Monday 18 November 2019

எழுதுவதை நிறுத்தி விடு





நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை சந்தித்த நண்பன் என்னிடம் உரிமையான கிண்டலில் , என்னப்பா எழுத்தாளர் சும்மா அஸாமுக்கு போய் வந்ததைலாம் வளச்சி வளச்சி எழுதியிருக்கிறே என்றான்.

அவன் குறிப்பிடுவது போன வருடம் நானும் நண்பர்களும் சென்று வந்த வட கிழக்கிந்தியப்பயணம் பற்றிய கட்டுரையைத்தான்.

நானும் சில அய்ரோப்பிய நாடுகளுக்கெல்லாம் போய் வந்திருக்கின்றேன். அப்ப அங்க நான் பாத்தத எழுதணும்னா நெறய எழுதனுமே என்றான்.


நான் உடனே எனது கைபேசியை தடவி அதிலிருந்து சில வரிகளை உருவி வாசித்தேன்.

உன்னுடைய மொழி
உன்னைக் கைவிடும்போது
நீ எழுதுவதை நிறுத்திவிடு

.
பழுத்த இலை காற்றில் உதிர்வதைப் போல
சொற்கள் எப்போது
உன்னிடமிருந்து உதிரவில்லையோ
அப்போது நீ எழுதுவதை நிறுத்தி விடு.

ஒப்பனைகளின் தயை வேண்டி
உன் மொழி எப்போது தொழுது நிற்கிறதோ
அப்போது நீ எழுதுவதை நிறுத்தி விடு.

போதாமையில் வெந்து எரிந்த மனம்
எப்போது நிறைந்து வழிகிறதோ
அப்போது நீ எழுதுவதை நிறுத்தி விடு.

தன்னிச்சையாக உன் வாய்
ஒருபாடலை முணுமுணுப்பதை நிறுத்தும்போது
நீயும் எழுதுவதை நிறுத்திவிடு.

உயர்ந்த பனைகளுக்கப்பால் மறையும் சூரியன்
உன்னை எதுவும் செய்யாத போது
நீ எழுதுவதை நிறுத்தி விடு.......

----------------------------------------------

நண்பன் ஒத்துக் கொண்டான்.

No comments:

Post a Comment