Tuesday, 12 November 2019

அறத்தின் எல்லைக் கற்கள்


எனக்கு மட்டும் வசதி வந்தால்  அள்ளி அள்ளிக் கொடுப்பேன்என நம்மில் பலர் கூறுவதுண்டு. எல்லா மனிதர்களுக்கும் சமச்சீராக ஒரே மாதிரி வாழ்வாதாரம் வழங்கப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனாலும் மனிதனின் வசதிக்கும் வளத்திற்குமான எல்லைதான் என்ன?  எவ்வளவு பெரிய செல்வந்தரும் தாம் வசதி படைத்தவர் என்பதை எளிதில் ஒப்புக்கொள்வதே இல்லை .

 பேரீச்சம்பழத்தில் சிறு துண்டையேனும் தானமாகக் கொடுத்து மோட்சம் தேடிக்கொள்ளுங்கள் என்பது நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்.
நாம் உங்களுக்கு அளித்தவை எதுவாயினும் அதிலிருந்து பிறருக்கு ஈந்து மகிழுங்கள் என்பது இறைவனின் திருக்கட்டளை.


பொருளாதாரத்தில் மனிதர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வை கணக்கில் கொண்டுதான் ஈகையின் தொடக்கமும் முடிவுமான எல்லைகளை ஞான மரபுகள் இவ்வாறாக வரைந்து காட்டியிருக்கின்றன.


அவர் ஒரு பிரபலமான மாணிக்க வணிகர். சிறு வயதில் உணவுக்குத் திண்டாடியவர். இப்பொழுது அவர் பணக்காரர். நேர்மையான உழைப்பின் விளைவாக வாழ்க்கையின் சிகரத்தை எட்டியவர்.


 தமது உழைப்பால் திரட்டிய செல்வத்திலிருந்து முதன்முதலாக ஆசையோடு ஒரு கட்டடத்தை வாங்குகின்றார். அந்தக் கட்டடம் ஒன்றும் சாமானியர் வாழும் குடியிருப்பு பகுதியில் இல்லை. அந்த நாட்டு அதிபரின் மாளிகைக்கு எதிரில்தான்  அவர் வாங்கியிருக்கும் அந்தச் சொத்தின்  அமைவிடம் உள்ளது.
மாணிக்க வணிகர் தமது அலுவலகத்தில் அமர்ந்திருக்கின்றார். புதிய சொத்தைப் பத்திரப்பதிவு செய்வதற்கான ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.


இந்த நேரத்தில் அவரின் அலுவலகக் கதவுகள் தட்டப்படுகின்றன. ஓர் அநாதை இல்லத்தின் நிர்வாகிகள் நன்கொடைக்காக வந்திருக்கின்றனர். வந்தவர்களிடம் அது தொடர்பான ஆவணங்களை வாங்கிப் பார்க்கின்றார். அவற்றைத் தாமே வைத்துக்கொள்கின்றார்.  இரண்டொரு நாள் கழித்து தன்னை வந்து பார்க்கும்படி அவர்களை அனுப்பிவிடுகின்றார்.



இரண்டாம் நாள் காலையில் அநாதை இல்ல நிர்வாகிகள் அந்தத் செல்வந்தரின் அலுவலகத்திற்கு செல்லுகின்றனர். வந்தவர்களிடம் ஒரு கோப்பை நீட்டி. சரி பார்த்துக்கொள்ளுங்கள் என்கின்றார். வந்தவர்களுக்கோ நம்ப முடியவில்லை. அந்த கோப்பில் அனாதை இல்ல ஆவணங்களுடன் ஒரு புதிய சொத்தின் ஆவணமும் இருந்தது. அந்தப் புதிய சொத்தானது அநாதை இல்லத்தின் பெயரில் இருந்தது.


இந்தச் செல்வந்தர் தம் இரண்டு பிள்ளைகளுக்கும் தொழிலில் வழிகாட்டிய பிறகு தம்முடைய சொத்துக்கள் அனைத்தையும் கல்வி நிலையங்களுக்கும் அநாதை இல்லங்களுக்கும் எழுதி வைத்துவிட்டார். அத்துடன் தமதும் தம் மனைவியினதும் காலத்திற்குப் பிறகு அவரின் வீட்டையும் ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்திற்கு உயில் எழுதி வைத்துவிட்டார்.


இப்படி அனைத்துச் சொத்துக்களையும் தானமாக கொடுத்துவிட்டீர்களே என ஒரு கட்டத்தில் அவரிடம்  கேட்கப்பட்டபோது நான் எதைக் கொடுத்தேனோ அதுதான் எனக்குச் சொந்தமானது என விடையளித்திருக்கின்றார். அந்த  ஊரில் அவரின் சமகாலத்தில் அவரை விட பெரும் பணக்காரர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இன்னொரு மனிதர். அவருக்கு பாதை ஓரத்தில் வீடு அமைந்துள்ளது.
சந்தைக்கு வருபவர்களுக்கு மதிய உணவு ஆக்கிப்போட்டு கிடைக்கின்ற காசை வாங்கிக்கொள்வார். மீதி நேரங்களில் ஒட்டுப்பலகையினால் ஆன பெட்டிக் கடையில் வாழைப்பழம், சிறிய குற்றிகளில் இனிப்பு, உப்பிலிட்ட காய்கள், முறுக்கு போன்ற தின்பண்டங்களை விற்பார்.


அன்றாட வாழ்க்கையை மிகுந்த போராட்டத்திற்கு நடுவில் நகர்த்துபவர். இவருக்கு வயதுக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகள் உண்டு. அவர்களுக்கு திருமணம் செய்துகொடுக்கத் தேவையான வசதியை அவர் இன்னும் பெறவில்லை. தமது உழைப்பைத் தவிர யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பவரில்லை.


இந்த மனிதருக்கு அன்பளிப்பாக யாராவது ஏதேனும் கொடுத்தால் இவர் அடுத்த நொடியே அந்த அன்பளிப்பின் மதிப்பைவிடக் கூடுதலாக உணவாகவோ பொருளாகவோ திரும்பக் கொடுத்துவிடுவார்.


இந்த இருவரின் பண வசதிகளையும் ஒப்பிடும்போது மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் புலப்படும். ஆனால் இருவரும் ஒரு இடத்தில் வந்து நின்று சம நிலையை அடைகின்றனர். அதற்கு காரணம் தம்மிடம் உள்ளதைக்கொண்டு தர்மம் செய்ததால் மனதின் கஞ்சத்தனத்திலிருந்து இருவரும் விடுதலையை அடைகின்றனர். இங்கு செல்வத்தின் அளவு என்பதை விட அதை பிறருக்கு கொடுக்கும் மன நிலைதான் கணக்கில் கொள்ளப்படுகின்றது.


தம்மிடம் இருக்கும் எதுவும் தாம் கொண்டுவந்ததல்ல. தாம் பெறுவதும்  தம்மிடம் இருப்பதும்  தாம் கொடுப்பதும் என இம்மூன்றுமே ஒன்று மற்றொன்றில் இருந்து வேறுபட்டதில்லை  என்ற தத்துவ புரிதல்தான் இவர்களை இந்த இடத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
இறைவன் தன்னுடைய அருள்வளங்களை மனிதனுக்குத் தற்காலிகமாக அளிக்கின்றான். அதைப் பெற்ற மனிதன் அந்த அருள்வளங்களைத் தாமும் பயன்படுத்திப் பிறருக்கும் பகிர்ந்து அளிக்கும்போது இறைவன் மகிழ்ச்சி அடைகின்றான்.


 தான் வைத்த தேர்வில் மனிதன் வெற்றி அடையும்போது அவனுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தற்காலிகமான வளங்களை இம்மையிலும் மறுமையிலும் நிரந்தர அருட்கொடையாக மாற்றி இறைவன் பரிசளிக்கின்றான்.


புறவய புலன்களுக்குள் அடைபடாத பேரண்ட மூலவிசையின் இந்தத் தேர்வு முறையை தங்களின் அகத் தளத்தில்  கண்டுணர்ந்து மெய்ப்படுத்தும் இது போன்ற ஆளுமைகளினால்தான் ஞான மரபுகள் இன்னமும் உயிர்ப்போடு இருந்துவருகின்றன.
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
இந்த கட்டுரை தி ஹிந்து தமிழ் நாளிதழிலும் வந்துள்ளது.

http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6443286.ece

No comments:

Post a Comment

An Evening Train in Central Sri Lanka