Sunday, 13 October 2019

THE LIVES OF OTHERS (2006) - அதிகாரத்தின் இருள் மையங்கள்





இன்று நாம் பார்க்கும் ஜெர்மனி நாடு, 29 வருடங்களுக்கு முன்னர் இன்று போல ஒன்றுபட்டதாக இருந்திருக்கவில்லை.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நேசநாடுகளின் கூட்டணியினரிடம் கீழடங்கிய ஒன்றுபட்ட ஜெர்மனியானது நான்கு பிராந்தியங்களாக பிரித்தாளப்பட்டது.
 1949 இல் அமெரிக்கா, ஃபிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் கையிலிருந்த பகுதியானது மேற்கு ஜெர்மனி எனவும் முன்னாள் ஸோவியத் ஒன்றியத்தின் கீழிருந்த பகுதி கிழக்கு ஜெர்மனியாகவும் உருவங்கொண்டது. 1990-91களில் கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஒன்றிணைந்து ஒற்றை ஜெர்மனியாக மீண்டும் உருவெடுத்தது.
ஜெர்மன் சனநாயக குடியரசு என்றழைக்கப்பட்ட கிழக்கு ஜெர்மனியை SED என்றழைக்கப்பட்ட ஜெர்மனி சோஷலிஸ கூட்டொருமை கட்சி (The Socialist Unity Party of Germany, Sozialistische Einheitspartei Deutschlands) ஆண்டது.
ஸ்டாஸி STASI (Staatssicherheit) அல்லது தேச பாதுகாப்பு அமைச்சகம் (MFS) என்றழைக்கப்பட்ட கிழக்கு ஜெர்மனியரசின் உளவு காவல்துறையானது நாடு உருவான ஒராண்டில் அதாவது 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அன்னாளில், சொந்த அரசினால் தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் குடிமக்கள் மிகக் கூடுதலாக கண்காணிக்கப்பட்டது கிழக்கு ஜெர்மனியில்தான்.
நாடெங்கும் வலைப்பின்னல்களைக் கொண்ட இந்த உளவுத்துறையில் 1989 ஆண்டில் மட்டும் முழு நேர உளவாளிகளாக 91,000 பேரும், குடிமக்களிலிருந்து முறைசார உடனுழைப்பாளர்களாக அதாவது கண்காணிகளாக, ஆட்காட்டிகளாக 1,89,000 பேர் வரையும் இருந்துள்ளனர்.. அதாவது 90 குடிமக்களுக்கு ஒரு உளவாளி என்ற விகிதம். மொத்த தேசத்தையும். அய்யத்தின் பெரும்போர்வையால் போர்த்தியிருக்கிறார்கள்.
ஜெர்மனி சோஷலிஸ கூட்டொருமை கட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்ட ஸ்டாஸியானது கட்சியின் வாளும் கேடயமுமாக கருதப்பட்டது. ஆளுங்கட்சியின் நிலைப்பாட்டை விட்டு நூலளவு வேறுபடும் எண்ணங்களும் மனப்பான்மைகளும் கூட சீர்குலைவு நடவடிக்கையாக கருதப்பட்டது. ஸ்டாஸியின் மொழியில் சொல்வதனால் “மேற்கிலுள்ள பகை தலைமையக தூண்டலின் விளைபயன்”. அத்தகைய விளைபயனை சுமக்கும் ஆட்களுக்கு ‘எதிர்மறை பகை கூறுகள்’ எனவும் பெயரிடப்பட்டது.
உள்நாட்டு அயல் நாட்டு ஒற்றாடல் பணிகளையும் ஸ்டாஸி கவனித்து வந்தது. இதற்கென தனி தடுப்புகாவல் மையங்களும் ஆயுத படையும் இருந்தது. அதன் அலுவலர்கள் ராணுவ பதவிகளையும் வகித்தனர். அதன் பணியாளர்கள் ராணுவத்திலிருந்தும் காவல்துறையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் கூடுதலான பணியாளர்கள், ஆளுங்கட்சியான ஜெர்மனி சோஷலிஸ கூட்டொருமை கட்சியிலிருந்தும் அதன் இளைஞர் அணியான ஜெர்மனிய விடுதலை இளைஞர்கள் ( Free German Youth, FDJ) அணியிலிருந்துமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் மேல்மிச்சமான சம்பளங்களையும் சலுகைகளையும் துய்த்தனர். அரசின் வழமையான நிதி நிலை திட்டமிடலுக்கும் ஸ்டாஸிக்கும் தொடர்பே இருந்ததில்லை. அத்துடன் அவர்களுக்கு பொருளாதார இக்கட்டுகளும் ஏற்பட்டதில்லை.
உள்நாட்டின் எதிர்மறை பகைக் கூறுகளை பின்தொடர்ந்து பிடித்து அழிக்கும் பணிக்காக கிழக்கு ஜெர்மனியின் அனைத்து வாழ்க்கை பகுதிகளையும் ஊடுருவ விரும்பியது ஸ்டாஸி. இதற்காகவே அடர்த்தியான வலைப்பின்னலாக அலுவலகங்களை அமைத்தது. நேரடி கள அலுவலகங்களை அமைத்து தலையாய வணிக நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் உற்று கண்காணித்தது. அதிகாரப்பூர்வமற்ற உடனுழைப்பாளர்களை சந்தித்து சதித்திட்ட உரையாடல்களை மேற்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான கமுக்க அடுக்ககங்களை ஸ்டாஸி பயன்படுத்தியது.
1970களுக்குப்பிறகு ஒற்றாடலில் மென்மையான போக்கை ஸ்டாஸி கடைப் பிடிக்கத் தொடங்கியது. இதன் பொருள்: அதன் ஒடுக்குமுறைகளில் ஏதேனும் தளர்வு வந்துவிட்டது என்றில்லை. அவர்களின் நோக்கத்தில் எந்த மாற்றமுமில்லை. முன்னறிந்து தடுக்கும் நடவடிக்கைகளையும் மனதை உடைக்கும் நடவடிக்கைகளிலும் ஸ்டாஸி கவனம் செலுத்த தொடங்கியது. கருத்து முரண்பாடுடைய, வேறுபாடுடைய எண்ணங்களையும் வாழ்க்கைப்போக்குகளையும் வளர விடாமல் முன் கூட்டியே தடுத்தல், தன் தேவைக்கேற்ப கையாளுதல், திட்டமிட்ட வதந்திகள் மூலமாக தனியாட்களையும் குழுக்களையும் அச்சுறுத்துதல் போன்றவற்றை நுணுக்கமாக செய்தல், , அவர்களின் நன்மதிப்பை குலைத்தல், தனிமைப்படுத்துதல், குற்றவாளியாக்குதல் என்பன தொடர்ந்தன.
நட்புகள் குலைக்கப்பட்டன, வாழ்க்கைத் தொழில்கள் அழிக்கப்பட்டன. இவையனைத்தும் ஏன் தமக்கு நேர்ந்தது? என்பதை பாதிக்கப்பட்டவர்கள் அறியாதவண்ணம் ஸ்டாஸி இவற்றை நிறைவேற்றியது.
பெருமளவிலான கண்காணிப்பையும், ஒற்றாடலையும் தாண்டி கிழக்கு ஜெர்மனி மக்களிடையே நிலவிய எதிர்ப்பையும் நிறைவின்மையையும் ஸ்டாஸியால் ஒடுக்கிட இயலவில்லை. 1989 வாக்கில் மேற்கு ஜெர்மனிக்கு தப்பிச் செல்பவர்களின் எண்ணிக்கை ஒரே சீராக உயர்ந்து கொண்டே சென்றது.
ஜெர்மனி சோஷலிஸ கூட்டொருமை கட்சி திடுமென ஆட்சியிலிருந்து வீழ்ந்ததினால் ஸ்டாசியின் பணியாளர்கள் குழப்பத்திற்கும் உறுதியற்றதன்மைக்கும் ஆளானார்கள். பின் இலையுதிர்காலத்தில் தேச பாதுகாப்புத்துறையின் கோப்புக்களை அழிக்கத் தொடங்கினார்கள். கொதித்தெழுந்த குடிமக்கள் தேச பாதுகாப்புத்துறையின் அலுவலகங்களை கைப்பற்றியதோடு எஞ்சிய ஆவணங்களையும் பாதுகாத்தனர்.
ஜனவரி 13, 1990 இல் கிழக்கு ஜெர்மனி மக்களின் கோரிக்கையை ஏற்று தேச பாதுகாப்பு அமைச்சகம் எனப்படும் ஸ்டாஸி உளவுத்துறையை முழுவதுமாக இடைக்கால அரசினர் கலைத்தனர்.
முன்னாளைய ஜெர்மன் சனநாயக குடியரசின் பாதுகாப்பு சேவையின் ஆவணங்களுக்கான ஆணையம் (BStU - Bundesbeauftragten für die Stasi-Unterlagen) என்ற பெயரில் அமைப்பொன்றை நிறுவி ஸ்டாஸியின் எஞ்சிய ஆவணங்களை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளனர்.
ஸ்டாசியின் நாற்பது வருடகால ஒளியற்ற வரலாற்றுத்தடத்தை ஆய்வகம், ஆவணங்காணல், நூலகம், அருங்காட்சியகம், ஆய்வு சுற்றுலா, வெளியீடுகள் என உலகத்தோர் பார்வைக்கு முன் வைத்துள்ளது ஆணையம்.
தன் சொந்த மக்கள் மீது ஒற்றாடல் துறை வழியாக அரசு நனவாக்கிய கொடுங்கனவை அதிகாரத்தின் உலோக பல் இடுக்குகளில் ஒட்டியுள்ள மனித தசை குருதி பிசிறுகளை துணுக்குகளை அதன் கோர முகத்தை, இது போன்ற ஆணையத்தை அமைத்து பாதுகாப்பதின் வழியாக ஜெர்மனி தேசமானது ஏனைய மானுடத்திற்கு அழுத்தமானதொரு செய்தியை சொல்ல விழைகின்றது.
மானுடம் இது போன்றதொரு பெரும்பிழையை இனி ஒருபோதும் செய்யலாகாது என்பதே அந்த செய்தி.
----------------------------------------------------------------------
ஸ்டாசியின் நாற்பதாண்டு கால இருண்ட வரலாற்றிலிருந்து சிறு துணுக்கை கீறியெடுத்து “த லைவ்ஸ் ஆஃப் அதர்ஸ்” என்ற ஜெர்மனி மொழி படத்தை இயக்கியுள்ளார் ஃப்ளோரியன் ஹெங்கல் வான் டான்னர்ஸ்மார்க். இப்படத்தின் திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். 2006 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளிவந்துள்ளது.
1984ஆம் ஆண்டு கிழக்கு பெர்லினில் உள்ள ஸ்டாஸி விசாரணை மையத்தில், அய்யத்திற்குரிய ஒருவரை விசாரிக்கின்றார் கெர்ட்வீஸல் என்கிற ஸ்டாஸியின் கேப்டன். அவரின் அலுவல் சங்கேத குறியீடு HGW XX/7. தான் நடத்திய விசாரணையை ஒளிப்பதிவு செய்து ஸ்டாஸி அலுவலர் பதவிக்கான இளம் விழைவோருக்கு அதை திரையிட்டு வகுப்பெடுக்கின்றார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை தூங்கவிடாமல் விசாரிப்பது மனித உரிமை மீறலாகாதா ? என ஒரு மாணவர் கேட்கிறார். வகுப்பெடுக்கும் கெர்ட்வீஸல், தன் மேசையின் மீதுள்ள வருகை பதிவேட்டில் இருக்கும் அந்த மாணவரின் பெயருக்கு நேரே குறியிடுகின்றார்.
கேயார்க் திரெமா கிழக்கு ஜெர்மனியின் புகழ் பெற்ற நாடகாசிரியர். உழைக்கும் வர்க்கத்தின் வீரதீரங்களைப்பற்றி எழுதக்கூடியவர். கிழக்கு ஜெர்மனி அரசின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவர். அவரின் நாடக அரங்கேற்றத்தில் கெர்ட்வீஸல், ஸ்டாஸியின் பண்பாட்டுத்துறை தலைவரும், கெர்ட்வீஸலின் உயர் அலுவலருமான லெஃப்டினன்ட் கேனல் அன்டோன் க்ருபிட்ஜ், பண்பாட்டு அமைச்சர் புருனோ ஹெம்ப் ஆகியோர் பங்கேற்கின்றனர். நாடகத்தை நிகழ்த்தியது கேயார்க் திரெமாவின் காதலி கிறிஸ்தா மரியா சீலந்த்.
நாடகம் அரங்கேற்ற நிகழ்வின்போது கேயார்க் திரெமா அவரின் காதலிக்கு கொடுக்கும் முத்தம், அமைச்சருடனான அவரின் உரையாடல் என எழுத்தாளரின் அனைத்து அசைவுகளையும் கெர்ட்வீஸல், தனது தொலைநோக்கியால் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றார். நாடகாசிரியரின் நம்பகத்தன்மை குறித்து ஆள்வோருக்கு எவ்வித நெருடலுமில்லை என்றபோதிலும் கட்சிக்கு அவரின் கீழ்ப்படிதல் போதாது என நினைக்கின்றார் கெர்ட்வீஸல்.
ஆற்றும் பணியில் உயர்திறமும், களைப்பறியாமையும், ஒழுங்கும், பணி குறித்த பெருமிதமும், உடையவர். கட்சியை விமர்சிப்பவர்கள் அனைவருமே பொதுவுடைமையின் எதிரிகள், அந்த எதிரிகள் அனைவருமே அராஜகவாதிகள்தான் என அழுத்தமாக நம்புபவர், ஏற்றெடுத்த பணிக்காக எதையும் செய்யத் தயங்காதவர், தன் முகத்தை சுமக்காதவர், ஈர உணர்வு நீக்கம் செய்யப்பட்ட விசாரணை முறை, இறுக்கமான உடல் மொழி, பிறரால் ஊடுருவி அறிந்து கொள்ளவியலாத அவரின் கண்கள், தான் ஆற்றும் இந்த கொடும் பணியானது பொதுவுடைமை சமூகத்தை சமைத்தெடுக்கும் திருப்பணியின் ஓரம்சமே என ஆழமாக நம்பும் உளவியல். மொத்தத்தில், அமைப்பை அரசை இயக்கும் பேரியந்திரத்தினுள் பொருந்தி நிற்கும் ஒற்றை வார்ப்பு திருகாணி போன்றவர் கேனல் கெர்ட்வீஸல்.
நாடகாசிரியர் கேயார்க் திரெமாவின் காதலியும் நடிகையுமான கிறிஸ்தா மரியா சீலந்தை அடையத்துடிக்கும் பண்பாட்டு அமைச்சர் புருனோ ஹெம்ப், அதற்கானத்தடையாக கேயார்க் திரெமாவைக் காண்கிறார். அவரை ஒழித்தால்தான் கிறிஸ்தா மரியா சீலந்துவை அடைய முடியும் என்ற முடிவிற்கு வரும் அமைச்சர், கேயார்க் திரெமாவை முழுமையான கண்காணிப்பிற்கு உள்ளாக்கும்படி லெஃப்டினன்ட் கேனல் அன்டோன் க்ருபிட்ஜிடம் பரிந்துரைக்கின்றார்.
அமைச்சர் புருனோ ஹெம்ப், கட்சியின் மையக்குழுவிலும் உறுப்பினராக இருக்கின்றார். மையக்குழுவின் ஆணையின் கீழ்தான் ஸ்டாஸி இயங்குகின்றது. இந்த தருணத்தை பயன்படுத்தி தனது பதவியின் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ள விழையும் லெஃப்டினன்ட் கேனல் அன்டோன் க்ருபிட்ஜ், கேயார்க் திரெமானை முழுமையாக வேவுபார்க்கும்படி கெர்ட்வீஸலுக்கு உத்தரவிடுகின்றார். கேயார்க் திரெமானுக்கெதிரான இந்த வேவு செயல்முறைக்கு ஆபரேஷன் லாஸ்லோ (LASZLO) எனப் பெயரிடப்படுகின்றது.
அரசின் கீழ்நிலை சேவகனான கெர்ட்வீஸலுக்கு அரசை மிஞ்சிய அதீத அரச உணர்வு, தன் கீழான விருப்பத்தை அரசியல் நடவடிக்கையாக மாற்றும் அமைச்சர் புருனோ ஹெம்ப், பதவி வெறிக்காக அலையும் லெஃப்டினன்ட் கேனல் அன்டோன் க்ருபிட்ஜ் என்ற இந்த மூவரின் எதிர்மறையான விருப்பங்கள் குவிகின்ற எரிமையத்தில் சிக்கிக் கொள்கின்றார் நாடக ஆசிரியர் கேயார்க் திரெமா.
கடலின் ஆழத்திற்குள் இறங்க இறங்க இருள் அடர்த்தியாகிக் கொண்டே போவது போல ஒரு கெடுபிடியரசின் அதிகார அடித்தட்டானது கொடூரத்தின் புதைகுழியாக மாறி குமிழிடுவதை திரைப்படத்தின் இந்தக்காட்சி உறுதிப்படுத்துகின்றது.
நாடகாசிரியர் கேயார்க் திரெமா இல்லாத நேரத்தில் அவரது அடுக்ககத்தினுள் கள்ள திறப்பு மூலம் நுழைந்து வீடு முழுக்க படவி (கேமிரா) உள்ளிட்ட ஒற்றுக் கருவிகளை ஸ்டாஸியின் தொழில்நுட்பக்குழுவினர் கெர்ட்வீஸலின் தலைமையில் பதிக்கின்றனர். கண்காணிப்பு அறையை அடுக்ககத்தின் நிலவறையில் அமைக்கின்றனர்.
கேயார்க் திரெமாவின் அணுக்க நண்பர் நாடக இயக்குனர் அல்பர்ட் ஜெஸ்கா. அரசிற்கு எதிரான அவரது கருத்துக்களால் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதன் விளைவாக அவரால் இயங்க முடியவில்லை. விருந்தொன்றில் கலந்து கொள்ளும் பிற விருந்தினர்கள் அவரைக் கண்டு விலகுகின்றனர். அவருடன் பேசவும் மக்கள் அஞ்சுகின்றனர். கேயார்க் திரெமாவிற்கு பிறந்த நாள் அன்பளிப்பாக சோனாட்டா ஃபார் எ குட்மேன் என்ற இசைக்குறியீட்டுத் தாளை அன்பளிப்பாக வழங்குகிறார் அல்பர்ட் ஜெஸ்கா.
நாடகாசிரியர் கேயார்க் திரெமாவை தொடர்ந்து கண்காணித்ததில், அவரிடம் கட்சிக்கெதிராகவோ ஆட்சிக்கெதிராகவோ எந்தவொரு வெறுப்புணர்வையும் கெர்ட் வீஸலால் காணவியலவில்லை.
இதற்கிடையில் கேயார்க் திரெமாவின் காதலி கிறிஸ்தா மரியா சீலந்துவை தனது பாலியல் தேவைகளுக்கு இசைவானவராக மாற்றிவிட்டார் அமைச்சர் புருனோ ஹெம்ப். இந்த நடப்பை அறிந்த கெர்ட் வீஸல், ஆபரேஷன் லாஸ்லோவிற்கு இடையூறாக அமைச்சரின் காம நடவடிக்கைகள் அமையும் என்பதையுணர்கிறார். தனது பணியிடத்திலிருந்து நாடகாசிரியர் கேயார்க் திரெமாவின் வீட்டு அழைப்பு மணியை ஒலிக்கச் செய்கின்றார். மணியோசை கேட்டு வெளியே வரும் கேயார்க் திரெமா, சாலையின் எதிர்மருங்கில் வந்து நிற்கும் அமைச்சரின் ஊர்தியிலிருந்து தனது காதலி கிறிஸ்தா மரியா சீலந்து இறங்குவதை பார்க்கின்றார். கிறிஸ்தா மரியா சீலந்துவிடம், அடுத்ததாக தன்னை குறிப்பிட்ட இடத்தில் வந்து சந்திக்கும்படி சொல்லிவிட்டு அமைச்சர் கிளம்பிவிடுகின்றார்.
நாடக இயக்குனர் அல்பர்ட் ஜெஸ்கா தற்கொலை செய்து கொள்கிறார். இந்த செய்தியை அறிந்தவுடன் கேயார்க் திரெமா, சோனாட்டா ஃபார் எ குட்மேன் என்ற இசைக்குறியீட்டுத் தாளை எடுத்து தனது பியானோ கருவியில் துயரார்ந்து அதை இசைக்கின்றார். இந்த இசையை தனது கண்காணிப்பு கூடத்தில் உட்கார்ந்து கேட்கும் கெர்ட் வீஸல் என்ற பாறை மனிதனுக்குள் முதன்முதலாக ஓர் உடைவு ஏற்படுகின்றது. கண்களில் நீர் வழிய வழிய அதை அப்படியே கேட்டுக் கொண்டே இருக்கின்றார். அறைக்குள் வரும் கிறிஸ்தா மரியா சீலந்துவிடம், லெனினின் ஒரு மேற்கோளை நாடகாசிரியர் கேயார்க் திரெமா கூறுகிறார், “ பீத்தோவனின் அப்பாஸ்ஸனோட்டா இசையை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தால் நான் புரட்சியை ஒரு போதும் நிறைவுக்கு கொண்டு வந்திருக்க மாட்டேன்”.
அத்துடன் காதலியிடம், “ நான் இசைக்கும் இந்த இசையை கேட்பவர் யாராக இருப்பினும், அதாவது உண்மையிலேயே கேட்பவர் யாராக இருப்பினும் அவரால் தீய மனிதனாக இருக்க முடியுமா?” என நாடகாசிரியர் கேயார்க் திரெமா கேட்கிறார்.
மின்தூக்கியில் செல்லும் கெர்ட் வீஸலுடன் பந்து விளையாடிக் கொண்டே வரும் சிறுவனொருவன் இணைந்து கொள்கின்றான். இறுக்கமும் வெளிறலும் ஒரு சேர கலந்து நிற்கும் கெர்ட் வீஸலை கொஞ்ச நேரம் உற்றுப் பார்க்கின்றான். நீங்கள் ஸ்டாஸிக்காரா? என கேள்வித்தொடரை தொடங்குகின்றான்
“ ஸ்டாஸி என்றால் என்னவென்றாவது உனக்கு தெரியுமா ?
ஆம். அவர்கள் கெட்ட மனிதர்கள். மக்களை சிறையிலடைப்பார்கள் என என் தந்தை சொன்னார்
ஓஹ் அப்படியா!” என்று சொல்லி விட்டு வழமையான உளவாளி தன்னிலையில் இருந்து சிறுவனின் தந்தையின் பெயரைக் கேட்க விழைந்த கெர்ட் வீஸல், சற்று நிதானிக்கின்றார். என்ன? என கேட்கும் சிறுவனிடம் உன் பந்தின் பெயரென்ன? எனக் கேட்கின்றார். நல்ல வேடிக்கை, பந்துகளுக்கெல்லாம் பெயரில்லை என சிறுவன் சொல்கின்றான்.
கெர்ட் வீஸலுக்கு தனிப்பட்ட வாழ்க்கை குடும்பம் இலை கிளை என ஒன்றுமேயில்லை. அவர் கொள்ளும் கட்டண பாலுறவிற்குப்பிறகு, விலைமகளை கொஞ்ச நேரம் இருந்து விட்டு போகச் சொல்லுகின்றார். அவளோ, ‘அடுத்த வாடிக்கையாளர் காத்திருக்கிறார். நான் எப்போதும் அட்டவணைப்படி பணி புரிபவள் அடுத்த தடவை என்னை அழைக்கும்போது நீண்ட நேரத்திற்காக பதிவு செய்து கொள்” என்றவாறு விடைபெறுகிறாள்.” அலையென கொப்பளிக்கும் கரிய தனிமை கெர்ட் வீஸலை குலைத்து போடுகின்றது.
கிழக்கு ஜெர்மனியரசின் உண்மை முகத்தை வெளியுலகிற்கு திறந்து காட்ட நாடகாசிரியர் கேயார்க் திரெமா தீர்மானிக்கிறார். அதற்கான தட்டச்சு பொறியை மேற்கு ஜெர்மனிக்காரர்கள் அவருக்கு வழங்குகின்றனர்.
கிழக்கு ஜெர்மனியில் தற்கொலை விகிதம் கூடுதலாகவுள்ளது. அரசோ 1977க்குப்பிறகு இது குறித்த புள்ளி விபரங்களை திரட்டவேயில்லை. மேற்கு ஜெர்மனியின் வாராந்திர இதழொன்றில், இது குறித்து பெயரற்று எழுத அவர் திட்டமிடுன்றார்.
அந்த கட்டுரையை எழுதும் சமயத்தில் நாடகாசிரியர் கேயார்க் திரெமாவின் நண்பர்களுக்கு ஒரு கவலை பிறக்கின்றது. தாங்களனைவரும் ஒட்டுக் கேட்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள விழைகின்றனர். அதற்காக ஒரு சோதனையை மேற்கொள்கின்றனர். மேற்கு ஜெர்மனியைச் சார்ந்த பழக்கமான ஆளொன்று கேயார்க் திரெமாவின் வீட்டிற்கு வருகின்றார் அவரின் மகன் கிழக்கு ஜெர்மானிய குடிமகன். தனது மகனை ஊர்தியொன்றின் அடியில் ஒளித்து வைத்துக் கொண்டு மேற்கு ஜெர்மன் திரும்புவதாக திட்டமிடுகின்றனர். அவர்களின் ஊர்தியின் வகை, போகும் வழி, புறப்படும் நேரம் ஆகியவற்றை பற்றியும் தெரிவிக்கின்றனர்.
கெர்ட் வெய்ஸ்லர் இவையனைத்தையும் கேட்டுக் கொள்கின்றார். எல்லைக் காவல் சாவடிக்கு தனது பணியிடத்திலிருந்த தொலைபேசியை சுழற்றுகின்றார். ஆனால் தகவல் எதையும் சொல்லாமலேயே தொலைபேசி அழைப்பை துண்டித்து விடுகின்றார். ஊர்தியானது எந்த சிக்கலுமில்லாமல் எல்லையை தாண்டுகிறது. தனது வீடு பாதுகாப்பாகத்தான் இருக்கின்றது. இங்கு ஒட்டுக்கேட்கப்படவுமில்லை என்ற முடிவிற்கு கேயார்க் திரெமாவும் அவரது நண்பர்களும் வருகின்றனர்.
the lives of othersமேற்கு ஜெர்மனிக்கு கடத்திச் செல்லப்பட்டு பதிப்பிக்கப்படும்படியாக ஏதோ ஒன்றை கேயார்க் திரெமா எழுதிக் கொண்டிருக்கின்றார் என்பதை அறிய வருகின்றார் கெர்ட் வெய்ஸ்லர். இந்த தகவலை தனது மேலிடத்திற்கு தெரிவித்தால் அவருக்கு உரிய வெகுமதிகளும் பதவி உயர்வுகளும் கிடைக்கும் என்ற நிலையிலும் கெர்ட் வெய்ஸ்லர் வேறொரு முடிவிற்கு வருகின்றார். லாஸ்லோ வேவு செயல் முறையை தொடருர்வதற்கான அவரது உறுதி தளர்கின்றது. ஒற்றாடலை முடிவிற்கு கொண்டு வர அவர் விழைகின்றார். கேயார்க் திரெமா & அவரது காதலியின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்குள்ளும், அவர்களின் அந்தரங்க வாழ்க்கைக்குள்ளும் நுழைந்து ஒற்றாடும் தனது நடவடிக்கைகளினால் தன்னையறியாமலேயே கெர்ட் வீஸல் அவர்களிருவரின் உலகுக்குள் ஈர்க்கப்படுகின்றார். அதன் வழியாக தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்குகின்றார்.
நாடகாசிரியர் கேயார்க் திரெமாவின் கட்டுரையானது இறுதியில் மேற்கு ஜெர்மனியில் வெளியிடப்படுகின்றது. அது கிழக்கு ஜெர்மனிக்கு பெரும் தலைவலியாக மாறுகின்றது. அய்யத்தின் நிழல் நாடகாசிரியரின் மேல் விழுகின்றது.
கேயார்க் திரெமாதான் அந்த கட்டுரையை எழுதுகின்றார் என்பதற்கான அறிகுறிகளை அறிந்துணர்வதற்கு அபாரத் திறமை வாய்ந்த கெர்ட்வீஸல் தவறி விட்டார் என்பதை உயர் அலுவலரான அன்டோன் க்ருபிட்ஜ் நம்ப அணியமாக இல்லை.
கிறிஸ்தா மரியா சீலந்து போதை பழக்கமுள்ளவள். இதை பயன்படுத்தி அவளை பலவாறாக மிரட்டுகின்றார் அமைச்சர் ஹெம்ப். இறுதியில் பணிந்த அவள், தனது காதலனை பழித்துரைப்பதோடு அந்தக் கட்டுரைக்கும் அவர்தான் ஆசிரியர் என்பதாகவும் சொல்கின்றாள். கேயார்க் திரெமாவின் இருப்பிடத்தை ஸ்டாஸி சோதனையிடுகின்றது. ஒன்றும் சிக்கவில்லை.
கட்டுரைக்கு கேயார்க் திரெமாதான் காரணம் என்பதற்கான சாட்சிகளை ஒளிக்கும் கெர்ட்வீஸலின் கீழ்ப்படிதலுக்கு நேரடியான சோதனை வருகின்றது. அன்டோன் க்ருபிட்ஜின் நேரடி கண்காணிப்பில் கிறிஸ்தா மரியா சீலந்துவை கெர்ட் வீஸல் விசாரிக்கின்றார்.
கிறிஸ்தா மரியா சீலந்துவிடம் பின்வரும் கணைகளை எறிகின்றார் கெர்ட் வீஸல்:
--- உன் நடிப்பை நிரந்தரமாக கைவிடு அல்லது காதலனின் தட்டச்சு பொறி எங்கிருக்கிறது? என்ற தகவலை அரசிடம் சொல்
--- உன் காதலனை சிறையிலடைப்பதற்கான எல்லாவித சான்றுகளும் உள்ள நிலையில் அவனுக்காக அவள் செய்ய ஒன்றுமில்லை. எனவே அவனைப்பற்றி தகவல் சொல்வதின் வழியாக அவள் தன்னைத்தானே காத்துக் கொள்வதோடு ஸ்டாஸியுடனான அவளது உடனுழைப்பையும் பற்றி மறைத்துக் கொள்ளலாம்.
கேயார்ட் வீஸலின் கணைகள் இலக்கை விட்டு தப்பவில்லை. காதலனின் தட்டச்சு பொறி இருக்குமிடத்தை சொல்லி விடுகின்றாள் கிறிஸ்தா மரியா சீலந்து.
ஸ்டாஸியின் அணிகள், கேயார்க் திரெமாவின் இருப்பிடத்தை அடையும் முன்னரே அங்கு விரைந்து சென்று சேரும் கெர்ட் வீஸல், தட்டச்சு பொறியை கண்டு பிடித்து கடாசி விட்டு சாலையில் ஸ்டாஸி அணிகளுக்காக காத்திருக்கின்றார்..
கேயார்க் திரெமாவின் இருப்பிடத்திற்கு முதலில் கிறிஸ்தா மரியா சீலந்து வருகின்றாள். அதன் பின்னர் ஸ்டாஸி அணியினர் தட்டச்சு பொறி இருந்த இடத்தை குடையத் துவங்கும்போது அவள் வீட்டிலிருந்து சாலைக்கு வருகின்றாள்.. அங்கு வந்த ஊர்தியில் தானே போய் மோதி அரை உயிராக நடுத்தெருவில் கிடக்கின்றாள். அடிபட்டு கிடக்கும் அவளிடம் கெர்ட் வீஸல் சுருக்கமாக ஏதோ சொல்லுகிறார். அதற்குள் சாலைக்கு விரையும் நாடகாசிரியர் கேயார்க் திரெமா, அடிபட்டு கிடக்கும் தன் காதலியை அணைத்தவாறே மன்னிப்புக் கோருகின்றார். அவள்தான் தனது தட்டச்சு பொறியை அகற்றியிருக்க வேண்டும் என நினைக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவள் உயிர் துறக்கிறாள்.
இந்த நிகழ்வுகளை பார்த்து தலைகுனியும் அன்டோன் க்ரூபிட்ஜ், விசாரணையை கைவிடுகின்றார். “ தோழர் கேயார்க் திரெமா! நான் என்னுடைய பணியை முடித்து விட்டேன். எங்களுக்கு பிழையான தகவல் கிடைத்திருக்க வேண்டும். வருந்துகிறேன்… “ என கேயார்க் திரெமாவிடம் கூறி விட்டு கிளம்புகின்றார் அன்டோன் க்ரூபிட்ஜ்,
ஒரு தடயமும் இல்லாமல் ஆக்கி கேயார்க் திரெமாவை பாதுகாத்தது கெர்ட் வீஸலின் கைத்திறம்தான் என்பதை அறிந்த அன்டோன் க்ரூபிட்ஜ், கெர்ட் வீஸலிடம், “ நீ ஒன்றை புரிந்து கொள் வீஸல் ! உனது பணி வளர்ச்சி இத்தோடு முடிவடைந்தது. தடயங்களை மறைப்பதில் நீ படுசுட்டியாக இருந்திருக்கலாம். மீதமுள்ள இருபது வருட பணிக்காலம், அதாவது உன் ஓய்வுக்காலம் வரை ஸ்டாஸியின் நிலக்கிடங்கில் கடிதங்களை பிரித்து பார்க்கும் வேலையிலேயே முடிந்து விடுவாய்நீண்ட காலமல்லவா ?
இந்த நிகழ்வுகள் நடந்து நான்கு வருடங்கள், ஏழு மாதங்கள் கழித்து, இரண்டு ஜெர்மனி நாடுகளையும் பிரிக்கும் சுவர் வீழ்த்தப்படுகின்றது.
இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாடகரங்கில், காட்சியின் துயரம் தாங்கவியலாமல் அழுதபடியே வெளியே வரும் கேயார்க் திரெமாவை, “ மிகக் கூடுதலான நினைவுகளோ ? “…என்று பின்னாலிருந்து ஒரு குரல் கேட்கின்றது. திரும்பிப் பார்க்கிறார். முன்னாள் அமைச்சர் புருனோ ஹெம்ப் உட்கார்ந்திருக்கிறார். தானும் அதுபோல அழுத்தம் தாங்கவியலாமல்தான் வெளியே வந்ததாகக் கூறுகின்றார்.
தான் ஏன் அரசின் கண்காணிப்புக்குள்ளாக்கப்படவில்லை? என புருனோ ஹெம்பிடம் கேட்கிறார் கேயார்க் திரெமா.
 “எல்லோரும்தான் கண்காணிக்கப்பட்டார்கள்.”
“ஆனால் நான் ஏன் கண்காணிக்கப்படவில்லை ?”
“நீ… முழு கண்காணிப்பின் கீழ்தான் இருந்தாய் உன்னைப்பற்றி அனைத்துமே தெரியும்”
முழு கண்காணிப்பா ?
ஆம். ஒவ்வொரு அங்குலத்தையும்…..
 உன் வீட்டின் மின் இணைப்புகளுக்கு பின்னால் போய் பார்….. 
வீட்டிற்கு சென்று அதை உறுதிப்படுத்திக் கொண்ட கேயார்க் திரெமா, உடனடியாக பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ள ஸ்டாஸியின் ஆவணக் காப்பகத்திற்கு செல்கிறார். அங்குள்ள நெடும் ஆவணங்களில் லாஸ்லோ வேவு செயல்முறை பற்றி ஆய்கிறார்.
அந்த ஆவண அறிக்கைகளில் தனக்கு சேதாரம் ஏற்படுத்தக்கூடிய சான்றுகளை மறைக்கும் விதமாக இடைவெளிகள் இருக்கின்றன. அத்துடன் பயனளிக்கக் கூடிய தவறான தகவல்களும் இருப்பதையும் கேயார்க் திரெமா அறிகிறார். HGW XX/7 என்ற சங்கேதக் குறியீடு கொண்ட உளவாளிதான் இந்த அறிக்கைகளை பதிந்திருக்கின்றார் என்பதையும் அறிகிறார். அத்துடன் கிறிஸ்தா மரியா சீலந்து பற்றிய விசாரணை, அரச ஆட்காட்டியாக செயல்பட அவள் ஒத்துக் கொண்டு கையெழுத்திட்டது, அவள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம், “மார்த்தா” என்பது அவளுக்கான அலுவல் சங்கேதக் குறீயீடு, என அனைத்து விவரங்கள் அடங்கிய கோப்புக்களையும் பார்க்கிறார் கேயார்க் திரெமா.
 “மார்த்தா “ வின் விபத்து இறப்போடு லாஸ்லோ வேவுசெயல்முறை முடிக்கப்பட்டது.
குறிப்பு : HGW XX/7 என்ற உளவாளியின் பதவி உயர்வு உடனடியாக தடை செய்யப்படுகின்றது. அவர் வேறொரு துறைக்கு மாற்றப்படுவதோடு அவரின் முழு பொறுப்பின் கீழ் பணித்திட்டங்களை கொடுக்கக் கூடாது.
என்ற வரிகளோடு ஆவணங்கள் நிறைவு பெறுகின்றன.
மேற்கண்ட குறிப்பில், “ லாஸ்லோ வேவுசெயல்முறை முடிக்கப்பட்டது.” என்ற வரிக்கு அருகில் சிவப்பு நிற கைரேகை பதிந்திருந்தது. அந்த சிவப்பு மையானது கேயார்க் திரெமாவின் தட்டச்சு பொறி நாடாவிலுள்ளது என்பதை விளங்கிக் கொண்ட கேயார்க் திரமா, தட்டச்சு பொறியை காணாமலடித்தது HGW XX/7 என்ற உளவாளிதான் என்பதை அறிந்து கொள்கிறார். அவரின் உண்மையான பெயர் கெர்ட் வீஸல் என்பதையும் தெரிந்து கொள்கின்றார். வாழ்வாதாரத்திற்காக கெர்ட் வீஸல் அஞ்சல் ஊழியராக பணிபுரிகின்றார். ஆனால் அவரை தொலைவில் நின்று பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் சென்று விடுகின்றார் நாடகாசிரியர் கேயார்க் திரெமா.
இரண்டு வருடங்கள் கழித்து கெர்ட் வீஸல் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது புத்தக கடையொன்றில் கேயார்க் திரெமாவின் படம் தாங்கிய பெரும் விளம்பர தட்டியை பார்க்கிறார். கேயார்க் திரெமாவின் புதிய நாவலான சோனாட்டா ஃபார் எ குட்மேன் பற்றிய விளம்பரம்தான் அது. கடைக்குள் நுழைந்து புத்தகத்தை புரட்டுகின்றார். அதில் “ நன்றியறிதலுக்காக HGW XX/7 விற்கு நேர்ந்தளிக்கப்பட்டது” என்றிருக்கிறது.
புத்தகத்திற்கான பணத்தை கேயார்ட் வீஸல், காசாளரிடம் செலுத்தும்போது “ பரிசுப்பொதியாக பொதியட்டுமா ? “ என அவர் கேட்க, “வேண்டாம், அது எனக்கானது” என்கிற கேயார்ட் வீஸலுடன் காட்சி உறைகின்றது.
நேரடி களப்போராட்டம் மக்கள் எழுச்சி உள்ளிட்ட பல வழிகளிலும் கிழக்கு ஜெர்மனியின் கெடுபிடி ஆட்சி போன்ற உலகின் பல முற்றதிகாரங்கள் எதிர்த்து வீழ்த்தப்பட்டிருக்கலாம். அதுபற்றி பல படங்களும் வந்துள்ளன. ஆனால் ஒரு கலைஞனுக்குள் உள்ளுறையாக இருக்கும் மானுடத்தின் மீதான தீராக் காதலும் உண்மையும் நேர்மையும் மென்மனமும் அழகியலும் எப்படி அதிகாரத்தின் சல்லி வேரை அலட்டலின்றி கிள்ளுகின்றது என்பதுதான் “த லைவ்ஸ் ஆஃப் அதர்ஸ்”திரைப்படத்தின் மைய நீரோட்டம். இது போன்ற திரைப்படங்கள் குறைவாகவே காணக் கிடைகின்றது.
ஒற்றைக்கு ஒற்றை சமரில், ஒரு பக்கம் அனைத்து வலிமையும் அதிகார மூர்க்கமும் கொண்ட அரசு. எதிர் பக்கமோ கைவசம் சொற்களைத் தவிர வேறெதுவும் இல்லாத கேயார்க் திரெமா என்ற நாடக எழுத்தாளன்.
கலைஞனின் ஒற்றைச் சொல்லுக்குள் உறைந்து கிடக்கும் தார்மீக வலிமையானது கெர்ட் வீஸல் என்ற அரச உளவாளியை வென்றெடுக்கின்றது.இந்த வெற்றியின் வழியாக முற்றதிகார பெருஞ்சுவற்றின் ஒற்றைச் செங்கல், அடித்தளக்கல் உருவப்படுகின்றது
ஆதார் அட்டை, கணினி கண்காணிப்பு என குடிமக்களின் அந்தரங்கங்களுக்குள் வன்நுழைவு செய்யும் இந்திய அரசு, இனி படுக்கையறையிலும் குளியலறையிலும் கழிப்பறையிலும் வேவு கருவிகளை பதிக்கும் உத்தரவுகளை பிறப்பிப்பது ஒன்றுதான் மிச்சம்.
ஃபாஸிஸ அரசின் இது போன்ற கெடுபிடி நடவடிக்கைகளுக்கு தாங்குதளமாக விளங்குபவர்கள் மேலாதிக்க வகுப்பினர்களும், அதிகாரத்தை சப்பி சுவைத்து நாவு பழுத்துப்போன அலுவலர்களும்தான்.
ஒட்டு மொத்த மக்கள் தொகையின் மிகச் சிறுபான்மையினரான இவர்கள் தங்கள் கையிலுள்ள அதிகார பெருந்தொண்டைகள் வழியாக அடிப்படை மனித உரிமை மீறலை நீதப்படுத்தி விடுகின்றனர். தேசப்பாதுகாப்பு, வளர்ச்சி என்ற மாயவலையை விரிப்பதன் வழியாக குடிமை உரிமைகளை எலிகளை வேட்டையாடுவது போல வேட்டையாடி சிதைத்து அழிக்கின்றனர்.
நமது தேசத்தின் இன்னாள் கெடுபிடி ராஜா நரேந்திர தாமோதர தாஸ் மோதி தலைமையிலான ஃபாஸிஸ அரசோ பல அடுக்கு சூத்திரங்களை கட்டமைக்கின்றது.
பேரினவாத இருப்புக்காக சிறுபான்மை முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அழிய வேண்டும்.
ஆதிக்க வகுப்பு வாழ தலித்துகள் அழிய வேண்டும்
நகரமக்களுக்காக பழங்குடியினர், கடலோடிகள் அழிய வேண்டும்.
பெரு நிறுவனங்களுக்காக கிராமத்து விவசாயிகள், சிறு வணிகர்கள் அழிய வேண்டும்,
அதானி அம்பானிக்காக சிறு குறுந்தொழில்கள் அழிய வேண்டும்..
அணு உலைகளுக்காகவும் நச்சு ஆலைகளுக்காகவும் நகரத்து மக்கள் அழிய வேண்டும்.
உலக மயமாக்கலுக்காகவும், நவகாலனிமயமாக்கலுக்காகவும் ஒட்டு மொத்த இந்தியாவை எரித்து உருக்கி அழித்து புத்தம் புதிய, அடிமைக்கும் அடிமையான நாடாக சமைத்தெடுக்க வேண்டும்.
சமூகத்தின் ஒர் அடுக்கை கைவக்கும்போது பிற பிரிவினர் எதிர்ப்பு காட்டுவதில்லை என்பது மட்டுமில்லை, ஒடுக்கப்படும் பிரிவினரை தங்களது எதிரிகளாக அவர்க்ளைக் கருத வைப்பதுதான் தற்கால ஃபாஸிஸத்தின் குயுக்தி.
இந்த குயுக்தியின் மூலம் ஒவ்வொரு பிரிவினரையும் தனித்தனியாக பிரித்தழிப்பதின் வழியாக ஒட்டுமொத்த தேசத்தையும் விற்பதும் அடிமைப்படுத்துவதும் மிக எளிது.
செல்லாக்காசு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வழியாக மோதி அடித்த அடியின் விண்விணுப்பை பனியா சமூகம் தனது புட்டத்திலும் உச்சந்தலையிலுமாக ஒருசேர உணர்ந்த தருணத்தில் தலைக்கு மேல் சென்ற வெள்ளமானது சேட்டுக்களின் நெற்றிப்பொட்டை துப்பாக்கிக் குண்டைப்போல வருடியது. நாட்டுப்பிரிவினை தொடங்கி சமகாலம் வரை ஃபாஸிஸ்டுகளுக்கு நிதி ஊற்று இந்த பனியாக்கள்தான்.
முன்னெப்போதும் சந்தித்திராத முச்சந்தி அறைகூவலுக்குள் இன்று நம் தாயகம் இழுத்து விடப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் அனைத்து பிரிவு மக்களும் ஃபாஸிஸத்தை எதிர்க்கின்றனர்
ஃபாஸிஸ தேசத்தின் முதல் விதையே அய்யம்தான். தொடக்கத்தில் குடிமக்களை பல பிரிவினராக்கி ஒருவர் பிறருக்கிடையே அய்யத்தை விதைத்து மனத்தடை சுவர்களை கட்டியெழுப்பி எதிரியாக்குதல். நாட்டு நலன் என்ற பெயரில் எதிரியாக்கப்பட்ட சொந்த குடிமக்களை உளவறிதல். அதன் மூலம் இந்த ஒற்றாடலை பொதுவான நற்கடமையாகவும் நாட்டுப்பற்றாகவும் மாற்றுதல்.
முறைகேடுகள் நடந்திருக்கின்றன. பேரங்களையும் ஒப்பந்தங்களையும் நீதி, மக்கள் மன்றங்களில் முன்வைக்கும்படி அரசிடம் கோரினால், நீங்களெல்லாம் தேச எதிரிகள் என்கிறது நடுவணரசு. அரசியல் எதிரிகளையும் போட்டியாளர்களையும் வருமானவரித்துறை சோதனை வழியாக மிரட்டுகிரது. அவதூறுகளை பரப்புகின்றது
கல்வியாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்களை கொல்கின்றனர் அல்லது காணாமலாக்குகின்றனர்
குடிமக்கள் ஒருவர் மற்றவரை அய்யத்திற்குரியவராக பார்ப்பதும் ஒட்டு மொத்த குடிமக்களையும் வாழத் தகுதியற்றவர்களாக மாற்றுவதுமாக ஃபாஸிஸமயமாக்கம் முற்றி வருகின்றது..
இந்திய ஃபாஸிஸ்டுகளுக்கு அரசியல் நெருக்கடிகள், தேர்தல் அச்சம் வரும்போதெல்லாம் சொல்லி வைத்தாற் போல கஷ்மீரிலோ அல்லது பன்னாட்டு எல்லைக்கோட்டுக்கருகிலோ தில்லியிலோ அல்லது வடநாட்டின் தலையாய நகரங்களிலோ ராணுவ தாக்குதல் அல்லது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும். ஃபாஸிஸ்டுகளின் இந்த தந்திர உத்தி நீண்ட நாட்களாக பெரிதாக கண்டுகொள்ளப்படாமலேயே இருந்தது.
ஆனால் அண்மையில் நடந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் நிறைய கேள்விகள் எழுந்தன. தாக்குதலின் உண்மைத்தன்மை குறித்து எல்லாப்பக்கங்களிலிருந்தும் அய்யங்கள் கிளம்பின.
இந்திய உள்நாட்டு உளவுத்துறையின் ( ஐபி) மேனாள் தலைவரும் இன்னாள் தேசிய பாதுகாப்பு செயலருமான அஜீத் தூவலை பிடித்து விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளிவரும் என மஹாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியின் தலைவர் ராஜ் டாக்ரே கூறினார். காரணம், பலியான நாற்பது சிப்பாய்களும் ‘அரசியல் பலிகடாக்கள்’ எனவும் நரேந்திர மோதியின் ஆட்சியில் இது அடிக்கடி நடக்கிறது எனவும் தெரிவித்தார்.
உலக பயில்வான்களான அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கூட முழு வலிமை படைத்த உளவுத்துறையானது நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பட்டாக வேண்டும்.. ஆனால் நமது நாட்டிலோ இவர்கள், தலைமையமைச்சரை தவிர யாருக்கும் மறுமொழி சொல்லவேண்டுமென்ற எந்த கட்டாயமுமில்லை. இவர்களின் நிதி வரவு செலவுகளும் இந்திய முதன்மை செலவுக்கட்டுப்பாட்டாளர் & கணக்காய்வரின் தணிக்கைக்கு உட்படாது. ஆனால் பாதுகாப்பு துறை செலவுகளுக்கு இது போன்ற சலுகைகளெல்லாம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்கெல்லாம் அகப்பட மாட்டார்கள் இந்த இருள் மூலை அரச பெருச்சாளிகள்.
இங்கு நம் தமிழகத்திலும் கூட, குடிமக்களிலும் சிறைவாசிகளிலும் சிறையிலிருந்து விடுதலை பெற்றோரிலிருந்தும் கண்காணிகளை கூலிக்கு மாரடிக்கும் ஒற்றர்களை அரசின் உளவுத்துறையானது ஏராளமான பணஞ்செலவழித்து உருவாக்குவது பற்றிய செய்திகள் பலமுறை வெளியாகியுள்ளது. உளவுத்துறையினர், தாங்கள் நுகரும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட வசதிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக போலி மோதல்களையும் செயற்கையான வன்செயல்களையும் அவ்வப்போது அரங்கேற்றுகின்றனர். இல்லாத நெருக்கடியை உருவாக்கி நாட்டு மக்களிடையே அச்சத்தை பரப்புகின்றனர்.
ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியாக வளரும் நமது உளவுத்துறையினரை நாடாளுமன்ற கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். மேலை நாடுகளில் இருப்பதுபோல குறிப்பிட்ட காலங்கடந்த பிறகு உளவுத்துறையின் கமுக்க ஆவணங்களை குடிமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
‘த லைவ்ஸ் ஆஃப் அதர்ஸ்’ போன்ற திரைப்படங்கள் எடுப்பதின் வழியாக சனநாயக குடியரசிற்கு உலை வைக்கின்ற இருளுலுக இயக்கு சக்திகளான உளவுத்துறையை அம்பலப்படுத்தும் திரை கலை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் ஃபாஸிஸம் முதலில் வெறுப்பது கட்டற்ற சிந்தனையையும் பன்மய அழகியலையும்தான். கலைதான் அவர்களின் முதல் எதிரி என்ற வகையில் கலைஞன்தான் ஃபாஸிஸத்தை முதலில் எதிர்ப்பவனாக இருப்பான். என்னதான் உச்சகட்ட அழிவு நர்த்தனமாடினாலும் வெறுப்பும் முற்றதிகாரமும் தற்காலிகமானதே. கலையும் கலைஞனுமே காலாதீதமானவை.

No comments:

Post a Comment