Sunday 21 June 2020

வானொலி முடக்கு




வாங்கி கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஆகி விட்டது.





வானொலி, மின்மாற்றியுடன் மோதியின் பகல் கொள்ளை ஜிஎஸ்டியும் சேர்ந்து 1850/= ரூபாய்கள் ஆயிற்று.


ஏழு மணி நேரம் மின்னேற்றினால் ஆறிலிருந்து ஏழு நாட்கள் வரை கேட்கலாம். மாத வார வருட கட்டணமேதுமில்லை


பிலிப்ஸ் வானொலிப்பேழையைத்தான் சொல்கின்றேன்.


தொலைக்காட்சியின் மீதுள்ள விருப்பம் தொலைந்த போது அந்த இடத்தை இளம்பருவத்து கூட்டாளியான வானொலி வந்து வேகமாக நிரப்பிக் கொண்டது.


 சென்னையிலிருந்தால் காலை மலர், மூன்று வேளை மாநிலச்செய்திகள், இசை நிகழ்ச்சிகள், ஊரிலிருந்தால் திருநெல்வேலி  நிலையத்தின் கிராமிய இசை நிகழ்ச்சி, இசை மஞ்சரி, நாடகம். திருவனந்தபுரம் வானொலி நிலையத்தின் புலர் வெட்டம், மாயா முத்ரகள், ரேடியோ கிராமரங்கம், நாட்டுச்சிந்து, மாப்ளா பாட்டு, எழுத்து பெட்டி, நோயடங்கு கால தொடக்கம் வரை இயங்கிக் கொண்டிருந்த  தூத்துக்குடி வானொலி நிலையம், என காது குளிர்ந்து கொண்டே இருக்கும்.

அழைய விருந்தாளிகளாய் இரவில் வரும் தார்வார், விஜயவாடா ,பெங்களூரு அகில இந்திய  வானொலி நிலையங்கள். சீனத்து ஒலிபரப்புகள், அதிகாலையில் மட்டும் கேட்கும் சென்னை, திருச்சிராப்பள்ளி நிலையங்கள். முழு ஆற்றலுடன் கேட்கும் பன்மொழி விஷ்வ வாணி கிறிஸ்தவ பரப்புரை ஒலிபரப்பு, எப்போதாவது ஒரு தடவை  திருநெல்வேலி நிலையத்தினருகே பிடிபடும் பிரவாஸி பாரதி மலையாள தனியார் வானொலி என  பல பந்தி மண விருந்துதான்


சமைக்கும்போது குளிக்கும்போது உலாவின்போது இஸ்திரி போடும்போது, தோட்ட வேலையின் போது சில சமயம் உறங்கும் வேளைகளிலும் உடனுறை உயிராய் பொழுதுகளுக்கு மதுரமூட்டும் வானொலிப்பேழைக்கு இரண்டு நாட்களாய் உடல் நலமில்லை. ஒரேயடியாக படுத்து விட்டான்.

நிலையம் பிடிக்கும் முள்ளையும் குமிழையும் இணைக்கும் சரடு அறுந்து விட்டிருக்கும் போலிருக்கின்றது.  திருநெல்வேலி நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் நிலையத்திற்கு மாற்றும்போது  தரக்”  ஏன இடைவழியில் நின்று விட்டது. முகவாதம் போல முள் சாய்ந்து கிடக்கின்றது.  வினை போல  அந்த இடத்தில் எந்த நிலையமுமில்லை.   ஒலிபரப்பில்லா அத்துவானக்காடு.                                                                                                                                                                                  

இதுவரை அவனுக்கு பெரிய சிக்கல்கள் வந்ததில்லை. ஆனால் ஒரு தடவை பெரிதாக சிக்கல் வந்தது. நான் தோட்டத்து படியில் பேழையை வைத்து விட்டு வேலை செய்வது வழக்கம். இம்முறை அதன் மேல் நீர் தெறித்து விடக்கூடாதே என்ற கரிசனத்தில் வாளியின் மேல் வைத்திருந்தேன். வேலைகள் முடிந்து கவனமின்றி வாளியை இழுத்ததில் தலை குப்புற தோட்டத்து மண்ணில் விழுந்தது பேழை.  நிலைய பலகத்தின் கண்ணாடி சட்டம் மட்டும் தெறித்து விழுந்தது.  சரி. இனி புதியதற்கான நேரம் வந்து விட்டது போலும் என நினைத்துக் கொண்டே மண்ணில் கிடந்தவனை மீட்டெடுத்து குமிழைத் திருகினேன்.  “ குறையேதுமில்லை மறை மூர்த்தி கண்ணா” என்ற ஞானத் தெளிவுடன் ஒலிக்கத் தொடங்கினான்.

அவ்வப்போது திடிரென ஓசையில்லாமலாகும். பேண்ட் (அலை வரிசை குமிழ்) இரண்டு தடவை பண்பலைக்கும் நடுவணலைக்கும் நகர்த்தினால் கர கரப்பிற்குப்பிறகு  மீளும்.

இடையில் அதன் கைப்பிடியின் ஒற்றைக்காது போய் ஒரு வித சமாளிப்பில் ஓடிக் கொண்டிருந்தது. இடையில் அதுவும் முறிந்து இப்போது மொத்த பேழையையும் கைப்பிள்ளையைப்போல அள்ளி தூக்க வேண்டியுள்ளது.

வானொலி இல்லா இரண்டு நாட்களிலும் திறன்பேசி வழி செயலி மூலமாக வானொலி கேட்கிறேன். ஓரளவு ஆறுதல்தான் . இருந்தாலும் மன நிறைவில்லை.  அடுத்தவர் திண்ணையில் போய் உறங்குவது போலிருக்கின்றது. செலவேறிய திறன் பேசியும், மாதாந்திர இணைய கட்டணமும் இல்லையென்றால் வானொலியுமில்லை என்ற நினைப்பே மனத்திற்குள் ஒருவித அசௌகரியத்தையும் எரிச்சலையும் உண்டுபண்ணுகின்றது

என் நீண்ட நாள் நண்பரும் வானொலி மனிதரும் பேராசிரியருமான தங்க ஜெய் சக்தி வேலை தொடர்பு கொண்டு ஆலோசித்தேன். பிலிப்ஸ் பழுது நீக்கு மையத்தை தொடர்பு கொள்ளுங்கள். அதுவும் சரிவரவில்லையென்றால் சென்னையிலுள்ள வானொலி தயாரிப்பு&விற்பனையாளர் ஒருவரின் முகவரியை தருகின்றேன். உங்கள் நிதிக்கேற்ப அங்கு வானொலிப்பேழைகள் விற்பனைக்கு கிடைக்கும் என்றார்.

கொரோனா பஞ்சத்தில் புதிய செலவா? என மலைத்து தீர்வதற்குள் திரு நெல்வேலியிலுள்ள  பிலிப்ஸ் பழுது நீக்கு மையத்தின் தொடர்பெண் கிடைத்தது. நாளை திங்கள் கிழமை அழைத்திருக்கின்றார்கள்.

பழுது தீர்ந்து இவன் மீண்டு விடுவான். எனினும் புதிய வானொலி பேழைக்கான சேமிப்பை தொடங்கி விட வேண்டியதுதான். வாழ்க்கையென்பதே எதிர்பாராமைகளினால் நிரம்பியதுதானே.

வானொலிப்பேழை பழுது நீக்கம், புதிய பேழை வாங்கல் எல்லாம் ஒருபுறமிருக்க தூத்துக்குடி நிலையத்தை மூடியது போன்று அரசிற்கு விபரீத யோசனைகள் எதுவும் தோன்றி தரை வழி ஒலிபரப்புக்களை இழுத்து மூடி விடக்கூடாது.

பணியிலிருக்கின்ற ஒலிபரப்பாளர்களுக்கான போதிய அங்கீகாரமின்மை, புதிய நிரந்தரப்பணியாளர்கள்தேர்ந்தெடுக்கப்படாமை, ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியமின்மை.

எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக பறி போய்க் கொண்டிருக்கும் கொடுங்காலத்தில் வானொலி மட்டும் எத்தனை நாள் தாக்குப்பிடிக்கும் என்பது வானத்திலுள்ளவனுக்கே வெளிச்சம்.

No comments:

Post a Comment