Tuesday 30 May 2023

நெய்னார் மரைக்காயர் குடும்ப சங்கம உரை

 



அஸ்ஸலாமு அலைக்கும்!

வரலாற்று சிறப்பு மிக்க இந்த அவையில் நம்மை ஒன்றிணைத்த எல்லாம் வல்ல றப்புல் ஆலமீனுக்கு நன்றிகளையும் துதிகளையும் முதலில் உரித்தாக்குகிறேன்.

ஆலுவா டவுன் ஹாலில் நடக்கும் நமது  நெய்னார் மரைக்காயர் குடும்ப சந்திப்பிற்கும் நெய்னார்கள் வரலாறு புத்தக வெளியீட்டிற்கும் என்னை அழைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் நெய்னார்கள் வரலாற்று  நூலாசிரியர் அருமை நண்பர் மன்சூர் நெய்னாருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.


கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்திருக்கும் கல்வி, மார்க்க,ஆன்மீக, வரலாற்று துறை சார் ஆளுமைகளையும் நெய்னார், மரைக்காயர் குடும்பங்களையும் இச்சமூகங்களின் பிரதிநிதிகளையும் மனமார வாழ்த்தி வரவேற்கிறேன்.

எனது தாய் மொழி தமிழாக இருப்பதால் இந்த உரையை மலையாளத்தில் மொழியாக்கி  தமிழ் எழுத்துருவில் எழுதிதான் வாசிக்கிறேன். எனவே. எனது மலையாள உச்சரிப்பில் உள்ள பிழைகளை அவையோர் பொறுக்க வேண்டும்.

நெய்னார்களின் ஆதி நிலமான காயல்பட்டினத்திலிருந்து  அதாவது மஃபரிலிருந்து வருகிறேன். எனது தந்தையின் தாய் வழியில் நானும் நெய்னார்தான். காயல்பட்டினத்தை ஆண்டிருந்த சுல்தான் ஜமாலுத்தீன் அவர்களின் தலைமுறையில் வந்த கடைசி பட்டத்து நெய்னார் பிறந்த வீட்டில் எனது பிறப்பும் நடந்தது. அதுதான் எனது வாப்பாவின் வீடும் கூட. அவ்வீட்டின் பெயர் நெய்னார் ஹவுஸ். அவ்வீடு இருக்கும் தெருவின் பெயர் அம்பல மரைக்காயர் தெரு.

ஆலுவாவில் இங்கு நீங்கள் நெய்னார் மரைக்காயர் சங்கமம் கூடுவதற்கு முன்னரே எனது தெருவும் வீடும் நெய்னார் மரைக்காயர் சங்கமமாகத்தான் நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.

இங்கு கொச்சியில் நெய்னாமார் என தனியாக பெயரிட்டு அழைப்பது போல் நாங்கள் எல்லோருக்கும் காயல்பட்டினத்தில் அழைத்துக் கொள்ளாவிட்டாலும் நெய்னார் என்ற பின்னொட்டுடன் பெயரிடுவதுண்டு.. நீங்கள் ‘ர்’ ஐ விட்டு விட்டு நெய்னா என போட்டுக் கொள்வீர்கள். நாங்கள் தமிழ் நொழி வழக்குப்படி ‘ நெய்னார்’ என்றுதான் அழைப்போம். பிரபு,, எசமான்,மதிப்பிற்குரியவர் என அதற்குப்பொருள் கொள்ளலாம்.. தமிழ் சமணர்களுக்கும்’ நெயினார்’ என பெயருண்டு.

மலபாரின் நெய்னார்களுக்கும் மரைக்காயர்களுக்கும் வேர் நிலம் மஃபராகும். அதாவது தமிழ் நாட்டின் குலசேகரபட்டினம் முதல்  நாகூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரையோர பகுதியாகும். நெய்னார், பிரபு,மரைக்காயர்,சாளை எல்லாம் ஒரே வரலாற்று தொடர்ச்சியின் கண்ணிகள்தான்.

கேரளத்தோடு எனக்கு முப்பது வருட கால தொடர்பு உண்டென்றாலும் அது ஆன்மீக, வரலாற்று திசையின் பக்கம் திரும்பியது இரண்டாம் ஜைனுத்தீன் மக்தூம் மஃபரி ( ரஹ்) அவர்கள் இயற்றிய துஹ்ஃபத்துல் முஜாஹீதீன் நூலை வாசித்த பிறகுதான்.

அலீ இப்றாஹீம் மரைக்காயர் , காழி அஹ்மது மரைக்காயர், அவரது சகோதரர் குஞ்ஞு அலீ மரைக்காயர் (இவர் முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் என்றும் கூற்றுண்டு)ஆகியோரடங்கிய படையினர் நாற்பத்தியிரண்டு கப்பல்களில் காயல்பட்டினத்திற்கு வரும் வழியில் புத்தளம் என்னுமிடத்தில் போர்த்துக்கீசியர் அவர்களை  ஷஹீதாக்கினர். இது நடந்தது ஷஅபான் மாத இறுதி ஹிஜ்ரி 944. அதாவது பொஆ 1538.

காயல்பட்டினத்தை அதாவது மஃபர் கரையை  ஆக்கிரமித்திருந்த போர்த்துக்கீசியருக்கெதிராக பொருதிட மலபாரிலிருந்து வந்த குஞ்ஞாலி மரைக்காயர்கள் இரத்த சாட்சியமாகி இன்றுடன் ஹிஜ்ரி கணக்கின்படி சரியாக ஐந்நூறு வருடங்களும் இரண்டரை மாதங்களுமாகின்றன.

இறைவனின் ஏற்பாட்டின்படி பொருத்தமான தருணத்தில்தான் கூடியிருக்கிறோம். காயல்பட்டினத்தை காக்க குஞ்ஞாலி மரைக்காயர்கள் செய்திட்ட உயிர்க்கொடைதான் என்னை மஃபர் மலபார் இணைப்பின் உறவின் பக்கம் திருப்பியது.

இந்த திருப்பத்தை இன்னும் வலுவாக்கியது பஷீர் நெய்னார், அஷ்ரஃப் நெய்னார், மன்சூர் நெய்னார், இர்ஷாத் சேட் ஆகியோர் அடங்கிய குழுவினர் தங்களின் நெய்னார் வேர்களை தேடி காயல்பட்டினத்திற்கு 2019 ஆம் ஆண்டில் வந்த போது அவர்களுக்கு அவர்களின் மூதாதையர்களை மறைந்த எனது தமிழாசிரியரும் வரலாற்றாய்வாளருமான ஆசிரியர் அபுல் பறக்காத் காட்டித்தந்த தருணம்தான்.

நெய்னார், மரைக்காயர்களின் ஆதி நிலத்திலிருந்து வரும் பிரதிநிதி நான் எனும்போது எனது எடையில் ஒரு வரலாற்றுக்கனம் கூடித்தான் போகிறது.

இது போன்ற சந்திப்புகள் கூடுதல்  தேவைப்படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அடையாளங்களையெல்லாம் பெருஞ் சட்டி ஒன்றில் போட்டு உருக்கி திரட்டி மொத்த உருண்டையாக்க சொல்கிறது இங்குள்ள நாஜிசம். மறுபுறமோ அடையாளங்களை தனித்தனி திட்டுகளாக்கி மொத்த மானுடத்திலிருந்து தன்னை துண்டித்துக் கொள்வதும் நடக்கிறது.

நெய்னார்கள், மரைக்காயர்கள் என நாம் நம்மை அழைத்துக் கொள்வது, நமது  மரபுக்கொடியை அறிவது, அதைக் கொண்டாடுவது போன்ற விடயங்கள் எல்லாம் பரிணாம வளர்ச்சியின் மேல் நோக்கிய பாதையில் பயணிக்கும் வரைக்கும் மட்டுமே நல்ல விடயங்களாக நீடிக்கும்.

நெய்னாரும் மரைக்காயரும் இல்லாத ஒருவன் நம்மிலிருந்து தனிமைப்படுவதற்கு நமது பெருமித உணர்வுகள் வழி வகுக்குமானால் உறுதியாக அது அறியாமையின் பாதைதான்.

இந்திய மண்ணில் இஸ்லாத்தின் வருகைதான் எல்லா மனிதர்களையும் போல நெய்னார்களுக்கும் மரைக்காயர்களுக்கும் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் வழங்கியது. அது நம்மை முதலில் முஃமின்களாக்கியது. பின்னர் அந்த ஈமான்தான் நம்மை நோக்கி பூமியை வளப்படுத்தி கட்டியெழுப்பவும் அநீதியை பொறுக்காதீர்கள் எனவும் வழிகாட்டியது.

அவ்வழியினூடே வணிகர்களும் கடலோடிகளுமாக இருந்த நமது முன்னோர்கள் நடந்ததினால்தான் அவர்களை காழிகளாகவும் காஜிகளாகவும் மாற்றி வரலாற்றின் உன்னத இடத்தில் கொண்டு வந்து வைத்தது.

நமது வேர்களின், மரபுகளின் நினைவுகளை போற்றுவதென்பது காலத்தின் தேவை. அந்த நினைவுகளின் தாழ்வாரம்தான் புதிய செயல்கள், சாதனைகளுக்கான ஏவுதளமும் கூட என்பதை நம் மறக்கக் கூடாது.

வெளியிலிருந்து அடர்ந்தேறிய போர்த்துக்கீசிய, டச்சு,ஃப்ரெஞ்சு,பிரிட்டிஷ் காலனியாதிக்க வன்முறையாளர்கள் இம்மண்ணின் மைந்தர்களும் உள்நாட்டு வணிகர்களுமான நம்மை பார்த்து ‘ கள்ளக்கடத்தல்காரர்கள் ‘ என பட்டஞ்சூட்டினர்.

இன்று காலச்சக்கரம் அதே திசைக்கு திரும்பியுள்ளது.  நமது பிறப்பிற்கு சான்றிதழ் கோரப்படுகிறது. குடியுரிமை அய்யமாக்கப்படுகிறது. காலனியாதிக்கத்தின் உள்நாட்டு வடிவமானது நம் தலைகளின் மீது காரிருளாக கவிழ்ந்திறங்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வரலாற்றின் இந்நெருக்கடியான சந்தியில் ஏனைய மானுடர்களுடன் நெய்னார்களும் மரைக்காயர்களும் நீதியின் பக்கமும் உண்மையின் பக்கமும் நிற்க கடமைப்பட்டுள்ளோம்.

ஆலுவாவில் இதோ நடந்து கொண்டிருக்கும் நெய்னார்கள் மரைக்காயர்களின் இக்குடும்ப சங்கமமானது பொது கடமைகளுடன் கூடவே உறவுகளின் புதிய கதவுகளையும் திறக்க வேண்டும். புதிய மண உறவுகள், வணிக உறவுகள், சமூக பொறுப்புகளின் அடிப்படையில் இம்முயற்சி அமையலாம்.

மலபார் மஃபர் இணைப்பின் கண்ணியென்பது நெய்னார் மரைக்காயர்களோடு மட்டும் நின்று விடவில்லை. வணிகர்களும் கடலோடிகளுமான மரைக்காயர்களை இந்தியாவின் முதல்  கடற்போர் தளகர்த்தர்களாக மாற்றிய பெருமை முதலாம் ஜைனுத்தீன் மக்தூம் மஃபரி(ரஹ்) அவர்களைச்சாரும்.

அன்னாரின் வழி வந்தவர்களாக “மக்தூமிகள்” என தங்களை அழைத்துக் கொள்வோர் கோழிக்கோடு, மஞ்சேரி உட்பட மலபாரின் இதர பகுதிகளிலும்  வருகின்றனர். காயல்பட்டினத்திலும் மக்தூம் என்ற பெயரில் தெருவொன்று உள்ளது.இது தொடர்பிலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

தமிழ் நாட்டின் பழவேற்காட்டிலிருந்து தேங்காய்ப்பட்டினம் வரையுள்ள மஃபரின் வேர் நிலங்களுக்கு   நெய்னார்கள் மரைக்காயர்கள் உள்ளிட்ட கேரளியரும் பூவாற்றிலிருந்து காசர்கோட்டையும் தாண்டியுள்ள மலபார்பகுதிகளுக்கு தமிழ் நாட்டவரும் வரலாற்று பண்பாட்டு ஆன்மீக தேடல்களுடன் கூடிய பயணங்களை நடத்திட வேண்டும். வரலாற்றின் புதிய தலைப்புக்களில் ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

நம்மை ஆக்கிரமித்த காலனியாதிக்கவாதிகளான போர்த்துக்கீசிய டச்சுக்காரர்களின் ஆவணங்கள் துருவி துளாவப்படும்போது இது வரை அறியப்பட்ட மலபார் மஃபர் வரலாற்றில், புதிய திசைகள் திறக்கக்கூடும்.. ஏனெனில் போர்த்துக்கீசிய அட்டூழியங்களைப்பற்றி துஹ்ஃபத்துல் முஜாஹிதீன் ஆவணத்திற்குப்பால் இதைப்பற்றி விரிவாக பேசிடும் ஆவணங்கள், வரலாற்று நூல்கள் இருப்பதாக தெரியவில்லை.

நமது தேவைகளும் விருப்பங்களும் ஏராளமானவை.  நம்பிக்கையின் கிரணங்கள் இறைவனருளால் கொஞ்சங்கொஞ்சமாக வடிவங்கொள்ளத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டிலிருந்து வரலாற்று பண்பாட்டு ஆன்மீக தேடலுடன் கூடிய இரண்டு பயணங்களை கடந்த மூன்று வருடங்களில் மலபார் மஃபர் கூட்டிணைவு, ரிஹ்லா என்ற பதாகைகளின் கீழ் கேரளத்தில் மேற்கொண்டிருக்கிறோம். அவற்றில் கிடைத்த பட்டறிவுகளை நூலாகவும் ஆக்கியுள்ளோம். இப்பயணங்கள் இனியும் நடக்கும் இன்ஷா அல்லாஹ்!

கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களும் ஊடகவியலாளர்களும் ஆய்வாளர்களும் மலபாரிலிருந்து காயல்பட்டினத்தை நோக்கி அண்மைக்காலமாக கூடுதலாக வரத் தொடங்கியுள்ளனர். இந்த செய்திகள் நமக்கு நம்பிக்கையும் தெம்பையும் அளிக்கின்றன.

நமது வரலாற்றுடன் மரபு செல்வங்களும் அறபு மலையாளம், அர்வி எனப்படும் அறபுத்தமிழ் மொழிகளில் கொட்டிக் கிடக்கின்றன.

மலையாள மொழியின் தந்தை துஞ்சத்து எழுத்தச்சன் அத்யாத்ம இராமயணத்தை உருவாக்குவதற்கு முன்னரே கோழிக்கோடு குற்றிச்சிறவில் மறைந்து வாழும் காழி முஹம்மது(றஹ்) அவர்களால் அறபு மலையாளத்தில் இயற்றப்பட்ட முஹ்யித்தீன் மாலைதான் கேரளத்தின் முதல் காவியமாகும்..கேரள இலக்கிய உலகில் நம் முன்னோர்கள் முன்னோடிகளாக திகழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் இதுதான் நிலை, விரிவஞ்சி நான் விவரங்களுக்குள் செல்லவில்லை.

இத்தனை சீரும் சிறப்பும் மிக்க  நமது ஆன்மீக, இலக்கிய தொன்மங்களில் பொதிந்துள்ள கதையாடல்களும் வரலாற்றுக் குறிப்புக்களும்  தனியே மலையாளத்திலும்  தமிழிலும் தொகுக்கப்பட வேண்டும். அங்ஙனம் செய்யும்போது புதிய கருவூலங்கள் தங்களை திறந்து காட்டும்.

அப்படி தொகுக்கப்படும் நூல்களை எங்கள்  சீர்மை பதிப்பகத்தின் சார்பாக தமிழில் கொண்டு வர அணியமாகவுள்ளோம் இன்ஷா அல்லாஹ் என்பதையும் அவையினருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது வேர்களும் விழுதுகளும் இரு நிலங்களிலும் விரவி கிடக்கின்றன. கேரளியர் அறபு மலையாளத்துடன் தமிழையும் தமிழ்நாட்டவர் அறபுத்தமிழ் மொழியான அர்வியுடன் மலையாளத்தையும் கற்கவும் பரப்பவும்  நமது குடும்ப, மார்க்க, பண்பாட்டு நிகழ்வுகளில் பொதுப் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட வேண்டும்.

தமிழை தாய்மொழியாக கொள்ளாதவர்களுக்கெனTAMIL VIRTUVAL ACADEMY என்ற இணைய நிறுவன செயலி வழியாக இணைய வழி பயிற்சி பாடத்திட்டங்களை கடந்த வருடம் முதல்  தமிழ் நாட்டரசு செய்துள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ள விருப்பமுள்ளவர்களைஅழைக்கிறேன்.

புதிய மண உறவுகள், வணிக உறவுகள், இலக்கிய உறவுகள் என இரு மாநிலத்தவரிடையே முகிழ்த்திட இந்த நெய்னார் மரைக்காயர் குடும்ப சங்கமம் உதவட்டுமாக!

சிலஆண்டுகளாக உழைத்து நெய்னார்களின் வரலாற்றை தொகுத்துள்ல அருமை நண்பர் மன்சூர் நெய்னாருக்கு என் அன்பு.

வ ஆஹிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்.

1 comment:

  1. ஆஹா அருமை காக்கா.. படிக்கும்போதே நம்முடய தொன்மை தெரிகிறது... உங்களை போன்றோர்கள் தான் எங்களை போன்ற சிரியவர்களுக்கு வரலாற்றின் பக்கம் சற்று பார்வையை திருப்பி விடுகிறீர்கள்..♥️🤲

    ReplyDelete