Tuesday, 12 November 2019

ஆசீர்வாதத்தின் வண்ணம் ( ஆசீர்வாதர் ரங் )


“ பிரம்மாவின் மகன், அப்துல் கனியின் மகன் இருவரும் கழுத்தை கட்டிக் கொண்டு நதி நீரில் விளையாடுவோம். இது ஹிந்து நதி இல்லையா ! பிரம்மா எனக்கு என்ன தண்டனை கொடுக்கிறார் என்று பார்க்கிறேன்! அவரே நேரில் வந்து ‘ இந்த நதியில் உன் மகன் நீராடக் கூடாது, இது ஹிந்து நதி ‘ என்று சொல்கிறாரா, பார்க்கிறேன்….”
“இப்போது அவளுடைய பார்வை ஹஸினாவின் நெற்றிக் குங்குமத்தின் மீது சென்றது. ஒரு முஸ்லிம் பெண்ணின் நெற்றிப் பொட்டு. தன்னுடைய முதல் ஆசீர்வாதத்தின் சின்னம். அவள் தன் நடுங்கும் உதடுகளை ஹஸீனாவின் நெற்றிப் பொட்டின் மீது பதித்தாள்!.... “
                                                                                                ---- ’ஆசீர்வாதத்தின் வண்ணம் ‘
---------------------------------------------------------------------------------
‘ நீலகண்ட பறவையை தேடி ‘ புதினத்தின் அஸாமிய  நீட்சி என்று கூட ‘ஆசீர்வாதத்தின் வண்ணம்’ புதினத்தை சொல்லலாம் . நாட்டு பிரிவினையின் வேர்களில் ஊறிக் கிடக்கும் நச்சை உரித்து போடும் எழுத்து.


இணைந்தெழும் காலையும் கதிரவனும் போல ஹிந்துக்களும் முஸ்லிம்களும் விரவி பிணைந்திருக்கும்  வாழ்க்கையற்ற பெங்காலையும் அஸாமையும் ஏன் முழு இந்தியாவையும் நினைத்து கூட பார்க்க முடியாது.


வன்மத்துடன் வெட்டி பிளக்கப்பட்ட தாய் மண்ணின் காயங்களின் வேர்களில் உள்ளோடிய வெறுப்பின் நச்சு படிமங்கள் சிதையாமல் அப்படியே அழுந்திக் கிடக்கின்றன. திறப்பு தேடி மண்ணில் விழும் புத்தன் விதைகளை தன் அழுகிய விரல்களின் கூர் நகங்களால் துளைத்திடும் ஒரு கொடுந்தருணத்திற்காக அவை காத்துக் கிடக்கின்றன.
இந்த புதை கிடங்கின் நச்சு தேக்கமானது அரசியல் சமூக அறிவுத்தள செயல்பாடுகளின் வழியாக வெளியேற்றப்பட்டு அழிக்கப்பட்டிருக்க வேண்டும். இவைகள் செய்யத் தவறிய பெரும்பணியை இலக்கியத்தின் வழியாக படைப்பு மனதின் வழியாக செய்திருக்கிறார் அருண் சர்மா. இதற்கு மலையை ஒத்த மனம் தேவை.



பிரம்மபுத்ரா நதியில் பயணிக்கும் மன்ஸூர், தற்செயலாக ஒரு நிலப்பரப்பை கண்டடைகின்றான். பிரம்மபுத்ரா நதியின் கிளை நதியான குரயீ நதியின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கின்றது அந்த புதிய நிலப்பரப்பு.  அவனுடன் பல முஸ்லிம்களும் அந்த பூமியில் குடியேறுகின்றனர். அந்த நிலத்தை கொத்தி திருத்தி வளங்கொழிக்கும் ஒன்றாக மாற்றுகின்றனர். பின்னர் அங்கு கொஞ்சம் கொஞ்சமாக நேபாளிகளும் குடியேறுகின்றனர்.
அந்த புதிய நிலப்பரப்பிற்கு குரயீகுடி என்று பெயரிடப்படுகின்றது. இதனருகிலேயே அமைந்திருக்கும் இன்னொரு கிராமமான ஸோனாரூச்சுக் கிராமத்தில் ஏற்கனவே ஆட்கள் வசித்து வருகின்றனர்.


ஸோனாரூச்சுக்கில் கஜேன் என்கிற ஹிந்து இளைஞனும் அவனது வயதான பாட்டியும் வசித்து வருகின்றனர். கஜேனுக்கு தாயுமில்லை தந்தையுமில்லை. பாட்டியோ பழஞ் சடங்குகளில் ஆழ்ந்த பற்றுள்ளவள். வாட்டசாட்டமான கஜேன் காணாமல் போன தனது தந்தையைப்போலவே துணிச்சலானவன். கண் முன்னே நடக்கும் அநீதியை உடல் வலுவுடன் தட்டிக் கேட்பவன்.


ஸோனாரூச்சுக் கிராமத்தின் தலைவரான கர்க்கீ, அனைத்து போக்கிரித்தனங்களையும் உடைய ஆசாமி. அவருக்கு அதே போல துர் நடத்தைகளுடைய யாதவ் பௌரா, மோத்தி மிஸ்த்திரி , தீன் துத்திராம் போன்ற ஆட்களும் இயல்பான கூட்டாக அமைகின்றனர். துர்நடத்தையுடன் கூடவே கள்ளும் விற்கும் மோத்தி மிஸ்த்திரியின் மனைவியுடன் யாதவ் பௌரா பகிரங்கமாக முறையற்ற தொடர்பபையும் பேணி வருகின்றான்.


கிராமத்திற்கு பொதுவான குளத்தை கர்க்கீ தனது செல்வாக்கினாலும் வலிமையினாலும் அபகரிக்கின்றார். அதை கஜேன் தட்டிக் கேட்கின்றான். அன்றிலிருந்து கிராமத்தின் தீய கூட்டணியினருக்கும் கஜேனுக்கும் இடையிலான உறவு  வெளியில் நன்றாக இருப்பதாக தெரிந்தாலும் உள்ளுக்குள் முறுகிக் கொண்டே செல்கின்றது.


மீன் பிடிப்பதற்காக குரயீகுடி கிராமத்திற்கு வழமையாக கஜேன் செல்லுமிடத்தில் மன்ஸூரும் அவனது குடும்பத்தினரும் நட்பாகின்றனர். ஒரு நாள், காலில் காயம்பட்ட மன்ஸூரின் மகளான சிறுமி ஹஸீனாவை கஜேன் தனது வீட்டில் தங்க வைக்கின்றான். முஸ்லிம்கள் விஷயத்தில் தீண்டாமையை கடைப்பிடிக்கும் கஜேனின் பாட்டிக்கு இது ஒவ்வாமையை அளித்தாலும் மனதின் ஆழத்தில் சிறுமி ஹஸீனாவின் மீதான பாசமும் நேசமும் துளிர் விடுகின்றது. தீண்டாமையை மென்மையாக கடைபிடித்துக் கொண்டே ஹஸீனாவிடம் அன்புமும்  செலுத்தி வருகின்றாள் பாட்டி.


இதற்கிடையே இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையின் இருண்ட கரங்கள் குரயீ குடீ, ஸோனாரூச்சுக் கிராமங்களையும் எட்டுகின்றது.
குரயீகுடியும் குரயீ நதியும் அவர்களது உள்ளங்களிலும் உணர்விலும் இரண்டற கலந்த நிலையில் முஸ்லிம் லீக் போதகர்களின் பாக்கிஸ்தான் கோரிக்கையை குரயீகுடி முஸ்லிம்கள் திடமாக நிராகரித்து விடுகின்றனர். தங்களது வேர்கள் எங்கயோ இல்லை. அவை ஊன்றியிருப்பது தங்களது கால்களுக்கு கீழேதான் என்பதை அவர்களின் ஆன்மாவின் உள்ளுறை குரல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது.



ஆனால் ஸோனாரூச்சுக் கிராமத்திலோ பிரிவினையின் வெறுப்பானது தனது கூட்டாளிகளை சரியாக இனங்கண்டு கொண்டது. கர்க் கும்பலானது வீர் சாவர்க்கர், கோல்வல்கர், ஆர்.எஸ்.எஸ் ஆகியோரின் வெறுப்பு போதனைகளின் பால் மனங்கொள்வதுடன், அவர்களே அதன் பாத்திரங்களாகவும் பரப்புரையாளர்களாகவும் மாறி விடுகின்றனர்.


ஊர் குளத்தை வளைத்து வாயில் போட்ட கிராமத்தலைவர் கர்க்கிற்கும் அவரது கும்பலுக்கும் நீண்ட நாட்களாக குரயீகுடி கிராமத்தின் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருக்கின்றது. பிரிவினையின் கரிய நிழலானது இந்த இரு கிராமங்களையும் தீண்டியவுடன் குரயீகுடியை நாட்டுப்பற்றின் பெயரால் கைப்பற்ற கர்க் விழைகின்றார். அதை அவரின் வாயும் உறுதிப்படுத்துகின்றது. கஜனோ, இந்த அநீதியை நடந்தேற விட மாட்டேன் என ஆக்கிரமிப்பாளர்களின் முகத்திற்கு நேராகவே அறைகூவல் விடுக்கின்றான்.



இதற்கிடையில் கர்க், யாதவ் பௌரா கும்பலானது குரயீகுடி கிராமத்தை தீக்கிரையாக்குகின்றது. நேபாளிகளின் வீடுகளைத் தவிர அனைத்து முஸ்லிம்களின் குடிசைகளும் தீய்ந்தழிந்து விடுகின்றன. நெருப்பின் கருக்கும் கரங்களுக்கு தப்பிய முஸ்லிம்கள் அனைவரும் வெட்டிக் கொல்லப்பட்டு ஆற்றில் போடப்படுகின்றனர். அவர்களின் நகையும் பணமும் கொள்ளையடிக்கப்படுகின்றது.  இதனை கேள்விப்பட்ட கஜேன் கையாலாகாமல் உன்மத்தங்கொள்கின்றான். கொலைத்தாண்டவத்தின் குற்றவாளிகளை வாளின் மூலம் தண்டிக்க விழைகின்றான். மனதின் கொந்தளிப்பு அடங்கியதும் வாளேந்தியதின் தவறை உணர்ந்து வருந்துகின்றான்.



குரயீகுடி கிராமத்தை கொளுத்திய கொலையாளிகளை சிறையிலடைக்காமல் வெறுமனே நிற்கின்றது காவல்துறை.
கொலையாளிகளை மிரட்டியது, அவர்களின் குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் நடந்தது, மோத்தி மிஸ்த்திரியின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தது என மூன்று பொய் வழக்குகளில் கஜேனை விரைந்து சிறைபிடித்து வதைக்கின்றது காவல்துறை.



வழக்கு விசாரணைக்கு வரும்போது, இரண்டு வழக்குகளில் ஒன்றில் விடுதலையும் மற்றொன்றில் சிறிய தண்டத்தொகையுமாக தீர்ப்பாகின்றது. பாலியல் வன்கொடுமை வழக்கில்  மோத்தி மிஸ்த்திரியின் மனைவி, கஜேன் மீதான குற்றச்சாட்டை உறுதியாக மறுத்து விட்டாள். வழக்கறிஞரின் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பணியாமல் , கஜேன் மிகவும் நல்லவன் என நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை பதிவு செய்தாள்.  எனவே இவ்வழக்கிலும் கஜேனுக்கு விடுதலை கிடைத்துவிட்டது .வெளிவரும் கஜேன் ஓய்ந்திருக்கவில்லை. தொடர்ந்து வெறுப்பு அணிக்கு எதிராக இயங்குகின்றான்.
குரயீகுடியில் மன்ஸூரும் அவனது மனைவியும் கொல்லப்பட்டு விட்டனர். மன்ஸூரின் மகளாகிய ஹஸீனா, கஜேனின் வீட்டில் அடைக்கலம் புகுகின்றாள். முழு ஆதுரத்துடன் அவளை தன் மெலிந்த கரங்களில் பொதிந்து கொள்கின்றாள் பாட்டி..




குரயீகுடி அழித்தொழிப்பின் ஒரே நேர் சாட்சியான ஹஸீனாவையும் வெறுப்பு மனிதர்கள் குறி வைக்கின்றனர். அவள் தற்சமயம் சிறுமி இல்லை. அவளை தனது வீட்டில் வைத்து தொடர்ந்து பாதுகாப்பதில் உள்ள பலமுனை நெருக்கடிகளை பற்றி சிந்தித்ததில் அவளுக்கு மணமுடித்து வைப்பதுதான் ஒரே பாதுகாப்பு என தீர்மானிக்கின்றான் கஜேன். குரயீகுடியில் ஒரு முஸ்லிம் கூட உயிருடன் எஞ்சியிருக்கவில்லை. தொலைவான இடத்தில் போய் தேடியதிலும் பொருத்தமான வரன் அமையவில்லை.


 யாரோ தெரியாத ஒருவரிடம் ஹஸீனாவை திருமணம் என்ர பெயரில் தள்ளி விடுவதை விட தானே முஸ்லிமாகி அவளை மணந்து கொண்டால் என்ன ? என்ற கோணத்திலும் சிந்திக்கின்றான் கஜேன். அப்படி மதம் தழுவி அவளை திருமணம் செய்து கொள்ளலாம்.என்ற தன் விருப்பத்தை  பாட்டியிடம் தெரிவித்தான். அவளோ அதைக்கேட்டு அருவருப்படைகின்றாள்.


சரி, கடைசியாக ஒரு வழி, ஹஸீனாவை ஹிந்துவாக மதமாற்றினால் ஒரு ஹிந்து இளைஞனை கட்டி வைக்கலாம்தானே? என்று புதியதாக மனதில் கஜேனுக்கு தோன்றுகிறது. ஹிந்து மத விற்பன்னர்கள் இருவரிடம் போய் சம்மதம் கேட்கின்றான். அவர்களோ அதற்கு வழியில்லை என மறுத்து விடுகின்றனர்.


நீதியின் பக்கம் எப்போதும் சார்ந்திருக்கும் அவனுடைய மனதானது ஹஸீனாவின்  உயிரையும் மானத்தையும் எதைக் கொடுத்தாவது காப்பாற்றியே தீருவது என்ற தீர்க்கமான முடிவிற்கு வருகிறது. கஜேன் அப்துல் கனியாகின்றான்.


முஸ்லிம்கள் விஷயத்தில் விலகல் மன நிலை கொண்ட பாட்டிக்கு இந்த மதமாற்ற, திருமண நிகழ்வுகள் நிலைகுலைவை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் பேரனையும் அவனது மனைவி ஹஸீனாவையும் வெறுக்க அவளால் இயலவில்லை.


தங்களுக்கு எதிரான சிறு முணுமுணுப்பையும் தேய்த்து நசுக்கும் வெறுப்புக்கும்பல் மோத்தி மிஸ்த்திரியின் மனைவியையும் விட்டு வைக்கவில்லை. வெளிப்பார்வைக்கு அறம் பிறழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்தாலும் உள்ளுக்குள் அறத்தின் நீதியின் மீதான பிடியை தனது ஆன்மாவின் மையத்துடன் பிணைத்து வைத்திருந்த அவளை அவளது கணவன் மோத்தி மிஸ்த்திரியே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொன்று விடுகின்றான். இவ்வழக்கு காவல்துறையினரால் தற்கொலை என பதியப்படுகின்றது.
மாபாதக தேசபக்த வெறுப்புக் கும்பலுக்கு கஜேன் ஒரு தொடர் தடங்கலாகவே இருக்கின்றான் என்றவுடன் ஓர் இரவின் மறைவில் அவனையும் அழித்தொழித்து விடுகின்றனர். பேரனின் கொலையானது பாட்டியின் மனதிற்குள் ஒட்டியிருந்த முஸ்லிம் விலகலை முற்றிலுமாக துடைத்தெறிந்து விடுகின்றது.


-------------------------------------------------------------------------
‘ஆசீர்வாதத்தின் வண்ணம்’ புதினத்தில், வாழ்வின் வண்ணமிகு முரண்கள் சேர்க்கைகளுக்கிடையே வெறுப்பாற்றின் பெரு ஓட்டத்திற்கிடையே வாழ்க்கை தளிரானது தீய்க்கப்பட இயலாத சாசுவத மென்னிதழ்களுடன் தாரகையைப்போல இளம் நகையுடன் ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றது.


புரோகிதர், அவரின் இளம் விதவை மகள், மருத்துவர்,  விடுதலைப்போராளி & வழக்கறிஞர் & நீதிபதி என கதையின் கிளையோட்டங்களில் வாழ்வின் எண்ணற்ற சொல்லி முடியாத தருணங்கள் அமர்ந்திருக்கின்றன. சிற்பங்களுக்குரிய உள்செதுக்கலாக நிற்கின்றன. அந்த செதுக்கல்களின் வளைவும் நெளிவும் நிமிர்வும் புது புது விரிவுகளுக்காக காத்திருக்கும் புழைகள். வாசகர்கள் உள்தேடல் விரிவுகளுக்கான தாவு தளங்கள்.


சாஹித்ய அகாதமி விருது பெற்ற இந்த புதினத்தின் ஆசிரியரான அருண் சர்மா பிராமண சமூத்தில் பிறந்து வளர்ந்தவர். அகில இந்திய வானொலியில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். கல்விப்புலம் சார்ந்தும் சிறப்பாக இயங்கியுள்ளார். சாதிய, வகுப்பு ஓர்மை, மேட்டிமை, அரசு ஊழியர்களுக்கே உரிய எண்ணெய் படல குணம் போன்றவற்றையெல்லாம் மிக நேர்மையாக தன் படைப்பில் கடந்திருக்கின்றார் ஆசிரியர்.
கஜேனின் பாட்டி தன் முதிர்ந்து கனிந்த வயதின் படையலாக ஹஸீனாவின் துளிர் கரங்களில் உவந்தளித்த தேங்காய், சோளப்பொரி, பொரியுருண்டை, வெல்ல அவல், லட்டு, இனிப்பு அதிரசத்திற்காக மனமும் வாயும் ஏங்குகின்றது.


ஆசீர்வாதத்தின் வண்ணம் ( ஆசீர்வாதர் ரங் )
அஸாமி மொழி புதினத்தின் தமிழாக்கம்
ஆசிரியர் : அருண் சர்மா
விலை ரூ.225/=
வெளியீடு: சாஹித்ய அகாதமி, தொலைபேசி: 044 24311741, 24354815




http://malaigal.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86/




No comments:

Post a Comment