Tuesday, 12 November 2019

ஆகாசத்தின்டே நிறம் -- ஒரு திருடன் ஒரு தீவு சில மனிதர்கள்





டாக்டர் பிஜூ என்ற பிஜூ குமார் தாமோதரன் எழுதி இயக்கிய மலையாள படம்.
 நடிப்பு : இந்திரஜித் , நெடுமுடி வேணு , அமலா பால் , பிரித்வி ராஜ்.
----------------------------------------------------------------------------------------------------


நமது நாட்டில் இருக்கும் சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் மனமாற்றத்திற்கான வாயிலை திறக்கின்றனவோ இல்லையோ அவை தேங்கிய குட்டையில் கொசுக்கள்  பெருகுவது போன்று குற்ற மன நிலையை அடை காத்து வளர்க்க உதவுகின்றது என்பதில் அய்யமில்லை.


குற்றவாளிகளை சீர்திருத்தும் பொறுப்பு சிறைக்கு மட்டும்தானா ? சமூகத்திற்கு அதில் எந்த பங்கும் இல்லையா ?
தன்னில் நிகழும் பிறழ்வை குண நலிவை தனக்கு தானே சரி செய்து கொள்ளும் வழி முறையை சமூகமானது பெற்றிருக்கின்றது என்பதை அழகியலுடன் சொல்லும் கதை இது.  


கைவினை பொருட்களை செய்யும் முதியவர் ஒருவர் நகரத்திற்குள் தனது பொருட்களை விற்று பணம் பெறுகின்றார். அதை அபகரிக்க திட்டமிடும் வழிப்பறிக்காரன் அவரை பின் தொடர்ந்து செல்கின்றான்.
அவர் படகினுள் ஏறி அமர்ந்த பின்னர் இவன் கைத்துப்பாக்கியை காட்டி பணத்தைக் கேட்டு மிரட்டுகின்றான். இந்த மிரட்டலை அமைதியாக எதிர் கொள்கின்றார் அந்த முதியவர்.


 அந்த வழிப்பறிக்காரன் சற்றும் எதிர்பார்க்காத ஒரு கணத்தில் வாளை உருவும் லாவகத்தோடு படகுப் பொறியின் விசையை அவர்  இயக்குகின்றார். திருடனின் துப்பாக்கி வழியே துருத்திக் கொண்டிருந்த வன்முறையானது சட்டென சரிந்து விழுகின்றது.   நீந்தவும் படகோட்டவும் தெரியாத திருடன் மாட்டிக் கொள்கின்றான். தன்னை விட்டு விடும்படி அவன் கெஞ்சுகின்றான்.
படகானது திருடனையும் சுமந்து கொண்டு முதியவர் குடியிருக்கும் தீவினை சென்றடைகின்றது.


கடலும் வானமும் செடி கொடிகளும் தங்களது நீல பச்சை நிறங்களை கலவையாக்கி வரைந்த சித்திரம்தான் அந்த தீவு.  அந்த வண்ணத்திற்கு பின்னனி இசையாக தீவின் தனித்த மௌனம் மெல்ல ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.


அந்த மௌனத்திற்குள் உட்கார்ந்திருந்தது அந்த குடியிருப்பு . அதில் சிறுவனும் பேசும் திறனற்ற இளம் பெண் ஒருத்தியும் இருந்தனர். அவர்கள் இருவருடன் முதியவருக்கு ஒத்தாசையாக ஒரு நடுத்தர வயதுக்கார  மனிதரும் இருந்தார்.


இந்த திருடனை அவர்கள் வித்தியாசப்படுத்தி பார்க்காமல் தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினரைப்போலவே நடத்துகின்றனர்.
.
இருப்பு கொள்ளாமல் தவிக்கும் திருடன் அந்த தீவிலிருந்து வெளியேற நினைக்கின்றான். நீண்டு கிடக்கும் கடல் வெளியானது சிறைச்சாலையின் முடிவற்ற நெடிய சுவர் போல அவனுக்குள் எழுந்து நின்று அச்சமூட்டுகின்றது.
திருடனுக்குள் ஒரு மாற்றம் வரும் வரை அவனை வெளியேற அனுமதிப்பதில்லை என்ற முடிவுடன் முதியவர் இருக்கின்றார்.


இதனால் எரிச்சலுற்ற திருடன் முதியவரின் கலைப்பொருட்களை உடைத்து சேதப்படுத்துகின்றான். முதியவர் அதை ஒரு மெல்லிய புன்னகையுடன் கடக்கின்றார். அவன் தனது களைப்பை வாய் பேச இயலாத அந்த இளம் பெண்ணிடம் காட்ட முனைகின்றான்.


உடனே திருடனின் நெற்றியில் சிறுவன் விட்ட பொடி கல் வந்து பதம் பார்க்கின்றது. வெறியுடன் அந்த சிறுவனை திருடன் துரத்த முயலும்போது வலுவான உடல் கட்டுடைய நடுத்தர வயதுக் காரர் குறுக்கே வந்து நிற்கின்றார். அவமானத்திலும் தோல்வியிலும் திருடன் தலையை தொங்க போடுகின்றான்.


பின்னர் தனித்த சில தருணங்களில் அந்த இளம் பெண்ணிடம் மோதல் உணர்வோடு திருடன் நெருங்க நினைக்கின்றான். அப்போது பூ போன்ற அந்த மெல்லிய கரங்களில் கத்தி மின்னுகின்றது,


இந்த உடனடி எதிர்வினையானது அனிச்சை செயலின் வேகத்துடன் கண நேரத்தில் சீரான சங்கிலித்தொடர் போல  நடந்தேறுகின்றது. இயற்கையுடன் பிணைந்த வாழ்க்கையானது  குண நடத்தை விலகல்களை உடனே தடுத்து நிறுத்தும் உள்ளார்ந்த உணர்வையும் வலிமையையும் கொடுக்கும் போலும்..
இந்த மாதிரி மோதல்கள் மனித உறவுகளில் வழமையாக விட்டுச் செல்லும் முறுகல்கள் எதுவும் தொடர்வதற்கான வாய்ப்பே அந்த தீவு வாழ்க்கையில் இல்லை. திருடனின் தலைக்காயத்திற்கு முதியவர் பரிவு ததும்ப மருத்துவம் செய்கின்றார்.


வழமை போலவே திருடனுக்கு வேளா வேளைக்கு உணவும் , பானங்களும் உரிய கண்ணியத்துடன் பரிமாறப்படுகின்றன. திருடனுக்கு குடிப்பழக்கம்  உண்டு என்பதால் அதுவும் குறைவின்றி கொடுக்கப்படுகின்றது.
திருடனுடன் சேர்த்து மொத்தம் நான்கு பேர் மட்டுமே வசிக்கும் அந்த தீவில் முதியவரின் சில மர்மமான நடவடிக்கைகள் திருடனுக்கு வேறு சில அய்யங்களை கிளப்புகின்றது. தீவில் வேறு யாரும் இருக்கக் கூடுமோ என தோன்றுகின்றது.


வாழ்க்கை என்பது சில பல அழகிய தருணங்களை கொண்டது எனவும் இரவிற்குள் உறங்கும் பெருங்கடலையும் அதில் கனவு போல துள்ளியெழும் மீன்களையும் சுட்டிக் காட்டி திருடனுக்கு நடுக்கடலில் போதிக்கின்றார் முதியவர். அவனோ அதை உள்வாங்கும் மன நிலையில் இல்லை.


இதற்கிடையில் அந்த தீவிலிருந்து வெளியேற அவன் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் ஒன்று தோல்வியில் முடிகின்றன அல்லது தடுத்து நிறுத்தப்படுகின்றன. அவனை சுற்றிலும் அரூபமான கண்காணிப்பு வளையம் இருந்து கொண்டே இருக்கின்றது.


தீவில் சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட முற்றுகை மன நிலை , தப்ப முடியாத தன்னுடைய கையாலாகதத் தனம் , விடை கிடைக்காத கேள்விகள் என திருடனுக்கு அந்த தீவின் மொத்த சூழ்நிலையும் பெரும் கனம் மிக்கதாக மாறுகின்றது.


அந்த அழுத்தம் உண்டாக்கும் உளைச்சலின் ஓயாத தாக்குதலானது இறுகிய அவனது குண நலனில் சிறிய நெகிழ்வை உண்டாக்குகின்றது.
விதையின் மேல் தோட்டில் விழும் கீறல் போல ஏற்பட்ட இந்த மெல்லிய அசைவை அவதானிக்கின்றனர் முதியவரின் தீவுக் குடும்பத்தினர் .
சுதந்திரவானாகவும் நம்பிக்கைக்கு உரியவனாகவும் தன்னைத்தானே அவன் உணரும் வண்ணம் சில அடிகள் தீவுக்குடும்பத்தினரால் முன்னெடுத்து வைக்கப்படுகின்றது.


தீவின் மீது கவிந்து கொண்டிருப்பதாக திருடன் நினைக்கும் மர்மத்திரையை முதியவர் விலக்கி காட்டுகின்றார்.


தீவின் மறு ஓரத்தில் விசாலமான ஒரு குடில் அமைக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வண்டியில் அவனை முதியவர் அங்கு அழைத்து செல்கின்றார்.
 அதில் முதன்மை நிலத்தில் கை விடப்பட்ட முதியவர்கள் தங்கியுள்ளனர். கலை பொருட்கள் விற்பனைக்காக வெளியே செல்லும் முதியவர் பாதையின் ஓரங்களில் ஒதுங்கியிருக்கும் இந்த கைவிடப்பட்ட மாந்தர்களை தனது படகில் அழைத்து வருவார். இந்த குடிலில் வைத்து பராமரிப்பார்.
அவர்கள் முதுமையினாலும் , நோய்களின் தீவிர தாக்குதலினாலும் இறப்பிற்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள்.
அந்த தருணங்கள் உண்டாக்கும் குன்று போன்ற மனபாரத்தை பனி போல கலைத்திடும் வகையில் அந்த குடிலின் அன்றாட நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.



இரவு உறங்கும் முன் ஒலிக்கும் மத்தள இசை , வாழ்வின் அநித்தியம் வழிந்தோடும் பெங்காலி நாட்டுப்புற பாடல் , பகல் நேரங்களில் பண்ணை வேலைகள் என குடிலின் சூழல் எப்பொழுதும் உற்சாகம் நிறைந்தாக உள்ளது.
.முதுமை விளைவிக்கும் புறக்கணிப்பை களிப்பு நிறைந்ததாக மாற்றும் ரசவாத தன்மை கொண்டவையாக அந்த கலை நிகழ்வுகள் திகழ்கின்றன.. 
அந்த குடிலில் வேறு சில ஒதுக்கிடங்கள் உள்ளன. ஒன்றில்  கவிஞரும் மற்றொன்றில் ஓவியரும் தங்களது படைப்புக்கள் கோரும் தனிமைக்காகவும் இயற்கையின்  ஒத்திசைவுக்காகவும் தங்கியுள்ளனர்.
முதுமையின் தனிமையும் கலைஞனின் தனிமையும் தங்களின் முரண்களை அந்த குடிலில் தழுவி தீர்த்துக் கொள்கின்றன.



இறுதியில் திருடனுக்குள் இருக்கும் மனிதன் தன்னை மீட்டுக் கொள்கின்றான். அவனை முதியவரே படகில் அழைத்துச் சென்று மறு கரை சேர்க்கின்றார்.


கேமிரா  மீண்டும் தீவிற்கு திரும்புகின்றது.


குடிலில் உள்ள ஓவியர் இறந்து போகின்றார். திருந்திய திருடன் ஒரு படகு நிறைய அத்தியாவசிய பொருட்களுடன் அந்த குடிலுக்குள் நுழைகின்றான்.
சொற்பமான உரையாடல்கள் , நிதானமான நகர்வுகள் , மிகக் குறைந்த வெளிச்சத்தில் விரியும் காட்சிகள் என மொத்த கதைக்களத்தையும் அதன் போக்கில் இயல்பாக நகர்த்தும் இயக்குநர் , இது ஒரு கற்பனைக்கதை என்று நம்ப முடியாதபடி செய்துவிடுகின்றார்.


மாற்றம் வாழ்க்கையின் ஒரு அம்சம் என்பதை எளிமையாகவும் வலிமையான காட்சிமொழி வழியாகவும் பேசும் இந்த படத்தை ஒரு தியானித்தலைப்போல பார்க்க தகுந்த படைப்பாக கொள்ளலாம்.

```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````


இதன் சுருங்கிய வடிவம் தி இந்து தமிழ் நாளிதழின் இணைப்பான இந்து டாக்கீஸின் இரண்டாம் பக்கத்தில் 23/05/2014 வெள்ளியன்று வெளிவந்துள்ளது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6039701.ece



No comments:

Post a Comment