ஒரு படைப்பு அதன் இலக்கியச் சுவைக்காகவும் அது உண்டாக்கும் கிளர்விற்காகவும் வாசிக்கப்பதோடு அது பேசும் அரசியலுக்காகவும்தான் மனங்கொள்ளப்படுகின்றது. கிரானடா நாவல் பேசும் அரசியலின் தகிப்பு நம்மை முழுமையாக தன் வசம் எடுத்துக் கொள்கின்றது. அதன் ஒவ்வொரு சொல்லும் இன்றைய தினத்திற்குள்ளும் அதன் கணத் துகள்களுக்குள்ளும் சொரிகின்றது. சிலுவையின் இடத்தை காவி அனிச்சையாகவே மாற்றீடு செய்து கொள்கின்றது. நிகழ்கால இந்தியாவுடன் கிரானடாவின் பனுவலை இணைத்துப்பார்க்காமல் வாசிப்பதென்பது ஒரு வகையில் கள்ள வாசிப்பில்தான் சேர்த்தி.
கிரானடா ஒன்றாம் நாவலின் இறுதிப்பகுதியில் இடம் பெறும் சலீமாவின் மீதான மத விசாரணையையும் அதன் பிறகு கத்தோலிக்க மதத்தைச்சார்ந்த கஷ்டிலிய படையாளிகளால் அவள் கொலைக்களத்தை நோக்கி அழைத்துசெல்லும் படலத்தையும் வாசித்துக் கொண்டிருக்கும் நாளில்தான் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் வெளியாகின்றது. கர்நாடகக் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கான மாநில அரசின் தடையை உறுதிப்படுத்திய தீர்ப்புதான் அது. இரத்தம் தோய்ந்த வரலாற்றின் ஓர் அத்தியாயம் தனது கூட்டாளியை இரத்தக் கவிச்சி மாறாமல் நோக்கி புன்னகைத்து புளகமெய்திய தருணம்.
"உனது புழுதியில் சஜ்தா (சிரம் பணிதல்) வின் தடங்கள் மறைந்து கிடக்கின்றன. உனது புலரிக்காற்றிலோ தொழுகைக்கான மௌன அழைப்பொலிகள்” ஸ்பெயினைப்பற்றி பெருங்கவி அல்லாமா முஹம்மது இக்பாலின் துயரம் ததும்பிய வரிகளினூடாக அய்ந்நூறு ஆண்டுகளின் பேரடுக்கு நம்மை திணறடித்து எழுகின்றது.
அம்மணமாக ஓடி வரும் ஒரு பெண்ணோடு தொடங்கி மத விசாரணையின்நிறைவில் உயிரோடு கொளுத்த அழைத்துச் செல்லப்படும் சலீமாவோடு நிறைவடைகின்றது கிரானடா நாவலின் முதல் தொகுதி.
![]() |
| ஸ்பெயின் மத விசாரணை(ஓவியம்) |
குஜராத், கஷ்மீர் தில்லி அடங்கலாக நாடு முழுக்க முஸ்லிம்களை நர வேட்டையாடிக் கொண்டிருக்கும்போதே “ சப்கா சாத் சப்கா விகாஸ்” ( எல்லோருடனும் எல்லோருக்குமான வளர்ச்சி) என ஆளுங்கட்சியால் எப்படி முழங்க முடிகின்றதோ அதே போல ஸ்பெயின் முஸ்லிம்களின் அனைத்து வித பாதுகாப்புக்குமான சட்ட ரீதியான உத்திரவாதத்தை அளித்துக் கொண்டே ஆங்காங்கே மொத்தமாகவும் சில்லரையாகவும் தற்செயலாக நடந்தது எனத்தோன்றும்படியாக அதன் ஆட்சியாளர்களால் அவர்கள் துடைத்தழிக்கப்படுகின்றனர்.
வெகு மக்களின் ஏற்பின் வழியாக மாபெரும் வலைப்பின்னலையும் வல்லமையையும் ஒருங்கே கொண்டமைந்த அதிகாரத்தையும் அதன் வேர்க்கால்களையும் பற்றிய அறிதல் புரிதல் எதுவுமில்லை. தெரு முனைப்போராட்டங்கள் வழியாகவும் இன்னும் ஒரு படி மேலே போய் தனியாள் அழித்தொழிப்பு, தெருச்சண்டை என்ற செயல்முறைகளின் வழியாகவும் மட்டுமே இந்துத்வ நாஜிசத்தை தகர்த்து விடலாம் என்ற மூட நம்பிக்கையில் திளைக்கும் இந்திய முஸ்லிம் செயற்பாட்டாளர்க:ளை இயக்கங்களைப்போலவேதான் அங்கும் நடந்திருக்கின்றது. மலைகளிலும் பொதும்புகளிலும் கொஞ்சம் பேர் கரந்தடி தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். ஆனால் அவை எதுவும் கஷ்டிலியர்களிடமிருந்து கிரானடாவை ஸ்பெயினைக் காத்திட இயலவில்லை
கஷ்டிலிய ஆக்கிரமிப்பின் தீய்ந்த நெடி கிரானடாவை மூச்சடைக்க வைத்துக் கொண்டிருக்கும்போது தங்களிடம் எஞ்சியிருக்கும் வாழ்வின் மிச்ச சொச்ச உயிர்த்தடங்களில் ஆசுவாசங்கொள்கின்றது சமூகம். கஷ்டிலிய ஆக்கிரமிப்பின் செய்திகள் கூடிக் கூடி வர அபூ ஜஅஃபர் என்ற மனிதன் தன்னைச் சுற்றி நடப்பவைகளை தன்னுடைய எளிய எண்ணங்களின் உரை கல்லில் அவ்வப்போது உரைத்துப்பார்க்கின்றார். வெய்யில் காய்ந்தால் அதன் பின் மழையும் வரும் தானே என்ற சராசரி எதிர்பார்ப்பின் ஓடமாக வாழ்க்கை நகர்கின்றது. நாட்கள் எதுவும் தன் பிடிக்குள்ளும் விருப்பங்களுக்குள்ளும் நிற்கப்போவதில்லை என உணரும் ஒரு பொழுதில் அவர் தன் நம்பிக்கையை முதலில் இழக்கின்றார் கூடவே தன் உயிரையும்.
இங்கு அபூ ஜஅஃபர் என்பது பெருங்கடலிலிருந்து அள்ளப்பட்ட ஒரு சிரங்கை நீர். ஸ்பெயினைப்போலவே இந்தியாவிலும் கோடிக்கணக்கான அபூ ஜஅஃபர்கள்.
திருச்சிராப்பளியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘மறுமலர்ச்சி’ என்ற முஸ்லிம் லீக் சார்பு வார இதழில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு கேள்வி விடை வெளி வந்திருந்தது.
‘இந்தியாவில் பாஜக ஆட்சியமைக்குமா?
"அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அதன் பிறகு என்ன உறவு என்பதை தீர்மானிக்கலாம்.”
மறுமலர்ச்சி இதழில் இந்த கேள்வி விடை வெளியான காலகட்டத்தில்தான்‘முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டம் --கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் மேற்கொண்ட முறைமை இன்று இந்தியாவில் கடைபிடிக்கப்படுகின்றது.( ஆசிரியர்: வி.டி.இராஜசேகர், தமிழாக்கம்: மு.குலாம் முகம்மது) http://www.islamkalvi.com/general/against_muslim.htm என்ற சிற்றேடும் எழுதி வெளியிடப்பட்டது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கின்றது.
“உலகில் ஒரு பெரும் நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபோதே.. ஸ்பெயினிலிருந்த முஸ்லிம்கள் சின்னாபின்னமாகத் துண்டாடப்பட்டார்கள். கூட்டாகக் கொலை செய்யப்பட்டார்கள். இறுதியில் பூண்டோடு ஒழிக்கப்பட்டார்கள். உலகில் நீண்ட நெடியதொரு நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போதே.. ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் எப்படி நசுக்கப்பட்டு, விரட்டப்பட்டு, வெட்டப்பட்டு, தடம் தெரியாமல் ஆக்கப்பட்டார்கள்?
இதை முஸ்லிம்கள் ஆய்வு செய்தார்களோ இல்லையோ, இந்தியாவில் உள்ள இந்து வெறியர்கள் ஆய்வு செய்தார்கள்! இந்த ஆய்வை இவர்கள் நடத்தியதும் அதன் அடிப்படையில் இந்திய முஸ்லிம்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டம் தீட்டியதும் இப்போதல்ல. 1920 முதல் 1930 வரை.
அதாவது இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உலகில் முஸ்லிம் அரசுகளால் சூழப்பட்டிருக்கும்போதே அவர்களை அழிப்பது எப்படி? என்பதைப் பற்றி ஆய்வு செய்யவும், திட்டம் தீட்டவும் பத்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர் இந்த இந்து வெறியர்கள்.”
இந்த துண்டறிக்கை வெளிவந்திருக்கும்போது பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டிருக்கவில்லை. இதை எழுதி முப்பத்தைந்து ஆண்டுகளுக்குள் தீர்க்கதரிசியின்
எதிர்வு போல ஒரு சொல் விடாமல் அனைத்தும் அவலத்திலும் கசப்பிலும் தோய்ந்த பேருண்மையாகி விட்டன.
அத்தைக்கு மீசையும் தாடியும் வளர்ந்து வழிந்துக் கொண்டிருக்கும்போது அபூ ஜஅஃபர்கள்,
கிரானடா நாவலின்அபூ ஜஅஃபரைப்போலவேதான் கண்கள் திறந்திருக்க வாய் பிளந்திருக்க இந்து ராஷ்டிரம் தூலமாகி துலங்கி வர வர இங்குள்ள அபூ ஜஅஃபர்களின் அறிவும் மனதும் கைவிடப்பட்ட அம்மண முடிவை அள்ளியணைத்துக் கொள்கின்றன.
வணக்க வழிபாடு, பிறப்பு,இறப்பு,திருமண சடங்குகள், பெருநாள், பள்ளிவாயில்,பண்பாடு,ஆயுதம்,,பொதுக்குளியலறை என எல்லா உரிமைகளும் உடைமைகளும் வெங்காயத்தின் தோல் உரிக்கப்படுவதைப்போன்று ஒவ்வொன்றாக ஸ்பெயின் முஸ்லிம்களிடமிருந்து கழற்றி எடுக்கப்படுகின்றன.
ஐரோப்பாவை உலுக்கிய சிலுவைப் போரின் தொடர்ச்சியைத்தான் ஃபெர்டினண்டும் இசபெல்லாவும் ஸ்பெயினுக்கு எடுத்து சென்றனர். பொது ஆண்டு 1492 இல் நடந்த ஸ்பெயினின் வீழ்ச்சியோடு சிலுவைப் போர் நெருப்பானது ஆசிய கண்டத்திற்கு போர்த்துக்கல் தேசத்தால் கடத்தப்படுகின்றது. மேலும் சில நூற்றாண்டுகளுக்கு சிலுவை நெருப்பு நின்று எரிந்தது. பொது ஆண்டு 1496 இல் வாஸ்கோடகாமா அந்த வன்மத்தை சுமந்தவனாக கேரளக்கரையினில் வந்திறங்குகின்றான். அவன் வந்திறங்கிய கால் நூற்றாண்டுகளுக்குள் சிலுவைப் போர் காயல்பட்டினம் உள்ளிட்ட தமிழகக் கரையையும் கருக்கிப் போட்டது. சலீமாவைப்போலவே பழவேற்காடு தொடங்கி கோவா, இலங்கை வரை போர்த்துக்கீசியரின் மத விசாரணை கொலைப்படலத்திற்குள் பட்டு மாள்கின்றனர் மனிதர்கள். அவர்களைப்பற்றிய எண்ணிக்கையும் இல்லை. கணக்குமில்லை. இந்தியக்கரைகளில் நடந்த அந்த காலனியாதிக்க தடங்களை அறிந்திட போர்த்துக்கல்லின் ஆவணங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவலம்.
![]() |
| ரள்வா ஆஷூர் |
அந்த வகையில் இன்றைய இந்திய சூழலுக்கு இந்த நாவலின் வரவு பெரும் கொடையே. நாவலை அரபி மூலத்திலிருந்து கச்சிதமாக தமிழாக்கியிருக்கின்றார் முனைவர் பீ.எம்.எம். இர்ஃபான். இம்முக்கதைகளின் மீதமுள்ள இரு தொகுதிகளும் விரைவில் வெளிவர வேண்டும்.
![]() |
| முனைவர் பீ.எம்.எம்.இர்ஃபான் |
பயணமொன்றில்தான் கிரானடா நாவலை நான் வாசிக்க நேர்ந்தது. அதைப்பார்த்த இளம் நண்பர்கள் சிலர் உரையாடலைத் தொடங்கினர். காவி இந்தியா ஸ்பெயின் என பேச்சு தீவிரமாகியது. நான் இடையிட்டு, “இன்றைய சிக்கலை நாம் மிக அமுதச்சுருக்கமாக புரிந்து கொள்ள வி.டி.இராஜசேகரின் அந்த சிற்றேட்டை படியுங்கள். இணையத்தில் இருக்கின்றது.நான் வட்சப்பில் வேண்டுமென்றால் அனுப்புகின்றேன்” என சொன்னவுடன் பதறி விட்டார்கள். காரணம் கேட்டதற்கு, அரசாங்கம் எல்லாத்தயும் வாட்ச் பண்ணுதாம்.
மேற்கண்ட எனது நண்பர் மட்டுமல்ல இந்து, முஸ்லிம், இடது தாராளவாதிகளிடமும், இடதுசாரிகளிடமும் இப்படிப்பட்டக் கண்ணோட்டக் குளறுபடி இருக்கின்றது. பார்ப்பனர்கள் உள்ளிட்ட இந்து ஆதிக்க சாதியினர் இந்தியாவில் இஸ்லாமின் வாழ்வை தங்களின் இருப்பை அசைக்கும் அச்சுறுத்துலாக எண்ணித்தான் தொழிற்படுகின்றனர்.
முஸ்லிமல்லாத ஏனைய
இந்திய குடிமக்களிடம் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.


.jpg)
.jpg)
No comments:
Post a Comment