Saturday 19 October 2019

யாசகம் -- நூல் பார்வை



யாசகம் – நூல் பார்வை
சென்னைக்கு திரும்பும் ரயில் பயணமொன்றில் வாயிலுக்கருகில் உள்ள இருக்கையில் படுத்திருந்தேன்.  இருள் கலைவதற்கு முன்னர் மூடிய வாயிலுக்கருகில் குத்துக்காலிட்டு ஒருவர் வந்து அமர்ந்தார். பழுப்பேறிய சடையை வட்டத்தட்டு போல முடிந்திருந்தார். தாடியும் ராமன் சீதை படம் பொறித்த  மஞ்சள் நிற தோள்பையுமாக. உரமேறிய உடல். கண்ணாடி சாளரங்களுக்கப்பால் அவரது பார்வை எங்கோ பாய்ந்து கொண்டிருந்தது.
------------------------------
நண்பரும் வழக்கறிஞரும் புனைவெழுத்தாளருமான எம்.எம்.தீனின் யாசகம் நாவலின் இறுதி மூன்று பக்கங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. நெட்டோட்டமாக ஒழுகிச்செல்லும் கதையானது நமக்குள்ளும் அதன் இருள் வெளிச்சங்களை பற்ற வைக்கின்றது.
நாம் ஒருபோதும் விரும்பாத , நமக்கு புரியவராத ஓர் உலகத்தின் மையத்திற்குள் கதை நம்மை எவ்வித தடங்கல்களுமின்றி அழைத்து செல்கின்றது. யாசக தோழமைகளுள் ஒருவன் ஆன்மீகத்தின் படிகளில் ஏறி தன்னை மீட்டிக் கொள்கின்றான். மற்றொருவன் இரவலர் தொழிலிலேயே தன்னை நிலை நிறுத்திக் கொள்கின்றான். மூன்றாமவன் அதிலிருந்து தன்னை விடுவித்து சராசரியான உழைப்பின் வாழ்க்கைக்குள் தன்னை நுழைத்துக் கொள்ள முயலுகின்றான். அவன் வென்று வெளியேறினானா? அல்லது இரப்பிலேயே அழுந்தினானா? என்பதை வாசகர்களே தீர்மானிக்க விட்டுவிடுகின்றார் ஆசிரியர்.


தன் மனைவி தனது தந்தையுடன் உறவு கொண்டதின் தாளவியலாத அவமானத்தின் உந்துவிசையால் இரப்பின் பக்கம் தள்ளப்படும் கதாபாத்திரத்திற்கு இரக்கும் வாழ்க்கை வரமா? சாபமா?


படுகுழிக்குள் பதுங்கியிருக்கும் பாதாளம் போல விளிம்பிற்கும் வெளியே ஓர் வாழ்க்கை உண்டென்றால் அது இரப்பின் வாழ்க்கைதான் என்பது பொது புரிதல். இரப்பின் இழிவு அவமானங்களிலிருந்து வெளியேறத்துடிக்கும் ஒருவன் உலகின் பெரும்பான்மை சராசரி வாழ்க்கையின் சலிப்பு, வண்ண நீக்கம் செய்யப்பட்ட தட்டையான அதன் அன்றாட ஒழுக்கு ஏற்படுத்தும் வன் முறையால் திகைத்து நிற்கின்றான். இந்த திகைப்பு நமக்குள்ளும் புகைகின்றது. 


எது விடுதலை? எது சிறை? என்ற ஓயாத கேள்வியை எழுப்பும் நாவல் முடிவின்மைக்குள் தன்னை இருப்புக் கொள்ள செய்திருக்கின்றது. இரப்பின், யாசகத்தின் பொது வரைவிலக்கணத்தை மறுவரையறை செய்ய நம்மை கோருகிறது.  இதுதான் நாவலின் உச்சம்.


 நாவலின் கடைசி மூன்று பக்கங்களையும் வாசித்தபின் கதை மனதிற்குள் விழுந்த அதிர்வின் உச்சத்தில் ரயில் பெட்டியிலிருந்த அந்த சாதுவை அணுகினேன்.  அதிகாலை நான்கு மணிக்கு வந்த ஜான்ஸி ரயில் நிலையத்தில்தான் அவர் வண்டியேறியது. இறங்கியது நாக்பூரில் மதியம் இரண்டு மணிக்கு. கிட்டதட்ட பத்து மணி நேரம்  ஒரே இடத்தில் அசையாமல் குத்துக்காலிட்ட மனிதருக்கு ஒரே  இருப்புதான்.


ஜான்ஸி சொந்த ஊராம். போகுமிடம் சத்தீஸ்கடில் உள்ள துர்க். எதுவும் கோயில் வழிபாடா? எனக்கேட்டதற்கு அப்படியொன்றுமில்லையென்றார்.


 குடும்பம் உண்டா?


உண்டு. குழந்தைகளும் உண்டு. ஆனால் போவதில்லை.


ஏன் துறவை தேர்ந்தெடுத்தீர்கள்?

ஹோத்து  லகன் ஹை


லகனுக்கான பொருளை தேடிப்பார்த்ததில் மனவிருப்பம் என்றிருந்தது.

பத்து ரூபாய் தாளை நீட்டினேன். ஒரு கணம் தயங்கியவர் வாங்கிக் கொண்டார்.  வெள்ளரி துண்டங்களை  நீட்டியதற்கு மறுத்தார்.

ஏன்?

நான் இடையில் சாப்பிடுவதில்லை.

காலையில் என்ன சாப்பிட்டீர்கள்?

சமோசாவும் தேனீரும்

எத்தனை மணிக்கு?

அதிகாலையில்

இனி?

மாலையில் சில ரொட்டிகளும் பருப்பும் உணவகங்களில் வாங்கிக் கொள்வேன்.


உடல் நிலை சரியில்லை என்றால் யார் பார்ப்பார்கள்?


யார் பார்க்கணும்? கடவுள் பார்ப்பார்.

அதற்கு மேல் பேச என்னிடம் ஒன்றுமில்லை. சொற்கள் தீர்ந்து விட்டிருந்தன. வெறுமையாகிய மனத்திற்குள் பாரம் நிறைந்தது.


இது போன்ற சாதுக்களும் துறவியர்களும் இரவலர்களும் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள்தான். மனம் நிலையழியும் நாட்களில் லௌகீகம் ஏற்படுத்தும் உள் அழிமான வேளைகளில்  இந்த விளிம்புக்கற்பாட்ட மனிதர்களுக்குள்ளிருந்து துலங்கும் புது பொருளை  நாம் அறியாத விதத்தில் நம் மனம் பின் தொடரும் .


எல்லாம் கூடிய ஒரு நல்வேளையில் பிறந்த மனிதர்கள்தானே இவர்கள். வாழ்வின் எந்த வளைவு திருப்பத்தில் இவர்களின் தடம் தனக்கான வழியை திருப்பிக் கொண்டது? என அகம் எழுப்பும் கேள்விகள் விடை காணாவியலாத துயரத்துடன் மடங்கி மடங்கி மீண்டும் மனத்தின் கீழ் தளத்திலேயே புதைந்து போகின்றன.

----------------------

யாசகம் நாவலுக்குள் தர்கா இடம் பெறுமளவிற்கு சூஃபி உரையாடல்கள் தத்துவ விசாரங்கள் கையாளப்படவில்லை.  சூஃபி தத்துவங்கள் வாழ்வு குறித்து நாம் கொள்ளும் பொருளை உலைத்து போட்டு  வாழ்வின் நிலையாமை குறித்தும் மகிழ்ச்சி நிறைவு பற்றி புதிய அறிதல்களையும் நமக்கு கற்பிப்பவை.


சித்தர் பாடல்கள் சிறப்பாக கதையோடு இழையோடுகின்றன. அத்துடன் சூஃபி வரிகளும் இணைந்திருந்தால் மானிடத்தின் புரிய முடியாத ஒரு பக்கத்திற்கான பொழிப்புரையாக  மிகச்சிறந்த இரு தத்துவ பண்பாட்டு ஓட்டங்களின் வெளிச்சத்தில் பெருஞ்சித்திரம் எழுந்திருக்கும்.


ஜெயமோகனின் ஏழாம் உலகம் முன் வைக்கும் இரவலரின் உலகத்திலிருந்து கொடூரம் பிறப்பெடுக்கின்றது.  ஆனால் எம்.எம்.தீனின் யாசகம் நாவலோ மானுடத்தின் மீதான தீராத அன்பின் இடத்திலிருந்து நம்முடன் பேசுகின்றது.







No comments:

Post a Comment