Saturday, 16 November 2019

எலிப்பத்தாயம்—எலி மனிதர்களின் கதை









ஞானத்தை தேடும் தனிமை , தியானத் தனிமை , படைப்பாளியின் தனிமை என தனிமையில் பல வகை இருக்கின்றது.


அடூர் கோபாலகிருஷ்ணனின் முதல் வண்ணத்திரைப்படமான எலிப்பத்தாயம் ( மலையாளம் , 1981 ) தன்னலத்தாலும் செயலின்மையாலும் ஒரு தனி மனிதனில் ஏற்படும் தனிமையையும் கூட்டுக்குடும்பத்தில் அது ஏற்படுத்தும்  தாக்கத்தையும் பற்றி பேசுகின்றது.

கேரளத்தின் நில உடைமையாளக் குடும்பத்தின் எச்ச சொச்சமாக விளங்கும் உன்னி தன் இரண்டாம் சகோதரி ராஜம்மை , இளைய சகோதரி சிறீதேவியுடன்  ஆதி வீட்டில் வசிக்கின்றார்.


முன்பு சொகுசாகவும் வசதியாகவும் வாழ்ந்த உன்னி மாறிய கால சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளவும் ஆயத்தமாக இல்லை. தனது வசதியையும் தேவைகளையும் தவிர வேறு எதையும் சிந்தித்து பழகாத உன்னியால் அவனது சகோதரிகளின் உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.


திருமண வயதை கடந்த ராஜம்மை தன் உடன்பிறந்தவர்களான உன்னி , சிறீதேவியின் நலன்களையும் ஆதி வீட்டின் பராமரிப்பையும் தவிர வேறு எதையும் அறியாதவள். வாழ்க்கைத்துணை இல்லாமலேயே கழியும் தன் வாழ்வின் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாதவள்.

பருவ வயதை எட்டியுள்ள சிறீதேவியின் திருமணத்தைப்பற்றி சிந்தித்து பார்ப்பதற்கு உன்னி முயலவில்லை. அத்துடன்  நள்ளிரவில் வீட்டின் புழக்கடையில் திருட்டு நடக்கும்போதும் கோழைத்தனமாக போர்வைக்குள் அவன் முடங்குகின்றான்.

இதை  நினைத்து உள்ளுக்குள் மருகும் ராஜம்மையின் மனப்புழுக்கம் கடும் உடல் உபாதையாக வெளிப்படுகின்றது.

உன்னியின் மூத்த சகோதரி ஆதிவீட்டிலும் அதை சூழவுள்ள சொத்துக்களிலும் தனக்குள்ள உரிமையை மட்டும் கோருகின்றாள். ராஜம்மையின் உபாதைகளோ , சிறீதேவியின் திருமணமோ அவளுக்கும் ஒரு பொருட்டாக இல்லை.

வழமை போல மூத்த சகோதரியின் கோரிக்கையை தனது தன்னலத்தின் வழியாக மறுக்கின்றான் உன்னி. நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுகின்றாள் மூத்த சகோதரி.
.
பருவ வயதின் உணர்வு கொந்தளிப்பு, கல்லூரி கல்வி தந்த உலக திறப்பு, உன்னியின் தன்னலம் கலந்த செயலின்மை ,மூத்த சகோதரியின் மிரட்டல்,  ராஜம்மையின் மன உடல் அலைக்கழிப்புகள் என அனைத்தும் முட்டி மோதும் ஒரு புள்ளியின் அழுத்ததில்  இருந்து தப்பிக்கும் முகமாக சிறீதேவி ஒரு நாள் தன் காதலனுடன் வீட்டை விட்டு ஓடி விடுகின்றாள்.
கடுகின் முனையில் மலையை சுமத்தும்போது ஏற்படும் கடுகின் இறப்பு போன்று ஒரு நாள் காலை ராஜம்மை முற்றிலும் தகர்ந்து போகின்றாள்.

ராஜம்மையின் பிரிவிற்குப்பின் இருளுக்குள் இருள் போல உன்னியின் தனிமையானது ஆழமும் அடர்த்தியும் நிறைந்த குளம் போலாகின்றது. அவனின் கையாலாகாதத் தனத்தினால் சொந்த வீட்டிலேயே சிறையாகின்றான்.

இறுதியில் பொறியில் மாட்டும் எலியானது குளத்தில் மூழ்கடிக்கப்படுவது போல உன்னியும் தன்னல குளத்திற்குள் வீசப்படுகின்றான்.

எலி , எலிப்பொறி , குளத்தில் எலியின் முடிவு என மூன்று குறியிடுகளிலும் தன் மொத்த கதையையும் பொதிந்து வைத்துள்ளார் அடூர் கோபால கிருஷ்ணன்.

மிக நிதானமாக நகரும் திரைக்கதையின் வாயிலாக குடும்பத்தில் நிலவும் தன்னலம் , செயலின்மை போன்ற எதிர்மறை குணங்கள் அதன் முழு வடிவத்தையும் பெற்று முழு வீரியத்துடன்  பார்வையாளர்களைத் தாக்குகின்றது.

உன்னியின் செயலின்மையை உணரும் மூத்த சகோதரியும் , இளைய சகோதரி சிறீதேவியும் ராஜம்மையின் அர்ப்பணத்தையும்  பாடுகளையும் உணர்கிறார்களில்லை.

உன்னியும் ராஜம்மையும் நேர் எதிர் திசையில் செயல்பட்டவர்கள். ராஜம்மை இறந்து போகின்றாள். உன்னி குப்பையைப் போல எறியப்படுகின்றான். எது தண்டனை ? எது பரிசு ? இருவரின் வாழ்வின் இறுதியில் விழுந்து இறுகும் விதியின் முடிச்சை அப்படியே நம் முன் வைத்து விட்டு செல்கின்றார் அடூர்.


 பொறியில் குடியிருந்த எலியாக வலம் வருவது உன்னி மட்டுமில்லை மூத்த சகோதரியும், இளைய சகோதரி சிறீதேவியும் கூடத்தான். ஒரு வேளை அவர்களை யாராவது படைப்பாளிகள் பின்தொடர்ந்திருந்தால் எலிப்பத்தாயத்தின் இரண்டாம் மூன்றாம் பாகங்கள் கிடைத்திருக்கலாம்.

`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

தி இந்து தமிழ் நாளிதழின் இந்து டாக்கீஸின் துணைப்பகுதியில்  இந்திய சினிமா என்ற தலைப்பில் இக்கட்டுரை வெளியானது.   { தேதி ஆகஸ்ட் 15, 2014 , சென்னை நீங்கலான தமிழகப் பதிப்பு}



No comments:

Post a Comment