Wednesday 29 March 2023

தோந்நிய யாத்திரா – பண்பாட்டின் வேர்களைத் தேடிய பயணங்கள் --- இன்ஸாப் ஸலாஹுதீன்



சாளை பஷீரின் தோந்நிய யாத்திரா (தோன்றிய பொழுதின் பயணங்கள்), பயணங்களின் வழியே நிலங்களை, பண்பாடுகளை, மனிதர்களை, இயற்கையை,வரலாற்றைப் பேசுகின்ற அவரது சமீபத்திய நூல்.

பன்னிரண்டணா சுல்தான், கசாக்கின் இதிகாசம், நாகூர், பொன்னானி, கொண்டோட்டி, மம்புரம் தங்ஙள், திருவனந்தபுரம் ஆகிய ஏழு கட்டுரைகள் உள்ளடங்களாக தேர்வு செய்யப்படாத பாதை எனும் மொழிபெயர்ப்புக் கவிதையுடன் சீர்மை வெளியீடாக கடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது இந் நூல். அவரது எழுத்துக்கள் நூலுறுப் பெறுவதில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சிதான். ஒரு எழுத்தாளனுக்கு உலகிலுள்ள எல்லா வஸ்த்துக்களையும் விட அவனது நூல்தான் உயர்ந்த சொத்து.
இக்கட்டுரைகளை எழுதப்பட்ட காலங்களில் வாசித்திருந்தாலும் மொத்தமாகச் சேர்த்துப் படிக்கின்ற போது இந்த நூல் தருகின்ற அனுபவமும் அறிவும் வித்தியாசமானது.
“கைவசம் இருக்கும் ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகளை வாழ இரண்டே வழிகள் தான் நம்மிடம் உள்ளன. ஒன்று புத்தகங்கள். மற்றது பயணங்கள். சமூகப் பணிக்காக, வணிகத்திற்காக, பயணத்திற்காக, என்று கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு வருபவர் சாளை பஷீர்.

இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள அவரின் பயணக் கட்டுரைகள் நம்மையும் சஞ்சரிகளாக சொல்லி உந்துகின்றன.வாருங்கள் அவருடன் ஒரு பயணம் கிளம்புவோம்.“ என நூலின் பின்னட்டையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் நூலுக்கான கடவுச் சொல்போல நம்மைத் திறந்து கொள்ளச் செய்கிறது.

பஷீர் தன்னுடைய எழுத்துக்களில் எப்போதும் நம்மையும் அவரோடு அழைத்துச் செல்பவர். அவர் பயணப்படுகின்ற நிலத்தை, பண்பாட்டை, மனிதர்களை நோக்கி அவரது எழுத்தின் வழியே வாசகனையும் அழைத்துச் செல்கின்ற சக்தி அவரது எழுத்துக்களுக்கு இருக்கின்றது.

அவரது பயணத்தின் நோக்கங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவையாக இருப்பதுதான் அதற்கான காரணம். “பூமியில் நீங்கள் சுற்றித் திரியுங்கள்“ என்ற அல்குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப பஷீர் தன்னைச் சூழ உள்ள நிலங்களில் அர்த்தங்கள் நிறைந்த பல பயணங்களை கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொண்டு வருபவர்.
பொழுதுபோக்குக்காக, உல்லாசத்திற்காக மனிதர்கள் பயணப்படும் உலகில் தான் பயணப்படும் நிலங்களில் இருக்கும் மானுடத்தின் ஈரத்தைத் தேடியே அவரது பயணங்கள் அமைந்திருக்கின்றன.அந்த ஈரம் வரலாற்றின் நதிமூலத்திலிருந்து நிகழ்காலத்தின் வரட்சியை நனைப்பதற்கு சக்திவாய்ந்தது.
வைக்கம் முஹம்மது பஷீரில் தொடங்கிய பயணம் பூவாறு பாரூக் காக்கா எனும் நல்ல மனிதருடைய நினைவோடு நிறைவு பெறுகிறது.

மொத்தத்தில் மனிதர்களின் சங்கிலித் தொடரால் பின்னப்பட்ட நூலிது. வைக்கம் முஹம்மது பஷீர், ஓ.வி. விஜயன், நாகூர் ஷாகுல் ஹமீது நாயகம், குஞ்ஞாலி மரைக்காயர், அஷ்ஷெய்க் ஸைனுத்தீன் மக்தூம், மகாகவி மொயின் குட்டி வைத்தியர், மம்புரம் தங்ஙள் என நூல் முழுக்க மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள்.ஒவ்வொருவருக்கும் வரலாற்றுடன் இருக்கும் தொடர்பையும் பண்பாட்டின் செழுமைக்கு அவர்கள் ஆற்றிய பணிகளையும் பயணங்களுக்கு அப்பால் பஷீர் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
அந்த மனிதர்கள் தம் வாழ்காலங்களை தம் மகத்தான பணிகளால் எப்படி நீட்டிக் கொண்டார்கள் என்பதையும் நிலம் கடந்து தம் கனவுகளை எப்படி வாழ வைத்தார்கள் என்பதையும் பயணத்தின் வழியே பஷீர் சித்தரிக்கும் விதம் இந்த நூலை இன்னும் கனதியாக்குகிறது. அந்த மனிதர்களின் வழியே கடந்த காலத்தை அவர் நம் கண் முன் நிறுத்துகிறார்.அக் காலம் பஷீரின் சொற்களின் வழியே உயிர்த்தெழுகிறது.
மலபாரின் அறியப்படாத கதைகளை, மூதாதையரின் வீரதீரச் செயல்களை, பண்பாட்டின் அடர்த்தியை,முஸ்லிம் வாழ்வியலின் தடயங்களை தோந்நிய யாத்ரா அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டும் நுல். ஒவ்வொரு கட்டுரையிலும் படங்கள் இணைக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
தோந்நிய யாத்ரா வெறுமனே பயணக் கட்டுரைகள் அல்ல. மாறாக வரலாற்றை,பண்பாட்டை,கலாசாரத்தை ஒற்றைப் புள்ளியில் சேகரமாக்கும் வாழ்வியல் பதிவுகள்.
"பயணம் உங்கள் வாழ்க்கையில் சக்தியையும் அன்பையும் மீண்டும் கொண்டு வருகிறது." என்றார் ரூமி. பஷீரின் பயணங்கள் அதைச் செய்வதாகத் தோன்றுகிறது.

இன்ஸாப் ஸலாஹுதீன்

No comments:

Post a Comment