Tuesday 19 November 2019

பூச்சை ஹிஷாம் – நினைவேந்தல்



 எனது சிறு பருவத்து நண்பனும் உறவினரும் காயல்பட்டினம் ஜமாஅத்துத் தப்லீக்கின் அமீருமாகிய ஹிஷாம் நேற்றிரவு தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டான்.
சிறு வயதில் வெண் குதிரையைப்போல இருப்பான். பேரழகன்.


நீல நிற காற்சட்டையிலிருந்து புறப்படும் பட்டைகள் அவனின் முதுகின் குறுக்காக தோள்பட்டை வரை ஓடும். இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? என எனக்கு கேட்கத் தோன்றியதில்லை


பூச்சை ஹிஷாம் என எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் அழைப்போம். பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகத்தான் படித்தோம்..பத்தாம் வகுப்பு தேர்வுக்கு இரவு அவன் வீட்டில் தங்கி பல நாட்கள் படித்திருக்கின்றேன்.


பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அவன் சுணக்கமடைந்தான். அது அவனை மனதளவில் பெரிதாக உறுத்தியது. நான் மேனிலைக்கல்வியை வேறு பள்ளிக்கூடத்தில் தொடர்ந்ததால் மெதுவாக எங்களுக்குள் தொடர்பு குறையத்தொடங்கியது.


எனக்கு முன்னர் அவனுக்கு திருமணம் நடந்தது. கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும் என வற்புறுத்தியிருந்தான். உறவுகள் பேணலில் அவன் முதல் ஆள்.அன்று நான் வாழ்ந்த இயக்க வாழ்க்கையின் பித்தில் தனிப்பட்ட அந்தரங்க உறவுகளின் நெருக்கத்தை பொருட்படுத்தாத ஓட்டத்தை ஓடிக் கொண்டிருந்தேன். திருமணத்திற்கு போகவில்லை.


அடுத்தாற்போல அவனை சந்தித்தேன். நான் வராதது குறித்து மிகவும் வருந்தினான். அந்த வருத்தம் தோய்ந்த முகம் எனது மனதிற்குள் அப்படியே தங்கி விட்டது.
படிப்பாகட்டும் தனிப்பட்ட வாழ்க்கையாகட்டும் அவனுக்கு ஏற்பட்ட சிக்கல்களை தீரா ஏக்கங்களை கடப்பதற்காகத்தான் தப்லீக்கின் பாதையை அவன் தேர்ந்தெடுத்தாக நான் புரிந்து கொண்டேன். முழு நேரமாக அதில் ஈடுபட்டான்.


அன்று நான் எனக்கான பாதையில் மிக மும்முரமாக இருந்த போதும் அதன் முரண்கள் எங்கள் இருவருக்கு நடுவிலும் எந்த பேதத்தையும் உண்டுபண்ணியதில்லை. அவனும் தப்லீக்கில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தபோதிலும் என்னை ஒரு நாளும் அதன் நிகழ்ச்சிகளுக்கு அழைத்ததில்லை.


சாலையில் சந்திக்கும்போது கைகளை பற்றிக் கொண்டு நலம் விசாரிப்பான். மிகக் குறைந்த சொற்கள்தான். அவன் படிக்கும் காலத்திலும் தப்லீக் அமீராக ஆன போதும் சரி தனது உணர்வுகள் மொத்தத்தையும் சிறிய தொடுகையின் வழியாக கடத்தி விடுவான். உணர்வுகளின் மனிதன்.


பத்து நாட்களாகத்தான் உடல் நலிவு. தனது புறப்பாடு நெருங்கிவிட்டதை ஆன்மாவின் உட்குரல் அவனுக்கு அறிவித்திருக்கும் போலும். கலக்கமில்லா தெளிவுடன் விடை பெறும் சொற்களை சொல்லியிருக்கின்றான்.


ஒரு மாதத்திற்குள் இரண்டு பிரிவு குறிப்புக்கள் . எனக்காக நானே எழுதுவது போல உணருகின்றேன்.


வாழ்வையும் இறப்பையும் படைத்த றப்பே ! எங்களையும் அவனையும் மன்னிப்பாயாக ! அவனின் மண்ணறையை விரிவாக்கி ஒளியால் நிறைப்பாயாக! கேள்வி கணக்கை எளிதாக்குவாயாக !


அவனது பிரிவின் மூலம் எங்களை தீரா இழப்பில் ஆழ்த்தி விடாதே!
அவனது குடும்பத்தினரை இழப்பின் வலியிலிருந்து மீட்பாயாக!
உயர்வான சுவனத்தை எங்களுக்கும்அவனுக்கும் பரிசளிப்பாயாக!!!


No comments:

Post a Comment