Sunday, 15 May 2022

ஜன கண மன -- திரைப்பார்வை

 


டிஜோ ஜோஸ் ஆண்டனியின் இயக்கத்தில் வெளிவநதிருக்கின்றது  ஜன கண மன’ மலையாளத் திரைப்படம்.

 

திரைப்படத்தின் தலையாய மொழி மலையாளம் என்றாலும் நிகழ் கால அரசியல் சமூக அழுகல்களை திரைப்படம் பேசுவதாலும்  தமிழும்  கன்னடமும் மலையாளத்துடன் படம் நெடுக விரவுவதாலும் இப்படம் மும்மொழியினருக்கும் காண்பது எளிதானதே.

 

கர்நாடகத்திலுள்ள நடுவண்  பல்கலைகழகமொன்றில் பேராசிரியையாக பணி புரிந்து வரும் சபா மர்யம் மர்மமான முறையில்  சாலை விபத்தொன்றில் கொல்லப்படுகிறார். அவரது கொலைக்கு  நீதி கோரி, மாணவர்கள் களத்தில் இறங்கிப் போராடுகின்றனர். போராடிய மாணவர்கள் மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட, இது தொடர்பான விசாரணையை முன்னெடுக்கிறது உதவி காவல் ஆணையாளர்  சஞ்சன் குமார் தலைமையிலான குழு. அது என்னவாகின்றது? என்பதுதான் முழு திரைப்படமும்.

 

இந்தியாவின் உயர்  கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதி வெறியினால் சாவுக்குள்ளாக்கப்படும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களின் அவலம்,  பாலியல் வன்கொடுமை வழக்குகள், போலி மோதல் கொலைகள், அரசியல் அதிகாரத்தின் தவறான பயன்பாடு என தலையாய பல்வேறு சிக்கல்கள் குறித்து இப்படம் பேசுகிறது.

 

எல்லா சிக்கல்களையும் பொத்தம் பொதுவாக பேசி கடந்து விடாமல்  பிரச்சினைகளை ஆழக் கவனப்படுத்தி அணுகுவதுதான் இப்படத்தின் தனிச்சிறப்பு.

 

 போலி மோதல்களைக் கொண்டாடும் பொது புத்தி முதன் முறையாக  திரையுலகில் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.

 

அரசு கட்டமைப்பின் தோல்விகள், போதாமைகளை மறைக்க  அதிகார தேவதைகள் மேற்கொள்ளும் பொது மனங்களை  மக்கள் திரளின் கவனத்தை  திசை திருப்பும் முயற்சிகளுக்கு அச்சு காட்சி ஊடகங்கள் துணை போகும் ஊடக சூதின் நுட்பமான தலமும் திரைப்படத்தில் முதன் முதலாக அம்பலப்படுத்தப்படுகின்றன.

 

 நாட்டை ஆளும் மூடர் கூட்டத்தின் தனிச்சிறப்பம்சங்களான செல்லா நோட்டு, , வட இந்தியாவில் மாட்டிறைச்சி பெயரால் நடக்கும் கொலைகள், இந்தியாவில் வேரூன்றியிருக்கும் சாதிய, நிற, பாகுபாடுகள் குறித்த சுட்டிக்காட்டல்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு, உணவுக்காக அடித்தே கொல்லப்பட்ட கேரளாவின் மனு போன்றவைகள் குறித்த பூசி மெழுகாத நேரடியான அரசியல் வசனங்கள்,  அதிகாரத்தின்  முகரையில் வெந்நீரை விசிறியடிக்கின்றன.

 

இயக்குநரின் இந்த துணிகர திரை முயற்சியை சூரஜ் வெஞ்சாரமூடும் பிரித்விராஜும் இணைந்து அற்புதமாக சாத்தியப்படுத்தியுள்ளனர். பாராட்டுக்கள்.

 

அதிகாரத்தின் மீதான அச்சமும், மக்களின் தன்னலமுமே  இன்று இந்திய அரசியல் வானில் நாம் நுகர்ந்து கொண்டிருக்கும் இருண்ட வானிலைக்கு நீடித்த  வாழ்வை கொடுத்து வருகின்றது.

 

சாதி மத வெறியுடன் ஆணவத்தையும்  திமிரையும் ஒருங்கே கொண்டுள்ள  இந்துத்வ நாஜிகளின் அரசியலுக்கெதிரான போராட்ட களத்தின் முதன்மை ஆயுதமே  நிலை குலையாமையுடன் கூடிய அஞ்சாமையும் அதிகாரத்தின் தலைக்கு  நேரே உண்மையை பேசுவதும்தான். இப்படிப்பட்ட நேரான குணங்கள் கொண்ட  போராட்டம் ஒன்று சாத்தியம்தான் என்பதை வெகு மக்களின் அறிவிலும் மனத்திலும் பதிய வைப்பதில் இப்படத்தின் பங்களிப்பு மகத்தானது.

 


No comments:

Post a Comment