Wednesday 21 June 2023

மஃபர் மலபார் (தமிழ்நாடு கேரள) கூட்டிணைவு நிகழ்வுகள்





கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை & ஆய்வு இருக்கையில், இஸ்லாம்& சமூகம் குறித்த பட்டய வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர்களும்,போதனாசிரியர்களும், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வரலாற்றுத்துறை, அரபுத்துறை பேராசிரியர்களுமாக 29 பேர், கடந்த 17,18/ 06/2023 சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் மேலப்பாளையம், காயல்பட்டினம் பகுதிகளுக்கு வருகை தந்தனர்.

வரலாறு, மானிடவியல், சமூகவியல் துறைகளில் பட்ட மேற்படிப்பு & முனைவர் பட்ட ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் இவர்களுடைய வருகையின் நோக்கம்:- தமிழ் இஸ்லாத்தின் தடங்கள் குறித்த பார்வைக்கும் எதிர்கால ஆய்வுகளுக்கான ஒருமுனைப்படுத்தலுக்குமாகும்.


போர்த்துக்கீசியர்களின் அழிச்சாட்டியத்தில் மங்கிய அர்வி( அறபுத்தமிழ்) மொழிக்கு புத்துயிரூட்டிய ஹாஃபிழ் அமீரப்பா (ரஹ்) நினைவிடம், தற்போதைய காயல்பட்டினத்தின் தொடக்க நிலமான கௌது முறை என்றழைக்கப்படும் கோஸ் மறை – கறுப்புடையார் பள்ளி வளாகம், சதக்கத்துல்லாஹில் காஹிரி(றஹ்) அவர்கள் தர்ஸ் நடத்திய மஸ்ஜிது மீக்காயில் என்ற்ழைக்கப்படும் இரட்டை குளத்து பள்ளிவாசல், காயல்பட்டினத்தின் முதல் பள்ளிவாசலான பெரிய குத்பா பள்ளிவாசல், வரலாற்று நாயகர்களின் மண்ணறைகள் அடங்கியுள்ள பெரிய பள்ளி மய்யித்துக்காடு, தனது ஆசிரியர் திருவடிக்கவிராயரின் அறைகூவலையேற்று நபி பெருமானார் ( ஸல்) மீது ‘ திருப்புகழ்’ என்ற புகழ்மாலை பாடிக்காட்டிய வரகவி காசிம் புலவர் நாயகம் ( றஹ்) நினைவிடம், பதநீர், சுண்ணாம்பு, கடுக்காய், கோழி முட்டை கலவையினால் கட்டப்பட்ட கட்டிட அற்புதமான தூண்களில்லாத குவி மாட மஹ்லறா, அல்லஃபல் அலிஃப் அறபி இலக்கண நூலை யாத்தளித்த உமர் அல் காஹிரி (றஹ்), முஸ்லிம்களிடையே அத்வைத கோட்பாட்டு தாக்கத்தை முறியடிப்பதில் மகத்தான பங்களித்த தைக்கா சாஹிபு( றஹ்) ஆகியோரின் நினைவிடங்களை அவற்றிற்குரிய வரலாற்று குறிப்புகளுடன் தரிசிப்பு.


காயல்பட்டினத்தின் உணவு பண்பாடு, அன்றாட வாழ்க்கை முறை எழுதி வரும் அப்பா பள்ளி தெருவைசார்ந்த சுமய்யா முஸ்தஃபா, காயல்பட்டினத்தின் இளைய தலைமுறையை மரபு வழி, கைவினை, சூழலியல் துறைகளில் பயிற்றுவித்து வரும் தைக்கா தெருவில் அமைந்துள்ள அபத்தி நிறுவனத்தின் நிறுவனர் ஜாரியா அஜீஸ் ஆகியோருடன் உரையாடல்,, ஹாமிதிய்யா பைத்துஸ்ஸபா ஆசிரியர்கள், மாணவர்களுடனான நேரம்.


மஅபர் பகுதியான காயல்பட்டினத்தின் நல்லோர்களான ஜைனுத்தீன் மக்தூம் (றஹ) உள்ளிட்ட முன்னோர்கள் மலபார் மண்ணுக்கு அளித்த மார்க்க, பண்பாட்டு, சமூகக் கொடைகள்,மாப்பிளா பாட்டின் பிதாமகன் மொயின் குட்டி வைத்தியர் காயல்பட்டினத்தின் பாக்களை மாலைகளை தனது பாடல்களில் உட்படுத்தியது, போர்த்துக்கீசியர்களிடமிருந்து காயல் மண்ணை காக்க கேரளத்திலிருநது வந்து இரத்த சாட்சியங்களான குஞ்ஞாலி மரைக்காயர்களின் தீரம், மொழிவாரி மாநிலப்பிரிவினை உள்ளிட்ட மக்களை பிளக்கும் அபத்தங்களினால் மஅபர் மலபாரின் இணைந்த வரலாற்றை பிரிக்க இயலாது, மலையாளத்தின் வேரான தமிழை கற்க வேண்டிய அவசியம், காலனியத்தை எதிர்த்த இரு நிலங்களின் கூட்டு வரலாற்று நினைவுகளை நிகழ்கால ஆக்கிரமிப்புகளுக்கெதிராக எப்படி பொருத்தி புரிந்து கொள்வது என உரையாடல்கள் நடந்தேறின.


மொத்த வருகையின் மணி மகுடமாக, கத்தீப், ஹாஃபிழ் ஆலிம், ஹெச்.ஏ. அஹ்மது அப்துல்காதிர் மஹ்ழரி அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் முஅஸ்கருர்ரஹ்மான் மகளிர் அறபுக்கல்லூரி மாணவியர்களின் அறபு, அர்வி, மலையாள பாக்கள், உரைகள், சின்னஞ்சிறாரின் குர்ஆன் ஒப்புவித்தல் நிகழ்வுகளோடு புதிய ஆய்வுகளுக்கான திறப்புக்களுடனும் , கோழிக்கோடு பல்கலைக்கழகம், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வரலாற்று& அறபு துறை பேராசிரியர்கள், காயல்பதி வரலாற்றுக் குழுமம் ஆகியோரின் வழிகாட்டுதலிலும் ஒருங்கிணைப்பிலும் மலபார் இளவல்களின் கல்விப்புல பயணம் இனிதே நிறைந்தது.

எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!

ஓளிப்படங்கள் : Leyyin Faizal




No comments:

Post a Comment