இரு பத்தாண்டுகளாக
எனது தெருவில் பல இடங்களிலும் அவரைப்பார்த்திருக்கிறேன். உம்மா
வாப்பா இட்ட பெயர் ஷேக் அப்துல் காதிர். ஒத்த வயதுக்காரர்களால் ‘சேத்துக்காரு’
என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார். ‘பித்தளைப்பூட்டு’ என்பதுதான் அவரது விளிப்பெயராக இருந்திருக்க வேண்டும். அது ஏன்
பித்தாளப்பூட்டாக திரிந்தது என்பதற்கு கூடுதல் விளக்கம் தேவைப்படாவிட்டாலும் அந்த பெயர்
ஏன் வந்தது? என்பதற்கான விளக்கம் எனக்குத் தெரியாது. நானும் அதற்காக மெனக் கெடவுமில்லை.
இந்திய இராணுவத்திலிருந்து
ஊர் திரும்பியவர் குடும்பத்தில் ஒட்டவில்லை.அவர்களும் இவரைப்பற்றி பெரிதாக அலட்டிக்
கொள்ளவில்லை. எல்லாம் வெறித்த ஒரு நேரத்தில் அவரின் வீட்டையடுத்த மூன்று தெருக்களும்
அவருக்கு நிரந்தர வசிப்பிடமாயின. அறிந்த மிகச் சிலரைத்தவிர வெளியாட்கள் யாரிடமும் ஒருபோதும்
எதையும் கேட்டதில்லை அவர். அவருக்கு யார் உணவளிக்கிறார்கள்? என்ற விவரம் யாருக்கும்
தெரியாதது போலவே அவர் நீட்டி நிமிர்ந்து படுத்ததையும் யாரும் கண்டதில்லை. ஒன்று உட்கார்ந்திருப்பார்
அல்லது ஒருக்களித்தவாறு அதாவது விலாவின் ஒரு பகுதியை தரையில் கிடத்தியிருப்பார். அந்த
நிலையில்தான் அவரின் முழு இராத் தூக்கமும்.
வாழும் பீடாதிபதி
ஒருவர் பித்தாளப்பூட்டுக்கு ‘ஹால் அழிந்தவர் ‘
என்ற பெயரை போகிற போக்கில் ஒரு மேடை உரையில் போட்டு விட, திடீர் திடீர் என்று பித்தாளப்பூட்டின்
கழுத்தில் ரோஜாப்பூ மாலை தொங்கலாயிற்று. போட்ட ஆள் இடத்தை விட்டு அகலும் முன்னர் அம்மாலையை
எடுத்து ஆட்டுக்கோ மாட்டுக்கோ இரையாக்கி விடுவார் பித்தாளப்பூட்டு. ஆளையும் மாலையையும்
மதிக்காததினால் அன்றிலிருந்து அவரின் கழுத்தில் மாலை தொங்குவதும் நின்று போயிற்று.
புதிய அவுலியா ஒருத்தரை மக்களுக்கு கண்டுபிடித்து கொடுத்த கீர்த்தி
தனக்கு சிந்தாமல் வந்து சேரும் என்ற பீடாதிபதியின் கணக்கு தெற்றிப் போனாலும் பித்தாளப்பூட்டிற்கோ
எவ்வித இழப்புமில்லை.
திறன்பேசி
கொண்டு வந்து காட்டி அவரை உலக பஞ்சாயத்து நடப்புகளால் புதுப்பித்து அவரின் துஆ பறக்கத்துக்களை பெற்று கொண்டிருக்கிறோம் என்ற உறுதியான
நினைப்பில் இப்போதெல்லாம் யாராவதொரு இளந்தாரி
பையன்கள் பித்தாளப்பூட்டிடம் முறை வைத்து வந்து செல்கின்றனர். வண்ண வண்ணமாய் செல்பேசியின்
திரை வெளிச்சத்தில் பித்தாளப்பூட்டின் முகம் விவரிக்க முடியாத இன்னொன்றாக இருக்கும்.
கிட்டத்தட்ட
கால் நூற்றாண்டாக அவரைத் தெரிந்திருந்தாலும் அதை விட இன்னொரு பங்கு காலத்திற்கும் கூடுதலான
வாழ்க்கை அவருக்குரியது. இலையைப்போல மரத்தைப்போல மண் துகளைப்போல யாருக்கும் உறுத்தாத
எவரையும் துன்புறுத்தாத வாழ்க்கைக்காரர். நெடு மரமாக உலாவிக் கொண்டிருந்தவரை சில காடையர்கள்
எதற்கென்று இல்லாமல் அடித்து படுக்கையில் கிடத்தி விட்டனர்.நான்கு வீட்டு நல்லோர்களின்
பராமரிப்பிலும் கிடக்கும்போதும் இலையைப்போல மரத்தைப்போல மண் துகளைப்போல யாருக்கும்
உறுத்தாத எவரையும் துன்புறுத்தாத வாழ்க்கையைத்தான் முறுகப் பிடித்திருக்கின்றார் பித்தாளப்
பூட்டு.
சிலவற்றைத்
தவிர பெரும்பாலான கதைகளின் மீது போன காலத்தின் நெடி கூடுதலாக அடிக்கும். கடந்த கால
தொடர்ச்சியுடன்கதைகளை நிகழ்காலத்தில் நடனமிட வைப்பதற்கு எல்லோராலும் இயலுவதில்லை பித்தாளப்பூட்டு போன்ற
காலத்தின் சரிகைகளைத் தவிர.
புலரிக்காக
கதிரவன் காத்துக்கிடப்பது போல பித்தாளப்பூட்டின் கதைகள் இத்தனை காலங்கள் காத்திருந்தது
போதும். வெளுக்கும் கரங்களிடம் கிழக்கும் அண்மித்து விட்டது. இனி பிஸ்மியும் ஹம்தும் சலவாத்தும் சொல்லி கதைகளை தொடங்க
வேண்டியதுதான்.
----------------------
கலை நிகழ்ச்சியொன்றிற்கு
மவுத் ஆர்கன் வாங்கிப் போக வந்த ஆரிஃப் காக்காவிற்கு
என் வீட்டின் கதவு திறக்கப்பட்ட பின்னரும் உள்ளே வராமல் தெருவைப் பார்த்தபடியே நின்றிருந்தார்.
“ உள்ள வாங்க
காக்கா” என்றதும் ‘கொஞ்சம் பொறு’ என தன் புகையிலைப் பழுப்பேறிய உதடுகளைக் குவித்து
சன்னமாக ஒலித்தவர் கமுக்கட்டு அடக்கம் மொத்த கையையும் மேலும் கீழுமாக வாளைப்போல வீசி
என்னை வெளியே வருமாறு சைகைக் காட்டினார்.
வெளியே எட்டிப்பார்த்தால்
இவர் கைகாட்டிய அளவிற்கு அங்கு ஒன்றும் பாரதூரமில்லை. மேன்மை தாங்கிய காயல்பதித் தெருவொன்றின்
அன்றாட கோலங்களுடன் கூடவே பழைய கடைத்தெரு,,மெய்தீன் தெரு,தெற்குத்தெரு என்ற மூன்று
தெருக்களின் குடிமகனான பித்தாளப்பூட்டுதான் எங்குமில்லாத பார்வையுடன் வேப்ப மர நிழலில்
அமர்ந்திருந்தார்.
மர மூட்டில்
சாய்த்து வைக்கப்பட்டவாறு பிலிப்ஸ் வானொலிப்பேழை.
அதன் பக்கத்தில் செம்பழுப்பு நிற துவாலையொன்று ஒரு வேப்பங்குச்சியுடன் கொஞ்சம் மணற்
பொருக்குகளுமாக கறுத்த ஆட்டு ரோமத்தை போல நீண்டு
கிடந்தது. அதன் ஒரு முனையருகே தன் நினைவுகளை
தொலைத்த துயரங்களுடன் ஓரம் நசுங்கிய அலுமினிய தூக்குச்சட்டியொன்றும்.
பித்தாளப்போட்டு
தலையை வலது முன் பக்கம் கவிழ்த்திருந்தார். முதுமையின் தளர்ச்சியால்தான் அப்படியான
தலைசாய்ப்பு எனத் தோன்றினாலும் முன்பிருந்தே அவரின் தலையமைப்பு அப்படித்தான். புதிய
வரவென்று சொன்னால் தாடியின் பழுப்புடன் மஞ்சள் நிறத் திட்டும் சேர்ந்திருந்ததுதான்.
பித்தாளப்பூட்டு
இவருக்குள்ளும் ஏறி விட்டதோ? என்ற தோன்றலை பொருத்தமற்றதென மனது கண்டாலும் ஆரிஃப் காக்காவின்
பாவனை மாற்றம் அப்படி கேட்கத் தூண்டியது. “காக்கா! பித்தாளப்பூட்டுட்ட அப்படி என்ன அதிசயத்தக் கண்டியோ?” என்றவுடன் தான்
கண்டதை கண்கள் விரியச் சொன்னார். காணாததையும் சொல்லித் தீர்த்திடும் வேகம் அதற்குள்ளிருந்தது.
ஆரிஃப் காக்கா
என் வீட்டுப்படிகளில் ஏறிய சமயம்தான் அது நடந்திருக்கிறது. அவ்வழியே போய்க் கொண்டிருந்த
நடுத்தர வயது மாதொருத்தி பித்தாளப்பூட்டினருகே வந்து நின்றவாறே “ காக்கா சோமா இக்கிறியாளா?”
எனக்கேட்டவள் அதே வாயோடு “ என்னமாச்சும் தாங்களேன்”
என்றிருக்கிறாள். இந்த சொல்லுக்குள் இருந்த புதுமைதான் ஆரிஃப் காக்காவின் காலை மேற்கொண்டும்
நகர விடாமல் செய்திருக்கிறது.பித்தாளப்பூட்டின் தலையை விட தாடி துரிதமாக அந்த தூக்கு
சட்டியை நோக்கி அசைய அதிலிருந்த பணத்தாள்கள்,நாணயங்கள் என ஒன்றையும் விடாமல்அவள் விரசாக தன் சேலை மடிப்புக்குள் சுருட்டிக் கொண்டாள்.
“எப்படியும் ஐந்நூறுக்கும் மேலிருக்கும்” என
விரலை சொடக்கிய ஆரிஃப் காக்கா “ அஃப்ரிக்கி
அப்போம் நீ பாத்திக்கணுமே அவட ரண்டு கய்யும் மொகமும் மண் தோண்டி மாதிரிலோ இந்துச்சு”
என முகம் மங்கி சிரித்தார்..
திடீரென நினைவு
வந்தவராக “ நீ சோமா இக்கிறியா?” என்று கேட்ட பித்தாளப்பூட்டின்
குரலில் இலேசாக திடுக்கிட்ட அப்பெண், அந்த திடுக்கத்தை நசுக்கியவாறு அவரின் குரலே காதில்
படாதது போல் எதிர் திசை முடுக்கில் ஓட்டமும்
நடையுமாய் போய் மறைந்து விட்டிருக்கிறாள். இப்போது ஒரு வேப்பங்குச்சியும் கொஞ்சம் மணற்
பொருக்குகளுமே மிச்சம் மீதியாகியிருந்த அந்த துவாலைக்கருகில் அந்த வெற்று தூக்குசட்டியும்
வானத்தை நோக்கி நின்றிருந்தது.
நடந்ததை விபரித்து விட்டு உள்ளுக்குள் ஆழத்தொடங்கியிருந்த
ஆரிஃப் காக்காவை ஜான்சில் உட்கார வைத்து விட்டு
குடிப்பு ஏதேனும் கொண்டு வர உள்ளே சென்றேன்.
புயலுக்கு கலங்காத கடலானது ஆமையின் கால் நுனி
நகத்தின் துளாவலில் சுழலும் என்பார்கள். நுங்கு சர்பத்தை அவர் முன் வைத்த போது ஆரிஃப்
காக்காவின் முகம் ஏதோ ஒரு திளைப்பிலிருந்தது. எல்லா உணர்ச்சிகளுக்கும் எதிரான அவரது
வழமையான மரக்கட்டை பாய்ந்த அகமும் புறமும் இன்று புதிய மழை நீர் போல கலங்கிக் கிடந்தது.
சர்பத் கோப்பையின்
வெளிப்புறத்தில் கண்களால் துளாவி பின்பு பார்வையை கீழிறக்கி தரைக்கு கொண்டு வந்தவர்
“ அஃப்ரிக்கி நான் அவர நாப்பது வர்சத்துக்கு மேலா பாத்துக்கிட்டே இக்கிறேன்.
இதுக்கு முன்னாலயும் இவர்ட்ட சில புதுமகள பாத்திக்கிறேன். ஆனா இன்னிக்கி பாத்தது ஒரு
புதுமயான புதும”.
சர்பத்தை
எவ்விதக் கவனமுமின்றி குடிக்கத் தொடங்கியவர் மீதமுள்ள சொற்களை எனது விருப்பத்தையறிந்து
திறக்கலாம் என்பது போல இடைவெளி எடுத்தார்.மடுக்காம்பில் பால் பீய்ச்சப்படுவதற்காக காத்திருந்தது. மூலையில் கிடந்த மொட்டனை தூசி தட்டி அவர் பக்கம் நகர்த்தி பழைய புதுமைகளை
சொல்லச் சொன்னேன்.பித்தாளப்பூட்டின் மனைவி இறந்த கதையிலிருந்து தொடங்கினார் ஆரிஃப் காக்கா.
கவுதியா சங்கத்தின்
மரத்தூணருகில் தன் நான்கு துணி முடிச்சுகளுடன்
அமர்ந்திருந்த பித்தாளப்பூட்டை நோக்கி வந்த மூணு மாடி வீட்டு ஹபீபு ஹாஜியார் தன் செந்நீல
நிழனிறங்கொண்ட தோள் துண்டை நேராக்கிக் கொண்டே அவர் பக்கம் குனிந்து ஏதோ சொன்னார்.
பித்தாளப்பூட்டின்
மயிரடர்ந்த இரண்டு கைகளையும் ஒரு கட்டத்தில்
பற்றிக் கொண்டு “ சேத்துக்காரு ஆயிரந்தா இந்தாலும் அவ ஓன் வீட்டுக்காரிடா. நல்லவளோ
கெட்டவளோ அவட ஹாலு முடிஞ்சி போச்சி. கடசியா ஒரு
தடவ பாத்துட்டுத்தான் போவேன்“என மன்றாடினார்.அவரின்
கறுப்பு சட்டமிட்ட தடித்து அகன்ற கண்ணாடிக்குள் கண்களிரண்டும் உருப்பெருகி குளத்து
மீன்களாகி மருண்டு சுழன்றன.
பித்தாளப்பூட்டிடம்
இப்படிக் கெஞ்சியவர்களில் மூணு மாடி வீட்டு ஹபீபு ஹாஜியார் ஐந்தாவது ஆள். “ மத்த நாலு
பேருட கதய நான் பாத்ததில்ல. பெரியவங்க சொல்லித்தான் கேட்டிக்கிறன். ஹபீபு ஹாஜி கத நான்
பாக்கவே நடந்ததுனால அச்சடிச்ச மாரி நெனவிக்கிது” என்ற ஆரிஃப் காக்கா முழு உற்சாகத்துடன்
தொடர்ந்தார்.
அவர்களிருவரின்
வாழ்க்கைகளுக்கிடையே குன்றுக்கும் குழிக்குமான ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இருவருமே
சிறு பருவத்து விளையாட்டுத்தோழர்கள் என்பதால்
கடைசி கட்டமாக ஹபீபு ஹாஜியாரை அனுப்பிப் பார்த்தார்கள் ஜமாஅத்தார்கள்.
யாரிடமும்
வருவேன் என்றோ வரமாட்டேன் என்றோ ஒரு சொல்லைக்கூட பித்தாளப்பூட்டு உதிர்க்கவில்லை. ஒரு
நாள் முழுக்க அதே தூணருகில்தான் இருந்திருக்கிறார். அன்னம் குடிப்பு கழிப்பு என எதற்கும்
அசையவில்லை. இரண்டரை நாட்களாக மௌனம்தான். பித்தாளப்பூட்டு வழமையாகவே மௌனிதான். ஆனால்
அவரின் இன்றைய தின மௌனமோ எல்லோரின் கவனத்திற்கும் உள்ளாகியிருந்தது.
மனைவியின்
மூன்றாம் கத்தம் ஓதும் இரவு. கவுதியா சங்கத்தில்
விளக்கை வழமையாக அணைக்க வருகின்ற ஆள் வந்த
நேரத்தில் “ கண்லேயே முழிக்காதன்டு சொன்னவ கண்ல யாராவது முழிப்பாங்களா?அப்பிடி முழிச்சா அவனுக்கு ஆதியிலேயே ரோசமில்லேன்டு அர்த்தம்
“என பித்தாளப்பூட்டு சொல்ல, விளக்கை அணைக்க வந்த மனிதர் தன் தலையை 360 பாகையில் வட்டமடித்து
பார்த்திருக்கிறார்.
அங்கிருப்பது
தாங்களிரண்டு பேர்களைத்தவிர வேறு யாருமில்லை என்பது உறுதியானவுடன் அவசர அவசரமாக சங்கத்தை
விட்டு பாய்ந்துதான் வெளியேறினார். அந்த பாய்ச்சலில் ஆந்திராவில் வாங்கி இரண்டு வாரங்கள்
கூட ஆகியிராத தனது புதிய மாட்டுத் தோல் செருப்பின் காதறுந்து விட்டதாக யாரிடமோ புலம்பிக்
கொண்டிருந்தார் அவர்.
பித்தாளப்பூட்டின்
சொல்லில் தலையும் காலும் புரியாவிட்டாலும்
ஊராருக்கு ஏதோ சொல்ல வருகிறார் என்பதை மட்டும் புரிந்தவராக அவர் சொன்னதை கெட்ட நோக்கத்திலல்லாமல்
அச்சமும் கிளர்ச்சியும் கலந்த மடத்தனம் உந்த அனிச்சையாக பல வடிவங்களில் முஹல்லா முழுக்க
பரப்பி விட்டார் அவர்.
குளத்தின்நீர்
பரப்பு வட்டங்கள் போல தொங்கல் வரை பரவி தெறித்த அந்தக் கதைகளில் கொஞ்சத்தை எடுத்துக்
கொண்டு புலவர் ஆலிம்சா மகன் காரைக்கோழிப்பீ காதர்
பித்தாளப்பூட்டிடம் கேட்கப்போய் அவர் அந்த இடத்தை விட்டு வாள் வீச்சின் வேகத்துடன்
எழுந்து சென்று விட்டார். அந்த வேகத்தைக்கண்ட காரைக்கோழிப்பீ காதருக்கு குக்கரின் ஆவி
முகத்திலடித்தைப்போல இருந்தது. தனது வயதில்
கொஞ்சத்தை இழந்தைப்போலவும் உணர்ந்தான். அவன் பித்தாளப்பூட்டிற்கு அவ்வளவு அணுக்கமானவன்.இது
வரைக்கும் அவனிடம் அவர் இப்படி நடந்ததில்லை.
யாரிடமாவது
பேசிக் கொண்டிருக்கும்போது பித்தாளப்பூட்டு தான் இருந்த இடத்தை விட்டு திடுமென எழுந்திருக்கிறார்
என்றால் அவருக்கு அந்த பேச்சு பிடிக்கவில்லை என்று பொருளாம். அவரின் மண வாழ்க்கை, இராணுவ
வாழ்க்கைப் பற்றி கேட்டாலும் பிறரைப்பற்றி புறம் பேசினாலும் அவரின் எதிர்வினை இதுதான்.
அவரின் சொந்த
வாழ்க்கையைப் பற்றி அவராகச்சொன்னால்தான் உண்டு. அவரின் மண வாழ்க்கை தோல்வியைப்பற்றிய
மீதி துணுக்கானது அப்படியான ஒரு தற்செயல் கணத்தில்தான்
கசிந்ததாக சொன்னார் ஆரிஃப் காக்கா.
பெரு மழை
பெய்து ஊருக்குள் வெள்ளம் புரண்ட சமயம் பித்தாளப்பூட்டுக்கு குஸ்காவும் கடலைப்பருப்புக்
கறியும் கொண்ட வாழையிலைப் பொட்டலத்தை ஆரிஃப் காக்கா கொடுக்கப்போகும்போது ஓலை விசிறியால்
விசிறியவாறே பாட்டா வீட்டு படியில் அமர்ந்திருந்தார்
பித்தாளப்பூட்டு. அவ்விசிறலில் .விண்மீண்களும்
கோள்களும் சேர்ந்து சுழல்வதாக பித்தாளப்பூட்டு எண்ணிக் கொண்டாரோ என்னவோ? கை சுழற்சியில்
ஒரு கனமிருந்தது.
சிறு சிறு
மின்னல் விசைகளில் கரகரத்துக் கொண்டிருந்த அவரது வானொலிப்பேழையிலிருந்து “ மாசிலா உண்மைக்காதலே “ பாட்டின் இசை தொடங்கியவுடன்
இலக்கின்றி அலைந்து கொண்டிருந்த அவரின் கண்கள் நிலைத்தன. வெளிச்சத்திற்குள் இருட்டைத்
தேடும் மறிப்பு நோட்டம்.
வானொலியின்
ஓசையை சுருக்கிக் கொண்டே “ வாப்பா கேட்டியா இத ! என்றவுடன் ஆரிஃப் காக்கா சற்று வியப்புடன்
பித்தாளப்பூட்டை ஏறிட்டார். என்றாவது ஒரு நாள் கேட்கும் அதியசக்குரல். அவரின் வியப்பு
தீருவதற்குள் பித்தாளப்பூட்டு தொடர்ந்தார்.
“இன்னாங்கோ
நம்ம ஊர்லதான் நல்ல செவத்த மாசி இக்குது நெனச்சேன் இங்கயும்லோ மாசியப்பத்தி படிக்கிறானுவோ”
ன்டு என்னிக்கி என் வீட்டுக்காரி சொன்னாவோ அப்பமே இந்த ரயிலு ஊருக்கு போவாதுங்கறது
விளப்பமாயிட்டுது”.பேச்சை நிறுத்தி விட்டு சோற்றுப் பொட்டலத்தை அவிழ்க்கத் தொடங்கினார்
பித்தாளப்பூட்டு. எதையும் தொடாதவாறு மெல்லிய
காற்றொன்று கிழ மேற்காக நகர்ந்து சென்றது. வழி தவறிய குட்டி ஆட்டின் ஓசைக்கு மறு ஓசை
எழுப்பியவாறே தாய் ஆடொன்று எந்த முடுக்கில் நுழைய ?என்ற தடுமாற்றத்தில் அலைந்துக் கொண்டிருந்தது.
தன் மனைவியை
பிரிவதற்கு பித்தாளப்பூட்டு சொன்ன இந்தக் காரணமென்பது மிக அற்பமானது உப்புசப்பில்லாதது.
கொஞ்சமாவது தலையில் உள்ளவர்கள் யாரும் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று ஆரிஃப் காக்காவின்
அறிவும் மனதும் ஒத்திசைந்து சொன்னாலும் அவரிடம்
ஏற்கனவே உள்ள தகவல் சரட்டில் இந்த துணுக்கும் போய் அனிச்சையாய்க் கோர்த்துக்
கொண்டது.
அடுத்தவனின்
தகவலில் புலன் நிறைப்பவர் அல்ல ஆரிஃப் காக்கா. வதந்தி,கோள்,அவதூறுகளை தீயைப் போலக்
காண்பவர். அவரை பொறுத்தவரை பித்தாளப்பூட்டு என்பது பழுப்பதை ஒத்திப்போடும் காய். அதன்
கனிவும் தனது கனிவும் ஒத்திசையும் ஒரு கணத்தின் மீதான எதிர்பார்ப்பு மட்டுமே அவரில்
மிச்சம். அத்துடன் மற்றவர்களுக்கு சல்லித்தனமாகப் படும் இந்தக் காரணத்தில் ஏதேனும்
சங்கேதங்களும் குறியீடுகளும் இருக்கலாம். என்றெனும் திறக்கக் கிடைக்கும் நிதியின் நுனிதான்
இது என்பது ஆரிஃப் காக்காவின் மாற்றமில்லாத தீர்மானம்.
கதைகள் இன்னமும்
உண்டு என்ற உள்ளுணர்வில் “ ஆரிஃப் காக்கா! பித்தாளப்பூட்டு சொல்றத வச்சி நாம எப்படி முடிவுக்கு வர ஏலும் அவங்க பொஞ்சாதி சொல்றதயும்
கேட்டாத்தானே சரியான முடிவுக்கு வர ஏலும்? “ என்றவுடன் சிறு எரிச்சல் முகத்திலாட “ நா என்ன புலன் விசாரணை
அதிகாரியா ஊர் பலாய தோண்டறதுக்கு?”. இனி அவரிடம் கதைகள் மிச்சமில்லை என்பதை உறுதிப்படுத்திக்
கொண்டதில் எனக்கு மன நிறைவு.
எண்களுக்குள்
கரந்திருக்கும் தசமங்களையும் பின்னங்களையும் கணங்களையும் சூத்திரமொன்று இழுத்து வருவதைப்போல
பித்தாளப்பூட்டை ஆரிஃப் காக்கா விவரித்த விவரணையில், நான் இந்த நொடி வரை ஒன்றுமில்லை
எனக்கருதியிருந்த பித்தாளப்பூட்டுடனான நிகழ்வொன்று எனக்குள்ளிருந்து மேலெழும்பியது.
-------------------------------------
“அட அஃப்ரிக்கி பசியாற வரல்லியா?” கீழ் வீட்டிலிருந்து
உயர்ந்த உம்மாவின் குரல் தணிவதற்குள் கீழே போய் விட்டேன். கொஞ்சம் சுணங்கினாலும் ஏணிப்படியின்
இரும்பு கைப்பிடியில் சோற்றுக்கரண்டியால் தட்டுவாள்.தன் குரல் வளையை தேவைக்கு மேல்
அவள் எப்போதும் பயன்படுத்துவதில்லை. அவளின் ஆகக்கூடிய குரல் என்பது நடுத்தரத்திற்கும் உச்சத்திற்கும் இடைப்பட்டது.
பீங்கான்
வட்டியில் நிறைந்திருந்த பொரியரிசி கஞ்சியை
சுழல் மர மேசையில் வைத்து விட்டு உம்மா அடுப்பங்கரைக்குள் போயிருந்தாள். தேங்காய்ப்பாலுடன்
பூந்தோட்டத்துக் கருப்பட்டியும் இட்டுக் காய்ச்சியது.
உம்மா எல்லாம்
பார்த்து பார்த்துதான் செய்வாள். அரிசியை வறுக்கும்போது
தீயும் பருவத்துக்கு இரண்டு வக்துக்கு முன்னே எடுக்க வேண்டும். இரண்டு வக்த்துக்கான
அளவு என்றால் என்ன என்பதை நிமிடங்களாகவோ அல்லது நொடிகளாகவே மாற்றிச் சொல்லாததினால்
எல்லா உணவு வகைகளையும் உம்மாவிடமிருந்த படித்திருந்த வேலைக்காரி பார்வதி பொரியரிசி
வறுத்தலை மட்டும் உம்மாவிடமே விட்டு விடுவாள். கருப்பட்டியைக் காய்ச்சும்போது ஆமணக்கு
இலையைப் போட்டுத்தான் காய்ச்ச வேண்டும் என்ற பக்குவத்தை பாவூற்றும் பூந்தோட்டத்து பெரிய
நாயகிக்கு கற்றுக் கொடுத்ததும் உம்மாதான்.
இத்தனை இரம்மியமான
கஞ்சியை பாதிக் குடித்த நிலையில் உம்மா அடுப்பங்கரையிலிருந்து
வெளியானாள். “ வாப்பா நீ பசியாறுன பொறவு ஒனிக்கு சின்ன வேலை” என்றவாறே முறுவலித்தாள்.
அவளது உதட்டுக்கு இணையாக ஓரங்குல இடைவெளியிடத்தில் அவளின் தலை முடியின் ஒற்றை மென் பிரி முற்றும் அதே
இடத்தில்தான் அந்த முறுவல் வழமைக்கு மெலிதாக சுழியும்.
ஒரு மதிய
வேளையில் கையில் தஸ்பீஹ் மணியை பிடித்தபடி மாடியில் அவள் இறுதியாக சரிந்து கிடந்தபோதும்
அந்த இளம் நகைப்பின் தடம் சுழிந்திருந்தது.
பொரியரிசிக்கஞ்சியை
நான் தேன் கஞ்சி என்றுதான் சொல்வேன். அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பது தெரிந்துதான்
அதை உண்ணும் சமயம் பார்த்து என்னிடம் ஒரு வேலையை
ஒப்படைத்தாள். உம்மா என்னிடம் ஒரு வேலையைச் சொல்லும்போது அதை நான் தட்ட முடியாத சூழலில்
வைத்துதான் சொல்லுவாள். என் சோம்பேறித்தனத்தை கலைக்க அவளின் நீண்ட கால வழிமுறை.
நூறு ரூபாய்த்தாளொன்றை
எடுத்து வந்தவாறே ” குட்டி பர்ஸுலேந்து எடுக்கும்போது ஜிப்புல பட்டு ரூவா கிழிஞ்சிட்டுதுமா.
இதக் கொண்டு போய் பேங்குல கொடுத்து மாத்தீட்டு வாவேன்”.
உம்மா நீட்டியதை வாங்கிக் கொண்டு வங்கிக்கு போனேன்.
இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால் அந்த
நூறு ரூபாய் என்னிடமே இருந்தது.
ஒவ்வொரு நாள்
காலையிலும் பசியாறும்போதும் உம்மா அதைப்பற்றி நினைவு காட்டவும் நானும் அதை சட்டைப்பையில்
வைத்தவாறே மறந்து விடுவதுமாக ஐந்து நாட்கள் கடந்து விட்டிருந்தன.உம்மாவும் சடைந்து
போய் பல வேலைகளின் நடுவே அதை கேட்கவில்லை. பின்னர் பார்க்கலாம் என்ற நினைப்பில் அந்த
ரூபாய்த்தாளை எடுத்து என் அப்பா கொழும்பில் வாங்கிய வெப்ஸ்டர் அகராதிக்கு நடுவே வைப்பதென
தீர்மானித்தேன். யாரும் அகராதியை தீண்டுவதில்லை என்பதால் ரூபாய்த்தாள்களை நான் வழமையாக
அதில்தான் பத்திரப்படுத்துவதுண்டு.
இந்த கிழிந்த
ரூபாய்த்தாளை அதில் வைக்கும் முன்னர் சாளர வெளிச்சத்திற்கு நேராக உயர்த்திப் பிடித்து
பார்க்கத் தோன்றியது. காந்தியின் இடது கண்ணின் மேல் பக்கம் வரை அக்கிழிசல் நீண்டிருந்தது.
பின்பக்கமுள்ள குன்று படத்தின் சிகரத்தில் சிவப்பு நிறத் திட்டொன்று இருந்தது. நாடாவின் இழைப் பிரியை எடுத்து ஒட்டினாலும்
சரிவராத படிக்கு அந்த கிழிசலிருந்தது.
அந்த நாள்
வியாழக்கிழமை என நினைவு. தைக்கக் கொடுத்திருந்த சட்டையை வாங்குவதற்காக வீட்டை விட்டு
இறங்கும்போது கிழிந்த ரூபாயையும் மாற்றி விடலாம் என சட்டைப்பையினுள் எடுத்து வைத்திருந்தேன்.
அது வேனில்
காலமாக இல்லாததினால் பதினோரு மணியானாலும் வெய்யில் அவ்வளவாக உறைக்கவில்லை. தெருவிலும்
பெரிதாக ஆள் நடமாட்டமில்லை. முதுகு மூட்டைப்போலிருந்த ஒருவர் ஈரிருளியில் மணியடித்தவாறே போய்க் கொண்டிருந்தார்.
எனது வீட்டின் இடது ஓரத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் நிற்கும் வேப்ப மரத்தின் மூட்டில் தலையை நாட்டி முதுகைக் காட்டியவாறு ஒருக்களித்து
சாய்ந்திருந்தார் பித்தாளப்பூட்டு.
எண்ணி மூன்று
அடிகள்தான் நடந்திருப்பேன். அவரது கை மட்டும் என் பக்கம் நீண்டது. முகத்தை என் பக்கம்
திருப்பாமலேயே “ அஃப்ரிக்கி என்னமாவது தந்துட்டு போங்கோ” என்றார்.
அவரது கை
நீட்டலில் எனது எல்லா நினைவுகளும் சொற்களுடன் ஒட்டிக் கொண்டன. கொடுப்பதற்கு கையில்
பொடி நாணயங்கள் இல்லாத நிலையில் சட்டைப்பையிலிருந்த அந்த கிழிந்த நூறு ரூபாயை அவரிடம்
கொடுத்து விட்டு நடந்தேன். கொஞ்ச நேரத்திற்கு மனம் குறுகுறுத்தது.” அவர ஏமாத்தல வேணுண்டும்
செய்யல” என பலவாறாக மனம் தனக்குத் தானே சரி காண்பதற்கான தர்க்கங்களை அடுக்கியது. வெப்பமும்
பரபரப்பும் மிகுந்த பஜாரின் வேடிக்கையில் அதுவும்
கரைந்து போனது.
பழைய அந்த
கிழிந்த நூறு ரூபாயின் கதையுடன் அதன் இரண்டாம் பகுதியையும் ஆரிஃப் காக்காவிற்கு சொல்லத்தொடங்கினேன்.
அவர் பித்தாளப்பூட்டிற்காக எவ்வளவு நேரத்தையும் ஒதுக்கும் மன நிலையில் இருந்தார்.
அந்த கிழிந்த
நூறு ரூபாய்த் தாளை பித்தாளப்பூட்டிடம் கொடுத்து மூன்று நாட்களிருக்கும்.அதன் பிறகு
அவரை என் வீட்டினருகில் காணவில்லை. அவருக்கென நிலையான தரிப்பிடம் இல்லையென்பதால் நானும்
அவரைப்பற்றி நினைக்கவில்லை.
ஹிந்து ஆங்கில
நாளிதழில் வந்த கடினமான ஓர் ஆங்கிலச் சொல்லிற்காக அந்த வெப்ஸ்டர் அகராதியை திறக்க வேண்டி
வந்தது. அதன் ஜிந்து விட்ட பக்கங்களை விரல்கள் புரட்டியபோது சொல்லின் பொருளின் மீது ஒன்று
என எண்ணிடப்பட்டிருந்தது. மீதமுள்ளதையும் தேட அகராதியின் தாளை புரட்டும்போதுதான் ராயல்
புளூ நிறத்திலான அது இருந்தது.
மயில் தோகை
என மனம் ஒரு நொடி மயங்கியது. அங்கேயிருந்தது அந்த கிழிந்த நூறு ரூபாய்த்தாள்தான். ஏற்கனவே
அது வைக்கப்பட்டிருந்த அதே ஜிந்து விட்ட பக்கத்தில்தான். கூடவே முடிக்கனத்தில் இழையொன்று.
ஒரு பாதி இள மஞ்சள் நிறத்திலும் மறு பாதி சிவப்பு மிகைத்த மஞ்சள் நிறத்திலுமாக இருந்தது.
அகாலத்தில் ஓசை எழுந்து வெளிகள் நிறைந்தன.
காந்தியின்
இடது கண்ணின் மேல் பக்கம் வரை நீண்டிருந்த அந்தக்கிழிசலும் பின்பக்கமுள்ள குன்று படத்தின்
சிகரத்தில் சிவப்பு நிறத்திட்டுமாக அதே தாள்தான்.
தாளின் அடையாளங்களைப்பார்த்து வைத்தது நலவா? கெடுதலா? மந்திர மாய சூனிய விளையாட்டா
?எனத் தீர்மானிக்கும் முன்னர் அந்த உலோக இழையின் புது வரவு என்னை இன்னும் குழப்பியது.
எதற்கும்
உம்மாவிடம் ஒரு சொல் கேட்டு விட்டால் நல்லது. எனக்குத் தெரியாமல் அவள் கையில் பித்தாளப்பூட்டு
ஒரு வேளை திரும்ப கொடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறதுதானே?
“ பித்தாளப்பூட்டு
அந்த கிழிஞ்ச ரூவாய ஓங்கிட்ட தந்தாரா?” என உம்மாவிடம் கேட்கப்போய் அவளோ நான் நூறு ரூபாயைக்
காணாக்கி விட்டதாக எண்ணி பொறுமத்தொடங்கினாள். இதனால் அந்த புதிய உலோக இழையைப்பற்றிக்
கேட்கும் துணிவும் அப்போதைக்கு எனக்கு வரவில்லை.புதிய குழப்பத்தில் அந்த நூறு ரூபாய்
தொலைக்கவில்லை என சொல்லவும் தோன்றவில்லை.
பித்தாளப்பூட்டிற்கு
நான் கிழிந்த ரூபாயைக் கொடுத்த தப்பான நிகழ்விற்கு இறைவனுடன் பித்தாளப்பூட்டும் சாட்சியானதுடன்
புதியதாக சில அருவங்களும் சாட்சியாக சேர்ந்திருக்கும் என்ற புலப்பாடு மனத்தை புதிய உளைச்சலில் ஆழ்த்தியது.”ச்சே
அந்த காசைக் கிழிச்சாவது போட்டிக்கணும்” என்ற என் காலங்கடந்த ஞானத்தின் மீது எழுந்த
எரிச்சல் எண் திசைகளிலும் சுற்றியலைந்து என்
மீதே திரும்பியது.
ஆரிஃப் காக்கா
இப்போதுதான் நிதானத்திற்கு மீண்டிருந்தார்.பெரிய நிதி கிடைத்த நிறைவு. என்னுடைய உளைச்சல்
அவருக்கு வரவாக மாறி கிட்டியது. முரண்களின் இயக்கத்தால் நிறைந்ததுதானே உலகம். சொல்லி
சொல்லி மாய்ந்து போக வாழ்நாள் கதையொன்றல்லவா அவருக்கு கிடைத்திருக்கிறது.” ஏம்பா !பித்தாளப்பூட்டப்
போய் பாப்பமா?” என அவர் கேட்க இருவரும் புறப்பட அணியமானோம்.
செருப்பை
அணியும் முன்னர் ஆரிஃப் காக்காவிடம் “ நீங்க பாத்தீங்கல்ல அத மாதிரி பித்தாளப்பூட்டு
தன் கய்யில இக்கிற காச இப்பிடி யாராவது கேட்டா அப்டியே கொடுத்துர்றதுனாலத்தான் அந்த
கிழிஞ்ச ரூவாயக் கொடுத்தேன். அது தப்பில்லைதானே காக்கா” என்றதற்கு அவர் ஒன்றும் சொல்லாமல்
படியிறங்கினார். அவரின் மௌனத்தில் சுமை இன்னும் கூடியது.
வேப்ப மர
மூட்டில் ஆள் இல்லை. தெரு முனையில் உள்ள பாண்டி அண்ணாச்சி கடைக்கு முன் குனிந்து பெருக்கிக்
கொண்டிருந்தார் பித்தாளப்பூட்டு. முதல் பார்வைக்கு அவரிடத்தில் வலுத்து பெருத்த பனை
மூட்டின் தோற்றம்.மழை நீர் சொட்டுவது போன்ற வியர்வை பெருக்கம். கறுப்புத் திலங்கியது.
சிங்க நாக்கின் துளாவலில் துப்புரவாக இருந்தது கடையின் முன்புறம். மிக்சர் பொட்டலத்துடன்
தேன் மிட்டாய்களையும் தாளில் பொதிந்து பித்தாளப்பூட்டின்
கையில் வைத்தார் அண்ணாச்சி.
“பித்தாளப்பூட்டு
கைல வாருவல எடுத்துட்டாருன்டா அவருக்குபசி
எடுத்துட்டுதுன்டு அர்த்தம்” என நிகழ்வைக் கோதுடைத்தார் ஆரிஃப் காக்கா.
பித்தாளப்பூட்டை
சோதிக்க எண்ணிய ஆரிஃப் காக்கா ” சேத்துக்காராக்கா நா வடக்காத்தூருக்கு போவணும் ஏங்கிட்ட
பத்து ரூவாதான் இக்கிது. ஒங்க கிட்ட இருவது
ரூவா இந்தா தாங்களேன்.”
“ஏங்கிட்ட
இல்லியே” என பொடிக்குரலில் முனகியவர் “ மேயப்போற மாட்டுக்கு யாராவது புல்லக்கட்டி அனுப்புவாங்களா?
மொதல்ல அவன நம்பு. நம்புன பொறவு நிக்காம நடந்துரு”
என்றவாறே நடக்கத் தொடங்கினார்.என்னைக் கண்டதும் அரைக்கணம் என்னில் நிலைத்த தன் விழிகளை
விலக்கினார். ஒன்றையும் காணாததைப் போல பாவனை. தன்னுடைய பச்சை நிற இடுப்பு வாரைத் துளாவி ஒற்றை ரூபாயின் நாணய வில்லையை எடுத்தவர்
“ம்” என்றவாறே என் உள்ளங்கையில் வைத்து அழுத்தினார். புத்தம் ப்திய வெள்ளை மினுங்கும்
நாணயம். நான் அதைப்பார்த்து விட்டு அவரது முகத்தைப் பார்ப்பதற்குள் அவர் தன் வலக்கண்ணில்
விழுந்த புருவத்தின் கனத்த ஒற்றை முடியை விலக்கியவாறே மேற்கொண்டு நடந்தார்.
ஜின்னை
வசியப்படுத்துவது போல, ஒரு பாறையில் துளையிட்டு நிழலைக் குதிரையாக மாற்றி கட்டி வைப்பதைப் போல பணத்தை தான் விரும்பியபடி தலையாட்ட
வைக்கும் மாயச்சொல் எதையும் பித்தாளப்பூட்டு தனக்குள் முடிந்து வைத்திருக்கிறாரா?
அவரைப் பொறுத்தவரை
வீதியில் கசங்கிக் கிடக்கும் காகிதத் துண்டும் பணமும் ஒரே நிறைதான்.அப்புறம் ஏன் அவர்
பிறரிடம் பணத்தைக் கேட்கிறார். பின்னர் அதை பொருட்படுத்த மாட்டேனென்கிறார்? அதுவும்
அவருக்கு இணங்கி நடக்கிறதா? அல்லது அச்சத்தில் கட்டுண்டு கிடக்கிறதா?
நூறு ரூபாய்த்தாளின்
அதிசயமே தீராதபோது அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தின் வரவு அவமானங் கலந்த வெட்கத்தையும்
மெலிதான படபடப்பையும் உண்டு பண்ணின. இருப்பினும் புதிய புதினமொன்று கிடைத்த கிளர்வில்
எதிர்மறை உணர்வுகள் கரைந்து விட்டன.
நாணயத்திற்குள்
ஒளித்திருக்கும் கறாமத்தை வெளியே எடுக்க என்ன செய்வது?
எனப் புரியாமல் இரயில் நிலையம் சென்றேன். திருச்செந்தூர் – திருநெல்வேலி பாசஞ்சர் இரயில்
வரும் நேரம். விண்ணதிர மண்ணதிர பனங்காட்டு பாசஞ்சரும் வந்து நின்று ஆட்களை ஏற்றிக் கொண்டு கறுப்புக்குள்
கறுப்பாக புறப்பட்டுச் சென்று விட்டது. அந்த
நாணய வில்லையை தண்டவாளத்தில் வைத்து எடுத்தேன். எதிர்பார்த்தது போல தண்டவாளத்திற்கு கீழோ மேலோ வடக்கேயோ
தெற்கேயோ புதினம் ஒன்றும் நடக்கவில்லை. வானமும் நிலமும் புரண்டு விடவில்லை.ஆறுமுகநேரி
இரயில் நிலையத்திலிருந்து இரயில் புறப்பட்டதற்கான ஊதலொலி காற்றில் அலைந்தலைந்து கேட்டது.
தண்டவாளத்தின்
பக்கவாட்டிலுள்ள கருங்கல் பரவலில் விழுந்து கிடந்த நாணய வில்லையின் தலை தஞ்சாவூர் உளுந்து
அப்பளத்தைப்போல நீள் வட்டத்தில் நீண்டிருந்தது. அதில் பொறிக்கப்பட்ட எதுவும் அழியவில்லை.
‘ருப்யா’ என்ற ஹிந்தி எழுத்தும் கோதுமைக்கதிர்களும் நாணயம் அச்சிட்ட வருடமும் இன்னமும்
பெரிதாகியிருந்தன.
அதை எடுத்து
உள்ளங்கையில் வைத்து பொத்தினேன்.குளிர்வது போன்று ஒரு தோன்றல். பின்னர் கன்னத்திலும்
எடுத்து ஒட்டிப்பார்த்தேன். அங்கும் அது இன்னும் குளிர்ந்தது.
ஏற்கனவே உள்ள
நூறு ரூபாய்கள் சேர்த்து இப்போது நான் பித்தாளப்பூட்டிற்கு நூற்றியொரு ரூபாய்கள் கடன்.
நேரில் அதை முடிக்க இயலுமா?அப்படி இயலவில்லையென்றால் மனாமில்
போய் சரி அடைக்க வேண்டியதுதான்.மனாமிற்குள்ளிலிருக்கும் வழிகளையும் அவரிடம்தான் கேட்டறிய
வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சொல் முதலி
உம்மா வாப்பா
-- தாய், தந்தை
ல் அழிந்தவர்
-- நிலையிலி
அவுலியா – இறை நேசர்
துஆ,பறக்கத் – இறை வேட்டல், அருள் வளம்
பிஸ்மியும் ஹம்தும் சலவாத்தும் – இறை துதி, நபி புகழ்
காக்கா –
அண்ணன்
விரசாக
–விரைவாக
சோமா?
– சுகமா?
ஜான்சு
– வரவேற்பறை. ‘லவுஞ்ச்’ என்ற ஆங்கில சொல்லின் திரிபு.
மொட்டன்
– முக்காலி
ஹால் -- நிலைமை. ‘காலம்’ என்ற பொருளிலும் பயன்படுத்துவதுண்டு
மூன்றாம் கத்தம்
-- நீத்தாரின் பெயரில் நாற்பது நாட்கள் வரை நடக்கும் குர்ஆன் ஓதலின் மூன்றாம் நாள் நிறைவு.
மாசி -- உலர வைக்கப்பட்ட சூரை மீன். இலட்சத்தீவிலும்
மாலத்தீவிலும் உண்டாக்கப்படுவது. தமிழகத்தின் கிழக்கு கடறகரையோர ஊர்களிலும் இலங்கையிலும்
உண்ணப்படுவது.
பலாய்
– சோதனை, கோள் என்ற பொருளிலும் பயன்படுத்துவதுண்டு
ஜிந்து
– நூலின் கட்டுகை, பைண்டிங்
ஜின் –
அனல் உயிரி, மனிதனுக்கு இணையான அருவ உலகத்தவர்.
கறாமத்
- அற்புதம்
அஸர்
– மாலைத் தொழுகை நேரம்
மனாம் --
கனா
No comments:
Post a Comment