2003 ஆம் ஆண்டு நான் ஹஜ்ஜுக்கு சென்ற சமயம்.
ஹரம் ஷரீஃபின்
மாடியில் அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் இஷாத்தொழுகைக்கான அதான் ஒலிக்கத்
தொடங்கியது. ஹரத்தில் அமைக்கப்பட்டிருந்த சீரான ஒலி வலை அமைப்பானது இனிய அதான் ஒலியை விண்ணுக்கும் மண்ணுக்கும் மென்மையாக பரவச் செய்தது.
என் முன்னால்
அமர்ந்திருந்த ஈரான் நாட்டு ஹாஜி அந்த முஅத்தினின் இராக இனிமையில்
அப்படியே தலையையும் உடலையும் மெல்ல அசைத்து அசைத்து கரைந்து கொண்டிருந்தார்.
எங்களுக்கு முன்னே
வீறுடன் எழுந்து நின்ற ஹரத்தினுடைய மினாராவின் பச்சை விளக்கின் பின்னணியில் இருண்ட
வானம் படர்ந்திருந்தது . அதன் ஒரு மூலையில் பிறை ஒளிர்ந்து கொண்டிருந்தது.
முஅத்தினின் அதான்
நாதத்தின் ஒரு துளியில் மிதந்து அப்படியே மினாரா வழியே இருண்ட வானத்தினூடாக
பிறையைக் கடந்து என் மனம் நீந்திக் கொண்டிருந்தது. உடல் மாடியில் இருக்க உள்ளம் அப்படியே வழுக்கி பல நூறாண்டுகள்
கடந்த பொற்காலத்திற்குள் பயணித்தது. திரும்பி வந்த போது சிலிர்ப்பாகவும்
ஏக்கமாகவும் இருந்தது.
அதே போல அரபு நாட்டு .
பாக்கிஸ்தானி இளவல்கள் பாடும் லய ஒழுங்குடன் கூடிய கஸீதா , நஃத் களை கேட்கும்போது
உடலும் மனமும் ஒரு புள்ளியில் நிறைந்து கண்களில் நீர் வழியும்.
மொழி
புரியாவிட்டாலும் மனிதனை கட்டிப்போடவும் கட்டவிழ்க்கவுமான ஆற்றலை பெற்றது இசை. இசை
என்பது உலக மொழி.
அதனால்தான் “ சொற்களால்
விவரிக்க முடியாத , மனத்தால் புரிந்து
கொள்ளக்கூடிய ஒரு மொழிதான் இசை. அது கேட்பவர்
மனதில் சீரான துடிப்பை ஏற்படுத்தக்கூடிய காலங்கடந்த ஆழம் காண முடியாத தீர்க்கமான கலையாகும்
“ என்றார் ஃப்ரெஞ்ச் நாட்டைச் சார்ந்த மானுடவியலாளரும் இனவியலாளருமான
க்ளாடி லெவி ஸ்டிராஸ்.
இறைமறையை அழகிய முறையில் ஓதுதலை குர் ஆனிலும் ஹதீசிலும்
சிலாகிக்கப்பட்டிருப்பதை நாம் காண
முடியும் . இனிய தொனியில் ஓதப்படும் குர் ஆனை கேட்கும்போது அது உடலின் எல்லா அணுக்களிலும்
புகுந்து பரவி வினைபுரிவதை பட்டறிய முடியும்.
தாவூது நபி தனக்கு அருளப்பட்ட வேத வசனங்களை இராகத்துடன் ஓதும் சமயத்தில் வானில்
பறக்கும் பறவைகள் அப்படியே அங்கேயே உறைந்து விடும். அந்த பறவைகளும் மலைகளும் அந்த இனிய ராகத்தை
எதிரொலித்திருக்கின்றன.
நவீன மருத்துவ முறையில் இசையை [ MUSIC THERAPY ] பயன்படுத்தி
மனம் , உடல் சார்ந்த பல நோய்களுக்கு பரிகாரம் காணுகின்றனர்.
தீய உணர்வுகளைத் தூண்டாத இசை என்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதே என
புறக்கணிக்க முடியாத சான்றுகளுடன் மார்க்க அறிஞர்களின் ஒரு சாரார் நிறுவுகின்றனர்.
இப்படியாக இஸ்லாமிய தொன்மங்கள்
தொடங்கி வைத்த இந்த அழகுக் கோட்பாடு அல்லது அழகுணர்ச்சி புள்ளிகளிலிருந்துதான் இசை
, இலக்கியம் , கைவினை , வரைகலை, கட்டடக்கலை என்ற நுண் கலைகள் {FINE ARTS } பல கிளை
நதியாக முஸ்லிம் சமூகத்தினுள் பிரவாகப் பெருக்கெடுத்தது.
உள்ளூர் , உள் நாட்டு பண்பாட்டுக்கூறுகளுடன் உலகின் ஆதாரமான இஸ்லாமியப் பண்பாட்டு பெரு நெறியின் பல்வேறு
கிளைகளை உள்ளடக்கியதுதான் முஸ்லிம் நாட்டாரியல் ( MUSLIM FOLKLORE ) .
நாட்டாரியல் என்ற தலைப்பின் கீழ் பல
கிளைப்பிரிவுகள் உள்ளன. அந்த பிரிவில் இசை , பாடல்கள் (FOLK MUSIC & SONGS) பற்றி மட்டும் கவனப்படுத்துவதுதான்
இந்த கட்டுரையின் நோக்கம்.
````````````````````````` ``````````````````````````
````````````````````````````` `````````````````````````````
கிஸ்ஸா , முனாஜாத் , நாமா போன்றவை தமிழக முஸ்லிம்கள் நாட்டாரிசைக்கும்
,தமிழ் இலக்கியத்திற்கும் அளித்த பங்களிப்பு எனலாம்.
பல நூறு வருடங்கள் பாரம்பரியமிக்க நமதூரும் நாட்டார் இசையில் பின் தங்கியது
இல்லை.
திருப்புகழ் , வேத புராணம் , மக்கா கலம்பகம் , நாகை அந்தாதி , பிள்ளைத் தமிழ்
, திருமணி மாலை , மிகுராஜ் மாலை , அதபு
மாலை , பெரிய ஹதீது மாணிக்க மாலை , சின்ன ஹதீது மாணிக்க மாலை , ஞானப்பாடல்கள் ,
படைப்போர் , நூறு நாமா , ஸக்ராத் நாமா , கதீஜா நாயகி மண வாழ்த்து அம்மானை , சிந்து
, தாலாட்டு , கும்மி , கோவை , ஞான மணி மாலை , ஞான ரத்தினக் குறவஞ்சி , யூஸுஃப் நபி
கிஸ்ஸா , வெள்ளாட்டி மஸாலா
என விதம் விதமாக நம் முன்னோர்கள் படைத்தளித்தனர்.
வர கவி காஸிம் புலவர் , ஷாம் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ், பெரிய நூஹு
வலிய்யுல்லாஹ் , புலவர் நாயகம் ,
ஆலிப்புலவர் , ஷைஹூ அப்துல் காதிறு லெப்பை ஆலிம் தொடங்கிய தனி மனிதர்கள்
வரலாற்றில் அவர்களின் அழகிய இசை , பாடல் ஆக்கங்களால்
இன்றளவும் நினைவு கூரப்படுகின்றனர்.
“ பாபர்
மசூதி உன்னை... அதி விரைவாக நாங்கள் மீட்போம்” என்ற வரிகள் மூலம் உடலிலும்
மனதிலும் வீரத்தை விதைக்கும் பிறைக்கொடியான் கவிஞர் மஹ்மூது ஹுஸைனின் வரிகள்.
அவரின் குரலை முதுமை ஆக்கிரமித்த நிலையில்
பாடிய எழுச்சிப் பாடல் அது.
“ யா
ரஹ்மானே ! எங்களின் பாவம் நீங்கிடச்செய்வாயே
.. “ என கர கரத்த குரலில் உரத்து முழங்கும் முஹிய்யித்தீன் அபூபக்ர் லெப்பை , “ ஈச்ச மரத்து இன்பச்
சோலையில் .. “ என பாலை வன
வசந்தத்தை நம் இல்லங்களுக்குள் தவழ விட்ட ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் , திங்க திங்க ஆசை வரிகள் மூலம் சுவை அரும்புகளைத் தூண்டிய ஸாலிஹ்
காக்கா போன்றோர் வரை இந்த நூற்றாண்டின் இசைப்பாடல்களில் தனி ஆளுமைகளின் தொடர்ச்சி
நீண்டது. அவர்கள் அனைவரையும் காலம் தன்னுள் இழுத்துக் கொண்டது.
கூட்டு முயற்சி என பார்க்கும்போது சிறு நெய்னார் பள்ளியில் இயங்கிய பைத்துஸ்
ஸபா , கவ்திய்யா சங்க தாயிரா குழு ,
புதுப்பள்ளி வளாக மழ்ஹருல் ஆபீதீன் பாடல் குழு , ஹாமிதிய்யா பைதுஸ்ஸபா
போன்றவைகளைக் கூறலாம்.
இளம் சிறார்களின் சீரான கை , கால் , உடல் அசைவுகளுடனும் நாவில் ஒலிக்கும்
பைத்துக்களுடனும் ஒத்திசைந்து மிதமான
அதிர்வுடன் புறாவின் இறக்கை போல சுழலும் தஃப்ஸ் ( சிறு பறை ) தாயிரா கலையை
உயர்த்திப் பிடித்த கவ்திய்யா சங்க தாயிரா
குழு 1980 களுக்குப்பிறகு மங்கி விட்டது.
இன்று எஞ்சி இருப்பது மழ்ஹருல் ஆபீதீன்
, ஹாமிதிய்யா பைத்துஸ்ஸபா மட்டுமே. இவற்றிலும் முன்னைப்போல் மாணவர்கள்
சேர்க்கை இல்லை. தனி ஆட்களின் மனதிலும் நாவிலும் குடியிருந்த நாட்டாரிசைகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி மறைந்து
விட்டன. இதற்கு காரணம் பாடகர்களின் மறைவு , தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு
ஊடகங்களின் வருகை , புதிய தலைமுறையினருக்கு இவற்றில் நாட்டமின்மை என பல காரணிகளைக்கூறலாம்.
கிஸ்ஸா , முனாஜாத் , நாமா , பைத், பதம், மாலை , காரணம் போன்ற இசை வடிவங்களில் ஷரீஅத்துடன் மோதக்கூடிய
இடங்களும் இருக்கின்றன. அதன் காரணமாகவும் இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமா
? வேண்டாமா ? என மக்களிடையே நிலவுகின்ற
குழப்பங்களும் இந்த நாட்டாரிசை வடிவங்கள் மங்குவதற்கு காரணம்.
முஸ்லிம் நாட்டாரிசை வடிவங்களில் பிரச்னைகளுக்குரிய
பகுதிகளை மட்டும் தவிர்த்து விட்டு கடந்து செல்லலாம் அல்லது மாற்று இசைப் பாடல்களை உருவாக்கலாம். இவை
எவற்றையும் செய்யாமல் சில இடங்களில் உள்ள முரண்களுக்காக மொத்த இசை வடிவங்களையும்
நிராகரிப்பது என்பது எலிக்கு அஞ்சி வீட்டை கட்டாமலிருப்பது போலாகும்.
___________________________ _________________________
____________________________
20 – 30 வருடங்களுக்கு முன்பு வரை நமதூரில் ரமழான் காலங்களில் ஸஹர் நேர
எழுப்புதலுக்காக ஃபக்கீர் அப்பாக்கள் என்ற இசை வாணர்கள் தஃப்ஸை ( சிறு பறை ) முழக்கி
பாடி வரும் காட்சிகள் உங்களுக்கு நினைவிருக்கும். பச்சை தலைப்பாகை ,ஜுப்பா , சாரம்
, கழுத்தில் பல நிறங்களுடைய மணி மாலைகள் , தொங்கு பை கோலமணிந்த ஃபக்கீர்களை வீடு
தோறும் இரந்து உண்பவர்களாகவே நாம் புரிந்து வைத்திருப்பது மிகவும் வருந்துதற்குரிய
நிலையாகும்.
ஃபக்கீர்கள் என்ற இசை வாணர்களின் வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. இந்திய
விடுதலைப்போரில் அவர்கள் வெள்ளையர்களை எதிர்த்து களமாடியவர்கள். தங்களது பாடல்கள்
, பொம்மலாட்டக் கலை மூலம் மக்களிடையேயும்
படை வீரர்களிடையேயும் விடுதலை உணர்ச்சியை விதைத்தவர்கள். பகலிலே துறவிகளாகவும்
இரவிலே படை வீரர்களாகவும் வாழ்ந்த மாமனிதர்கள்.
ஃபக்கீர் என்ற முஸ்லிம் இசை வாணர்கள் இந்தியா , இலங்கை , எகிப்து நாடுகளின் பண்பாட்டு வாழ்வில் ஒரு அம்சமாக
திகழ்கின்றனர் . இதிலிருந்து நாட்டாரிசை என்பது உலகம் தழுவிய ஒரு அழகியல் நடைமுறை
என்பதை அறிந்து கொள்ள இயலும்.
ஒரு பண்பாட்டை , நாகரீகத்தை , உயர்ந்த வாழ்க்கை நெறியை மனித குலத்திற்கு
கொடையாக அளிக்கும் எந்த ஒரு சமூகமும் இது போன்ற அழகியல் அம்சங்களை தன்னகத்தே
செழுமையாக போற்றி வரும்.
இத்தகைய பண்பாட்டுச் செழுமையை
போற்றாததால் இந்த மண்ணின் மேல் பரப்பில் வாழ்ந்து மறைந்த சமூகங்கள் பல வரலாற்றின்
வரிகளுக்குள் மூழ்கி காணாமல் போயிருக்கின்றனர்.
நாட்டார் இசை என்பது வெறுமனே அதன் அழகியலுக்காக மட்டும் போற்றப்படுவதில்லை.
இது போன்ற நாட்டார் இசை வடிவங்களில் இருந்து இயற்கைப் பேரழிவு , பஞ்சம் , பிரிவுத்துயர்
, ஆட்சியாளர்களின் கொடுங்கோல் & நல்லாட்சி , வாழ்வு முறை , கொண்டாட்டம் , உணவு பழக்க வழக்கங்கள் , மருத்துவக்குறிப்புகள்
, மொழியியல் , ரசனை , மகிழ்ச்சி , இலக்கணம் , மொழியியல் , நீதி நிர்வாக
முறைகள் , தாவரவியல் , விவசாயம் பற்றிய ஏராளமான குறிப்புகளை ,கண்டுபிடிப்புகளை
, தடயங்களை பின் வரும் தலைமுறை அகழ்ந்தெடுக்க முடியும்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது தமிழ் மொழியிலுள்ள சங்க
இலக்கியங்களாகும்.
----------------------------------- -----------------------------------------
--------------------------------------------------
கூரிய பண்பாட்டு முரண்களுள்ள நம் தாய் மண்ணில் கடல் கடந்து அறிமுகமான
இஸ்லாமிய நெறியானது ஒத்துணர்வுடன் நிலை
நின்றதற்கு பல காரணங்களுண்டு . அக்காரணிகளில் ஒன்றுதான் ஹிந்துஸ்தானி இசையாகும். இந்திய
இசை மரபும் , அரபு பாரசீக இசை மரபுகளும்
கலந்து பிறப்பெடுத்ததுதான் ஹிந்துஸ்தானி இசையாகும்.
ஹிந்துஸ்தானி இசை என்பது மனித
தொனியும் கருவிகளின் நாதமும் கலக்கும் ரசனைகளின் மையம் மட்டுமில்லை. அது ஹிந்து
மதம் , இஸ்லாம் என்ற இரு பெரும் எதிர் பண்பாடுகள் சந்தித்துக் கொண்ட அழகியல்
புள்ளியும் கூடத்தான்.
ஹிந்துஸ்தானி இசை மரபில் உதித்ததுதான்
கஸல் ,கவாலி இசை வடிவங்கள். கவாலி இசையில் ஹம்து = இறைத்துதி , நஃத் = நபி
புகழ் அடங்கியுள்ளது. கஸலும் கவாலியும் எழுப்பும் இன்னிசையின் பேரலையில் இந்திய
பாக்கிஸ்தான் எல்லைப்பிரிவினை , மதக் காழ்ப்புணர்வு , வெறுப்பு அரசியல் , பொய்
பரப்புரை போன்றவை மூழ்கி மடிந்து விடுகின்றன.
கஸல் கவிதை ஒன்று வாசகர்களுக்காக :-
நன்மை தீமை என்பன எதுவோ?
அடியார்களின்
மனதில் இருப்பதென்ன?
இந்த இடமும் காலமும்
என்ன?
திரைகளில்
மறைந்திருப்பது என்ன?
உலகை நீங்கிச்
சென்றவர் எவரும்
மீண்டு இங்கு வராத
அந்த இடம்
என்னவான இடமோ அது?
உன் நன்மை தீமைகளை
எத்தனைதான் நீ
மறைத்த போதும்
அவனுக்குத்
தெரியும்
இந்த வெயில்
நிழலைப் பார்
இந்தக் காலை
மாலையைப் பார்
இவையெல்லாம் ஏன்
ஆகிக்கொண்டுள்ளன?
விதியின் பெயரை
என்னவோ
அனைவரும்
அறிந்துள்ளார்கள்
விதியில்
எழுதியிருப்பது என்ன?
அல்லாஹ் அறிவான்.
-- இசைத்திரட்டு : ஸஜ்தா . பாடியவர் : காலஞ்சென்ற
கஸல் பாடகர் : ஜகஜ்ஜீத் சிங்
“ இறைவனிடம் கையேந்துங்கள் , கப்பலுக்கு போன
மச்சான் “ போன்ற பாடல் வரிகள் மதங்களை கடந்து தமிழகத்தில் ஒலித்துக்
கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. மத வித்தியாசங்களைத் தாண்டி இதயங்களை பிணைக்கும்
கலை உலகின் அழகிய பிணைப்புக் கண்ணிகள்
அவை.
உலக அளவில் பார்க்கும் போது......
யூஸுஃப் இஸ்லாம் , ஸமி யூஸூஃப் , ஜைன் மாலிக் ,மாஹிர் ஜைன் , அஹமத் புகாதிர் ,
ஜைன் பிக்கா , தாவூத் வான்ஸ்பி போன்ற இளம் முஸ்லிம் பாடகர்கள் , Native Deen உள்ளிட்ட
இசைக்குழுவினரின் மனங்கவர் இஸ்லாமிய பாடல்கள் இசைக் கோவையாக ( MUSIC ALBUM ) வலம் வருகின்றன . அவை இளைய முஸ்லிம் தலைமுறையினரின்
இசைக்கேட்புக் கருவிகள் , கணிணி , ஐபாட் , டேப்லட் , செல்பேசிகளில் மென்மையாக
ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன.
`````````````````````````````````````````````````````````````#``````````````````````````````````````````````````````````````````
காவலாய் நிற்கும் வல்லோன்
கத்தனாய் ஜீவனல்லோன்
ஆவலாய் போற்றி வாழ்த்தி
அதற்கும் உணவளித்த கோமான் !
நாவினால் எளியோர் கேட்கும்
நாட்டத்தின்படியே தந்து
தாவிலா ரஹ்மத்தாலே
தற்காக்கும் பொருளதாமே !
கருவாய் கருவினுன் மணியாய்
காட்சியருளும் ரஹ்மானே
உருவாய் துலங்கும் மன்னானே
உனது கிருபை அருள்வாயே !
உள்ளங்கலங்கி தத்தளித்தே
உணர்வு மயங்கி நின் அடியார்
கொள்ளும் கிருபை மவ்லானா
ஹூதாயே வதூதே கஃப்ஃபாரே
கள்ள நோய்கள் தங்கடங்கள்
அணுகாமல்
காப்பாய் காப்பாய் ரஹ்மானே !!
{ அல்லாஹ் முனாஜாத் }
சிறு குழந்தைப் பருவத்தில் தொட்டிலில் நான் கிடந்தபோது இரவின் ஆழத்தில் நின்று
என் உம்மா உறக்கத்திற்காக தாலாட்டிய இந்த இதமான வரிகளை மீண்டும் கேட்க மனம்
துடியாய் துடிக்கின்றது.
நன்றியுடன்..
# அ.லெப்பை
ஸாஹிப் ( ஏ.எல்.எஸ். மாமா )
# ஏ.ஆர். தாஹா காக்கா
# அன்பு நண்பர்
முஹம்மத் ரஃபீக் ( ஹிஜாஸ் மைந்தன் )
# சாளை மறியம்
ஜீனத்
# தஃப்ஸீர்
இப்னு கதீர் – 5 ஆம் தொகுதி -- ரஹ்மத் டிரஸ்ட்
# முஸ்லிம்
நாட்டாரியல், தேடலும் தேவையும் – எம்.எஸ்.எம்.அனஸ்
# அறியப்படாத
தமிழகம் – தொ.பரமசிவம்
# நோய் தீர்க்கும் இசை – டி.வி. சாய்ராம்
# சூஃபி இசை ---
இதயத்திலிருந்து ஒரு செய்தி , ஹெச்.ஜி.ரஸூல்
#
பிரபஞ்சக்குடில் வலைப்பூ – றமீஸ் பிலாலி
# விஜய ரகு நாத
தொண்டைமான் கடிதம் - ராஜகிரி கஸ்ஸாலி (
கீற்று இணைய தளம் )
.
No comments:
Post a Comment