Saturday 23 May 2020

அண்டை கொக்கார்






சுபஹ் தொழுகைக்கு பின்னரான உலாவிற்காக, இருள் முழுவதுமாக கவிழ்ந்திருக்கும்போதே மாடிக்கு சென்று விடுவதுண்டு.. நான் உலாவத்தொடங்கி சிறிது நேரத்தில் காக்கைகள் கரைதலை அரை வாசியாக்கி, அந்த அரைக்கரைதலை மெல்ல இருள் தொகைக்குள் விட்டு,   வெளியிறங்கலாமா? என வெள்ளோட்டம் பார்க்கும்.




பின்னர் இருள் அவிந்து சுட்ட சீனிக்கிழங்கைப்போல  வெளுக்க வெளுக்க கொக்கார்கள் தங்களின் வேப்ப மர வசிப்பிடங்களிலிருந்து  கால் உந்தி  இரவிலிருந்து விடுபட்டு வெண் வில் சரமாக  நாற் திசைகளிலும் பாய்கின்றன.

ஏழெட்டு கொக்குகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஏகிக் கொண்டிருக்க அந்த வெண் படலத்தினடியில் மேற்கிலிருந்து காக்கையொன்று பேதலித்த தாளத்தில் கிழக்கு நோக்கி பறந்தது. கொக்கார்களின் சிறகுகளில் ஒட்டியிருந்த இரவின் எச்சம்.

எங்களூரில் கதிர் மறைவு சமயம் மாலை 6:31.  ஆறு மணி பத்து நிமிடங்கள் வாக்கில் தினப்பணி முடிந்து கொக்கார்கள் வேப்ப மர உச்சிக்கு திரும்புகின்றனர்.  சடார் படாரென்று போய்  எல்லாம் அவை மரக்கிளைகளில் உட்கார்ந்து விடுவதில்லை. அமர்வதற்கு முன்னர் அரை வட்டமொன்றை வானில் அடித்து பறந்த தொலைவை தங்களின் இறகுகளிலிருந்து உதறிய பின்னர், நீரில் துளாவுவது போல கால்களை அலம்பி விட்டு பின்னர் இறக்கைகளை ஒடுக்கி அமர்ந்து பின் எழுந்து மீண்டும் அமர்கின்றன.

மின்சாரம் தடைப்பட்டதால் வேக்காடு பொறுக்கவியலாமல்  தூக்கம் கெட்டு மாடிக்கு செல்லும்போது நள்ளிரவு  மணி 12:40.  அண்டை வீடுகளிலிருந்த இன்வெர்ட்டர்களின் கருணையால் கொஞ்சம் வெளிச்சம் தெறித்துக் கிடந்தது. இருபத்தேழாம் நோன்பிரவு என்பதால் மூன்றாம் வீட்டிலிருந்து சீராக ஒலித்துக் கொண்டிருந்த பெண்களின் சேர்ந்திசை பைத் இரவின் வளையோசையாக கிலுங்கிக் கொண்டிருந்தது..

“குர்ரக்” என தலைக்கு மேலே ஓசை.  முதலில் இரண்டு கொக்கார், அதன் பிறகு நான்கைந்து கொக்கார்கள் வடக்கு நோக்கி கிளம்பினர்.

பறவை அட்டவணைக்கு எதிரான செயல்பாடு. வான் மீறல் இரவு மீறல் உறக்க மீறல் என வரிசையாக கொக்கார் மீது குற்றங்களின் பட்டியல் நீள்கிறது.

அந்த இருட்டுக்குள்ளே என்ன இரையை போய் தேட முடியும்?. மனிதனுக்குத்தான் மூச்சு முடியும்மட்டும் பொருள் தேடல்.  உங்களுக்கென்ன பிரச்னை?

ஓற்றைக்குற்றச்சாட்டை மட்டும் வைத்து அவர்களை குற்றவாளிகளாக்க முடியாதுதான். கொக்கார்களை முழுவதுமாக புரிய முயலுவோமே.

ஒரு வேளை இரவு புழுக்கமாக இருந்திருக்குமா?  நள்ளிரவிலும் வணிக வளாகங்களை திறக்கலாம் என முன்னர் உத்தரவிட்ட மன்னர் பிரானின் ஆட்சியில் இரவுப்பணிக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தும் முதலாளிகள் யாரேனும் புதியதாய் வந்திருக்கின்றார்களா?

இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு பகலில் அதை மீட்க இருள் வேண்டுமே? அதற்கு என்ன செய்வீர்கள்? இருளை கடன் வாங்கவும் முடியாது. முந்திய இரவில் மீந்த பழமிருளை  சேமிக்கவும் முடியாது. பாவம், ஒரு வேளை எங்களைப்போல ஏதும் உறக்கச் சிக்கல் இருக்கின்றனவோ என்னவோ?

இறுதியாக மனத்தில் பட்ட ஒன்றையும் கேட்காவிட்டால் சரியாக இருக்காது.

மனிதர்களாகிய நாங்கள்  உங்களுகு அண்டை வீட்டாராகியதினால் எங்கள் பழக்கம் உங்களுக்கும் தொற்றி விட்டதா? அதுதான் உண்மையென்றால் தர்க்க விதிகளின்படி நாங்களும் கொக்குகளாவது எப்போது?

இந்த வினாக்கள் எதற்கும் விடை கிடைக்கப்போவதில்லை நாமிருவரும் நம்மிருவரின் மொழிகளை பரஸ்பரம் பயிலாத வரைக்கும்.

இந்தப்பதிவோடு கொக்கார்களின் அழகு வடிவங்களை  எடுத்து போடலாமென்று நேற்று மாலை கேமிராவுடன் மாடிக்கு சென்றேன். கோடையின் அந்திக்கதிரவனை இவ்வளவு பெரிய வடிவில் நான் பார்த்ததேயில்லை. ஒளி வெப்ப  சுழலிப்புயலாக  செம்மஞ்சள் திரவமடங்கிய திடல் தடாகமாக தகித்துக் கொண்டிருந்தது. நானும் ஆறு இருபது வரை காத்திருந்து தோல் எரிவு அடைந்ததுதான் மிச்சம். ஒரு கொக்கும் வரவில்லை. எல்லாம் இடத்தை மாற்றிக் கொண்டன.  அந்த வேப்ப மரமிருக்கும் தோட்டத்தின் நடுப்பகுதியில் போய்  தாவளமிறங்கியிருப்பார்கள்.  தோல் குளிர்ச்சிக்கு  இரண்டாம் தடவை  குளித்ததுதான் மிச்சம்.

இன்று காலையிலும் கேமிராவுடன் மாடிக்கு சென்றேன். பணிக்கு புறப்பட அணியமாக இருந்த ஒற்றை கொக்கு மட்டுமே சிக்கியது. கூடவே அந்த வேப்ப மரத்தையும் படமெடுத்துள்ளேன்.  மீதி கொக்காரெல்லாம் நான் நின்ற திசைக்கு எதிர் திசையில் போய் செருகிக் கொள்ளும் ஆவேசத்தில் பாய்ச்சலெடுத்தன.



No comments:

Post a Comment