எல்லோருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்/முகமன்கள்!
இந்த பொன்னரிய வாய்ப்பை நல்கிய
எல்லாம் வல்ல இறைவனைத் துதிப்பதோடு கல்லூரி நிர்வாகத்தினருக்கும் வரலாற்றுத்துறையின்
பேராசிரியத் தோழமைகளுக்கும் தோழரும் பேராசிரியருமான முஹம்மது ஹஸன் அவர்களுக்கும் எனது
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியினால் பன்னிரண்டாம்
வகுப்பைத் தாண்டவியலாத நான் இதோடு மூன்றாவது கல்லூரிக்கு வந்து உரையாற்றக் கிடைத்திருப்பதை
பெரும் நிறைவாகக் கருதுகிறேன்.
நான் ஒரு பேச்சாளனில்லை. எழுதுபவன் மட்டுமே.உங்களுடன் கலந்துரையாடவே
இங்கு வந்துள்ளேன்.என் பிள்ளைகளின் வயதையொத்த உங்கள் நடுவே இருப்பது குதூகலமிக்கது.
நான் நெடு நேரமெல்லாம் பேசப்போவதில்லை. இனி உரையின் கருப்பொருளுக்குள்
நுழையலாம்.
அய்ம்புலன்களின் வழியாக நம் மூளைக்குள் கடத்தப்படும் தகவல்கள்
எல்லாம் அதற்குள் தேக்கப்படுவதில்லை.நமக்குத் தேவையானவை மட்டுமே தகவல்களாக தங்குகின்றன.
அச்சேகரத்திலிருப்பவை நமது தேவையைப் பொறுத்து அறிவாக மாறுகின்றன.
அந்த அறிவும் அதன் பயன்பாட்டையொட்டியும் அதன்
மீதான நமது கண்ணோட்டத்தினடிப்படையிலும் ‘அந்நேரப்
பயனறிவு’, ‘ஞானம்’ என இரு வகையாக மாறுதலடைகின்றன.
‘ஞானம்’ என்றால் என்ன?
எந்த அறிவு , ஒரு தனியாளையும் மக்களையும் நெறியாள்கிறதோ அதுதான் ஞானம். சுருக்கமாகச் சொல்வதனால்
மூளையிலிருந்து இதயத்திற்கு ஆன்மாவிற்கு தொடர்புபடுத்தப்படும் அறிவே ஞானம்.
நமது வாசிப்பானது மேற்கண்ட இயங்கு முறையை இன்னும் தரமாக்க
உதவும் கருவிகளில் ஒன்றாகும்.
வாசிப்பு > அறிவு >ஞானம் என்ற செயல்பாட்டின் தேவையை
எதிர்மறைப்பார்வையிலிருந்து பார்க்கும்போது அதன் இன்றியமையாமை இன்னும் கூடுதலாகப் புலப்படும்.
வரலாற்றை எட்டிப் பார்த்தோமானால் ஒரு சமூகத்தை வேரறுக்கவோ
அல்லது அடிமைப்படுத்தவோ நினைக்கும் வைரிகள்
செய்யும் பல தலையாய உத்திகளில் ஒன்று : அச்சமூகத்திற்கு அறிவை மறுப்பதாகும்.
பெரும் நாகரிகத்தையும் ஞான மரபையும் கொண்ட இந்தியாவில்
‘மனிதர்களில் இன்னார்தான் கல்வி,கேள்விகளுக்குத் தகுதியானவர்கள் என்ற பாகுபாடு கடவுள்
சம்மதம் பெற்ற ஒன்றாக இன்றளவும் நீடிக்கிறது. முன்னைய காலங்களைப்போல சண்டாளர்களின்
நீசர்களின் காதுகளில் ஈயம் ஊற்றப்படுவதில்லைதான்.ஆனால் பள்ளிக்கூடங்களில் அமரும் பலகை
சாதிவாரியாக பகுக்கப்படுகிறது. தனி அருந்தும் குவளைகள் இன்னும் உயிர் வாழுகின்றன. ஒடுக்கப்பட்ட
வகுப்பைச் சேர்ந்த சமையலர் ஆக்கும் சத்துணவை ஆதிக்க சாதியினர் அருந்துவதில்லை. அய்.அய்.டி,
அய்.அய்.எம், நடுவண் பல்கலைக்கழகங்கள் முதலான உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில்
பலர் தற்கொலை செய்து வருகின்றனர். புள்ளி விவரங்கள் அளிக்கும் தரவுகளினடிப்படையில்
பேசுவோம். தம் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்கள் என்ன சாதியினர்? அதற்கு காரணமான ஆசிரியப்
பேராசிரியர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள்?
2022 ஆம் ஆண்டு வெளியான ‘ஜன கண மன’ திரைப்படம் இதைப்பற்றி
பேசியது உங்களுக்கு நினைவிருக்கும்.
இத்தகைய தடைகளை கேரள் முஸ்லிம்கள் தகர்த்திருந்தாலும் சென்னை
அய்.அய்.டியில் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீப், சமூகவியல் துறையில்
முதுகலை முதலாம் ஆண்டு படித்துவந்தார். ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில்,
2019 ஆம் ஆண்டு அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். படிப்பில் மிகுந்த ஆர்வங்கொண்ட
ஃபாத்திமா, ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் முதல் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இக்கொலைக்கு
காரணமான நான்கு பேராசிரியர்கள் யார் என்பதை உலகே அறியும்.
நம் அண்டை நாடான இலங்கையில் ஒரு தலைமுறைக்கு நின்று எரிந்த
உள்நாட்டுப்போரில் சிங்களப்பேரினவாதிகளால் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் எரியூட்டப்பட்டது
நினைவிருக்கும்.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் அப்பாசிய கிலாஃபத் காலத்தில்
பைத்துல் ஹிக்மா எனப்படும் ஞானத்தின் குடில் என்ற பொருள்படும் பெயருடைய பக்தாதின் நூலகத்தில் மதிப்புயர் நூற்கள் சேகரிக்கப்பட்டிருந்தன.
இந்திய,பாரசீக,கிரேக்க நூல்களை அறபியில் மொழியாக்குவதும்
படியெடுப்பதும் உயர் ஊதியங்கொண்ட தொழிலாக இருந்தன. வீடுகளில் நூலகம் இருப்பது சமூக
அந்தஸ்துகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. நூல் கட்டுவது பரவலான தொழிலாக இருந்தது.நூற்கள்
தோல் அட்டைகளாலும், எழுத்தணி கோண்டும் தங்க வெள்ளி வேலைப்பாடுகள் கொண்டும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
பைத்துல் ஹிக்மா
மங்கோலிய தார்த்தாரியர்களால் சூறையாடப்பட்டது.பக்தாதின் நூல் சேகரங்கள்,பண்டைய சுவடிகள்
குவியலாக்கப்பட்டு கொளுத்தப்பட்டதுடன் டைகிரிஸ் நதியிலும் எறியப்பட்டன. எழுத்துக்களின்
மசியால் பல நாட்களுக்கு டைகிரிஸ் நதி கறுப்பாகி ஓடியது. அறிவின் படுகொலை.
பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இறங்கி வந்து பத்து நாட்களுக்கு
முன்னர் நம் நாட்டில் நடந்தவற்றைக் கவனப்படுத்த விரும்புகிறேன்.
தேசிய குடிமக்கள் பதிவேடு/ குடியுரிமை திருத்த சட்ட வரைவுக்கெதிராக
நடந்த போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட மாணவர்
தலைவர்களின் பிணை மனு விசாரணைக்கு வருகிறது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் ஒன்றிய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞரான எஸ்.வி.ராஜு,
“அறிவாளிகள் என்ற பெயரால் அறியப்படுவர்கள்தான் நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் ஊறு
விளைவிப்பவர்கள்” என்றார்.
இன்னொரு வட நாடாக தமிழ் நாடு மாறாமலிருந்ததின் காரணம் சமூக
நீதிக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர்களின் அறிவும் சாதுரியமும்தான்.ஆதிக்கத்தினடியில்
ஒட்டி வந்த வடமொழி படையெடுப்பை தமிழிலுள்ள செவ்வியல் இலக்கியங்களின் துணை கொண்டு அவர்கள்
முறியடித்தனர்.
வாசிப்பினால் எனக்கு என்ன பயன்? ஆதாயம்? என்ற கேள்விக்கு
என்னிலிருந்து விடை சொல்வது சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. தன்னம்பிக்கைக் குறைவுடன்
உடல் வலு பற்றிய நம்பிக்கையின்மையினாலும் நான் கல்விகூட ஆண்டு விழாக்களில் நடக்கும்
விளையாட்டுப் போட்டிகளில் சேர்ந்ததில்லை. எனது பொழுபோக்கு என்பது தெருவில் நண்பர்களுடன்
விளையாடுவதும் ஊர்ப் பள்ளிவாயில்களிலுள்ள வாசகசாலைகளிலும் அரசு கிளை நூலகங்களிலும்
நேரம் செலவிடுவதுதான்.
அவைதான் என் சலிப்பை தனிமையை போக்கின. வேறுபட்ட பல கணங்களுக்கு
அழைத்துச் சென்றன. எனக்கான வெளியை உருவாக்கியளித்தன.அங்கிருந்து புறப்பட்டுதான் எழுத்துக்கு
வந்து சேர்ந்தேன்.
வாசிப்பென்பது நமது குறுகிய வட்டத்திலிருந்து நம்மை விடுவிப்பது.
புதியதாக அறிதலை கொண்டு வருவது.நாம் ஏற்கனவே நமக்குள் நிறைத்து வைத்திருப்பதை பரிசீலிக்க
வைப்பது.
நமது வாசிப்பின் வழியாக நமக்குள் வந்தடையும் கல்வியென்பது
நம்மையும் ஏனைய மனிதர்களைவும் விடுவிக்க வேண்டும். தகர்ந்ததை மீட்கவும் புதிய நம்பிக்கையை
கட்டியெழுப்பவும் வாசிப்பு உதவ வேண்டும்.
“கர்த்தருக்கு
அஞ்சுதலே ஞானத்தின் தொடக்கம்’ என்ற விவிலிய வசனம் அறிதலை அதற்குரிய இடத்தில் கொண்டு
இணைக்கிறது. எல்லா கல்விகளும் அறிதல்களும் புறப்படும் மையப்புள்ளியில் நம் அறிதலை கல்வியை
கொண்டு இணைக்கும் போது அது ஞானமாக இரசவாதமடைகிறது.
இவ் வாழ்வும் வளங்களும் நாம் கொண்டு வந்ததில்லை.எல்லாம்
நம்மிடம் அடைக்கலப் பொருட்களாக ஒப்படைக்கப்பட்டவை.அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட வாசிப்பு,கல்வி–
இவற்றிலிருந்து திரண்ட ஞானமும் அடங்கும். வாழ்வின்
எல்லாவற்றிற்கும் கணக்குக் காட்டப்பட வேண்டும்.
பயனுள்ள கல்விக்காக இறைவனிடம் கேட்க வேண்டும். ஒரு நபி
மொழி இவ்வாறு கூறுகிறது 'நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும்
அவ்வேலையில் நிறைவடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள
மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன”.
ஆம். மொத்த பிரபஞ்சமும் அவனுக்காக மன்னிப்புக் கோருகிறது.அப்படிப்பட்டக்
கல்வியில்தான் ஆசீர்வாதம் என்கிற பறக்கத்தும் அருள்வளமும் உண்டாகும்.
இத்தகையக் கல்வியைப் பெறும் மனிதனின் வலுவே தனிதான். அந்த
வலுவைக் கொண்டு அவன் நீதியின் பக்கம் நிற்பான். ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரலற்றவர்களுக்காக
குரல் கொடுப்பான். அதிகாரத்தின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதில் அவனுக்கு எவ்வித
தயக்கமோ கலக்கமோ ஏற்படாது.
கல்வி என்பது குறிப்பிட்ட வகுப்பினரின் சாதியினரின் மதத்தினரின்
தனியுடைமை கிடையாது.காற்று,நீர்,நெருப்பைப்போல அது எல்லோருக்கும் உரியது, பிறருக்குக்
கல்வியை மறைப்பதும் ஒரு குற்றம் என இஸ்லாம் அறிவித்ததுடன் தான் பெற்றதை தன்னில் நடைமுறைப்படுத்தாத
கல்வியாளனும் அதன் எதிர்மறை விளைவுகளிலிருந்து தப்பவியலாது என்பதையும் சேர்த்தே சொல்கிறது..
வாசிப்புதான் அனைத்து நோய்களுக்கான பரிகாரி என முரசறைவோரை
‘தான் பெற்றதை தன்னில் நடைமுறைப்படுத்தாத’ வகைகைக்குள் வைத்து கொஞ்சம் உரசிப் பார்ப்போம்.
நம்மூரிலிருந்தே இதைத் தொடங்கலாம். பிரபல எழுத்தாளர் ஒருவர்
உலக இலக்கியங்களைப் பற்றி சர்க்கரைத் தோயப்
பேசுவார் எழுதுவார். வெகுமதித் தொகையில் ஒற்றை ரூபாய் குறைந்தால் கூட தெருவில் நின்று கூச்சலிடுவார்.இன்னொருவர் அறம் பேசும்
ஆசான்.தனக்கு ஆகாதவர்களைப் பற்றி அவதூறுகளும் பொய்களும் இறைக்கத் தயங்காதவர்.தான் வளர்ந்து
காலூன்றி நிற்கும் சித்தாந்தத்தின் மரபின் அழிச்சாட்டியங்களை இடது சுண்டு விரலால் ஒதுக்கி
விட்டு இடதுசாரிகள்,மதச்சிறுபான்மையினர்,மொழி தேசியவாதிகளுக்கெதிராக புனைவு,அபுனைவு
என தொடர்ந்து இயங்கி பீடங்கட்டியவர்.
இந்த வகைமாதிரிகளை நாடு,பன்னாடு என விரித்துக் கொண்டே போகலாம்.நாம்
சிறு வயதில் கேட்ட பண்டிதரால் எள்ளப்பட்ட ஓடக்காரனின் கல்லாமை/ நீந்தத் தெரியாமல் உயிரைத்
தொலைத்த பண்டிதர் கதை,எல்லா வேண்டுதல்களும் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டு பின்னர் திரவிய
மோகத்தில் நாயைப் போல நாக்கு இழுபட்ட மூஸா நபிக்காலத்து பல்அமுப்னு பாவூரா என்ற அறிஞரும்
ஞானியுமானவர்,அறிவாளியான அடால்ஃப் ஹிட்லர்….
அடால்ஃப் ஹிட்லரை இங்கு கொஞ்சம் தனியாக விளக்க வேண்டியுள்ளது. முதலாளிகள்,தொழிலாளிகள்,தொழிற்சங்கவாதிகள் என ஜர்மானிய மக்களில் ஒவ்வொரு பிரிவினரிடமும் "நான் உங்களுக்காக நிற்பவன்" என சொல்லி அவர்களை நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்தார். தன் பேச்சில் ஏற்ற இறக்கங்களைக் கையாண்டார்.தனது மேடையில் ஒளியமைப்பு எப்படி இருக்க வேண்டும் என கட்டளையிட்டிருந்தார்.மக்களின் மனங்களை கை வீணையைப்போல கையாண்டு அவர்க்ளின் உணர்ச்சிகளை தன் விருப்பத்திற்கேற்ப வனைந்தார்.
சிந்தித்துப் பாருங்கள்! ஒரு தெருப் பொறுக்கியால் இப்படியெல்லாம் செயல்பட முடியுமா? அவரின் அறிவை இதயமும் மன சாட்சியும் வழி நடத்தாததினால் வெறுப்பிலும் முற்றதிகாரத்திலும் இன அழித்தொழிப்பிலுமான பாதையில் நடந்து இறுதியில் அவற்றிற்கே உரிய தர்க்க முடிவை எட்டினார்.தற்கொலை செய்து கொண்டார்.
“பதட்டத்தில் அவன் தவறி விழுந்து இறந்து விடக்கூடாது “
என்பதற்காக தன் தோட்டத்து மரத்திலேறிய கள்வனைக் கண்ட பிறகும் கூச்சலிடாத ஜெயகாந்தன்,
இரந்தவருக்கு தான் ஒரு நாள் பட்டியினிலிருந்தும் தன் உணவை நல்கிய வைக்கம் முஹம்மது பஷீர் என்ற நச்சு
முறிவுகளைப்பற்றி பார்த்த கையோடு நாம் உரையின் நிறைவிற்கு செல்லலாம்.
வாசிப்பை நம் அன்றாட செயல்பாடுகளுக்குள் நிகழ்த்த எனக்கு
தெரிந்த சில வழிமுறைகளைப் பரிந்துரைப்பதற்கு முன்னர் கழுதை நூலகத்தின்(
BIBILIOBURRO) கதையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தென்னமரிக்க நாடான கொலம்பியாவில் நடந்த நிகழ்வு இது. குழு
மோதல்களிலும் வன்முறையிலும் போதைப்பொருள் குற்ற வினைஞர்களாலும் சீரழிக்கப்படும் தன்
நாட்டு சிறார்களை புத்தகங்கள் வழியாக மீட்கவியலும் என நம்பி அதனை சாதித்தும் காட்டினார்
லூயிஸ் சோரியானோ என்ற பள்ளியாசிரியர்.
கழுதையில் புத்தகப்பொதியை ஏற்றிக் கொண்டு கிராமம் கிராமமாகச்
சென்று குழந்தைகளுக்கு நூலை இரவல் வழங்குகிறார். ஒரு திடீர் இடரில் தன் காலை இழந்த
பிறகும் செயற்கைக் காலைப் பொருத்திக் கொண்டு மீண்டும் தன் புத்தகப்பணியைத் தொடங்கினார்.
பெருந்துயர்களை தன் பணியால் இன்சோலையாக மாற்றிய இம்மனிதரின்
கதையை BIBILIOBURRO(இது கழுதை நூலகத்திற்கான ஸ்பானிய சொல்) என இணையத்தில் நீங்கள் தேடி
விரிவாக அறிந்துக் கொள்ளலாம்.
உங்கள் அன்றாடத்திற்குள் வாசிப்பைக் கொண்டு வர உங்களுக்கு
மிக நெருக்கமான இடத்திலிருந்தே தொடங்கலாம். தமிழிலும் பிற மொழிகளிலுமுள்ள சிறந்த நூல்களையும் படைப்பாளிகளையும் பற்றி வலையொளியில் (யூ டியூப்) எழுத்தாளரும் கதை சொல்லியுமான
பவா செல்லத்துரை சுவையான மொழியில் அறிமுகப்படுத்தி வருகிறார். அதைக் கேட்கலாம்.
புத்தகத்தை நேரடியாக வாசிப்பதில் ஏதேனும் உடல்,மனத் தடங்கல்கள்
இருந்தால் வரைகலை(கிராஃபிக்ஸ்) நாவல்கள்,ஒலிப்புத்தகங்கள்(ஆடியோ புக்ஸ்) பயன்படுத்தலாம்.
நீங்கள் தொடக்க நிலை வாசிப்பாளராக இருந்தால் எஸ்.இராமகிருஷ்ணனில்
தொடங்கி இலக்கியப் பேருருக்களான புதுமைப் பித்தன்,வைக்கம் முஹம்மது பஷீர்,தோப்பில்
முஹம்மது மீறான்,கந்தர்வன்,பிரபஞ்சன்,லாசரா என சென்றடையலாம்.
பாவ்லோ கொய்லோ எழுதிய அல்கெமிஸ்டின் தமிழாக்கமான ‘இரசவாதி’,
எர்னஸ்ட் ஹெமிங்க்வேயின் ‘கடலும் கிழவனும்’, சார்லி சாப்ளினின் வரலாறு என மிகப் பிடித்தமான
இடங்களிலிருந்து நீங்கள் தொடங்குவீர்களானால் வாசிப்புக்குள் எளிதில் நழுவிச் செல்வீர்கள்.
வாசிப்புக்குள் வந்த பிறகு அதை நிலைப்படுத்த உங்கள் ஊர்களிலுள்ள
அரசு கிளை நூலகத்தில் உறுப்பினராகலாம். உறுப்பினர் கட்டணம் ஆண்டுக்கு அய்ம்பது ரூபாய்கள்.
ஒரு nhEra சிற்றுண்டியின் விலைதான். புத்தகத்தை காசு கொடுத்து வாங்கவியலாதவர்களுக்கு
பொன்னான வாய்ப்பு.
பல்வேறு தலைப்புக்களில் சிறந்த புத்தகங்களை தாங்கக் கூடிய
விலையில் பதிப்பித்து வரும் ஒன்றிய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளை(NATIONAL BOOK
TRUST),சாஹித்ய அகாதமி போன்ற வெளியீட்டு நிறுவனங்களில் குழும உறுப்பினரானால் வாழ்நாள்
முழுக்க நாம் அவர்களிடம் வாங்கும் நூல்களுக்கு
இருபது சதவிகிதத்திலிருந்து தள்ளுபடி பெறலாம்.
மாதாந்திர வாசிப்பு வட்டத்தை உருவாக்கலாம். வெளிநாடுகளில்
உள்ளதைப் போல விலையில்லா ‘புத்தகத் தாங்கி’ ஒன்றை உங்கள் கல்லூரி வளாகத்திலேயே நிறுவலாம்.அப்படியொன்றை
நீங்கள் நிறுவும்பட்சத்தில் எனது சேகரிப்பிலிருந்து புத்தகங்களை கொடையளிக்க அணியமாய்
உள்ளேன் இன்ஷா அல்லாஹ்.
கடைசி மனிதன் இருக்கும் வரைக்கும் எழுத்து இருக்கும்.
கடைசியெழுத்து இருக்கும் வரைக்கும் வாசிப்பும் இருக்கும்.
எல்லோருக்கும் நன்றி! வஸ்ஸலாமு அலைக்கும்!
No comments:
Post a Comment