Sunday 15 January 2023

எஸ் எல் எம் ஹனீஃபா - இலங்கையின் வைக்கம் பஷீர் --- எதிர்வினை கடிதம்

 எஸ் எல் எம் ஹனீஃபா - இலங்கையின் வைக்கம் பஷீர்  ---  இக்கட்டுரைக்கு எஸ் எல் எம் ஹனீஃபா குரல் பதிவின் எழுத்து வடிவம்


அன்புள்ள பஷீர்!

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த அதிகாலை வேளையில் இப்படி ஒரு உரையை அல்லது கடிதத்தை ஒலி மூலம் அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்

என்னைப்பற்றி கொஞ்சம் கூடத்தான் நீங்கள் புகழ்ந்து விட்டீர்களோ என்று எண்ணுகிறேன்.

நான் ஒரு சாதாரண சராசரி குடும்பத்தில் பிறந்தவன். எனது தகப்பனார் அதிகாலை  நான்குமணிக்கு எழுந்து விடுவார், ஊரிலிருந்து  எட்டு கிலோமீட்டருக்கு அப்பால்தான் வங்காள விரிகுடா கடல் இருக்கிறது. அங்குதான் கரவலையில் பிடிபடும் மீன்களை வாப்பா கூடையில் காவி கொண்டு வருவார். நானும் வெள்ளாப்பில் எழுந்து விடுவேன். எனது ஏழுவயதில் தொடங்கிய அந்த பழக்கம் எழுபத்தொன்பது வயதிலும் தொடர்கிறது.

பாடசாலை விட்டு வந்ததும் பன்னிரண்டு மணியளவில் வாப்பாவுக்கு இடைவெளியில் தீச்சோரு கொண்டுபோவோம், கட்டுச்சோரு பிள்ளைகனியில் சோற்றை பரப்பி அதனுள்ளே மீன் துண்டங்களும் முட்டையும் பொரித்து வைத்து கூட ஏதாவது ஒரு சுண்டலும் இருக்கும்.கமகவென்று அந்தச் சோறு மணக்கும், அப்படியே கட்டின அந்தச் சோறு சுடச்சுட இருக்கும்.

வாப்பா வரும் வழியில் பென்னம்பெரிய ஒரு நாக மரம் இருக்கிறது,  அந்த வெம்புக்காட்டில். அந்த மரநிழலில் இருந்து வாப்பாவும் சகபாடிகளும் சாப்பிடுவார்கள். வாப்பா சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் மிச்சத்தை தருவார். வாப்பா சாரனுடுத்து மடித்து கட்டியிருப்பார். வாப்பா  காரிக்கன் துணியில் பெனியன் தைத்து சட்டையாக போட்டுக் கொள்வார்.

நான் வாப்பா பக்கத்தில் இருப்பேன். வாப்பாவின் வேர்வை நாத்தத்தில் உப்பு கலந்திருக்கும். நான் மூசு மூசுவென்று அந்த நாத்தத்தை உள் வாங்குவேன். வாப்பாவின் உடலிலுள்ள உப்பு நாத்தம் எழுபத்தொன்பது வயதிலும் என் நாசி துவாரங்களில் மணக்கிறது. அப்படி ஒரு வாப்பா, அப்படி ஒரு உறவு, அப்படி ஒரு மணம்.

உங்கள் எழுத்திலும் அந்த மணம் தெரிகிறது. நீங்கள் என்னை ஒரே ஒரு சந்திப்பிலும், என்னை பற்றிய அந்த நூலிலும் மண்ணும் மணமும் முழுமையாக உணர்ந்திருக்கிறீர்கள், உள்வாங்கியிருக்கிறீர்கள், ஈடுபாடோடு என்னை நெருங்கியிருக்கிறீர்கள்., நான் யார் என்பதை அறிந்திருக்கிறீர்கள்.

என்னையிழைத்து இருக்கிற மக்கள், ரொம்ப ஏழை மக்கள், பாவப்பட்ட மக்கள். அவர்களுக்கு கல்வியறிவும் போதாது, மார்க்க அறிவும் போதாது. உங்களூரைச் சேர்ந்த மூதாதையர்கள் தான் எங்களுரில் பள்ளிவாசலையும், மதரசாக்களையும் அமைத்தனர்..

என்னை பற்றி இவ்ளோ தூரம் நீங்கள்  எழுதியிருக்கிறீர்கள், என்னை சுற்றி இருப்பவர்கள். மிகவும் பாவப்பட்ட ஏழை எளிய மக்கள். இப்பொழுது எல்லோரும் வசதி வாய்ப்போடு ஓரளவு இருக்கிறார்கள். நான் பிறந்த 1940 களில் வறுமைஇல்’ என்று தலைவிரித்து ஆடியது. அந்த வறுமைக்குள், அந்த நெருப்புக்குள் இருந்துதான் நானும் வந்தேன்.

எனக்கு இந்த சமூகத்தை பார்க்கும் தன்மையை யார் தந்தார்கள்?. இந்த ஏழை எளிய மக்களை கண்டு கண்ணீர் வடிக்கும் எண்ணத்தை யார் தந்தார்கள்?. என்னுடைய கதையின் மாந்தர்கள் எல்லோரும் பாவப்பட்ட எளிய மக்கள்.

 என்னை பற்றி நண்பன் அறபாத் எழுதிய நூலை அறபாத் கொண்டு வந்த அந்த மலரில் பல நண்பர்களும் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல் கருணாகரன் அவர்களும் சப்றி அவர்களும் எழுதிய இரண்டு கட்டுரைகள் தான் எனக்கு பிடித்தமானது.

ஆனாலும் நான் இங்கே ஒன்றை பதிவு செய்ய வேண்டும். நாம் விரும்பிய வண்ணம் அந்த நூல் வரவில்லை. அது புத்தக வடிவில் வரவேண்டும் என்று நம்பினேன் அது முடியாமல் போனது.

கடந்த இரண்டு நாட்களாக கைவலி கூடிவிட்டது. அதிகாலை எழும்பியதினால் இந்த பனிக்கு இருமலும் பிடித்துவிட்டது.

 நூலை நீங்கள் முழுமையாக வாசித்திருக்கிறீர்கள். ஜெயமோகன் தன்னுடைய பக்கத்தில் என்னைப்பற்றி எழுதிய விடயத்தை பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லை.

ஒரு  இருபத்தைந்து வயதுக்குள்ளேயே தமிழகத்தின் எழுத்துலக ஜாம்பவான்களை எல்லாம் படித்துவிட்டேன். வாசகர்வட்டம் அளிக்கும் அந்த நூல்களுள் ஒன்றும் இங்கும்  ஐந்து ரூபாய் விற்பார்கள். அந்த நூல்களை நான் வாங்கி படிக்கப்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

 நான் இப்படியே பேசிக்கொண்டே போகலாம் அது முடிவில்லாமல் போய்விடும். உங்கள் வருகை, உங்களை  நவ்ஃபர் கூட்டிவந்த நேரம் ஒரு மாணிக்க கல் வியாபாரிதான் வந்திருக்கிறார் என நினைத்தேன். ஆனால் தமிழ் மொழியை இவ்வளவு அழகாக சரளமாக வாலாயமாக நீங்கள் எழுதுவது எனக்குள் ஒரு அதிர்ச்சியை தந்தது. இதுவும் ஒரு வகையில் நனவோடைதொவியல் தான்.

சுந்தர் ராமசாமி எழுதினார். பின்னர் இந்து பத்திரிகையில் மோகன் எழுதினார். பல பெரும்பெரும் எழுத்தாளர்களை பற்றி எல்லாம் அவர்கள் எழுதினார்கள். என்னுடைய பஷீர் என்னை பற்றி எழுதியிருக்கிறார். எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. அதற்குள் போய் என்னால்  கொமெண்ட் அடிக்க முடியவில்லை. முடியுமானால் இதை தட்டச்சி செய்து நீங்கள் அங்கே பதிவேற்றம் செய்யலாம்.

எனது கை எதற்கும் இணங்கமாட்டேன் என்கிறது. சாப்பிடுவது கூட மிக சிரமப்பட்டு சாப்பிடுகிறேன். காயல் பட்டினத்திற்கு ஒரே ஒரு தடவை வந்திருக்கிறேன். அதன் மூலம் என் கனவு நிறைவேறியது என்றாலும் முழுமையாக காயல்பட்டினத்தை சுற்றி பார்க்க முடியவில்லை.

சதுக்கை தெருவில் சென்ற நேரம் ஒரு பாடசாலை ஒரு கல்யாண மண்டபம் என்பவற்றை பார்த்தேன். அந்த வளாகத்தில் இருக்கின்ற வேப்ப மரத்தில் மனம் பறிகொடுத்த நான் பள்ளிவாசலிலோ பாடசாலைகளிலோ மனம் பறிகொடுக்க முடியவில்லை.

நான் மரங்களின் பித்தன். இத்தனை ஆயுளுக்கும் எத்தனையோ மரங்களை நட்டிருப்பேன். முஸ்லீம்கள் எங்கிருந்தாலும் அவர்கள் மரத்தை நடுக செய்ய மாட்டார்கள். தறிப்பதில் தான் அவர்களுக்கு சந்தோசம்.

 சீர்மை பதிப்பகத்தை யார் நடத்துகிறார்கள். நீங்களும் பங்குதாரரா அல்லது உங்களது கணக்கில் தான் நடக்கிறதா. இர்பானின் மொழிபெயர்ப்பும் அவர் தேர்ந்தெடுக்கின்ற புத்தகங்களும் தமிழுக்கு அரிய தொண்டாகும். ஆனால் தமிழ் மக்கள் பார்க்கமாட்டார்கள். நான் பகிரங்கமாகவே சொல்லிக்கொள்கிறேன், இலங்கையை போல் தான் இலங்கையை விடவும் அங்கு ஒரு தீட்டு மனப்பான்மை இருக்கிறது. முஸ்லீம்களின் படைப்பை அவ்வளவு தூரம் அவர்கள் படிக்கமாட்டார்கள்.

தோப்பில் முகம்மது மீரானை கொண்டாடுகிறார்கள், சிலர் வைக்கம் முகம்மது பஷீரையும் கொண்டாடுகிறார்கள். இடைப்பட்டவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று எனக்கு தெரியாது.

ஒரு காலத்தில் தான் படைப்புகளை படித்த நேரம் நெறி பிறளாத இஸ்லாமியர்களின் வாழ்க்கை தான் அங்கே சொல்லப்பட்டிருக்கும். கதா மாந்தர்கள் அத்தனைபேரும் ஒழுக்க சீலர்களாக இருப்பார்கள். பாவப்பட்ட வறிய முஸ்லீம்களை பார்க்க முடியவில்லை.

களந்தை பீர் முகம்மது, ஆபீதீன் போன்றவர்களின் படைப்புகள் மூலமாகத்தான், ஏன் நாங்கள் எங்களுடைய தளபதி தோப்பில் முஹம்மது மீரானையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அவர்களின் எழுத்துகளின் மூலம்தான் தமிழகத்து முஸ்லீம்களின் வாழ்வுமுறையை எங்களால் பார்க்க முடிந்தது. தற்போது கரீம் என்றொருவர் கோவையிலிருந்து எழுதுகிறார். இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளை அழகாக சொல்லுகிறார்.

அவருடைய இரண்டாவது தொகுதி எனக்கு வேண்டும். முதலாவது தொகுதி சாத்தபடாத கதவுகளோ அப்படிதான், இரண்டாவது தொகுதி இருளின் கதை அப்படித்தான். அந்த இரண்டாவது தொகுதி உங்களிடம் இருந்தால் அனுப்பலாம், புதிதாக வாங்கி அனுப்ப வேண்டிய அவசியமில்லை.

நான் எந்த புத்தகங்களை படிப்பதின் மூலம் தமிழக முஸ்லீம்களின் வாழ்வை அறிந்துகொள்ள முடியுமோ அவற்றை கொஞ்சம் பழைய நூல்களாக இருந்தாலும் அனுப்பி வையுங்கள் சப்றியிடம்.

என்னிடன் ஏராளமான நூல்கள் உண்டு, வாங்கிய நூல்களில் 4ல் 1 பகுதியைதான் படித்திருப்பேன். இப்பொழுதெல்லாம் எனது வீட்டிற்கு வருபவர்கள் எனக்கு தெரியாமல் எனது நூல்களை களவாடிச் செல்கிறார்கள், எவ்வளவு பெரிய கொடுமையடா இது. இனிமேல்  எஸ்ஸெல்லத்தால் எதுவும் முடியாது என்றொரு நிலைக்கு வந்துவிட்டு அவர்கள் அவ்வாறு செல்கிறார்கள்.

நானோ புத்தக அலமாரிக்கு பக்கத்தில் தூங்குகிறேன். புத்தகங்களை பார்த்தவாறு லாயிலாக இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று கலிமாவை மொழிந்தவண்ணம் எந்தன் உயிர் பிரிந்து விட வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

நீங்களும் எனக்காக பிரார்த்தியுங்கள். உங்கள் மனைவி மக்கள் உங்கள் இடத்துறவுகள், உங்கள் தாய் தந்தையர்கள் அனைவரின் சுகத்திற்காகவும், மறைந்த எங்களுடைய சுஐப் தம்பி அவர்களுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். அனிஷா மரைக்காயரை அன்புடன் விசாரித்ததாக சொல்லவும்.

 

இப்படிக்கு

உங்களுடைய அருமை மாமா

எஸ்எல்எம்.ஹனீபா

10/01/2023

 காலை 06:30 மணி


No comments:

Post a Comment