Saturday 7 May 2022

பித்தாளப்பூட்டு

 


புதுக்கடைத்தெருவில் நான் ஒரு வேளை நிமித்தமாக செல்லும்போது  வேப்ப மரத்தின் நிழலில் பித்தாளப்பூட்டு வானொலிப்பேழையுடன் அரைக்கண்களில்  படுத்திருந்தார். எல்லாவற்றையும் நெய் உருக்குவது போல் உருக்கி விடும்  மே மாதத்தின் மதிய வேளை.

அவரை நான்  நாற்பதாண்டுகளுக்கும் மேலாக  புதுக்கடை, தைக்கா, காட்டு தைக்கா தெரு வட்டாரங்களில் பார்த்து வருகின்றேன். அன்றிலிருந்து இன்று வரை அதே கோலம்தான். முடி மட்டுமே நரைத்துள்ளது. அவரின் பெயர் பித்தாளப்பூட்டு(பித்தளைப்பூட்டு). அதுதான் அவரின் எல்லா பெயரும்.அவர் யாரையும் தொந்திரவு படுத்தியதில்லை. வலுவான கரு மேனி. கூர்ந்து பார்த்தால் கரிய முகத்திற்குள் உருளும் கண்களை அடையாளங்கொள்ள இயலும்.


அவரை வானொலிப் பேழையுடன் காணவும் வித்தியாசமாகத் தோன்றவே படமெடுத்தேன். " ஃபோட்டோ எடுத்தாச்சா?" என்றவரிடம் உங்கள் வயதென்ன என்றேன். " ஒரு நூறு இல்ல எண்பது இல்ல அறுவது " என அடுக்கினார். " உங்களுக்கு எழுபத்தைந்திற்கும் மேலிருக்கும்" என்றேன். ஒன்றுஞ்சொல்லவில்லை.



" ரேடியோ கேட்பீர்களா?" என்றவுடன் அதன் விசைக்குமிழைத் திருகினார். பண்பலை வரிசை " ஓஸ் " என  அணை நீர் பாய்ச்சலாகியது. பாட்டோ பேச்சோ ஒன்றும் வரவில்லை. சொல்லொழிந்த மனிதருக்கு ஓசை மட்டுமே போதும் என வானொலிப்பேழை நினைத்திருக்கலாம்.


நான் கிளம்ப முனையும்போது, அவரை காட்சிப்படுத்த படமெடுத்து விட்டோமோ? என உள்ளுக்குள் உறுத்த பணத்தாளை நீட்டினேன். வாங்கிக் கொண்டார். அதே நேரத்தில் அவரின் அருகில் வந்த ஒரு பெண் இரவலரும் என்னிடம் கை நீட்டினார். நான் சற்று சுணங்கவே பித்தாளப்பூட்டு நான் கொடுத்த பணத்தாளை அப்படியே அவரிடம் " இந்தா " என கொடுத்து விட்டார்.


அந்த தெருவைச் சேர்ந்த இளவலிடம் நான்  இதைக் கூறும்போது  அவரும் பித்தாளப்பூட்டிடம் தனக்கு நேர்ந்த நிகழ்வொன்றை மீட்டினார்.


கோஞ்சம் ஆண்டுகளுக்கு முன்பு  இந்த தம்பி கடையிலிருந்து பொருள் வாங்கி வரும்போது கொண்டு வந்த  மீதப்பணத்தில் நூறு ரூபாய் தாளொன்று சேதமடைந்திருக்கின்றது. அந்த கடைக்காரரிடமே திருப்பி கொண்டு போய் மாற்றலாம்  என  தன் சட்டைப்பையிலேயே வைத்திருந்திருக்கின்றார். சோம்பல் காரணமாக மூன்று நாட்கள் ஓடி விட்டன.


இந்த இளவல் வீட்டிலிருந்து இறங்கும்போது தெருவில் அமர்ந்திருந்த பித்தாளப்பூட்டு " ஏதாவது தந்துட்டு போ" என கை நீட்டவும் இவரும் அந்த சேதமடைந்த நூறு ரூபாயை கொடுத்து விட்டு கிளம்பி விட்டார்.


இரண்டு நாட்கள் கழித்து தன்னுடைய அலமாரித்தட்டில் ஏதோ ஒரு தேவைக்காக தேடும்போது பித்தாளப்பூட்டிடம் கொடுத்த அந்த அதே சேதமடைந்த நூறு ரூபாய் தாள் இருந்திருக்கின்றது. 


" அது  வேற நோட்டாகவும் ஈந்திக்கலாம்தானே " என யாரும் கேட்கலாம். ஆனால் அந்த நூறு ரூபாய் தாள் என்னிடம் மூன்று நாட்களாக இருந்ததினால் அதன் வரிசை எண்ணில் கடைசி மூன்று இலக்கங்களும் எனக்கு நல்ல நினைவிருந்தது. அய்யமேயில்லை. இது நான் அவருக்கு கொடுத்த அதே தாள்தான்.  தாளின் அந்த சேதாரப்பகுதி கூட அப்படியே மாறாமல் இருந்தது. இந்த நிகழ்விற்குப்பிறகு நான் அவரைப்பார்க்க நேர்ந்த போது அவர் எதுவும் சொல்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ வழமை போல எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார் என்றார் அந்த இளவல்.


அவர் ஏன் எதையும் புதியதாக சொல்ல வேண்டும்? அவர்தான் ஏற்கனவே சொல்லி விட்டாரே!



No comments:

Post a Comment