Friday, 15 November 2019

எண்ணெய் பூட்டு





 

கரி மூட்டையில்  முக்கி புரட்டப்பட்ட ஆழ்ந்த இருள் . சாலையின் ஓரத்தில் நகராட்சியின் கரும் பச்சை நிற குப்பைத் தொட்டிக்கருகில் மினி லாரி ஒன்று நின்றிருந்தது. பச்சையும் மஞ்சளும் பழுத்ததும் பழுக்காததுமான மாங்காய் குவியல் அதற்குள் நிறைந்திருந்தது.  வண்டியை நிறுத்தி விட்டு ஓட்டுனர் கேபினுக்குள் நன்கு தூங்குகின்றார்.

 

 

 

 

குப்பைத் தொட்டியைத் தாண்டிய முடுக்கிலிருந்து இரண்டு பேர் மெல்ல வெளியே வந்தனர்.. ஒருவன் சென்று லாரி கேபினுக்குள் எட்டிப்பார்த்து டிரைவர் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டான். தலையை ஆட்டி இவன் சைகை காட்டிய பின்னர் இரண்டு பேரும் பதுங்கிச் சென்று வண்டிக்குள் கையை விட்டு அந்த காய்களை வேர்க்க விறு விறுக்க அள்ளி அள்ளி பொறுக்கி மூட்டை கட்டுகின்றனர். பதட்டத்தில் சில காய்கள் மேலும் கீழுமாக சிதறுகின்றன. மேலும் சில காய்கள் வண்டிக்கடியில் உருண்டு ஓடி ஒளித்துக் கொள்கின்றன.

 

 

 

அப்போது திடீரென எங்கிருந்தோ ஒரு வாய்  மட்டும்  வட்ட வடிவில் திறந்தபடி தனியாக அந்தரத்தில் எந்த ஒட்டுமில்லாமல் மிதந்து வருகின்றது. நீல நிறம் பூசிய .மேலடுக்கும் கீழடுக்குமாக சம அளவில் நீண்ட தாடையில் இரண்டு அங்குல நீளத்திற்கு கூரிய இரும்பு பற்கள்.

 

 

 

 

குனிந்து மாங்காய் மூடைகளை கட்டிக்கொண்டிருந்த திருடனின் நெஞ்சில் போய் கடும் வேகத்தில்தொம்என ஓசையோடு  அந்த வாய் முட்டுகின்றது.

 

 

அதன் கூரிய பல் நெஞ்சுக்குழிக்குள் போய் செருகுகின்றது. ஆப்பிள் பழத்தைக்குடைவது போல் அவனது நெஞ்சை குடைந்துக் கொண்டே செல்கின்றது வாய் . அதன் இரு ஓரத்திலிருந்தும் சதை துருவல் வழிந்து விழுந்து தரையில் சிறு மேடு ஒன்று உருவானது .

 

 

இறுதியில் அவனின் முதுகில் வழியாக வெளியேறும் அந்த வாயின் ஓரத்தில் ரத்தம் பட்டையாக ஒட்டியிருக்கின்றது. .

 

 

 

குதறப்பட்டு கிடக்கின்றான் திருடன். அவனின் தலைக்கு மேல் நான்கு பக்கமும் முழு வேகத்தில் கிறு கிறுவென சுற்றிய அந்த வாய் உதடுகளை குவித்து சீழ்க்கை அடிக்கின்றது . காதை வளைந்து துளைக்கும் ஒலி. பின்னர் மெல்ல வண்ணத்துளிகளாய் சிதறி படர்ந்து அந்தரத்தில் அந்த வாய் கரைந்து உதிர்ந்து விடுகின்றது. சன்னலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அன்வர் உடம்பு குளிர்ந்து தரையில் அமர்ந்துவிட்டான். காற்றில் தெறித்த ரத்த துளிகள் தலை கழுத்து முகம் என அவனின் உடல் முழுக்க அப்பிக் கொண்டிருந்தது .

 

 

 

 கட்டிலுக்கு கீழே உள்ள பெட்டியின் மீது வைத்திருந்த செல் போன் அலாரம் கலகலத்தது.

 

 

 

03:45 க்கு ஒன்று 4:00 மணிக்கு ஒன்று என இரண்டு அலாரம் வைத்திருந்த அன்வர் முதல் அலாரம் அடித்த அடியில் தூக்கத்திலிருந்தும் கனவிலிருந்தும் ஒரே நேரத்தில் கலைந்து எழுந்தான்.

 

 

 

அவனது உடலின் ஒரு பக்கம் வேர்த்திருந்தது. தலையிலிருந்து கால் வரை நடுங்கியது. முகத்தையும் தலை முடியையும் இரண்டு விரல்களாலும் கோதி ரத்த வாடை அடிக்கின்றதா என முகர்ந்து பார்த்தான். விளக்கை போட்டு கண்ணாடி முன் நின்று உற்றுப் பார்த்தான். அந்த வாயிலிருந்து பீறிட்ட சீழ்க்கை ஒலி செவிப்பறைக்குள் அலையலையாய் அதிர்ந்து  கொண்டிருந்தது. காதின் குழிக்கு கீழே வலித்தது.

 

 

இரு கைசேர்த்துஎண்ட றப்பே இது பொய்யாப்போயிடுனுமே இந்த கெட்ட கனவுலேந்து என்ன காப்பாத்து யா அல்லாஹ்என துஆக்கேட்டான்.

-------------------------------

 

கனவின்  பதட்டத்தில் முஹல்லா பள்ளியில் தொழ வைக்கும் ஆலிமிடம் போய் விளக்கம் கேட்டான் அன்வர் .

 

 

தொழுகை முடிந்து எல்லாரும் போன பின்னர் அவனை தன் அறைக்கு கூப்பிட்டு தொண்டையைக்  கனைத்தவராக   விளக்கம் சொல்லத் தொடங்கினார் ஆலிம். 

 

 

இறைத்தூதர்களுக்கு  பிறகு மனிதனுக்கு இறைவனின் புறத்திலிருந்து ஏதேனும் செய்தி வர வேண்டுமென்றால் அது கனவின் வடிவத்தில்தான் வரும். கனவிலும் மூன்று வகை உண்டு.

 

 

குடலுக்கும் கனவிற்கும் தொடர்பு உண்டு. வயிற்றுக்கோளாறு இருந்தால் தாறுமாறாக கனவு வரும், இது குறித்து அஞ்ச வேண்டியதில்லை. நல்ல கனவு இறைவனின் புறத்திலிருந்து வரக்கூடியது. இதில் உள்ள நற்செய்தியை மிக நெருக்கமானவர்களிடம் பகிர்ந்தால் போதும். எல்லோரிடமும் சொல்லக்கூடாது. பொறாமைக்காரன் கெட்ட எண்ணக்காரன் உனக்கு கிடைக்கவிருக்கும் நலவுகளைப் பற்றி புழுங்குவான்.

 

 

 

 

கெட்ட கனவு வந்தால் அது ஷைத்தான் புறத்திலிருந்தும் வரலாம் அல்லது உனக்கு நேரவிருக்கும் கெட்ட நிகழ்வுகளைப்பற்றிய எச்சரிக்கையாகவும் இருக்கலாம். அந்த மாதிரி கனவைக்காணும்போது அது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது. ஏதாவது தவறான விளக்கம் சொல்ல அதையே மனது பற்றிக் கொண்டு விடும். பிறகு எல்லா செயல்களிலும் தேவையற்ற அச்சமும் குழப்பமும் ஏற்படும்.

 

 

 

கெட்ட கனவை காணும்போது எல்லாம் வல்ல இறைவனிடம் பாதுகாப்புத்தேடி விட்டு . தர்மம் கொடுங்கள். கனவை நனவாக்குபவனும் நனவை கனவாக்குபவனும் அந்த மெய்ப்பொருளல்லவா?. அழி ரப்பர் அழிக்கிற மாதிரி தர்மம் கெட்ட நஸீபை அழித்து விடும்... ”

 

 

ஒரே மூச்சில் சொல்லி முடித்தவர் அருகில் உள்ள ஃப்ளாஸ்கில் இருந்து பிளைன் டீயை அன்வருக்கும் தனக்குமாக  ஊற்றி விட்டு , “ குடிங்க தம்பி  “ ஏந்தம்பி !  நாம தூங்கும்போது நம்ம ஆன்மா மே வானத்துக்கு போகும்பா. அப்படி போற போக்குல நெறய விஷயங்கள பாக்கும் . அதான் தம்பி கனவுல நேரடியா அப்டியே பளிச்சுனு தெரியுது. செல சமயம் கோட்ட கிழிச்சி போட்டு மறைமுகமா சிக்னல் காட்டீரும். நாமதான் அதப் புரிஞ்சிக்கிடனும்என்றார்.

 

 

 

-----------------------------

 

 

காலய்லதான் பூட்டிட்டு போனேன். சனியன் தொறந்து தொலைய மாட்டங்குதுமா.என எரிச்சலில் பூட்டை இழுத்து மீண்டும் முடுக்கு பக்க கதவில் சட்டென அடித்தாள் முர்ஷிதா.

 

 

 

பின்னால் நின்ற மூத்த மகள் கறீமாஅடி உம்மா நீ ஒருத்தி அத  போட்டு அடிச்சு என்னவாப்போவுது பழசாயிட்டதுனால சிக்கியிருக்கும் .தேங்கா எண்ண போட்டு ஊற விட்டா சரியாயிடும்.... “

 

 

 

போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு விட்டு வீட்டின் பின்பக்கமாக போய் அங்குள்ள கதவைத்திறந்து நேராக அடுப்பங்கரைக்குள் நுழைந்தாள் முர்ஷிதா .

 

 

அடுப்பங்கரையில் எண்ணெய் பிசுக்கு பிடித்த அலமாரி தட்டில் வெங்காய கூடைக்கு பின்னால் தேங்காய் எண்ணெய் குப்பி சரிந்து கிடந்தது. குப்பியை எடுக்கும்போது கறுத்த பல்லி ஒன்று வெடுக்கென்று பக்கவாட்டு சுவர் மேல் பாய்ந்து  ஓடி ட்யூப் லைட்டு ஃப்ரேமிற்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டது.

 

 

 

 

"சனியன் இத மொத தொலச்சுக்கட்டணும். எல்லா எடத்தலயும்  வால ஆட்டிட்டு இருக்குது" என்றவாறே குப்பியை திறந்து  பூட்டின் வாயில் எண்ணெயை ஊற்றினாள். எண்ணெயில் பூட்டு இரண்டு நாட்களாக ஊறிக் கொண்டிருந்தது.

 

 

 

மூன்றாம் நாளும் முர்ஷிதா திறக்க முயன்றும் பூட்டு அதே முரட்டுத்தனத்துடன் அசைந்து கொடுக்கவில்லை.

ஞாயிற்றுக் கிழமை , பிள்ளையார் சதுர்த்தி என தொடர்ந்து லீவாக இருந்ததால் கொல்லாசாரியையும் கூப்பிட வழியில்லை. ஐந்தாவது நாளாகவும் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

 

------------------------

 

 

முக்கால் பாகம் தேய்ந்தழிந்த நிலையில் இரவு இன்னமும் மிச்சமிருக்க முர்ஷிதாவின் காலின் கட்டை விரலில் ஏதோ மெலிதாக சீப்பின் பற்களால் வைத்து வருடுவது போலிருந்தது. சட்டென போர்வையை தூக்கிப் போட்டு விட்டு காலை உதறினாள். கரப்பான் பூச்சி ஒன்றுசொத்என தரையில் விழுந்து .ஃபிரிஜ்ஜின் பின்பக்கம் ஓடி மறைந்தது.

 

 

 

"சனியன்" என முணு முணுத்தபடியே தூக்கம் கலைந்த எரிச்சலில்   எழுந்து  கழிவறைக் கதவை திறந்தவள் அப்படியே நின்று விட்டாள்.  ஓடையில்கடக் கடக்என என இரட்டிப்பு ஒலி கேட்டது. "பாச்சான் ஓடிட்டு இப்ப அடுப்பங்கரயில எலி தொல்ல . நாளய்க்கி எலிக்கூடு வய்க்கணும்" என நினைத்தபடியே கழிவறை போய் விட்டு திரும்பியவளுக்கு ... கடக்..  கடக்.... என்ற ஓசை பலமாக தொடர்ந்து  கேட்டது. "எலி கடிச்சா இவ்வளவு ஸ்ட்ராங்காக கேட்காதே..."  என குழம்பினாள்.

 

 

 

மின்விசிறியை நிறுத்தி விட்டு  ' வடிவில் படுத்து கிடந்த இளைய மகன் ஸாஜிதை தாண்டி மெதுவாக முடுக்கு கதவு பக்கம் நின்று காதை தாழ்த்தினாள். தன் வீட்டு கதவில் உள்ள பூட்டை திருப்பி அசைக்கும் ஒலிதான் அது என்பது உறுதியாயிற்று. அத்துடன் கிசு கிசுப்புக்குரல்களும் தெளிவாக கேட்டன. முர்ஷிதாவிற்கு சட்டென அடிவயிறு கலங்கி முகம் முழுக்க வியர்த்தது .

 

 

 

கணவன் அன்வர் திருநெல்வேலிக்கு வேலையாக போனவன் கடைசி பேருந்தை தவற விட்டதால் இரவு முத்துச்சாவடியிலேயே தங்கி விட்டான்.  அவனின் இல்லாமை இன்னும் அவளுக்கு கலக்கத்தை கூட்டியது. தலை பிடரி என வியர்த்து பொங்கி முதுகு வழியாக வியர்வை தாரை போல ஓடியது. அலமாரி ஓரம் போர்த்திக் கிடந்த திருமண வயதை எட்டிய மகளைப் பார்த்தவுடன் மனம் விறைத்தது .  “ பயப்படப்படாது.. “  என முர்ஷிதா தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள்.

 

 

ஒழிஞ்சிருவானுவோ சந்தேகமேயில்ல இது கள்ளனுவதான் என வாய்க்குள் முணுமுணுத்தவள் அடுத்த தெருவிலிருக்கும் காக்காவைக்கூப்பிட செல் போனை எடுத்தாள்.  அதில் மணி 2:58 என காட்டியவுடன் இந்த நேரத்தில் அவசரப்பட்டு அவர் தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என நினைத்தாள்.

 

 

 

முடுக்கு கதவிற்கும் வீட்டிற்கும் இடையில் உள் ஓடைக்கதவு ஒன்று இருந்தது. அது கனமுள்ள வலுவான  மரக்கதவுதான். அந்த கதவை கோத்ரெஜ் லாக்கைப் போட்டுதான் பூட்டி வைத்திருந்தாள். அத்துடன் முடுக்கு கதவின் வெளிப்பூட்டு சிக்கிக் கொண்ட படியால் உள்பக்கம் இரும்பு அடிதண்டா பட்டை போட்டு பூட்டியிருந்தாள்.

 

.

 

கள்ளன் அவ்வளவு எளிதாக வீட்டிற்குள் வர முடியாது என்ற இந்த இரட்டை கதவுகளின் தைரியத்தில் சற்றே தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். உள் ஓடையின் மேல்முனையில் உள்ள கிராதியின் கீழ் ஓட்டை வழியாக எட்டிப்பார்த்தாள். தெரு விளக்கின் உதவியால் வெளி முடுக்கின் கடைசி எல்லையில் உள்ள வீட்டின் படி வரை தெளிவாக தெரிந்தது.

 

 

 

அவள் வீட்டின் முடுக்கு கதவருகே  மாநிறத்தில் நெட்டையாக ஒருத்தனும் அடுப்பங்கரையின் சன்னல் அருகே கறுப்பாக குள்ளமாக இன்னொருவனுமாக  நின்றுக்கொண்டிருந்தனர்.

 

 

 

 

மாறி மாறி சாவிகளைப் போட்டு பூட்டை குள்ளன் லாவகமாக  ஓசை வராமல் உலுக்கிக் கொண்டிருந்தான். திறந்திருந்த அடுப்பங்கரையின் சன்னல் கிராதியின் கம்பிக்குள் கயிறைப்போடுவதற்கு  நெட்டையன் லேசாக எம்பி முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் வீசிய ஒவ்வொரு முறையும் கயிறானது சன்னல் கம்பியில் மோதி மோதி அடிபட்ட பாம்பு போல தரையில் விழுந்துக் கொண்டிருந்தது.

 

 

 

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த முர்ஷிதா கையில் வைத்திருந்த போனில் காக்காவை அழைத்தாள். " சப்ஸ்கிரைபர் யு ஆர் காலிங் இஸ் நாட் ரீச்சபிள் " என அந்த நேரத்திலும் அழகிய குரலில் கடமை  பேசியது கைபேசி. வியர்வையின் மொத்த துளிகள் செல் போன் திரையில் விழுந்து எண்களை உருப்பெருக்கிக் காட்டின. பக்கத்து வீட்டு எண்ணை தேடும்போது கை நடுங்கியது .தொடை இரண்டும் தனியாக கிடு கிடுத்தன . தப்பு தப்பாக பெயர்களும் எண்களும் வந்தன.

 

 

"...ர்ர்ர்ர்.. " என அடித்தொண்டை உறுமல் ஒன்று முடுக்கில் கேட்டது.  " வவ்வ்" என்று தெறித்து அவள் காதில் விழுந்த ஓசையில் நடுங்கி முர்ஷிதா சுவரில் சாய்ந்து விட்டாள். தலை சுற்றத் தொடங்கியது. பீரோ,  நகை , வயதுக்கு வந்த மகள் என வண்ண வண்ணமாக பல காட்சிகள் கலந்து பளீரென்ற வெளிச்சத்தில் மூடிய கண்களுக்குள் குவிந்து வழிந்தன. மூச்சுத்திணறி வயிற்றை புரட்டி வாந்தி தொண்டைக்குழி வரை எவ்வியது. மிகவும் சிரமப்பட்டு வாயைப் பொத்திக் கொண்டவளின் இமைகளுக்குள்ளும் தலைக்குள்ளும் கண் போய் செருகிக் கொண்டது.

 

 

 

 

டம்... டம் என கதவின் மீது விழுந்த பலத்த அறைகளின் அதிர்வில் முர்ஷிதாவின் அரை மயக்க நிலை கலைந்தது. மீண்டும் இரவின் நினைவுகள் பட்டென அவளை கவ்விப்பிடிக்க கிராதியின் வழியாக வீட்டினுள் பதிந்திருந்த இளம் வெயில் கீற்றைப் பார்த்தவுடன் கொஞ்சம் தைரியப்பட்டாள்.

 

 

 

 

ஒரு வழியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டு எழுந்தவள் தட்டிக்கதவை திறந்தாள்.பக்கத்து வீட்டு ஹலீமாதான் நின்றிருந்தாள். இரவு உடுத்த பாவாடையும் சரியாக போடாத தாவாணியுமாக வந்த ஹலீமாவின் வீடு முர்ஷிதாவின் வீட்டிற்கு வலது புறமாக இருக்கின்றது

 

 

 

" மச்சி ! கதவத்தொறவேன்என்றவுடன் ஏதாவது மவுத் செய்திதான் வருகிறது போல... என நினைத்தவாறே முர்ஷிதா, ஹலீமாவை சிறு பதட்டத்துடன் ஏறிட்டுப்பார்த்து விட்டு கதவைத் திறந்து அவளை உள்ளே வரச்சொன்னாள் .

 

 

 

"ஒங்க வீட்டு பூட்ட ராத்திரி கள்ளன் ஒடக்க பாத்தீக்கிறானே தெரியுமா?"

 

 

 

 

“ஆமாடி தோழீ...” என்றபடியே முர்ஷிதா அழத் தொடங்கினாள். அவளை தோழில் சாய்த்தபடியே ஆசுவாசப்படுத்திய ஹலீமா மீதிக்கதைகளை சொன்னாள்.

 

 

 

"எதுத்த வூட்டு இப்றாஹீம் இருக்கிறானே அதான்  அந்த கதீஜாட மாப்பிள்ள"

 

 

 

"ஆமா .. சொல்லு"

 

 

 

“ அவன் மதுரய்க்கு போய்ட்டு ராத்திரி இரண்டர மணி கிட்ட அவன் வூட்டுக்கு வந்திருப்பாம் போல . பெட் ரூமில கடுமையான வெக்கையினால தூக்கம் வரலேனு சொல்லி ஜான்சுல படுத்தீக்கிறான்.”

 

 

 

“ஒரு மூணு மூணே கால் மணி இருக்கும்போல. கடுமயா நாய் கொறச்சீக்குது. இவன் ஜன்னல் வழியா எட்டிப்பாத்தீக்கிறான். நம்ம முடுக்குல நிண்டு கொலச்ச நாய் ஒங்கூட்டு சொவத்துல துள்ளி துள்ளி பறாண்டீக்குது.”

 

 

 

“என்னடா வித்தியாசமா இருக்குதேண்டு இப்றாஹீம் நல்லா உத்து பாத்தீக்கீரான். ஒங்க ஊட்டு முடுக்கு கதவுட பூட்ட ஒத்தன் அப்டியும் இப்படியுமா திருப்புறானாம். இன்னொருத்தன் ஒங்க வீட்டு அடுப்பங்கள ஜன்னல்ல துள்ளி கயிற போட்டு அத மறுபக்கம் இழுத்து சுருக்கு போட்டு  அந்த கயித்த புடிச்சிக்கிட்டு ஜன்னல்ல ஏறிட்டானாம்.”

 

 

 

“அந்த நேரம்பாத்து நாய் அவன்ட வேட்டிய இழுத்தீக்குது. இவன் தடுமாறி நாய் மேல விழுந்துட்டான். வலி தாங்காத நாய் இரண்டு முன்னங்கால்களயும் அவன் முகத்துல தூக்கி பதிச்சு வச்சி கடிச்சு குதறி நகத்தால அவன் மொகம் முழுச பறண்டீட்டு போல . யம்மா யய்யா என மூஞ்ச பொத்திக்கிட்டே கத்தீக்கிறான்.”

 

 

 

 

“ஒடனே பூட்டுல கை வைச்சுக்கிட்ட இருந்த அடுத்த கள்ளன் தலை தெறிக்க கொறச்சுக்கிட்டிருந்த நாய சூ சூ என வெரட்ட அது வெருண்டு போய் உழுந்து கெடந்த கள்ளன் மேல அப்பிக்கிட்டு கடூரமா கொலச்சிச்சாம்.”

 

 

 

“நிண்டுக்கிட்டிருந்த கள்ளனுக்கு கையுங்காலும் பதறி ரோட்ல கெடந்த ஒரு கல்ல எடுத்து நாய் மேல் வெறியோடு எறிஞ்சீக்கிறான். நாய் உஷாரா டக்குனு தலய திருப்பீட்டு.”

 

 

“எறஞ்ச கல் நேரா உழுந்து கெடந்த கள்ளன் மூஞ்சில போய் உழ அவன் இன்னுங்கொஞ்சம் வாள் வாள்னு தலய பிடிச்சுக்கிட்டு கத்த ஆரம்பிச்சிட்டான்.”

 

 

  “கீழ உழுந்த கிடந்த கள்ளன பிடிச்சு தூக்கி பர பரண்டு அவன் கைய பிடிச்சி இழுத்துட்டு தொலய்வுல நிப்பாட்டி வச்சிருந்த ஆட்டோவுல உக்கார வச்சு தட்டு தடுமாறி ஆட்டோவ ஸ்டார்ட் பண்ணீட்டு ஓடிப்போயிட்டானாம்.”

 

 

 

“அடியோ  நாசமாப்போவானுவோ! ஆட்டோ புடிச்சிட்டு வந்தது மட்டுமில்லாம   . திட்டம் போட்டு ஊட்ல உள்ளத மொத்தமா அள்ளிக்கீட்டு போற கெட்ட நிய்யத்துலய்லோ வந்தீக்கீறானுவோ”  என புலம்பினாள். முர்ஷிதா.

 

 

 

“அடி நீ ஒருத்தி. கொஞ்சம் நில்லு, நாஞ்சொல்லி முடிச்சிரட்டும்” என்ற ஹலீமாவின் மார்பு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மீதி கதையை சொல்லிமுடித்தாள்.

 

 

 

“ கேட்டீயா ரோட்டு லைட்டு வெளிச்சத்துல அடிபட்ட கள்ளண்ட மொகத்த பாத்திருக்குறான் இப்றாஹீம். சாயத்தண்ணில முக்குன மாதிரி மோற ஃபுல்லா ஒரே ரெத்தம். அவனுவளுக்கு பொறத்தாலயே நாயும் கொறச்சுக்கிட்டே ஓடிக்கீது.”

 

 

“  நாய்டயும் கள்ளன்டயும் கொளறுவலய்ல எனக்கு முழிப்பு வந்து முடுக்கு லைட்டு போட்டு தொறந்து பாக்கும்போது எதுத்த வூட்டு இப்றாஹீம் அவ்ளோ கதயயும் சொல்றான்.”

 

 

“நல்லா வெளிச்சம் வந்த பொறவு முடுக்குல போய் பாக்குறன். மண் பொரண்டு ஒன்னு கெடந்துதுடீ.  உவ்வே”  என அடி வயிற்றிலிருந்து குமட்டியவளின் முகச்சுளிப்பில் முர்ஷிதாவிற்குள் இன்னும் கலவரம் மூண்டது.

 

 

 

என்னடி அது ?

 

 

நீயே வந்து பாரேன் என முடுக்கின் பக்கம் முர்ஷிதாவை தர தரவென இழுத்து சென்றாள் ஹலீமா.

 

 

முர்ஷிதாவின் அடுப்பங்கரை ஜன்னலுக்கு கீழே அது கிடந்தது.

 

 

மண் அப்பிய கறுப்பு  நிற துணுக்கொன்று  கிடந்தது. அதன் ஒரு பகுதி  நசுங்கி ரத்தத்தில் தேய்ந்திருந்தது. தப்பி ஓடிய திருடனின் காது. ஈக்கள் மொய்த்துக் கிடந்தன.

 

 

அடித்து புரண்டு வீட்டிற்குள் சென்று பாத்ரூமில் ஓங்கரித்தாள். குமட்டல் அடங்க அரை மணி நேரமாயிற்று.

 

 

உம்மாக்காரியின் அலம்பல்களில் உறக்கம் கலைந்த மகள் கறீமா கண்களில் பீளை ஒட்டியிருக்க மலங்க மலங்க விழித்தாள்.   ஒரு நாளைக்கு 10 மணி நேரம் உறங்கி கழிக்கும் அவளின் மந்த மூளைக்கு மெல்ல விவரம் புரிந்தது. முதல் வேளையாக வாப்பா அன்வருக்கு போனில் விலாவாரியாக அவள் விவரித்தாள். திருநெல்வேலியிலிருந்து முதல் பேருந்தை பிடித்து வந்து கொண்டிருந்த அன்வருக்கு எது கனவு? எது நிஜம்? என்ற குழம்பத் தொடங்கினான். 

 

 

நாம கண்ட கனவுல கள்ளன்ட நெஞ்ச நாயிட வாய் கொதர்ற மாதிரில வந்திச்சி. இப்ப எப்படி காத கொதறிச்சி. கனவு சரியா ? நிகழ்வு சரியா ? ஒரு வேளை முர்ஷிதா ஏதும் கனவு கண்டிருப்பாளா ? கனவு முந்தியா ? நடந்தது முந்தியா ? இல்ல ஆலிம்சா நம்பள கொழப்பறதுக்காக ஏதும் ஒதி கீதி வச்சி மனப்பெறளிய உண்டாக்குறாரா ?

 

 

 ஊருக்கு வந்தவன் வீட்டுக்கு வராமலேயே  நேராக பள்ளிவாசலுக்கு சென்றான்  அன்வர்.

 

 

ஆலிமின் அறைக்கதவை தட்டினான். பதிலில்லை. பக்கவாட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். நான்கைந்து சிரட்டைகளை சேர்த்து தேய்த்தாற்போல குறட்டை ஒலி அறையின் சுவர்களில் மோதி மோதி விழுந்து கொண்டிருந்தது.  அவர் கை பனியனும் லுங்கியுமாக பாயில் சாய்ந்து தொப்பையின் அடிப்பாகம் மட்டும் வெண்மையாக எட்டிப்பார்த்து கொண்டிருக்க தூக்கத்தின் ஆழத்தில் அவர் இருந்தார்.

 

--------------------------------------------------------------------------------------------

சொல் விளக்கம் :

 

முஹல்லா = பள்ளிவாசலின் அண்மையில் உள்ள குடியிருப்பு

 

ஆலிம் = மத அறிஞர்

 

றப்பு = இரட்சகன் ,( இறைவனின் இன்னொரு குணப்பெயர் )

 

துஆ = பிரார்த்தனை

 

பாச்சான் = கரப்பான்

 

முடுக்கு = சந்து

 

ஓடை = வீட்டின் உள் சந்து

 

ஜான்ஸ் = முன்னறைlounge  என்பதன் திரிபு

 

கொளறுதல் = குளறுதல்

 

நிய்யத் = எண்ணம்

 

பெறளி = புரளி , குழப்பம்

 

வாப்பா = தந்தை

 

உம்மா= தாய்

 

காக்கா = அண்ணன்

 

`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

 

No comments:

Post a Comment