Saturday, 16 November 2019

எதிர் அலை பயணிகள்


“ உலகம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆட்பட்டிருக்கின்றது. இப்போது ஏழைகள் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஒரு காலத்தில் நடுத்தர வருமானமுள்ள மக்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. இன்று அது சுருங்கி வருகின்றது. முதலாளித்துவ வாழ்க்கை முறைக்கு அறை கூவல் விடுக்கும் மாற்று ஏற்பாடு தேவைப்படுகிறது. அந்த மாற்று ஏற்பாடு எது என தெரியவில்லை. “

-----------ஃபிரெஞ்ச் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான காஸ்டா கவ்ரஸ் {COSTA GAVRAS} ,   THE HINDU (Nov 04,2013)  நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியவை.



ஆனால் தமிழகத்தில் விவசாயம் , நெசவு தொழில்களுக்கும்  வணிக நிறுவனங்களில் கடை நிலை பணிகளுக்கும் ஆள் கிடைப்பது அருகி வருகின்றது.

சென்னை , கோயம்புத்தூர் , பங்களூரு , புனே , தில்லி , மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பெருகி வருகின்றன. நாட்டின் குக்கிராமங்களிலிருந்து வரும் எண்ணற்ற இளைஞர்களும் இளைஞிகளும் கழுத்தில் அடையாள அட்டையுடன் கை வழிய ஊதியம் பெறுகின்றனர்.

 நாம் வாழும் சென்னை நகரத்தில் தகவல் தொழில் நுட்ப துறை , கட்டிட கட்டுமானம் , உணவு விடுதிகள் என பல துறைகளில் தமிழர்களை விட கேரளம் , பீஹார் , மேற்கு வங்காளம் , வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணி புரிவது பெருகிக் கொண்டே வருகின்றது.

1980 ஆம் ஆண்டுகள் வரை படித்த பட்டதாரிகள் வேலைக்கு அலையாய் அலைந்தது போன்ற நிலைமை இன்றில்லை.

நிலத்தின் மதிப்பு பாய்ந்து உயர்ந்து வருகின்றது . பேரங்காடிகளிலும் , வணிக வளாகங்களிலும் ,பொழுது போக்கு சாகச பூங்காக்களிலும்  காசை இறைக்கத்தயங்காத மக்கள் திரள் வார நாட்களிலும் கூட பெருகி வருகின்றது. மக்களின் வாங்கும் திறன் பெருகி உள்ளது. பணம் தாராளமாக எல்லோரிடமும் புழங்குகின்றது.

இவை நவீன வளர்ச்சியின் ஆதரவாளர்கள் முன் வைக்கும் வாதங்கள்.
இந்த வாதங்களும் திரைப்பட இயக்குநர் காஸ்டா கவ்ராஸின் நுண்ணிய அவதானமும் அன்றாட வாழ்வியல் பருண்மையை அணுகும் இரு வேறு மன நிலைகள்.
காஸ்டா கவ்ராஸின் மன நிலை வெகு மக்களுக்கானது. மற்ற பிரிவினரின் எண்ண ஓட்டங்கள் ஒரு குறுங்குழுவினரின் தன்னலத்தோடு இறுக பிணைக்கப்பட்டது.

இன்று நாம் காணும் இந்த பள பள வளர்ச்சியானது  உண்மையிலேயே முழுமையான வளர்ச்சிதானா ? அல்லது ஒரு பக்க வீக்கமா ?
நாம் வாழும் சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள் .

இந்த நவீன வளர்ச்சி என்ற ராட்சச சக்கரத்தின் பேய் சுழற்சியில் சிக்கி செம்மஞ்சேரி , கண்ணகி நகர் , துரைப்பாக்கம் என நகரத்திற்கு வெளியே நவ சேரிகளில் எறியப்பட்ட உழைக்கும் தலித்துகளின் எண்ணிக்கை யாருக்கு தெரியும் ?


சத்தீஸ்கட் , பிஹார் , ஜார்க்கண்ட் , மேற்கு வங்காளம் , ஒடிஷா போன்ற பின்தங்கிய மாநிலங்களில் இருந்து வயிற்றை கழுவுவதற்காக தமிழகம் நோக்கி புலம் பெயர்ந்த ஏழை உழைப்பாளிகளுக்கு எந்த முகமுமில்லை. அடையாளமுமில்லை. அவர்களின் அன்றாட உழைப்பும் தங்கு தடையில்லாமல் சுரண்டப்படுகின்றது.

அவர்களின் குழந்தைகளுக்கான பள்ளிக்கல்விக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. கட்டுமானப்பணியில் தவறி விழுந்து பலியான புலம் பெயர் தொழிலாளிகளின் பிணம் கூட அவர்களின் ஊர் போய் சேரும் என்பதற்கும் எந்த உறுதியும் இல்லை. இதில் எங்கு இழப்பீட்டு தொகையைப்பற்றி பேச முடியும் ?

நவீன வளர்ச்சி என்ற துர்தேவதையின் புனித தலத்தின் அஸ்திவாரத்தில்தான் இத்தனை ரத்தக்கறை என்றால் அந்த மாளிகையின் உள்ளே வாசம் செய்பவர்களின் தலையையும் அந்த துர்தேவதை காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

இந்த துர்தேவதையின் பளபளக்கும் வழிபாட்டுத்தலங்களான ஷாப்பிங்க் மால் , மேம்பாலம் , பலதள வணிக வளாகம் , ஐ.டி.  கண்ணாடி மாடங்களின் முகப்புகளிலிருந்து  விழுந்து இந்த வருடம் தற்கொலை செய்து கொண்ட இளசுகளின் பட்டியல் மெல்ல நீளுகின்றது.
06 மாதத்திற்கொரு தரம் மாடலை மாற்றிக் கொண்டே இருக்கும் செல் பேசிகள் , ஊர்திகளை வாங்குவதற்காகவும் மது , பெண் நண்பிகள் உள்ளிட்ட ஆடம்பர செலவுகளுக்காகவும் இரு சக்கர வண்டிகளில் வந்து வழிப்பறி செய்யும் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகின்றது.

தேசிய குற்ற ஆவண பணியகத்தின் 2012 ஆம் ஆண்டிற்கான பதிவேடுகளில் காணக் கிடைக்கும் விவரங்கள் :

தேசிய தற்கொலை சதவிகிதமானது இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களான தமிழகத்தில் 12.5% மஹாராஷ்டிரத்தில் 11.9 % என்ற அளவிலும்  அடுத்ததாக மேற்கு வங்காளத்தில் 11 % ஆந்திரா 10.5% கர்நாடகா 9.4% என்ற அளவிலும் இருக்கின்றது.

 தேசிய சராசரியில் இவை மற்ற மாநிலங்களை பின்தள்ளி விட்டன. அதே போல இந்திய  பெரு நகரங்களில் ஏற்படும் தற்கொலை விகிதங்களில் மற்ற நகரங்களை விட சென்னை , பெங்களூரு , மும்பை , தில்லி தான் முன்னணியில் இருக்கின்றன.

மேற்கண்ட தற்கொலைகளுக்கான பல்வேறு காரணிகள் இருந்த போதிலும் மிக அதிகமான காரணம் குடும்ப பிரச்னை 25.6 % , உடல் நலக்குறைவு 20.5 % எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

பெண்களுக்கான எதிரான வன்முறை நிகழ்வுகளானது திரிபுரா, மணிப்பூர் , மேகாலயா, நாகாலாந்து , சிக்கிம்  உள்ள 05 வட கிழக்கு மாநிலங்கள், சத்தீஸ்கட் , ஜார்க்கண்ட் , ஹிமாச்சல் பிரதேஷ்  தவிர ஏனைய இந்திய மாநிலங்களில் மிக கூடுதலாக உள்ளது.
இதற்கான காரணம் என்ன ?

மேற்கண்ட மாநிலங்களில் வாழும் மக்களும் வாழ்வியல் முறையும் பெரு நகர பாணியிலான வாழ்க்கை வெள்ள ஓட்டத்திற்குள் பெரிய அளவில் சிக்காதவர்கள் .

சூழலியலை உறுத்தாத அசுர வேக நீக்கம் செய்யப்பட்ட நிதானமான வாழ்க்கை முறை அவர்களுடையது.
இந்த மாநிலங்கள் நீங்கலாக உள்ள எஞ்சிய  இந்தியாவில் வளர்ச்சி என்பதை பளபளக்கும் கட்டடங்களிலும் ஊர்திகளிலும் கடன் அட்டைகளிலும் பீட்ஸாவிலும் மின்னணு சாதனங்களிலும்  நவீன உடைகளிலும் உல்லாச விடுதிகளிலும் வங்கி கணக்கின் இருப்பிலும் மட்டுப்படுத்தி பார்க்கின்றோம்.

அதன் விளைவுதான் மேலே காணும் புள்ளி விவர பலன்கள்.
எல்லாம் தரும் கற்பக மரமாக சித்தரிக்கப்படும் ஐ.டி. துறையானது சம்பளத்தை சும்மா ஒன்றும் அள்ளிக் கொடுத்து விடவில்லை.
 இந்த துறையில் வேலை பார்க்கும் இளைய தொழிலாளிகளின் திறமையுடன் அவர்களின் உடல் நலத்தையும் மன நலத்தையும் சேர்த்து உறிஞ்சி எடுத்து விட்டு பின்னர் கூலியாக பணத் தாள்களை துப்புகின்றன அய் . டி.  நிறுவனங்கள்.

மகத்தான மனித வளமானது  வெறும் பணமாக குறுக்கப்பட்டு மிக மலிவாக பண்ட மாற்றீடு செய்யப்படுகின்றது.
கை நிறைய வரும் இந்த  பணக் கத்தையை குறி வைத்து ஊடக விளம்பரங்கள் ஆசை வலை வீசுகின்றன. பெரு வணிக நிறுவனங்கள் தங்களது சந்தையை நிலை நிறுத்த போலியான கவர்ச்சியான சமூக மதிப்பீடுகளை உருவாக்கி அவற்றை நுகர்வு சாதனங்களில் நுட்பமாக பொதிந்து வைக்கின்றன .

உழைப்பாளிகளின் கையில் இருக்கும் மாத சம்பள பணத்தின் பல வருட பெருக்கல் மடங்கை கணக்கு போடும்  நுகர் பொருள் உற்பத்தியாளர்கள்  சுலப மாத தவணை { EMI  } என அவர்களை தூண்டி விட்டு மீளாக்கடனிலும் வட்டியிலும் சிக்க வைக்கின்றன.
மீளாக்கடனிலும் வட்டியிலும் சிக்காத மாத சம்பளக்காரர்களுக்கு மகிழ்ச்சிதானே மிஞ்சுகின்றது என்ற கேள்வி இயல்பாகவே எழலாம்.

அப்படி மகிழ்ச்சி எதுவும் எஞ்சுவதில்லை என்பதைத்தான் தொழில் வளர்ச்சி பெற்ற மேற்கண்ட மாநிலங்களில் உள்ள குற்ற விவரங்கள் தெரிவிக்கின்றன.
மிகையான வருமானத்தை நிழல் போல பின் தொடரும் நுகர்வு பழக்கமானது பின்னர் பேராசையாக கொதித்து வெறியாக திரண்டு இறுதியில் தன் மீதும் பிறர் மீதும் வெறுப்பாக விரக்தியாக வெடித்து சிதறுகின்றது.

பல சுற்றுகளாக சிதறும் இந்த வெடிமருந்தானது குடும்ப உறவுகளிலும் சமூக தளங்களிலும் அமைதியை குலைக்கின்றது.  குற்றங்களை பெருக்குகின்றது. அதீத நுகர்வின் முதல் படியான தேவைக்கதிகமான உற்பத்தியானது நீர் , நிலம் , விண்வெளி , காற்று என அனைத்தையும் நஞ்சாக்கி வருகின்றது. இந்த சூழலியல் மாசினால் இனம் தெரியாத ஆள் முடக்கி , உயிர் கொல்லி நோய்கள் பெருகி வருகின்றன.

. இன்றைய நவீன வளர்ச்சியில் எதை இழந்து எதை பெற்றோம் என்பதை நாம் கணக்கு பார்க்க வேண்டாமா ?

 “ நவீன வளர்ச்சி “ என்ற முழக்கத்தின் உரிமையாளர்களை கண்டு பிடித்து விட்டால் ஆதாயமும் இழப்பும் தானாக தெரிந்து விடும்.

பெரும் ஆலை முதலாளிகள் , பெரு வணிக நிறுவனங்கள் , பன்னாட்டு வணிக நிறுவனங்கள் , அன்னிய முதலீட்டாளர்கள் என்ற வகுப்பாரும் இவர்களின் நலன்களை மட்டுமே எப்போதும் சிந்திக்கவும் பாதுகாக்கவும் செய்யும் வல்லாதிக்க அரசுகளும் அரசியல் வாதிகளும் பொருளாதார அடியாட்களான வல்லுனர்களும்தான்  நவீன வளர்ச்சியின் உண்மையான முதலாளிகள்.

இப்பூவுலகின் மண் , மலை , நன்னீர் , கானுயிர்கள் , பறவைகள்  , கடல் , காடு , மரங்கள் , கனிம வளங்கள் , காற்று , மனித ஆற்றல் என அனைத்து இயற்கை கொடைகளையும் பணத்தாள்களாக மாற்றிப் பார்க்க முயலும் கண் மண் தெரியாத பேராசைதான்  வர்க்க , வகுப்பு , சமூக மோதலாகவும் , அணு ஆயுத உற்பத்தியாகவும் , பழங்குடி அழிப்பாகவும் நாடுகளுக்கிடையேயான பகையாகவும் , ஃபாஸிச வல்லாதிக்கமாகவும் வடிவமெடுக்கின்றது.
அது உலகினுள் போட்டி பொறாமையையும் கசப்புணர்வையும் உண்டு பண்ணக்கூடிய முடிவுறா நச்சு வளையத்தை சுழல வைத்துக் கொண்டே இருக்கின்றது.  

உண்மையான முழுமையான வளர்ச்சி என்பது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் தழுவியதாக இருக்கும். நவீன வளர்ச்சி என்பது பல குடும்பங்களின் சமூகங்களின் நாடுகளின் நுகர்வை ஒரு  குடும்பமோ சமூகமோ நாடோ சுரண்டி உறிஞ்சி கொழுப்பதாக இருக்கும்.
நவீன வளர்ச்சியின் கொடூர தோற்றத்தை வேலை வாய்ப்பு பெருக்கம் , வாழ்க்கைத் தரம் உயர்வு , பணப்புழக்கம் அதிகரிப்பு , தேச வளர்ச்சி என்கின்ற  கனமான சமுக்காளம் போட்டு மறைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இப்படி விதந்து ஓதப்படும் நவீன வளர்ச்சியின் கூறுகளில் ஒன்றான அதீத உற்பத்தி என்ற ராட்சத பொறியானது மனிதனின் தன் சிந்தனை , ஊக்க மிக்க படைப்பாற்றல் , தற் சார்பு , மனித நேயம் போன்றவற்றை முழு வேகத்தில் உறிஞ்சி குடித்து விட்டு அவர்களை குப்பையாக்கி  சமூகத்திற்குள்  கக்குகின்றது.

நவீன வளர்ச்சியை அதன் அனைத்து கேடுபாடுகளுடனும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் இந்த சக்கை மனிதர்களினால்  கிளப்படும் குருட்டு அடிமைத்தன அலைக்குள் மொத்த சமூகமும் நாடும் மூழ்கடிக்கப்படுகின்றது.

                                    ```````````````````````````````````````````````````````````````````````
இந்த அலைக்கு எதிரான பயணமும் போராட்டமும் வரலாறு முழுக்க நிகழ்த்தப்பட்டுக் கொண்டேதான்  இருக்கின்றது.

இரக்கம் , உயிர் நேயம் , மென்மை , அழகியல் உணர்வு ,படைப்புத்திறன் , களிப்பு , தற்சார்பு போன்றவை மனிதனுக்குள்ளே இயற்கையால் இறைவனால் பொதிந்து வைக்கப்பட்ட உன்னதமான உள்ளார்ந்த குணங்களாகும் .

இந்த உன்னதங்களை கலைத்துப் போடும்  அதீத நுகர்வு , மலை போன்ற உற்பத்தி , முடிவற்ற பயனற்ற உழைப்பு போன்ற எதிர்மறையான குணங்களிலிருந்து மனித வாழ்வை மீள உருவாக்கும் நடவடிக்கைகள்  தத்துவ அடிப்படைகளினாலும் தனி மனிதர்களாலும் , சமூகக்குழுக்களாலும் ,மதங்களினாலும் காலங்காலமாய் முன்னெடுக்கப்பட்டு  வந்துள்ளது.
 “ எளிய மனம் பெற்றோர் பேறு பெற்றோர் “ ( மத்தேயூ :05 ) என்கின்றது விவிலியம். அன்பு மட்டுமே நிறைந்த ஒரு இனிய வாழ்வை நோக்கி வழி நடத்தப்பட்ட தன் சீடர்களை “ மந்தைகள் “  என்ற விளிம்பு நிலை சொல்லாடலை கையாண்டு அழைத்தார் ஏசு பிரான். கிறிஸ்துவின் வாக்களித்த பரலோக ராஜ்யத்திற்காக தங்களது இவ்வுலக வாழ்க்கையை ஒதுக்கி வைத்து துறவு கோலம் பூண்டவர்கள் ஏராளம்.


சிற்றரசுகளும் பேரரசுகளும் அதீத ஆடம்பரத்தின்  தனி முழு குறியீடுகளாக இந்திய மண்ணில் பெரு வெள்ளமென கரை புரண்டு ஓடும்போது அதன் எதிர்  நீரோட்டமாக விளங்கியவர்கள் துறவிகள் , சித்தர்கள் . அலைந்து திரியும் நாடோடி வாழ்க்கை முறையின் வாயிலாக சராசரி மனித வாழ்க்கையை நிராகரித்து  இவ்வுலகை கடந்து சென்றவர்கள் .

இந்திய ஞான மரபின் தொடர்களான பௌத்தமும் சமணமும் ஆசை நீக்கத்தையும் தீவிர துறவையும் அழுத்தமாக போதித்தன.

சராசரியான மக்களுக்கான வாழும் வெளியை நுகர்வு பண்பாடானது அதி வேகமாக விழுங்கி வரும் வேளையில் அதற்கெதிரான வாழ்வியல் குறியீடுகளை உருவாக்கும் முயற்சியில் சுயுலோ , மாக் பாய்ல் போன்ற அய்ரோப்பியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வழியில் தன் எழுச்சியாக ஆங்காங்கே ”  பணத்தை  ஒதுக்கிய சமூகம் “ என்பன போன்ற சிறு குழுக்கள் முளை விடுகின்றன. இவர்களும் தங்களுக்கான பாதையின் வரைபடத்தை இந்தியாவின் துறவு மரபிலிருந்தும் , கிறிஸ்தவத்திலிருந்தும் கண்டு கொண்டவர்களே.


 நவீன வாழ்க்கை கையளித்துள்ள பேய் ஓட்டத்திலிருந்து தங்களை வலுவில் விலக்கிக் கொண்டு பாதையின் ஓரத்தில் இளைப்பாற நினைக்கும் மாற்று வாழ்க்கைக்கான இன்றைய தேடல் நம்மில் பலருக்கு புது செய்தியாக இருக்கலாம்.

ஆனால் பல்லாயிரம் வருடங்களாக இந்த நிலவுலகில் நீடித்து வரும்  பழங்குடி சமூகமானது வாழ்க்கையின் மீது இயல்பாக மிதந்து சென்று கடந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் வாழ்க்கையிலிருந்து விலகிய பாதை ஓர பார்வையாளர்களாகவும் இல்லை. நம்மை போல அவர்கள் அன்றாட வாழ்க்கைக்காக மிக கடினமாகவும் திட்டமிடுவதில்லை.

கதிரவனின் இளங்காலை கிரணங்களோடு சேர்த்து அன்றாடம் கையளிக்கப்படும் வாழ்வை அதன் மெருகு குலையாமலேயே அவர்கள் சுவைக்கின்றனர்.

பழங்குடியினர் என்ற இந்த ஆதி குடிகளின் வாழ்க்கை முறையில் தனி உடைமை இல்லை. மிக அற்பமான பொருட்கள் மட்டுமே அவர்களின் தனி உடைமை ஆக இருக்கும். மீதி அனைத்துமே பொது உடைமைதான். அவர்கள் பசியை  தணிக்கக்கூடிய அளவில் மட்டுமே காடுகளிலும் மலைகளிலும் உள்ள கனியை ,தேனை , கிழங்கை , தானியங்களை ,  சிறு விலங்கை பயன்படுத்துகின்றனர்.  கிடைப்பதை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கைமுறை அவர்களுடையது.  உணவு கிடைக்காத காலங்களில் பட்டினி கிடப்பார்களே தவிர காட்டை சூறையாட மாட்டார்கள்.

உதிர்ந்த கனிகள் , காய்ந்த இலை கிளைகள் என்பனவற்றை மட்டுமே பயன்படுத்துகின்றனர். பச்சை மரத்தையும் செடியையும் அவர்கள் தொடுவதில்லை. மண்ணுக்கடியில் உள்ள கனிம வளங்களுக்காக மண்ணுக்கு மேல் உள்ள பல்லுயிர் சூழலை குலைக்காதவர்கள்.
அதாவது இயற்கையை அன்னையாக அவர்கள் கருதி அது தானாக  மனம் உவந்து ஊட்டுவதை மட்டுமே ஏற்கின்றனர். அமுதூட்டும் இயற்கையின் மார்பை அறுக்க விரும்பாத குழந்தைகள்தான்  பழங்குடிகள்.

அவர்கள் அன்றாட உணவிற்காக மட்டும் வேட்டையாடும் அல்லது விவசாயம் செய்யும் நேரம் என்பது மூன்று முதல் ஆறு மணி நேரங்கள் மட்டும்தான். மீதி நேரம் முழுக்க பாரம்பரிய இசை , நடனம் , இயற்கையுடன் மௌன  உரையாடல் , ஓய்ந்திருத்தல் என வாழ்க்கையை அவர்கள் களிப்பு மிக்கதாக முழுமையாக வாழ்கின்றனர். அவர்களுக்குள் யாரையும் யாரும் ஆதிக்கம் செய்வதுமில்லை , அடிமைப்படுத்துவதுமில்லை.


சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டேன். அந்த பயிற்சி வகுப்பின் ஓரம்சமாக மேற்கு மலைத்தொடரில் வாழ்ந்து வரும் காணிப்பழங்குடியினரிடையே ஓரிரவு தங்க வேண்டி வந்தது. அப்போது பல விஷயங்களைப்பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம்.
அப்போது எங்களுக்கு மலைப் பாதை வழிகாட்டியாக வந்த பூதத்தான் என்ற பெயருடைய காணி பழங்குடி எங்களோடு சில செய்திகளை பகிர்ந்து கொண்டார்.
காணிகளை இடம் பெயர்த்து சம வெளிக்குள் வாழ வைக்க அரசு முயற்சி எடுத்ததாம். அப்போது காணிப்பழங்குடியினர் அரசைப் பார்த்து பின் வருமாறு சொல்லியிருக்கிறார்கள் .

நாட்டுக்குள் வந்தால் அங்குள்ள வாழ்க்கை முறையில் எங்களால் இணைய முடியாது. அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் நாங்களும் எங்கள் பெண்களும் சிறையில்தான் அடைபட வேண்டி வரும். காட்டின் ஒவ்வொரு அங்குலமும் எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்தது. எனவே எங்களை அங்கேயே விட்டு விடுங்கள் . அங்குதான் எங்களால் இயல்பாக வாழவும் முடியும் “.
தான்ஸானியாவின் ஹட்ஜா ஆதி இனக்குழுவினர் தொடங்கி  , பழனி மலைத்தொடரில் வசிக்கும் பளியர் இன மக்கள் வரை ஆதி குடிகள் அனைவருமே காணிகள் சொன்னதைத்தான் சொல்கின்றனர்.


காடுகளிலும் மலைகளிலும் இயற்கையுடன் ஒன்றித்து வாழும் பழங்குடியினரை மனித நாகரீகத்தின் மூத்த குடிமக்களை சீர்திருத்த போகின்றோம் என படையெடுத்து சென்றனர் சம வெளி மனிதர்கள்.

அவர்கள் தங்களோடு கூடவே எடுத்துச் சென்ற அரசு , படை , மதம் , பண்பாடு , பணப் புழக்கம் , கல்வி முறை ,  சட்டம் , உணவு , நுகர்வு வெறி , வாழ்க்கை முறைகளின் விளைவாக  தொல் குடிகளின் வாழ்வில் நடந்தது என்ன ?

காலங்காலமாக முழு உடல் நலனுடன் வாழ்ந்து அந்த மக்கள் தொற்று நோய் உட்பட பல உடல் நலக்குறைவுகளினால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள் . எஞ்சியவர்கள் ஊட்டச் சத்திழந்து நடமாடும் எலும்புக்கூடானார்கள்.

காட்டின் முணு முணுப்பை தங்களின் தாய் மொழியாக கொண்டவர்கள் தங்களுக்குள்ளேயே நவீன ஆயுதங்களை ஏந்தி கொலைக் கூச்சலிடும் வன்முறைக் கும்பலாக மாறிப்போனார்கள். போதையும் குடும்ப வன்முறையும் சில சமயங்களில் கொலைகளும் அன்றாட நிகழ்வாகிப்போயின.

தங்களின் வாழ்வாதாரத்திற்கு இயற்கையின் கருணையை மட்டும் நம்பி தன்மானத்துடன் இருந்தவர்கள் உல்லாச பயணம் வரும் நாட்டு மனிதர்களிடம் கையேந்தும் வறுமைமிக்கவர்களாக மாற்றப்பட்டார்கள். சம வெளிக்கு பிழைக்க சென்றவர்கள் அற்ப கூலிக்கு மாரடிப்பவர்களானார்கள். கொத்தடிமைகளாக ஆலைகளில் சிறைப்பட்டுள்ளார்கள்.
பள்ளிக்கூடங்களுக்குள் அடைத்து திணிக்கப்பட்ட  பழங்குடி குழந்தைகளினால் புதிய வாழ்க்கை முறைக்குள் பொருந்த முடியாமல் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளானார்கள்.

மேற்கண்ட நிகழ்விற்கான ஏராளமான சான்றுகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் ஆஃப்ரிக்க கண்டத்திலும் நிறைந்து கிடக்கின்றன.
இந்தியாவில் ஆங்கில ஏகாதிபத்தியம்தான் காடுகளின் வளங்களை தங்கு தடையின்றி கொள்ளையடிக்க முதன் முதலில் வன பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தனது.
 விடுதலை பெற்ற இந்தியாவிலும் அன்னிய வெள்ளை ஏகாதிபத்தியமானது வன பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல மக்கள் பகை சட்டங்களின் வாயிலாக தனது இருப்பை உறுதி செய்து  கொண்டே இருக்கின்றது.

தனது பேராசைக்காக உலகை தின்ன விரும்பும் மனதிற்கு அய்ரோப்பியர் இந்தியர் என்ற பூகோள வேறுபாடெல்லாம் இல்லை. அது ஒரு உலகளாவிய மனக் கோணல் நிலையாகும்.
தங்களுக்கு எதிரான பண்பாட்டு விழுமியங்களையும் மதங்களையும் வாழ்க்கை முறைகளையும் இந்த மனக்கோணல்காரர்கள் தங்களது  நோக்கத்திற்கும் தேவைக்கும் ஏற்ப சீரழிக்க விழைகின்றனர். நெருப்பு மழையிலிருந்து தப்பிக்க காகித குடையை கொடுத்து உதவும் கனவான்கள் இவர்கள்.

எடுத்துக்காட்டாக இரண்டு விஷயங்களை கூற முடியும்.

“ வறுமையிலிருந்து மீட்டு  நாகரீகத்தின் முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்கின்றோம் “ என்ற கவர்ச்சிகரமான பதாகைக்குள் ஒளிந்து கொண்டு இயற்கையோடு இசைந்து வாழும் பழங்குடி வாழ்க்கை முறையை குலைக்கின்றனர்.

உலக மீட்பிற்காகவும் , நைந்து தொய்ந்த ஆன்மாக்களின் விடுதலைக்காகவும் வழி காட்ட வந்த மதங்களின் கையில் கொலை ஆயுதத்தை கொடுத்து  அவற்றை வெறுப்பில் ஊறிய ஃபாஸிச சித்தாந்தமாக்குகின்றனர்.

 பின்னர் அந்த சித்தாந்தத்தின் வழியாக  பேரின வாத அரசியல் பொம்மலாட்டம் ஒன்றை  இருள் மூலைகளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மக் கரங்கள் படைத்து இயக்குகின்றன.
அதனால்தான் அதற்கெதிரான மாமனிதர்களின் வழிகாட்டுதல்களும் மீட்புகளும் அகிலம் தழுவியதாய் இருக்கின்றது .வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் எழுந்த விதம் விதமான தேவைகளையொட்டி அந்த மீட்பு இயக்கங்கள் மாறுபட்ட தளங்களிலும் வழி முறைகளிலும் செயல்பட்டிருக்கும், அவை அவற்றின் புற தோற்றம் மட்டுமே.  . ஆனால் அவற்றின் அகமானது ஒரே ஆன்ம ஒளிச் சரட்டில் பின்னப்படடிருப்பதை நாம் உன்னிப்பாக கவனித்தால் அறிந்து கொள்ள முடியும்.


மனிதனின் இருப்பு என்பது பிறப்பு இறப்பு என்ற இரு புள்ளிகளுக்கிடையே தொடங்கி முடிந்து போகும் பயணம்தான். எல்லாம் அடங்கிய இந்த அண்ட வெளியில் மனிதன் என்பவன் சிறு துகளே. அவன் மட்டுமே இந்த அண்ட சராசரத்தில் தனித்த உயிரி இல்லை. அவனுடன் எண்ணற்ற உயிரினங்கள் படைக்கப்பட்டு வாழ்ந்து மடிகின்றன.

வாழ்வின் இந்த அநித்தியத்தையும் தன்னுடன் சேர்த்து எல்லா உயிரிகளுக்கும் பிரபஞ்சத்தின் மீது இருக்கும் கூட்டு பாத்தியதையையும்  உணரும் மனித மனம்மட்டுமே யாருக்கும் தீங்கு விளைவிக்க துணியாது. பேராசை எனும் குவளையில் உலகை அள்ளி ஒரே மடக்கில் விழுங்க  நினைக்காது. வானமும் பூமியும் அடங்கலான இந்த வெளியின் உண்மையான நிரந்தராமன உரிமை அவற்றை படைத்த பேராற்றல் ஒன்றுக்கு மட்டும்தான் உடையது என்ற பேருண்மையின் வெளிச்சத்தில் எப்போதும் அந்த மனம் வழி நடத்தப்படும்.

வாழ்வின் நிலையா தன்மையை தன் அன்றாட வாழ்வினுக்குள் பொருத்தி பார்க்கும் மனித ஆன்மாவானது நாம் மூச்சு விட்டு கொண்டிருக்கும் இந்த கணம்தான் பருண்மையானது என்பதை புரிந்து கொள்ளும். எதிர்காலம் பற்றிய அஞ்சாமை என்ற பிரபஞ்ச உயிரிகளின் இயல்பான ஓட்டத்தில் அவன் இணைவான். பேராசையும் சுரண்டலும் ஆதிக்க வெறியும் எவ்வளவு செயற்கையானது என்பதுடன் அது மொத்த அண்ட சராசரத்திற்கு எதிரான போர் பிரகடனம் என்பதையும் அறிந்து கொள்வான்.

கண்மூடித்தனமான வாழ்க்கை ஓட்டத்தின் சிதிலங்களிலிருந்து புதையுண்டு போகும் இந்த வாழ்விலக்கணத்தை அவ்வப்போது மீட்டுத்தருபவர்கள் ஞானிகளும் , தீர்க்கதரிசிகளுமாகிய  மகா மனிதர்கள் மட்டுமே.

இந்த பொது உண்மைகள் வெறும் ரசனைக்குரிய காட்சிப்பொருளாக நீடித்து விடாமல் அன்றாட வாழ்விற்குரிய இலக்கணமாகவும் , நிகழ்முறைகளாகவும் அவர்களால் செயல் உரு கொடுக்கப்பட்டன.

பாலைவன நிழல் மேகமான முஹம்மது நபி “ உங்களில் யார் உடல் நலம் உள்ளவர்களாகவும் உயிருக்கும் குடும்பத்திற்கும் பாதுகாப்பு பெற்றவராகவும் அன்றை நாளுக்குரிய உணவை அடைந்தவராகவும் உள்ளாரோ அவர் இவ்வுலகம் முழுவதையும் அடைந்து கொண்டவரைப் போன்றவர் ஆவார் { நூல்: திர்மிதீ , இப்னு மாஜா } என்ற எளிமையான அடையாளப்படுத்தல் மூலம் முடிவற்ற பேராசை பெரு வெளியில் அலைந்து கொண்டிருந்த மனித வாழ்வை எல்லோருக்குமானதாக வசப்படுத்தி தந்தார்.

இந்தியாவின் ஆன்மாவை எளிமை , கிராமம் , கைத்தொழில் , தற்சார்பு , இயற்கை மருத்துவம் , சூழலியல் போன்ற புள்ளிகளில் அடையாளங்கண்டார் காந்தியடிகள்.
நிலமெங்கும் படர்ந்து வரும் ஆதிக்க பண்பாட்டு நுகர்வு பேராசை இருளிலிருந்து உலகினை மீட்கும் ஆன்ம திறனை கொண்டிருப்பவர்கள் இந்த மகாத்மாக்களே.
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
இது காக்கைச்சிறகினிலே இதழில் வெளிவந்தது


.
















No comments:

Post a Comment