காலனிய நீக்க எத்தனங்களுக்கு நம்மால் முயன்ற பங்களிப்பாக ஜிப்பாவுக்கு மாறும் முயற்சி. அதற்காக சந்தையில் கிடைக்கிற ஜிப்பாவை எல்லாம் போட போட்டுக்கொள்ள இயலாது அல்லவா!
துணி பருத்தியாக இருக்க வேண்டும். கைத்தறியாக இருக்க வேண்டும். விலையும் அடக்கமாக இருக்க வேண்டும்.இவையெல்லாம் ஒரு சேர கிடைத்தாலும் குறிப்பிட்ட முத்திரை விழுவதை தடுக்க ஜிப்பாவின் நீளமும் குறைவாக இருக்க வேண்டும்.
அப்படியான நீளம் குறைத்தலுக்காக ஜிப்பா நிபுணர் தையல் கடையை தேடினால் இரண்டு கடைகளை கைக்காட்டினர்.
ஒரு கடையில் பள்ளிக்கூட சீருடை தைப்பதில் மும்முரமாக இருந்தால் கை விரித்து விட்டனர். இரண்டாவது கடையை தேடி போனேன் . போன நேரம் முன்னிரவு. கடை பூட்டி இருந்தது . மறுநாள் நண்பகல் வேளை போனேன். அப்போதும் பூட்டி இருந்தது.
பக்கத்துக் கடைக்காரர்கள் சொன்னார்கள். நீங்கள் அதிகாலைப் பொழுதில் வந்தால் ஆளைப் பிடிக்கலாம் என்றனர்.
நான் மறுநாள் அதிகாலை எல்லாம் போகவில்லை. காலை ஏழு மணி இருக்கும் தேநீர் குடித்துவிட்டு தேடிப் போனால் கடை திறந்து இருந்தது. ஒற்றைப் பறவையாக வெள்ளுடையில் நின்று அளவெடுத்துக் கொண்டிருந்தார். சலாம் சொல்லிவிட்டு ஜிப்பாவை நீட்டினேன். சோப்பு கட்டி எடுத்து அளவைக் குறித்தார். அவரைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கும் போதே தைத்து மடித்து கையில் தந்து விட்டார்.
கேட்ட தகவல்கள் சுவையானவை. பெரியவரின் பெயர் முகமது இஸ்மாயில் வயது 71. கடையின் பெயர் ஈத் தையலகம்.
42 வயது வரை சென்னையில் தொழில் புரிந்திருக்கிறார். சென்னையின் பரபரப்பும் ஓசையும் வேகமும் அவருக்குள் ஒவ்வாமையை ஏற்படுத்த ஊருக்கு திரும்பி விட்டார்.
ஊரில் கடைகள் வைத்திருக்கிறார். முஅத்தின் வேலை பார்த்திருக்கிறார். இறுதியாக இந்த கடை வைத்திருக்கிறார். மிகவும் தாமதமாகத்தான் குழந்தை பேறு கிடைத்திருக்கிறது ஒரே ஒரு பையன். பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறானாம்.
மதரஸாவில் இருந்தும் குறிப்பிட்ட ஒர் ஜமாத்தில் இருந்தும் அவருக்கு கோரல்கள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன.
தஹஜத்துடைய(பின்னிரவு) நேரத்தில் சேவலை முந்திக்கொண்டு எழுந்து விடுவார். வீட்டில் தஹஜ்ஜுத்தை தொழுதுவிட்டு கடையை நான்கு மணிக்குள் திறப்பார். புலரித் தொழுகைக்கான அதானுக்குப் பிறகு பள்ளிவாயிலில் கூட்டாக தொழுகை யை நிறைவேற்றிவிட்டு வெளியில் போய் தேநீர் அருந்ததியதற்குப்பிறகு தையல் தொழில் தொடரும். முன்பகல் 11:30 மணி வரைக்கும் கடை திறந்திருக்கும். " கிட்டத்தட்ட. எட்டு மணி நேரம் கணக்கு சரியா? என்றபடி என்னை பார்த்து சிரித்தார் பெரியவர் இஸ்மாயில்.
அவர் அந்த நேரத்தில் கடை திறக்கும் காரணம் கேட்டேன் "அது இறைவனுக்கும் நமக்குமிடையேயான தனிப்பட்ட உரையாடல் நடக்கும் நேரம்" என்றார்.
No comments:
Post a Comment