Tuesday, 12 November 2019

காற்றை அழைத்து சென்றவர்கள்


ஊசித் தூறல் மழையை
பிரதிக்குள் அழைத்து வரும்போது
சொற்கள் விழுந்து
மெல்லிய தூவானம் அடித்தது
பின் உரத்து பழமாக விழுகையில்
உடைந்து தெறித்து சிலிர்க்கிறது
மழையை ரசித்தபடி எழுதுகையில்
ஒரு கணம் நானும் மழையானேன்
நள்ளிரவாகியும் பெய்த மழையை
பிரதிக்குள் அடக்க முடியாததால்
தொப்பாகிக் கசிகிறது இரவு
எப்படியாவது மழைக்குள் இருந்து
வெளியேறிச் செல்ல பிரதியை
முடிக்க எத்தனிக்கையில்
வெள்ளத்தில் அள்ளுண்டு செல்கிறது சொற்கள் ( மழையை பிரதிக்குள்
அழைத்து வரும்போது )


இரவின் மழைக்குள் அதே இரவின் மழையை எழுதிப்பார்த்து விட்டு பின் தன் விரல்களில் இருந்த எழுத்துக்களை மழைக்கு ஒப்புக் கொடுத்து விடுகின்றார். வான் நீரில் மிதக்கும் காகித ஓடத்தை வேடிக்கை பார்க்கும் சிறுவனுக்குரிய குதூகலத்தை மட்டுமே தனக்கானதாக வைத்துக் கொள்கிறார் கவிஞர்.


உம்மா எனக்கும் தம்பிக்குமாக
வாங்கி வர விரைந்த எதிர்காலம்
காற்றின் கைகளில் சிக்கித் திணறும்
புளியமரச் சருகுகளைப்போல்
மெதுமெதுவாய் உதிர்ந்து மக்கிப் போகிறது ( உம்மாவின் கைகுழந்தை)

இந்த கும்மிருட்டு இரவினை
வாசித்துக் கொண்டிருந்த விளக்கின் சுடரினை( ( குழந்தைத்தனம் )

காடு பற்றிக் கிடக்கிறது இருள்
குப்பி விளக்கை ஏற்றும் தருணம் பார்த்து
அணைத்துவிட்டுச் செல்கிறது
பற்றைக்குள் ஒளிந்திருக்கும் காற்று
கொட்டிலில் பிரகாசம் நிரம்பி வழிய
ஒரு துளி ஒளியைப் பயிரிட்டேன்  ( ஒளியைப் பயிரிடல் )


மழை இரவு இருள் புளியமர சருகு காற்று ஒளி என இவரது கவிதைக்குள் இருக்கும் பிரபஞ்ச படிமங்களுக்குள் கடந்த நிகழ் கால  குழந்தைமைகளின் கொண்டாட்டங்களும் ஏக்கங்களும் சோலைக்காட்டின் இலைப்படுக்கையிலிருந்து ஆண்டு முழுவதும் கசிந்து சொட்டும் ஈரம் போல மானுடத்தை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கின்றது.
-----------------------------------------------

பிஞ்சி ( பக்:17 ) வேவை ( பக்:26) புள்ள( பக்: 31) ஷொப்பின் ( பக்:41)  திண்ட ( பக்: 42) என சொல், எழுத்து பிழைகள் நிறைய இருக்கின்றன.

காற்றை அழைத்துச் சென்றவர்கள் – கவிதை தொகுப்பு
கவிஞர் ஜமீல் (எ) அப்துல் ஜமீல்..
இவர் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் தனது கவிதைகளுக்காக விருதுகள் பெற்றவர்.
செல்பேசி – 0094 77 9689392
மின்னஞ்சல்:   jameel12013a2gmail.com
முக நூல்: Abdul Jameel
முகவரி:
124 ஏ, ஸ்டார் வீதி
பெரிய நீலாவணை – 01
மருதமுனை
இலங்கை

No comments:

Post a Comment