட வெளியில் காத்திருக்கின்றதோ ?

--------------------------------------------------------------------------------------------------------------------------------
இதன் சுருங்கிய வடிவம் சனவரி 2015 பூவுலகு மின்மினி இதழில் வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment