நிலத்திற்கும்
வானத்திற்குமான பந்தமானது மழை என்ற நீர் ஏணி வழியாக நிலை நிறுத்தப்படும் கணங்கள் மனதை
கிளர்ச்சியூட்டக்கூடியவை.
பசுமையிலும்
வறட்சியிலும் நிலமும் மனதும் ஒன்றுதான் . வறண்டு கிடக்கும் தருணங்களில்
மேகத்திலிருந்து சரிந்து இறங்கும் மழைத்துளியின் வருகையால் அவையிரண்டும்
புத்தெழுச்சியை பெறுகின்றன.
மழை நாட்களின்
இளங்குளிர் காற்றையும் மண் வாசனையையும் மேகங்களின் அடர்த்தி உண்டாக்கும் ஒளி
மங்கலையும் மழைத்துளிகள் உண்டாக்கும் தட தட என்ற லயம் தப்பாத
தாளங்களையும் மழையின் நீர்த்தாரைகள் மணல் பரப்பில் எழுதி அழுதி அழிக்கும்
வரிகளையும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அப்படியே இருந்து கொண்டு சுவைக்கலாம்.
இந்த மழைக்கால தனிமையானது நமது சிறு பருவத்தை அப்படியே மீட்டித்தருவதோடு துயரங்களையும் சோர்வையும்
அடித்துச் சென்று விடுகின்றது.
மழை எப்போதும்
வசீகரிக்கும் ஒன்றாகவே இருந்து வருகின்றது . அதுவும் அரைப் பாலைவனமாக திகழும்
எங்கள் மாவட்டத்தில் அந்த வசீகரத்தின் கனத்தை மனம் கூடுதலாக உணருவது என்பது இயல்பான
ஒன்றுதான்.
இளம்
பருவத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து வரும் மழையை ஒட்டிய உடன்பாடான மனப்பதிவுகளில்
சில திருத்தங்களை ஏற்படுத்தியது அண்மைக்கால நிகழ்வு ஒன்று.
பட்டப்பகலின்
வெயிலானது சென்னையின் தார்ச்சாலைகளில் உருகி ஓடிக்கொண்டிருந்தது.
திடீரென
வானில் கறுத்த மேகங்கள் திரண்டன.
நகரத்தின் சாலைகளில் முகப்பு
விளக்கை எரிய விட்டபடி ஊர்திகள் போயாக வேண்டிய அளவிற்கு எங்கும் இருள் படர்ந்தது.
இது வழமையாக வரும் மழைக்கான அறிகுறிதான் என எண்ணிக்கொண்டனர் சென்னை வாசிகள். அது
வரை வெயிலில் வறுபட்ட மக்கள் வரப்போகும் குளிர் மழைக்காக காத்திருக்க
தொடங்கினார்கள்.
சிறிது நேரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை
தொடங்கியது.
மழை தொடங்கிய
கொஞ்ச நேரத்தில் ஒரு கட்டிட இடிபாட்டில் ஏராளமானோர் பேர் வரை இறந்து போன செய்தியை தொலைக்காட்சி
அலைவரிசைகள் அறிவித்தன. மழையின் இனிய நினைவுகளுடன் காத்திருந்த சென்னை நகர மக்கள்
சோகத்தில் ஆழ்ந்தனர்.
இத்தனைக்கும்
அது புதியதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு கட்டிடம். தொடர்ந்த கனமழையின் விளைவாக இடிபாடுகளில்
சிக்கியவர்களை முழுமையாக மீட்டெடுக்கவே ஒரு வாரம் வரை ஆகி விட்டது. இறந்தவர்களின்
எண்ணிக்கை 60 ஐ தாண்டி விட்டது. சென்னையில் வரலாற்றில் அண்மைக்காலம் வரை இத்தனை
பெரிய தொகையில் மழைக்கால உயிரிழப்பு நடந்ததில்லை.
விபத்திற்கான
காரணத்தை ஆராய்ந்த போது கட்டிடத்தின் கட்டுமான தரத்தில் ஒரு குறையும் இல்லை.
மழையுடன் வீசிய சூறைக்காற்றுதான் கட்டிடத்திற்குள் புகுந்து அதை இரண்டு பாளங்களாக பிளந்து போட்டு விட்டது
என்பதை கண்டு பிடித்தார்கள்.
சென்னை
நிகழ்விற்குப்பிறகு முதன் முதலாக மனதில் மழை மீதான அச்சம் துளிர் விட்டது. அழகும்
கிளர்ச்சியும் ஆறுதலும் தரக்கூடிய மழைப் பொழுதுகளில் பேரழிவும் தனது வாய்ப்பிற்காக
காத்து கிடக்கலாம் . அருட் கொடையும் தண்டனையாக மாறலாம் என்ற உண்மை உரைத்தது.
ஆழிப்பேரலையானது
இந்தியா , சிறீலங்கா உள்ளிட்ட நாடுகளை தாக்கி பெருமளவிலான மனித உயிரிழப்புகளை
ஏற்படுத்தியதை அனைவரும் அறிவோம். அந்த சமயத்தில் தாய்லாந்து நாட்டில் யானைகள்
கடற்கரையை விட்டு அகன்று காட்டுக்குள் வெகு தொலைவு சென்று தங்கள் உயிரைக் காத்துக்
கொண்டதாக செய்திகள் வந்தன.
இதுபற்றி
கருத்துக்கூறிய சூழலியல் சார்ந்த நண்பரொருவர் , “ நில நடுக்கம் , ஆழிப்பேரலை,
கொடுங்காற்று , வெள்ளம் உள்ளிட்ட பேரழிவுகள் நிகழும் முன்னர் ஆடு , மாடு , நாய் ,
பூனை , காகம் ,எலி உள்ளிட்ட நம்மை அண்டி
வாழும் உயிரினங்களிடம் ஒரு வகையான பதட்டத்தை கவனிக்க இயலும். ஆனால் மனிதர்களாகிய நாம்
இயற்கையை விட்டு விலகி வெகு தொலைவு வந்து விட்டதால் பேரழிவை முற்கூட்டியே நம்மால் உணர
இயலாமல் போய் விட்டது . “ என்றார்.
வானில் கருத்த
மேகங்களை பார்க்க நேர்ந்தால் நபிகளார் மிகுந்த பதட்டமடைவார்கள். அந்த பதட்டத்தில் தன்னிலை மறப்பார்கள். எந்த
அளவிற்கு என்றால் அத்தகைய ஒரு தருணத்தில் தன் மேலாடையை அணிய மறந்தவர்களாய் வானத்தையே
மீண்டும் மீண்டும் பார்க்கலானார்கள்.
இறைவனின்
தண்டனையையும் அருளையும் பிரபஞ்ச விதிகளின் ஓட்டங்களையும் பற்றி ஆழ்ந்து உணர்ந்த
புனித ஆன்மாவாக அண்ணலார் விளங்கியதாலும் உம்மத்தின் மீதான அளவற்ற கரிசனம் கொண்டதாலும் இந்த பதட்ட நிலை அவர்களிடம் காணப்பட்டது.
மனிதனைத் தவிர
அண்ட சராசரங்களில் உள்ள பூமி , கல் , மண் , நீர் நிலைகள் , விலங்குகள் , பறவைகள் ,
சிறு உயிரிகள் , மரம் செடி கொடிகள் , கோள்கள் , நிலவு , கதிரவன் என அனைத்து
படைப்புக்களும் இறைவனைப்பற்றிய நினைவிலும் துதிபாடலிலும் தொடர்ச்சியாக இணைந்திருக்கின்றன.
அல்லாஹ் அவற்றிற்கு
விதித்த கட்டளைகளையும் இயல்பையும் அவை ஒரு போதும் மீறுவதில்லை .இதன் விளைவாக அவை
பிரபஞ்சத்தின் தாள லயத்துடன் துளி கூட பிசகாமல் ஒத்திசைந்து இயங்குகின்றன.
”விரும்பியோ, விரும்பாமலோ
நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்று அதற்கும் [ வானத்திற்கும் ] பூமிக்கும் கூறினான். ”விரும்பியே கட்டுப்பட்டோம்” என்று
அவை [ வானமும் பூமியும் ] கூறின. { அல்குர்ஆன் 41:11 }
இறைவனுடன்
உள்ள இந்த அறுபடாத கண்ணியின் விளைவாக அவைகள் பிரபஞ்சத்தினுள் பொதிந்திருக்கும்
பல்வேறு விசைகளின் விதிகளையும்
இயக்கங்களையும் நன்கு
அறிந்திருக்கின்றன. இதன் விளைவாக அவற்றினால்
பேரழிவை முற்கூட்டியே உணர முடிகின்றது.
மனிதர்கள் இறை
நினைவை விட்டு அகல்வதாலும் பாவங்களை புரிவதன் வாயிலாகவும் தங்களுடைய ஆதி இயல்பை
விட்டு பிறழ்வதாலும் பிரபஞ்சத்தின் ஓட்டத்திலிருந்து விலகி விடுகின்றான். இதன்
விளைவாக சிறியதும் பெரியதுமான பேரழிவுகளை சந்திக்கின்றான்.
“ நீங்கள் (அல்லாஹ்விற்கு ) நன்றி
செலுத்திக் கொண்டும் ஈமான் கொண்டும் இருந்தால் உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ்
என்ன இலாபம் அடையப்போகின்றான் ? அல்லாஹ் நன்றியறிவோனாகவும் எல்லாம் அறிந்தவனாகவும்
இருக்கின்றான் “ ( அல்குர்ஆன் 4:147 )
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
இந்தக்கட்டுரை வைகறை , இதழ் :36 , நவம்பர் – டிசம்பர் 2014 இல் வெளிவந்தது.
இதன் சுருக்கம் 22/01/2015 தி இந்து வின் ஆனந்த ஜோதி இணைப்பிதழில் சுருக்கமாக
வெளிவந்தது. http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article6809072.ece
No comments:
Post a Comment