Monday 9 January 2023

எஸ் எல் எம் ஹனீஃபா– இலங்கையின் வைக்கம் பஷீர்

 

மக்கத்து சால்வை – மண்ணும் மணமும் – இலங்கையின் மூத்த  எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீஃபா நினைவுக்குறிப்புகள்(மலர்) – ஒரு பார்வை




2022 கரைந்து 2023க்குள் விழும்போதுதான் எஸ்.எல்.எம். மாமாவைப் பற்றிய மலரை வாசித்து முடித்தேன். ஒரு வருடத்திலிருந்து இன்னொரு வருடத்திற்கான பயணம். வருடங்களை வருடங்கள் கொண்டுதானே கடக்க வேண்டும்.

2022ஆம் வருடம் நடந்த சென்னை புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த ஏறாவூர் சப்றி எனக்கு அன்பளிப்பாக தந்த மலரிது. மாமாவை எனக்கு  பிடிக்கும் என்றாலும், எழுத்துதானே பின்னர் பார்க்கலாம் என ஊருக்கு கொண்டுபோய் வைத்து விட்டேன்.

எஸ்ஸெல்லெம் ஹனீஃபா என்ற பெயரை நான் முதலில் கேள்விப்பட்டது 2012 ஆம் ஆண்டில்தான். மறைந்த எங்களூர்க்காரர் எழுத்தாளர் கே.எஸ். முஹம்மது ஷுஐபை பார்க்க எஸ்ஸெல்லெம் ஹனீஃபா காயல்பட்டினத்திற்கு அந்த ஆண்டில்தான் வந்திருந்தார். ஓர் எழுத்தாளராக, விவசாயியாக- எல்லாமுமாக அவர் என்னை விட இருபது வயதிற்கு மேல் மூத்தவர். காக்கா என அழைக்கும் வயதைக் கடந்தவர். எனவே, அவர் மாமா என்ற விளிக்கு சொந்தக்காரர்.

சுஐப் காக்காவின் மனிவி வழி பேத்தியுடன்


அண்மையில் எஸெல்லெம் மாமாவிற்கு,  நண்பர்களும் எழுத்தாளர்களுமான சிறாஜ் மஷ்ஹூர், ஓட்டமாவடி அறஃபாத் உள்ளிட்ட அவரின் அன்பான வாசகர்களும் சக படைப்பாளிகளும் இணைந்து எடுத்த ஒரு நாள் கொண்டாட்டத்தில்தான் விழிப்பு தட்டியது.

பேஜஸ் புக் ஹவுஸ் வெளியிட்ட அவரின் மக்கத்து சால்வை உள்ளிட்ட முத்திரை கதைகளை வாசித்த கையோடு மலரையும் வாசித்தேன்.

மக்கத்து சால்வை கதை சிலம்புக்களனில் நிகழ்கிறது.  சிலம்பம் என்பது அடிப்படையில் ஒரு படைக்கலன். போட்டி என்பதோ வெல்வதற்கும் தோற்கடிக்கப்படுவதற்குமான இரு முனை கூர் கொண்ட கத்தி வீச்சு. இந்த மூர்ச்சையேறிய கதைக்களனுக்குள் மன்னிப்பையும் இரக்கத்தையும் கனகச்சித்தமாக பொருத்தி முரண் நகைகளை எஸ்ஸெல்லெம் மாமா அமைதியடைய வைத்த அழகில்தான் மக்கத்து சால்வை செவ்வியல் கதையாகிறது.

தமிழ்நாட்டு  இலக்கியங்களின் மீது மயங்கிய  ஒரு முதிரா கிழவர் என நான் மாமாவைப்பற்றி எண்ணிக் கொண்டிருந்த அசட்டுத் திரை நொறுங்கியது. எழுத்தாளர், இலக்கியவாதி என்பதற்கப்பால் அவர் ஒரு விவசாயி, விலங்கு மருத்துவர், இயற்கை செயற்பாட்டாளர், அரசியல் செயற்பாட்டாளர், மொழி, சமயம், இனம், இயக்கம் கடந்து எல்லோருடனும் நல்லுறவு பேணி வருபவர், ஒரு தலைமுறை காலம்  நின்றெரிந்த  இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது ஏற்பட்ட இன முறுகல்களில் தன் உயிரைக் கருதாது கேடயமாகி நின்றவர் என... மாமாவைப்பற்றி எல்லோரும் ஏற்கனவே சொன்னதை நான் இங்கு மீட்டப்போவதில்லை.

அவரைப்பற்றி ஒற்றை வரியில் சொல்வதானால், 'இலங்கையின் வைக்கம் பஷீர்.' யாரையும் யாருடனும் ஒப்பிடுவது ஒரு வகை அபத்தம் என அறிந்திருந்தாலும், நம் அறிவின் சிறு வரம்பிற்கு ஒன்றைக்காட்டி ஒன்றைச் சுட்டாமல் இயலுவதில்லை.

இம்மலரின் மூலமாகவும், அவரின் படைப்புக்கள் வழியாகவும் நேரடியாகவும் மாமாவை காண்பவர்களாலும் தவறாமல் இதை அனுபவிக்க இயலும்.

அவரிடம் பிடித்த விஷயங்களில் தலையாயது  தனது மதம், மொழி, வட்டாரம் என்ற மூன்று அடையாளங்களின் மீதும் தாழ்வுணர்ச்சி கொள்ளாமல் - யாருக்கும் அஞ்சி அவற்றைக் கைவிட்டு விடாமல்- அதில் ஊன்றி நின்று கொண்டு, பொது வாழ்வாற்றியவர்.

முஸ்லிம் சமூகத்தின் தெற்றுகளை விமர்சிப்பதோடு, தமிழ் ஆயுத இயக்கங்களின் கொடுங்கோன்மையையும்,  உயிரச்சத்தை  மறுத்து அம்பலப்படுத்தியவர்.

இலக்கியமோ, தொழிலறிவோ எதுவாயினும், உயரிய  மானுட அன்பிற்கும் மேன்மைக்கும் மட்டுமே செலவழிப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டவை அவை என்ற அறிதலின் ஆழம் அவருக்கிருந்ததனால்தான், எஸ்ஸெல்லெம் மாமா இலக்கியம் உட்பட எதையும் வாழ்க்கைக்கு மேலாக ஒரு போதும் உயர்த்தியதில்லை.

தனக்கு வழங்கப்பட்ட அனைத்தையும் தன்னிடமே வரம்பு கட்டி நிறுத்தியதில்லை. இவ்வுலகில் படைக்கப்பட்டவை, வாழ்க்கையில் வழங்கப்பட்டவை என்பனவற்றின் நிலையாமையை அதன் ஆகக்கூடிய பொருளில் உணர்த்தி நிற்கிறவர் மாமா.

 எழுத்தின் வழியாக- பொது வாழ்வின் வழியாக கிடைக்கும் பெயரும் புகழும் நமது நிழல்கள் மட்டுமே. அதனைத் துரத்தி கைக்குள் பிடிக்க நினைக்கும்  மடத்தனத்தையும் அவர் செய்ததில்லை.

அவரை நோக்கி எறியப்பட்ட நிராகரிப்பு, வசை, அவதூறு பொதிகளை தன் விரலால் கூட தீண்டாமல், அவை வந்த இடங்களுக்கே அனிச்சையாக திரும்ப வைத்தவர்.

இம்மலரிலுள்ள கட்டுரைகளின் வழியாக இதுவரை அறியப்படாதிருந்த  மாமாவின் பல பட்டடைகள் துலங்குகின்றன.

இது ஒரு தலையாய ஆவணம். எல்லாக் கட்டுரைகளுமே  ஈர்ப்புடையதாயினும், எனது மனம் நிற்பது கருணாகரன், சப்றி ஆகியோரின் கட்டுரைகளில்தான்.

மாமாவுடைய முழு வாழ்வின் பிழிவு,சாரம், தரிசனத்தை துலக்கும் மொத்த பார்வை எழுத்தாளர் கிளிநொச்சி கருணாகரனுடையது. ஓர் ஆளுமை இப்படித்தான் அளக்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு அளவு கோல் கட்டுரை இது.

நண்பர் சப்றி தன்னுடைய பதிவில் மாமாவின் பிறிதொரு இரசனையை திறந்து காட்டியுள்ளார். கள்ளனுக்குத்தானே இன்னொரு கள்ளனை விளங்கும்.. மாமா சுவையினதும் அழகினதும் ஆராதனையாளர். மனிதர்களின் உணவுகளின் சுவையை அதன் நிறைவில் கொண்டாடுபவர். இவையனைத்தும் அவரின் முழு வாழ்வின் பெறுபேறுகள்தான். சிறந்ததை கொடுத்து சிறந்ததை பெற்று வரும் அவரின் கொடுக்கல் வாங்கல் ஆதாயகரமானது.

தமிழ் கூறும் உலகில்  எழுதி வரும் சில தாராளவாத மூத்த முஸ்லிம் எழுத்தாளர்கள் இலக்கியத்திற்காக தங்களின் இறை நம்பிக்கையைத் துறந்து நிற்கிறார்கள். சாயம் பரிந்த கிளிகள், சாலை விதிகளை கர்வத்துடன் நிராகரித்து பள்ளத்தை தழுவிக்  கிடப்பவர்கள். கெட்டி தட்டிப்போன அவர்களைப்பற்றி கரைந்து நேரத்தை இங்கு வீண்டிக்கப்போவதில்லை.

இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அற்புதமான படைப்புக்களுடன்  சில  புதிய தலைமுறை முஸ்லிம் படைப்பாளிகள்  மேலெழுந்து வருகின்றனர். நான் இலக்காகக் கொள்வது அவர்களைத்தான்.

அவர்களிடையே  தங்களின் வாழ்வியல் கோட்பாடு குறித்து நாணுபவர்கள், சிந்தனைப்பள்ளிகளுக்கிடயேயான முரண்களை முட்டும் பகையாக உரு மாற்றுபவர்கள், உண்மையான எதிரிக்கு நேரே துணை எழுத்தைக் கூட உதிர்க்காதவர்கள், அடுத்தவர் என்ன நினைப்பாரோ என்பதற்காக சொந்த வேர்களை அடையாளங்களை அஞ்சி அஞ்சி கையாள்பவர்கள், தாழ்வுணர்வில் ஆழ்பவர்கள் என எதிர்மறை மணம், நிறம், குணம் கொண்டவர்களும்  உள்ளனர்.

அவர்கள் தங்களின் அவலச்சுவைகளை கழற்றி வைத்து விட்டு, மாமாவை மனங்கொள்ள வேண்டிய காலமிது.

இலங்கையுடனான எனது உறவென்பது நெடியது. அவ்வகையில் இலங்கையர்களைப் பற்றி என்னுடைய பொதுப்பதிவு என்னவெனில், அவர்கள் எதிர்மறைக் கருத்துக்களை தெள்ளென சொல்லாதவர்கள். சிறிய சுற்றி வளைப்பொன்று இருக்கும்.

ஆனால், இந்த மொத்தக் கணக்குகளுக்கு நேர்மாறாக மாமா  கத்தி போல பிளந்து விடுவார். முகத்தயவு இல்லாதவர். அவரின் எள்ளலுக்கு அடுத்தபடியாக எனக்கு பிடித்த விஷயங்களில் இதுவுமொன்று.



ஓட்டமாவடியிலுள்ள அவரின் பண்ணைக்கு  2019 ஆம் ஆண்டு வாழைச்சேனை நவ்ஃபருடன் சென்றேன். தனியாக அடுக்களையில் பால் காய்ச்சிக் கொண்டிருந்த மாமா, பாலைத்திருடியதற்காக இரண்டு குட்டிப்பூனைகளை ‘அடிக்கள்ளி என விளித்து குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தார். அந்த ஒற்றை விளியில், 'இவர்தான் நான்' என மனம் விழுந்து கொழுவியது .

சென்ற கால நினைவுச்சேகரங்களுக்கு சற்றும் குறையாத  சம கால ஓர்மைகளை எள்ளலுடன் கலந்த உணர்வு நிலையில் முன் வைத்துக் கொண்டேயிருப்பவர். அவரின் எள்ளலும் தீவிரமும் ஒன்றுடனொன்று ஒத்திசைபவை.

அங்குள்ள மேசையில் அதி விசேச குப்பியில் தேன் நிரம்பியிருக்க அதிலிருந்து சூடான ஆப்பத்தில் கொஞ்சம் ஊற்றி  எங்களுக்கு பரிமாறினார். எங்கு போனாலும் நல்ல தேனை தேடும் எனக்கு அந்த குப்பியை தட்டிக் கொண்ட போக ஆசைதான். ஆனால் அதுதான் முதல் சந்திப்பு என்பதால் உண்டான  ஒரு தயக்கம் தேன் (இலங்கை மொழியில் தேன் பாணி) மீதான நாட்டத்தைக் கலைத்து போட்டது.

தன்னைக் காண வருபவர்களுக்கும் தான் காணப்போவர்களுக்கும் சுங்கான் கருவாடும் தேன் கலமும் பரிசளிப்பவர் மாமா. கருவாடும் தேனுமானவர். முரண்கள் அவரிடம் நம்பிக்கைக்குரிய நாய்க்குட்டிகளாகி, பணிந்து நின்றதற்கான படிமங்கள் அவை.

 இம்மலரில் எனக்கு பிடிக்காதது ஒரே  ஒரு கட்டுரைதான். அது எஸ்.இராமகிருஷ்ணனின் பதிவு. உப்புக்கு ஒப்பேத்தியிருக்கிறார். முஸ்லிம் வாழ்வியல் குறித்து அவருக்கிருப்பதெல்லாம் அரைகுறை பார்வைகளே. இரஷ்ய அய்ரோப்பிய இலக்கியங்களுக்காக மணிக்கணக்கில் கதாகாலேட்சபம் நடத்த தெரிந்தவருக்கு  தன்னுடன் வாழும் சக முஸ்லிம், பழங்குடி, தலித் மகனின் வாழ்க்கை, சிறுபான்மை என்ற நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் மீதெல்லாம் கரிசனம் இருந்ததில்லை.ஆள்வோரையும் மேலாதிக்க ஆற்றல்களையும்  நகத்தால் கூட கீறிப்பார்க்காதவர். மாமாவின் நேரெதிர் பிம்பம் அவர்.

கொண்டையின் அனைத்து முடிகளும் சிலிர்த்துக் கொள்ளும் சண்டை சேவல் இல்லை மாமா.

அதிகாரத்தின் மீறல்களையும் பேரினத்தின் வெறியையும் மட்டுமே  நிராகரித்து, எல்லாப்பக்கமும்  கை குலுக்கும் கலையறிந்தவர்.

இத்தனை அருங்குணங்களினால்தான் எழுத்தையும் மீறிய வாழ்வை வரமாக அருளப்பெற்றவர். இதுதான் எழுத்திற்கும் அவருக்கும் ஒரு  தீரா இடத்தை வழங்குகிறது.

ஈசலின் ஆயுள்  கொண்ட சமூக ஊடக எழுத்துக்கள் ஒரு புறம். மறு வசமோ முகடு தட்டு மட்டும் எழுதிக் கொண்டிருக்கும்போதே காலாவதியாப்போன எழுத்தாளர்களை நாம் கண்டு வரும் வேளையில், மிகக் குறைவாக எழுதி எழுத்திலடங்கா வாழ்க்கை  அவருக்கு வரமளிக்கப்பட்ட வகையில், மாமா கொடுத்து வைத்தவர்தான்.

காலம்  சுணங்கினாலும் மாமா வாழும்போதே, அவர்  கொண்டாடப்பட்டது  நம்மை ஒரு வகையில் மன வதையிலிருந்து விடுவித்திருக்கிறது.

இத்தனை நாள் எழுதத்தவறியதை இந்த விழாவினால் பெற்ற விசையில் மாமா எழுதத்தொடங்கியிருப்பது நிறைவளிக்கிறது. அமைதியும் விடுதலையும் அவருக்குள் நிறைவாகட்டும். சில காலங்களாக வலியில் ஊறிக்கொண்டேயிருக்கும் அவரது வலது கைக்காகவும் அந்த வலது கை இருக்கும் எஸ்ஸெல்லெம் என்ற மனித நேசிக்காகவும் பிரார்த்தித்திக்கிறேன்.

எனக்கு மாமா தரத்தவறிய சுங்கான் கருவாட்டையும் தேன் கலத்தையும் சப்றி வழி இல்லாட்டி காக்கையின் காலில் சரி, கட்டி அனுப்பக் கடவதாக!!!

-------------------------  ---------------------  --------------------------

 ‘மக்கத்து சால்வை – மண்ணும் மணமும் – இலங்கையின் மூத்த  எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீஃபா நினைவுக்குறிப்புகள்(மலர்) – ஒரு பார்வை ‘ கிடைக்குமிடங்கள்:

ஃபாத்திமா புக் ஸ்டால்

0094770807787

பேஜஸ் புக் ஹவுஸ்

0094773595111

மக்கத்து சால்வை வாசகர் வட்டம்

0094719493939

------------------------------  

தொடர்புடைய பதிவுகள்:

இலங்கை2019 -- மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீஃபா

எஸ் எல் எம் ஹனீஃபா இலங்கையின் வைக்கம் பஷீர் -- எதிர்வினை

No comments:

Post a Comment