Wednesday, 24 November 2021

சர்தார் உத்தம் -- திரைப்படம்

 


நேற்றுதான் திரைப்படத்தை பார்த்தேன்ஜாலியன் வாலாபாக் கூட்டப்படுகொலை, அதற்கான மறுமொழி. இவைகளுக்கு பின்னேயுள்ள அரசியல்-- இதுதான் திரைக்கதை



படத்தின் வசனங்கள் நீளமானவைதான் என்றாலும் இதை தவிர்க்க இயலாது. படமானது  ஜாலியன் வாலாபாக் படுகொலை என்ற ஒற்றை கருவை  சுற்றி அமைந்தாலும் அதற்கு காரணமான காலனிய ஆன்மாவிற்குள் ஊறும்  கசடை படமாக்க வேண்டுமென்றால் திரைக்கதையின் எல்லைக்குள் அதை நிறுத்த இயலாது. காரணம் நூற்றாண்டுகள் நெடியது, ஆழமானது அந்த கசடு.

 

 காலனிய மனத்தையும் அதற்கெதிரான மானுடநேசிகளின் எண்ணவோட்டத்தையும் இப்படியான உரையாடல்களின் வழியேதான் ஆகக் கூடிய சாத்தியமான வகையில்  உணர்த்த முடியும்

 

 ஓர் இலக்கிய பனுவலை திரைக்கதையாக்கும்போது நிறைய விடுபடும். அதை தவிர்க்கவும் இயலாது .இந்த நெருக்கடிகளையெல்லாம் தாண்டி சர்தார் உத்தம்  திரைப்படமானது ஒரே நேரத்தில் உன்னத  நாவலாகவும் விரிகின்றதுஇது ஒரு செவ்வியல் படைப்பு.

 

தேச பக்த பேயாட்டம் எதுவுமின்றி மிகையுணர்ச்சிகள் தவிர்க்கப்பட்டு சிறந்த தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்ட  படம். ஜாலியான் வாலாபாக் படுகொலைகள் திரையில் மீள  நிகழ்த்தப்படும்போது நமது கண்களுக்குள்ளும் காதுகளுக்குள்ளும் உடலின் அனைத்து பகுதிகளுக்குள்ளும் தோட்டாக்கள் செருகிக் கொள்கின்றன.

 

ஜாலியன்வாலாபாக் கூட்டப் படுகொலைக்கு எதிர்வினையாக ஆளுநர் டுவையர் என்ற ஒரே ஒரு மனிதன்  தண்டிக்கப்பட்டது என்பது ஆகக் குறைந்த திருப்பி செலுத்தல்தான். ஆனால் அதற்கான  விலையென்பது பென்னம்பெரியது. காலனியாதிக்கம், வல்லாதிக்கம், ஃபாசிச நாஜிச வல்லாண்மையை கூட்டாகவும் தனியாகவும் ஒரு சமூகம் எதிர்கொள்ளும்போது கொடுக்க வேண்டிய விலையின் முழுப் பரிமாணத்தை இந்த படம் நமக்கு போதிக்கின்றது.

 

 இன்றைய இந்தியா எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியான காலகட்டத்தை கடப்பதற்கான பல வழிகளில் ஒரு வழியை நம் முன் காத்திரமாக வைக்கின்றது இப்படம். ஆனால் படத்தின் நிறைவில்  பிரிட்டிஷ் அரசிடமிருந்து அவர்கள் இழைத்த பெருங்குற்றத்திற்கு  இந்திய அரசு மன்னிப்பை பெற வேண்டும் என சொற்கள் வருகின்றன. இத்தனை மனிதர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பதற்கு சமானமாக ஒரே ஒரு மன்னிப்புத்தானா?

 

 இந்த படத்தைப் பற்றி பேசும்போது இந்த படம் சுழலும் அந்த ஜாலியன்வாலாபாக் களத்திற்கு  ஒப்பாக  சமகாலத்தில்  நம் தாயகத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பல கொலைக்களங்களுக்கு  நாம் உயிர் சாட்சியாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

 

 ஜாலியன் வாலா பாக்கில் கொல்லப்பட்டது முழுக்க முழுக்க சீக்கியர்கள். அதற்கு காரணமான ஆளுநர் டுவையருக்கு முடிவு காண்பதும் ஒரு சீக்கியர். விடுதலை பெற்ற இந்தியாவிலும் இது வேறு மாதிரி நடந்தது. வங்காளதேசத்தை உருவாக்கிய தெம்பில் பொற்கோவிலில் கைவைத்த  அன்றைய ஒன்றிய தலைமையமைச்சர் இந்திராகாந்தியிடம் கணக்கு கேட்டது  சீக்கிய சமூகம்.அதற்காக  டெல்லி படுகொலைகள் வடிவில் அவர்கள் மீளப் பெற்றதும் வரலாறு.

 

நாம் நேரடியாக இன்றைக்குள் நுழைவோம். மக்கள் எதிர் வேளாண் சட்டங்களுக்கு  எதிராக உத்திரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகளின் அமைதி ஊர்வலத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சரின் மகன் வண்டியேற்றிக்கொன்ற சீக்கிய விவசாயிகளின் எண்ணிக்கை உள்ளடக்கமாக இந்திய விவசாயிகள் குறிப்பாக பெரும்பான்மையாக சீக்கிய விவசாயிகளுடன் ஜாட் உள்ளிட்ட மற்ற சாதியினரும்  கொடுத்த உயிர்களின் எண்ணிக்கை எழுநூறு. லக்கிம்பூர் கேரி குற்றவாளிகளில்  சிலருக்கு   நிகழ்விடத்திலேயே தீர்ப்பையும் வழங்கினார்கள் சீக்கிய விவசாயிகள்.

 

தேர்தல் ஆதாய கணக்கு கூட்டல்களுக்காக தலைமையமைச்சர் மோதி மூன்று சட்டங்களையும் திரும்ப பெறுவோம் என மதுர சொற்களால் நயக்கின்றார். செத்த எழுநூறு பேர்கள் குறித்தும் ஒரு சொல் ஒரு வருத்தம் என எதுவுமில்லை. ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலையை கார் டயரில் சிக்கிய நாய்க்குட்டியின் இறப்பிற்கு ஒப்பிட்டவர் எழு நூறு பேர் கொலைகளுக்கெல்லாம் அசைந்து கொடுப்பாரா என்ன?

 

 தன் சொந்த குடிமக்களை கொல்வது குறித்த எந்தவொரு குற்றவுணர்ச்சியும் அற்ற மூடர் கூட்ட தலைவனுக்கு ஒரு செய்தியை தெளிவாக சொல்லியிருக்கின்றது போராடும் விவசாயிகளின் கூட்டமைப்பான பாரதிய கிசான் சங்கம். அவர்கள்   நடத்திய கிசான் மகா பஞ்சாயத்திற்குப்பிறகு பின்வரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார்கள்.

 

மோதி அவர்களே! நாங்கள் உங்களிடம் மன்னிப்பையெல்லாம் கோரவில்லை. 2011 ஆம் ஆண்டு உங்கள் தலைமையில் அன்றைய ஒன்றிய தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்கப்பட்ட  கோரிக்கையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிறைவேற்றும்படிக் கோருகின்றோம். அந்த கோரிக்கை உங்களின் மேசையில் இன்னும் இருக்கின்றது.

 

மொத்த நாட்டையும் நீங்கள் தனியார் சந்தையாக்க துடிக்கின்றீர்கள். நீங்கள் அறிவித்த சட்ட திரும்பப் பெறல் அறிவிப்பென்பது ஒருதலைப்பட்சமான சண்டை நிறுத்தம்தான். ஆனால் விவசாயிகளான நாங்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை. அரசு விவசாயிகளிடம் பேச வேண்டும். அதுவரை எங்களின் இந்த போராட்டம் தொடரும்.”

 

காலனியாதிக்கத்திடமிருந்து  பெற்ற விடுதலைக்கு மொத்த இந்திய சமூகமும் காரணமென்றாலும் சிறுபான்மை சமூகங்களான சீக்கியர்களும் முஸ்லிம்களும் மக்கள் தொகையில் தங்களின் சதவிகிதத்தை விட கூடுதல் விலையைத்தான் செலுத்தியுள்ளனர். ஹிந்துத்வ  நாஜிசத்திலிருந்து  சொந்த மண்ணை  விடுவிக்கும் பணிக்காகவும் அவர்கள் அவ்வாறே செலுத்தியும் வருகின்றனர்.

 

செல்லாக்காசு, ஜிஎஸ்டி பிடுங்கல்,பெருந்தொற்று காலத்தில் மக்களை நடக்க விட்டுக் கொன்றது, வரலாறு காணாத எரிபொருள் விலையேற்றம், ராணுவ தளவாட கொள்முதலில் கொள்ளை, மொத்த நாட்டையும் தனியாரின் மடியில் தாரைவார்ப்பது போன்ற பாதகங்களுக்காக  அதற்கு காரணமான அமைப்பு முறை, சித்தாந்தம் என  எல்லாமே இந்திய வெகுமக்களால்   புரட்டிப் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது ஏன் நடக்கவில்லை?

 

 நாட்டைப்பிடித்த வெள்ளையன் போய்விட்டான். ஆனால் அவன் பெற்ற வேசிப்பிள்ளைகள் ஆட்சிக்கட்டிலில் அழுக்கு போல ஒட்டிக் கிடக்கின்றனர். சர்தார் உத்தம்  திரைப்படத்தின் இரத்தமும் சதையுமான நிகழ் கால நடப்பானது   குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம், வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்களாக நீட்சியடைந்துள்ளன. ஹர ஹர மகாதேவ் அல்லாஹு அக்பர் வாஹே குரு என்ற கூட்டு போர் முழக்கங்களைத் தவிர இன்றைய ஹிந்துத்வ  நாஜிசத்தை கடக்க வேறு குறுக்கு வழிகள் எதுவுமில்லை.

 

 

 

 

 


No comments:

Post a Comment