நண்பர்
ஒருவருக்கு புத்தாண்டு தின வாழ்த்துக்கள் சொல்லி தொலைபேசி அழைப்பு வந்தது.
இருவருக்குமிடையே நடந்த உரையாடல்:
“புத்தாண்டு உட்பட எந்த விழாக்களையும் நான் கொண்டாடுவதுமில்லை. வாழ்த்துக்கள்
சொல்வதுமில்லை.”
நாட்களின் வறட்சியிலிருந்தும்
தினசரி வாழ்க்கையின் தேய்ந்து போன
நடைமுறைகளில் இருந்தும் தப்பிக்கத் தானே திருவிழாக்களையும் சிறப்பு நாட்களையும்
கொண்டாடுகின்றோம்
?.
“ சரிதான் , கொண்டாட்டங்களும் பண்டிகைகளும்
அறவே கூடாது என சொல்லவில்லை. ஆனால் அவை முடிந்த பிறகு ஏற்படும் மன வெற்றிடம் , அடுத்த நாளின் வழமையான வேலைகளின் அலுப்பு பற்றிய
மன பாரம் , பண்டிகைக்கான புத்தாடை , சிறப்பு உணவுகளினால் ஏற்படும் கடன் சுமைகளை
போக்க என்ன செய்வது ?
குறிப்பிட்ட தினங்களுக்குள் அதிக பொருட்களையும் சேவைகளையும் விற்று
தீர்ப்பதற்காக கடும் விளம்பர போட்டிகள் மூலம் மக்களின் பணப்பையையும் மனங்களையும்
குறி வத்து நடக்கும் வர்த்தக போட்டியாகத்தானே பண்டிகை தினங்கள்
மாற்றப்பட்டிருக்கின்றன ?
இவற்றைத்தான் எதிர்க்க வேண்டியுள்ளது .
ஒரு நோயை குணப்படுத்த நாம் உட்கொள்ளும் மருந்தே இன்னொரு நோயை உண்டாக்குவது போல
இருக்கின்றது “
பண்டிகைகளையும் , வாழ்த்துக்களையும் பின்னர் எப்படித்தான் கொண்டாடுவது ?
அன்றாட வாழ்க்கையின் சலிப்பிலிருந்து எப்படி தப்பிப்பது ?
“ வருடத்தின் சில நாட்களை மட்டும் கொண்டாட்டமாக மாற்றி விட்டு மீதி நாட்களை
சோர்வின் வசம் ஒப்படைக்கும் ஏற்பாடாகத்தான் இன்றைய கொண்டாட்டங்களைப் பார்க்க
முடிகின்றது.
வெளிப்புற கொண்டாட்ட நடவடிக்கைகள் மூலம் கவலைகளை தொலைத்து மகிழ்ச்சியை தேட
முனையும்போது ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள தவறி விடுகின்றோம்
நமது வாழ்க்கையில் எத்தனை முறை கொண்டாட்டங்களும் துக்க நிகழ்வுகளும் வந்து
போயிருக்கின்றன ? நமது மிக நெருங்கிய உறவினர்களின் நண்பர்களின் பிரிவு , இறப்பு ,
நமது பொருளாதாரத்தில் ஏற்பட்ட பேரிழப்புகள் , இதோடு என் மொத்த வாழ்க்கையும் நின்று
போய் விடும் என நாம் திகைத்து மருகிய கணங்கள் என அனைத்துமே நம்மை விட்டு கடந்து
போகாமல் இருந்ததில்லை.
அவற்றையெல்லாம் கடந்து உயிர் வாழ்ந்துதான் இன்றைய தினத்தை நாம் அடைந்துள்ளோம்.
அவை ஏன் நமக்குள் நிரந்தரமான களிப்பையோ துயரங்களையோ விட்டு செல்வதில்லை ?.
காரணம் . அவை அனைத்தும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை
விட்டும் நம் வாழ்க்கையை விட்டும் கடந்து போகக்கூடியவை.
கொண்டாட்டங்களையும் துயரங்களையும் குறிப்பிட்ட ஒரு பண்டிகை தினத்தோடும் ஒரு
விழாவோடும் ஒரு துயர நிகழ்வோடும் மட்டும் பிணைத்துப்பார்ப்பது என்பது நம்மை நாம்
ஏமாற்றிக்கொண்டு பெறும் மாய ஆறுதல் மட்டுமே.
மகிழ்வும் நிறைவும் சோர்வும் போதாமையும் மனதிற்குள் இருந்துதான் பொங்குகின்றது
. நமது அன்றாட வாழ்வில் உள்ள இதம் தரும் கணங்களையும் வலிகளையும் ஒரு நொடி நிதானித்து நின்று அவற்றிற்குள் எட்டிப்
பார்க்கும்போது பல விஷயங்கள் தெரிய வரும்.
இருளில் பழகிய கண்களுக்கு வெளிச்சம் மெல்ல தட்டுப்படுவது போல அவற்றிற்கான
காரணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு புரிய வரும். நமது முடிவற்ற ஆசைகள் , நீளும்
எதிர்பார்ப்புகள் போன்ற பொருத்தமற்ற வாழ்க்கை அளவுகோல்களினாலும் சொந்த
தவறுகளினாலும்தான் மகிழ்ச்சி துயரம் என
நாம் நினைக்கும் பெரும்பாலான உணர்வுகள் பிறக்கின்றதையும் தொலைகின்றதையும் உணர
முடியும்.
இதன் விளைவாக பொருளற்ற எதிர்மறையான குணங்களுக்கு நாம் விடைகொடுப்போம்.
அத்துடன் அன்றாடம் நாம் பங்கெடுக்கும் நிகழ்வுகளிலும் அவற்றின் காரணங்களிலும்
பொதிந்துள்ள நிலையாத்தன்மை பற்றிய அறிதல் இருக்கும்போது மனமானது கொண்டாட்டம் ,
துயரம் போன்ற தீவிர நிலைகளிலிருந்து விலகத் தொடங்கும்.
வானங்களையும் பூமியையும் அவற்றில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்த அந்த
மகா படைப்பாளனின் பெரும் ஆற்றல் வளையத்தில் பிணைக்கப்பட்டுள்ள கண்ணியாக நாம் இருக்கின்றோம்.
வளையத்தின் சுழற்சியில் துன்பங்களும் மகிழ்ச்சிகளும் சம நிலையை பெற்றவைதான்.
அந்த சம நிலைக்கு மனது மீளும்போது அப்போதைய கணமும் அன்றைய தினமும் தேவையற்ற வாழ்க்கை
தேவைகளிலிருந்தும் சோர்வுகளிலிருந்தும் சுமைகளிலிருந்தும் வெறுமைகளிலிருந்தும்
விடுதலை பெற்றதாக ஆகும். மொத்தத்தில் நமது தோள்களை அழுத்தாத நிலையில் வாழ்க்கை மிக
எளிதான ஒன்றாக நடுநிலை மிக்கதாக மாறும் ”
No comments:
Post a Comment