Sunday, 17 November 2019

இருளின் ஆதுரம்




ஜய்ப்பூரிலிருந்து புதுதில்லிக்கு நள்ளிரவில் பேருந்து பயணம்.

பரபரப்பின்மைக்கும் முற் கால வாழ்க்கை முறையின் நிறைய மீதங்களுக்கும் பெயர் பெற்ற, சாந்தமாக நின்றிருந்த ஜய்ப்பூரின் இளஞ்சிவப்பின் அணைப்பிலிருந்து இருளின் கரிய இதத்திற்குள் பேருந்து மென்மையாகவும் சீராகவும் நகர்ந்து கொண்டிருந்தது.

இரண்டரை மணிக்கு தேநீர் குடிப்பிற்காக புல் வெளியும் முயல்களும் விலையேறிய உணவுப்பொருட்களும் கொண்ட இடைவழி உணவகம் ஒன்றில் பத்து நிமிடங்கள் நின்ற பிறகு பேருந்து இருள் வெளிக்குள் மீளத் தொடங்கியது.


சாலையின் மையத்திற்கு வந்து சேர்ந்தவுடன் பேருந்தின் ஒலியமைப்பின் ஊடாக பல்லாண்டுகள் பழைமையில் தோய்ந்த ஹிந்தி திரை இசை ஒன்று ஆண் பெண் குரலில் தலைக்கு மேலாக பரவியது.

நடப்பான ஹிந்தி மட்டுமே தெரிந்த எனக்கு கவி மொழியின் ஆழ அகலங்கள் எதுவுமே புரியவில்லை.

உடன் பயணித்த நடுத்தர வயது பெண்ணுக்குள்ளும் அந்த பாடல் தொற்றிக் கொண்டது. பாடல் தொடர்பான விவரங்களை கேட்கலாம் என நினைத்தேன். அவர்களுக்கிடையேயான அந்த அந்தரங்க லயத்திற்குள் நுழைவது சரியாகப்படவில்லை.

இசைக்குள்ளும் வரிகளுக்குள்ளும் பிணைந்திருந்த அந்த உணர்வை சோகம் பிரிவுணர்ச்சி கழிவிரக்கம் தாபம் ஏக்கம் என்ற எந்த வகைப்பாட்டுக்குள் சேர்ப்பது எனத் தெரியவில்லை.

இருள்களை சலித்து வடித்து பிரி பிரியாக்கி பல அடுக்கு கொண்ட வான பூமியின் தட்டுகளாக்கி அந்த ஏழேழு தட்டுகளின் கறுத்த மையத்திற்குள் இருள் சொட்ட அமர்ந்திருக்கும் பின்னிரவினுடைய ஆன்ம மையப்புள்ளியின் விரகத்தையும் தாபத்தையும் அந்த திரையிசைக்கு சொல்லிக் கொடுத்தது யார் ?

கலையின் இந்த உச்ச கட்ட சாதனைக்குள் காலங்களும் பார்வைகளும் வரப்பழிந்து நின்றிருந்தன.

பின்னிரவின் ஆன்மாவானது தனது அகக் கிசுகிசுப்பை அந்த பாடலுக்குள் பேரொலியாக உணர்ந்திருக்கும் போலிருக்கிறது. தனது வளைக்குள் தங்கவியலாமல் பேருந்துக்குள்ளேயும் வெளியேயும் தன் முழு ரம்மியத்தையும் வெளிக்காட்டிக் கொண்டு இருள் நின்றது.

இருளை அதன் எல்லா வனப்புகளுடனும் நான் தரிசித்தேன். இருளின் ஒப்பனை கண்ணாடிக்கு முன் என் மனம் நின்று யாசித்துக் கொண்டிருந்தது.

" என் மனதைப்போலவும் என்னை பிணைத்திருக்கும் இசையைப்போலவும் இருக்கக் கற்றுக் கொண்டாயானால் . நீ எப்போதும் யாரிடமும் எதற்காகவும் இரக்கத்தேவையில்லை " என இருள் மிகுந்த ஆதுரத்துடன் என்னைப்பார்த்து சொன்னது.

No comments:

Post a Comment