Saturday, 2 November 2019

ஆடைக்குள் ஒளிந்திருக்கும் பாட்டும் ஓவியமும்



நான் எந்த பயணம் மேற்கொண்டாலும் அங்கு காதி கதர் சர்வோதய கடைகளை தேடுவதுண்டு. அண்மையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு இலக்கிய பயணம் சென்றிருந்தோம். வைக்கம் முஹம்மது பஷீர் தெருவிலுள்ள காதி எம்போரியத்திற்கு ஆடைகள் வாங்குவதற்காக சென்றோம்.


செம்மஞ்சள் நிறத்தில் கறுப்பு சிவப்பு வடிவக்குறிகளோடு சில சட்டைகள் தொங்கின. அணிந்தபோது பஞ்சு துவாலையின் தீண்டலை உணர முடிந்தது. இயற்கை நிறமூட்டப்பட்ட சட்டை என்றனர்.


எப்போது அணிந்தாலும் முதலில் அது தந்த மென்தீண்டல் உணர்வையே மீண்டும் மீண்டும் தந்து கொண்டிருக்கிறது.

விலையேறிய ஆயத்த சட்டைகளோடு ஒப்பிடும்போது அரசு தரும் தள்ளுபடி போக கலம்காரி சட்டையொன்றின் விலை 435/= ரூபாய்கள்தான்.

கலம்காரியின் பிறப்பிடம் சிந்து சமவெளி என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். திரியும் கதை சொல்லிகளான  நாட்டாரிசை பாடகர்கள், ஓவியர்களிடமிருந்து பரிணாமம் பெற்ற இக்கலையை கோல்கொண்டா, ஸுல்தான்கள் மச்சிலிப்பட்டினம், சோழ மண்டலப்பகுதிகள் உள்ளடங்கிய இன்றைய ஆந்திர மாநிலத்தில் அங்கீகரித்து வளர்த்தெடுத்திருக்கின்றனர். பிரிட்டானியர் வருகையோடு மேலும் இக்கலை செழித்திருக்கின்றது.


ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் துறைமுக நகரான காக்கி நாடாவிலிருந்து பதினான்கு கிலோமீற்றர் தொலைவில் உள்ளது ஆரியவட்டம் கிராமம். இங்கு முப்பத்தேழு வருடங்களாக சூரியா கலம்காரி நிறுவனத்தை நடத்திவருகின்றார்  அதன் உரிமையாளர் சூரிய நாராயணா.
காதி கிராம & தொழில் ஆணையத்திற்காக கலம்காரி ஆடைகளை தயாரித்து அளிக்கின்றது இவரது நிறுவனம்.


மரக்கறி, வித்துக்கள், வேர்கள், இலைகள், மலர்களையும் இரும்பு, வெள்ளீயம், செம்பு உள்ளிட்ட தாதுக்களையும் பயன்படுத்தி சாயம் செய்து பருத்தி இழை துணிகளில் கையாலும் அச்சுக்கட்டையாலும் பதிக்கின்றனர்.


காதி ஆணையத்திலிருந்து வெண்ணிற பருத்தி  துணிப்பொதி வரப்பெற்றவுடன் கலம்காரிக்கான பணிகள் தொடங்குகின்றன.


முதலில் சாணிக்கரைசலில் மூன்று நாட்கள் துணியை ஊற வைத்து வெளுக்கின்றனர். செயற்கை வெளுப்பான்களை பயன்படுத்துவதில்லை. நன்கு கழுவிய பிறகு கதிரொளியில் உலர்த்துகின்றனர்.


உலர்ந்த துணையை கடுக்காய் கரைசலில் முக்கி மீண்டும் கதிரொளியில் உலர்த்துகின்றனர். இளம் பொன்னிறத்தை பெறும் துணியில் கரையை அச்சிடுகின்றனர்.
முதலில் கருமை நிறமும் அடுத்ததாக செந்நிறமும் அச்சிடப்படுகின்றன.  துருப்பிடித்த இரும்பிலிருந்தும் கசீன் எனப்படும் ஒரு வகை பால் புரதத்திலிருந்தும் வெல்லத்திலிருந்தும் கறுப்பு நிறம் உண்டாக்கப்படுகின்றது. செஞ்சாயப்பொடியைப் பயன்படுத்தி சிவப்பு நிறம் உண்டாக்கப்படுகின்றது.



அச்சுக்கட்டையைக் கொண்டு வேலைப்பாடுகளை பதித்த பிறகு மூன்று நாட்கள் வரை துணி உலர்வதற்காக காத்திருப்பர். அதன் பிறகு பசை வாடையை போக்குவதற்காக ஆற்று நீரில் அலசப்படும். நூறு பாகை வெப்பத்தில் செஞ்சாயப்பொடியுடன் ஜாதிக்காய் இலைகளை சேர்த்து கொதிக்க வைக்கின்றனர். இதன் மூலம் கறுப்பு, சிவப்பு நிறங்கள் கன்றுவதுடன் கூடுதலான பசையும் கடுக்காய் சாறும் நீக்கப்படுகின்றது.


விறைப்பாக்குவதற்காகவும் மேலும் வண்ணஞ்சேர்ப்பதற்கு வசதியாக இருப்பதற்காகவும் பசும்பாலையும் சாத நீரையும் துணியில் தெளித்து காய வைக்கின்றனர். இதன் பிறகு துணியில் ஐந்திலிருந்து ஆறு வகை நிறங்களை சேர்க்க முடியும்.



 மஞ்சள், உலர்ந்த மாதுளையைப் பயன்படுத்தி மஞ்சள் நிறமும் கடுக்காய் பூக்கள், உலர்ந்த மாதுளையிலிருந்து பச்சை நிறமும் அவுரி இலைகளிலிருந்தும் நீல நிறமும் உண்டு பண்ணப்படுகின்றது.



இறுதியாக படிகார கரைசலில் முக்குவதின் மூலமாக. துணியிலிருந்து தூசு அகற்றப்பட்டு மெருகேறுகிறது.


சூரிய நாராயணாவின் நிறுவனத்தில் ஆண்களுக்கான சட்டையுடன் லுங்கி, குர்த்தா, பெண்களுக்கான மேலாடை, சேலை, தையல் துணி, படுக்கை விரிப்பு, தலையணை உறை, தோள் பை, கைக்குட்டை ஆகியனவும் தயாரிக்கப்படுகின்றன.


கலம்காரி ஆடை தயாரிப்பின் மூலப்பொருட்களில் பயன்படும்  செஞ்சாயப்பொடியும் அவுரியும் ராஜஸ்தானிலிருந்து வருபவை. மற்றவை அனைத்தும் ஆரியவட்டத்தின் சுற்றுவட்டாரங்களில் கிடைப்பவையாகும்.


இங்கு தயாராகும் கலம்காரி கதராடைகள் மதுரை மாவட்ட சர்வோதய சங்கம், கேரளத்தின் கோழிக்கோடு சர்வோதய சங்கம், பைய்யனூர் காதி சென்டர் போன்றவற்றில் மட்டுமே கிடைக்கின்றது.


குவியல்குவியலாக ஆயத்த ஆடைகளின் உற்பத்தியை ஆலைகள் தொடங்கிய காலகட்டங்களில் பெரும் பின்னடைவை சந்தித்த கலம்காரி ஆடைகள், தற்சமயம் மக்களிடையே ஏற்பட்டுவரும் இயற்கை, மரபு சார்ந்த விழிப்புணர்வின் காரணமாக மீண்டும் செல்வாக்கு பெறத் தொடங்கியுள்ளன.


நாட்டுத்தந்தை காந்தி கனவு கண்ட கிராமிய தற்சார்பு உற்பத்தி பொருளாதரத்தின் மிகச்சிறந்த வகைமாதிரியாக திகழும் ஆந்திரத்தின் கலம்காரி ஆடை தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கையின் தழுவலும் தனிமனித திறன் ஈடுபாடும் தோய்ந்துள்ளன.


ஆயத்த ஆடைகள் போலல்லாமல் கலம்காரி ஆடை தயாரிப்பில் ஏராளமான ஆட்களுக்கு வேலை கிடைக்கின்றது. கைவினைக்கலையும் கலைஞரும் ஊக்குவிக்கப்படுகின்றனர். தாவரப்பொருட்களின் தேவையினால் காடும் இயற்கை வளமும் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. சாணம், பால் ஆகியவற்றின் தேவையினால் மாடு வளர்ப்பும் பெருகுகின்றது. தயாரிப்பு கழிவுகளினால் மண்ணும் நீரும் மாசுபடவில்லை என்பதுடன் இந்தக்கழிவுகள் அவற்றை செறிவூட்டுகின்றன என்பதும் கூடுதல் சிறப்பம்சமாகும்.


ஒரு ஓவியத்தின் நிதானம் போல கலம்காரி ஆடையொன்று ஆயத்தமாவதற்கு கிட்டதட்ட ஏழு நாட்கள் தேவைப்படுகின்றன. கலம்காரி ஆடையின் ஒவ்வொரு இழைக்குள்ளும் நம் சிந்து சமவெளி முன்னோர்களின் நினைவுகள், கதை சொல்லிகளின் வண்ணமய பாத்திரங்கள் பிணைந்துள்ளன.



இனிமேல் கலம்காரி ஆடையை அணிந்திருப்பவர்கள் ஆயத்த ஆடையை அணிந்திருப்பவர்களைப் பார்த்து தங்கள் சட்டையின் கழுத்துப் பட்டையை உயர்த்தி விட்டுக் கொள்ளலாம்.
-------------------------------------------

சூரிய நாராயணா செல்பேசி: 9440342231
சூரியா கலம்காரி ஆடை தயாரிப்பு காணொளி


1 comment: