Friday, 1 November 2019

கரைதான் நதி







வெயில் ஊசி போல நிலத்தின் மீதும் மனிதர்கள் மீதும் பெய்து கொண்டிருக்க நடுங்கும் தலையுடன் மூதாட்டியொருத்தி சாலையோரம் அமர்ந்திருக்கின்றாள். கவிழ்க்கப்பட்ட பிரம்புக்கூடைக்கு மேல் சீப்பு சீப்பாக மலை வாழைப்பழம்.



பரபரப்பான சென்னையின் நேதாஜி சுபாஷ் சாலையில் காலையிலிருந்து இரவு வரை வாடிக்கையாளரை எதிர்பார்த்துக்காத்திருக்கும் பீளை படிநது களிப்பாக்கு போல சுருங்கிய கண்கள்.


பால் பாதம் ஹல்வா மஸ்கட் என அவர் கூவும்போதே தன் தலையிலிருக்கும் ஹல்வா கூடையை அரை நொடிக்கு உயர்த்தி மீண்டும் தலையில் வைப்பார்.
சுமப்பதைபோலவே கூவவதும் கனமானதல்லவா? ஹல்வா மனிதருக்கு எண்பது வயதிருக்கும். அவருக்காகவே கொஞ்சம் ரவா ஹல்வாவை வாங்கிய பிறகு ஏன் இந்த வயதில்? என்ற என் வினாவை தொடங்கி முடிப்பதற்குள்  மனைவி இறந்து விட்டாள், ஒரு மகன் மனவளர்ச்சி குன்றியவன், மகள் கணவனால் கைவிடப்பட்டு என்னிடம்தான் தங்கியுள்ளாள் என்று புன்னகைத்தபடியே கூடையை தலையில் ஏற்ற ஒரு கை கொடுக்கும்படி சொன்னார்.

வாழ்வின் மைய விலக்கு விசையினால் கவனமின்றி சுழற்றி எறியப்பட்டவர்கள். நதியின் மருங்குகளில் ஒதுங்கும் நாணலைப்போல வாழ்வென்னும் பெரு ஓட்டத்தின் விளிம்புகளில் தங்கள் காலடிக்கான நிலத்தை உருவாக்கிக் கொண்டவர்கள்.


வாழ்வின் மீதான நம்பிக்கையும் பிடிப்பும் இற்றுவிழப்போகும் அந்த துயரார்ந்த கணத்திற்குள் மூழ்கி தொலையப்போகும் சமயத்தில் தூதரின் தீர்க்கதரிசனம் போல புனித நூலின் வரிகள் போல இந்த உதிரி மனிதர்களின் முகங்கள் என்னை மீட்கின்றன. 


நம்பிக்கை சரட்டை முறுகப்பிடித்துக் கொண்டிருக்கும் ஓரத்து கண்களும் முகங்களும் எனது துயரத்தின் ஈரத்தை ஆன்மாவிலிருந்து மென் துவாலை போல ஒற்றி அகற்றுகின்றன.

தேநீர் கூட பத்து ரூபாய்களுக்கு கிடைக்காத காலத்தில் தங்களின் ஐந்தும் பத்துக்குமான வருமானத்தில் வாழ்வெனும் சமைந்த சிலையின் கண்ணிமைகளைக்கூட  இவர்களால் அசைத்திடவியலுமா?

ஆனால் இந்த உதிரி மனிதர்கள் காத்திருக்கிறார்கள்
முதல் புல்கட்டை வாங்கவரும் மனிதருக்காக சுழியத்திலிருந்து ஆதாயத்திற்கு நடைமாற்றும் அந்த ஒற்றை நாணய வில்லையின் வரவிற்காக....

மொத்த கைமுதலும் விற்பனை சரக்காகவே தேங்கிவிடும் இடர்ப்பாட்டைக் கொண்ட பொன்மலைப்பொழுதின் மஞ்சள் நிமிடங்களில் அவர்கள் காத்திருக்கிறார்கள்.

தீரா நம்பிக்கையின் இருக்கையில் அரசனைப்போல அவர்கள் அமர்ந்திருக்கின்றார்கள்.

தொழில்ரீதியான நெருக்கடிகள் சுழன்று சுழன்று தலைக்கேறி மொத்த புலன் களும்  சூடேறி   இறுகும்போது  என் கைப்பிடித்துயர்த்தும் மீட்பர்கள் இந்த உதிரி மனிதர்கள்தான்.

நம்பிக்கையின்  மாறா இருப்பை வெற்றியை உறுதிப்படுத்துவதற்கென்றே வாழும் மனிதர்கள். நம்பிக்கைக்காகவே வாழ்பவர்கள்.


வாழ்வின் இழுப்போட்டத்திலும் மூழ்கிடாமல் மிதக்கும்  ஒற்றை மரக்கிளை போல  கழிவிரக்கத்தில் சிக்கிக் கொள்ளாததின் விளைவாகத்தான் அவர்கள் வாழ்வின் ஒரு நாளை அமைதியுடன் எதிர்கொள்கின்றனர்.

பேரிருப்பு இயக்கும் பிரபஞ்சங்களின் நிகழ் நிரல் விசையோட்டத்தில் தங்களின்  அன்றாடத்திலுள்ள ஒவ்வொரு கணமும் பிணைக்கப்பட்டிருக்கின்றது என்ற அறிதலின் பெறுபேறாகத்தான் அவர்களுக்கு இந்த அமைதி வழங்கப்பட்டிருக்கின்றது.


வாழ்வு உண்டாக்கும் கலக்கத்தின் விஷச்சுழலில் என் மனது முழ்கிடும்போது பழ மூதாட்டி, ஹல்வாக்காரர், நாள் முழுக்க நின்று கொண்டு கனத்த இஸ்திரி பெட்டியை தூக்கியும் நகர்த்தியும் தேய்க்கும்  சலவை மனிதர், தள்ளுவண்டியில் வறுகடலை விற்கும் இளைஞர், ஆகாயத்தாமரைக்கிழங்கை  உணவாக விற்கும் நடைபாதை சிறு வணிகர் ரயிலில் கடலை மிட்டாய் விற்கும் கண்ணிழந்தோர் புல் விற்கும் மகளிர் என்ற இந்த ஓரத்து மகான்கள்தான் கரை சேர்க்கின்றனர்.
நதிகள் கரைகளில்தான் ஓடுகின்றன




2 comments:

  1. உதிரி மனிதர்கள்-உள்ளுருகும் உண்மை!
    அவர்களின் வலி கூறும் வார்த்தைகள்- அருமை!
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete