Sunday, 17 November 2019

பைலா பாடல்






சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுக்கெனவா மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு சுராங்கனிக்க மாலுக்கெனவா……..

நடுத்தர வயதை எட்டியவர்கள் அல்லது அதைக்கடந்தவர்கள் இந்தப்பாடலின் துள்ளல் அடிக்கு தலையை ஆட்டாமல் இருக்க முடியாது.

இலங்கையின் பைலா பாடல்களை சுவைக்க சிங்கள மொழி அறிவு ஒன்றும் நமக்கு தேவையில்லை. இது கிட்டதட்ட சென்னையின் கானா பாடல் போன்றதே.

ஆனால் நான் ஒவ்வொரு முறை இந்த பைலா பாடல்களைக் கேட்கும்போதும் அது என்னை அதன் தனியிடத்திற்கே அழைத்துச் செல்கிறது.

இந்த பைலா பாடல்களில் காதல் விரகம் என எந்த ரகமாக இருந்தாலும் சரி நண்பரும் இசை விமர்சகரும் நடிகருமான ஷாஜி (http://musicshaji.blogspot.in/2013/07/blog-post_27.html ) சொல்வது போல

“ நடனத்திற்கேற்ற வேகமான தாளக்கட்டைக் கொண்டிருந்தபோதிலும் உள்ளுக்குள் எங்கோ புதைந்திருக்கும் அடிமை வாழ்க்கையின் ஆழ்ந்த துயரம் தான் அவ்விசையின் பெரும் ஈர்ப்பு. பெரும்பாலான பைலா பாடல்களை வேகம் குறைத்து மெதுவாக பாடிப்பார்த்தால் இது நமக்குப் புரியும்.... “

உண்மைதான். ஷாஜியின் இந்த ஆய்வு வரிகளை வாசிப்பதற்கு நெடுங்காலத்திற்கு முன்னரே பைலா பாடல்களுக்குள் உள்ளுறைந்திருக்கும் சோகம் அப்படியே சிந்தாமல் சிதறாமல் என் ஆன்மாவிற்குள் இறங்குவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

கிராம்பு ஏலம் வாசனை கலப்புடன் வெள்ளை தகர கலன் நிரம்ப கண்டோஸ் சாக்லேட் துண்டங்கள் , சன்லைட் சோப் கட்டிகள், சோவியத் நாட்டின் தமிழ் சித்திரக்கதை நூல்கள் , தேயிலைத்தூள் ,பொட்டலங்கள் , பளிங்கு கலன்கள், வான் அஞ்சல் கடிதங்களில் உம்மாவால் எங்களின் பாத அளவு வரையப்பட்டு அதற்கேற்ப வாங்கப்பட்ட அழகிய காலணிகள்....

இலங்கை வானொலியின் முஸ்லிம் நிகழ்ச்சிகள், பொது அறிவு போட்டிகள், திரை இசை, பொங்கும் பூம்புனல், மாஸ்ரர் சிவலிங்கத்தின் கதை நேரம்....

பணி மாறும் நள்ளிரவு மனிதனின் கரங்களுக்குள் சிறீலங்கா மாதா என்ற இலங்கை தேசிய கீதத்துடனும் முரசொலியுடனும் எங்களை ஒப்படைத்து விட்டு நிறைவுறும் இலங்கை வானொலியின் அன்றைய ஒலிபரப்பு , குண்டு பல்பின் மஞ்சள் வெளிச்சத்தில் எங்கள் வீட்டு ஹாலில் சுற்றி வரும் ஈசல்கள் , இருள் விலகும் முன் விறகடுப்பில் உம்மா போடும் தேநீர்........

1970 களின் இறுதி வரை எனது தந்தை இலங்கை சென்று வந்து கொண்டிருந்த காலம். வானத்து மேகம் போல வாழ்க்கை மிகவும் அமைதியாக அதன் போக்கில் நீந்திச் சென்ற காலகட்டத்தின் காட்சி சட்டகங்கள் இவை.

செம்மையாக வரையப்பட்ட கண்ணாடி ஓவியத்தின் மீது முழு வேகத்தில் எறியப்பட்ட கல் போல1980 களின் தொடக்கத்தில் அண்டை வீட்டின் வடிவில் வந்த மோதல்கள் கசப்புகள் எங்கள் குடும்ப வாழ்வின் நிம்மதியை சிதறிய கண்ணாடிச் சில்லுகளாக்கி விட்டது.

எழுத்தின்போது ஏற்படும் சோர்வை போக்க என் மடிக்கணினியிலிருந்து இசை கேட்பது வழமை.

அப்படியான ஒரு நாளில் பைலா பாடல்களை கேட்க நேரும்போது 1970கள், காலக் குன்றுக்குள் கரந்துறையும் என் அருமை வாப்பா உம்மாவின் நினைவுகள் என அனைத்தும் ஒரு சேர என் அறைக்குள் வந்து முகடு தட்டி நிறைந்து கொந்தளித்தது.

No comments:

Post a Comment