Wednesday 8 April 2020

பார்கவி நிலையம் --- #பெருந்தொற்றுக்காலத்திரைப்படம்






1952 ஆம் ஆண்டு வைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய ‘ நீல வெளிச்சம் சிறுகதையிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டு  1964 ஆம் ஆண்டில் மலையாளத் திரைப்படமாக வெளிவந்தது ‘ பார்கவி நிலையம் ‘.



வைக்கம் முஹம்மது பஷீரின் கதை, திரைக்கதை, வசனத்தில்  ஏ.வின்சென்டால் இயக்கப்பட்டு பிரேம் நசீர், அடூர் பாசி, மது உள்ளிட்டோர் நடித்து டி.கே.பரீக்குட்டியின் தயாரிப்பில் வெளியான கறுப்பு&வெள்ளை படம்.


சிறுகதையொன்றை எழுத விரும்பும் எழுத்தாளர், தனிமைக்காக  பார்கவி நிலையம் என்ற பெயரிலுள்ள வீடொன்றை வாடகைக்கு எடுக்கின்றார். அது அகால இறப்பு நடந்த வீடு என்பது  குடி வந்த பிறகுதான் தெரிய வருகின்றது.



உறைந்து கிடக்கும் மர்மங்களும், அமானுஷ்யங்கள் பொதிந்த இருள் மூலைகளுடனும் நிற்கும் அந்த நிலையத்தில்  படைப்பாளனுக்கு அச்சமொன்றுமில்லை. முக்காலங்களுக்குள்ளும் அடங்காத கற்பனை வெளிகளுக்குள் உலவுபவனல்லவா அவன்.  முடிந்து போன பார்கவிக்குட்டியோடு அருவ உரையாடலை நிகழ்த்தியவாறு அங்கு வாழத்தொடங்குகின்றார்.



மண்மறைந்த பார்கவியே சிறுகதையின் நாயகியாகவும் மாறுகின்றாள். நிறையாமல் போன காதலின் தொடுகையை எழுத்தாளனின் படைப்பு ஆதுரத்தில் மீண்டும் உணருகின்றாள் பார்கவிக் குட்டி.



ஓர் கதை இரவில் மண்நெய் விளக்கின் எண்ணெய் தீர்ந்து போகவே , எண்ணெய்யை கைமாற்று வாங்கி வர வெளியில் செல்கின்றார் எழுத்தாளர். அவர் திரும்பி வருகையில் இருள் நீரில் முழுகிக் கிடந்த வீட்டறையில் சுவர் கூரை தரை என எங்கும் நீல வெளிச்சம் துலங்குகின்றது. எரிபொருளற்று ஒளி தூர்ந்திருந்த விளக்கிலிருந்துதான் அந்த நீல ஒளிநாளம் இரண்டங்குல நீளத்திற்கு நின்று எரிகின்றது. அச்சத்திற்கும் வெருட்சிக்கும் மாற்றாக அன்பும் கருணையும் எழுத்தாளனுக்குள் நிறைந்தெழுகின்றது.



இது தன் வாழ்வில் நடந்த வியக்கத்தக்க உண்மை நிகழ்வு, அற்புதக்குமிழ்களில் ஒன்று. தான் பலவாறு முயன்றும் அறிவியலின் துணை கொண்டும் கூட இதனை துலக்க முடியவில்லை என பஷீர் தனது நீல வெளிச்சம் கதையின் தொடக்கத்திலேயே குறிப்பிடுகின்றார்.




காதல் பிரச்னையில் பார்கவி குட்டி வீட்டு கிணற்றுக்குள் இறந்து கிடக்கின்றாள். அந்த வீடு பற்றிய பொதுமக்களின் அச்ச உணர்வுகளுக்கு நடுவே எழுத்தாளனின் பகல்களும் இரவுகளும் எப்படி கழிகின்றன? என்பதுதான் அவர் முதலில் எழுதிய ‘நீல வெளிச்சம்’ சிறுகதை




அறையில் கவிழும் நீல ஒளியுடன் சிறுகதை நிறையுமிடத்திலிருந்து பேரன்பின் கன்று  போல திரைக்கதை முகிழ்ந்து வளர்கின்றது. பார்கவிக்குட்டியின் இறப்பிற்கு பின்னால் உள்ள திரைகள் விலகுகின்றன. பஷீரின் வசனங்களில் அந்த பேரன்பு துளைக்கும் கூர்மையை அடைகின்றது.





“மேலே பார்! ஒரு ரத்த நட்சத்திரம்”


“கிடைத்ததா?”


“மணக்கின்றதா? “


“ஓ! நிறமாகவும் இருக்கின்றது “


“சிறீமதி! அந்த பூவை என்ன செய்தாய்?”


“என்ன பூ”


“ரத்த நட்சத்திரம்போல கடுஞ்சிவப்பான அந்த பூ”


““ஓ! அதை பதறிப்போய் ஏன் கேட்கின்றீர்கள்?”


“மிதித்து தூர எறிந்து விட்டாயா? எனத் தெரியவில்லை?”


“எறிந்தால்தான் என்னவாம்?”


“ஹஹ்ஹஹ்! ஒன்றுமில்லை. என் இதயமாகவிருந்தது அது”


 என்னை யாரும் நேசிப்பதில்லை”




“எனக்கு அன்பு வேண்டும்”



“என்னை நேசிக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன்”


 “என்ன?”


“என்னை நேசிக்க வேண்டும்”


“பார்கவியை நான் நேசிக்க வேண்டுமா?”


“ஆமாம்”


“ஹஹ் ஹஹ்ஹா, பார்கவி! உன் ஆன்மாவை, உன் இதயத்தை, உன் உடலை, நீ தொட்டு நிற்கும் மதிலை, நீ சுவாசிக்கும் காற்றை, இந்த மகா பிரபஞ்சத்தை நான் நேசிக்கின்றேன்”

---------------



தொலைவான தொலைவுக்கு அதன் முழு பொருளை கொடுக்கும் நட்சத்திரத்துடன்  வண்ணத்தின் ஆழத்துடன் பிரபஞ்சத்தின் முடிவிலியுடன் நேசத்தின், காதலின் எல்லையின்மையை தொட்டிணைக்கும் மகா மனம். அலைதலே அறிதலாக, வாழ்க்கையாகிப்போன பஷீரிமைகள்தான் சிறுகதைக்குள்ளும் திரைக்கதைக்குள்ளும் கட்டற்ற தன்மையுடன் அலைவுக்குள்ளாகிக் கொண்டேயிருக்கின்றன.








No comments:

Post a Comment