Saturday 14 March 2020

LIAR'S DICE -- திரைப்படம்



பொய்யனின் பகடை





1980களின் இறுதியில் பிழைப்புக்காக நான் முதன் முறையாக சென்னைக்குள் எறியப்பட்டபோது அது ஏற்படுத்திய கொந்தளிப்புகளின் தகிப்பு இன்னும் தடமழியாமல் என்னுள் உறைந்து கிடக்கின்றது.

இது நடந்து முப்பத்தியோரு வருடங்கள் உருண்டு விட்டன .இன்றும் புதுதில்லி போன்ற மாநகரங்களுக்கு தொழில் நிமித்தமாக செல்லும்போது அந்த முப்பதாண்டு பழைமையான மனத்தவிப்பு  பழைய கருக்கு மாறாமல்  தலைக்குள் கொப்பளித்தெழுகின்றது. இத்தனைக்கும் எனக்கு நான்தான் முதலாளி. அத்துடன் எனது பயண நாட்களும் மிகக் குறுகியவை.


உலகமயமாக்கலுக்குப் பிறகு போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் பெருகிய பிறகு  கூட்டங்கூட்டமான புலம் பெயர்வு என்பது எளிதாகியிருக்கின்றது.

 நடுவண், கிழக்கு, வடகிழக்கு இந்திய மாநிலங்களிலிருந்து கட்டுமானத்துறை, உணவுதொழில் ஆகியவற்றில் கூலித்தொழிலாளர்களாக அன்றாடம் ரயில்கள் வழியாக  தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்குள் கொட்டப்படும்  உதிரி மனிதர்கள் குறித்த அறிவியல்பூர்வமான எந்த தரவுகளும் இல்லை.

கை உழைப்பில் வாழ்ந்து கொண்டிருந்த தன்மான மனிதர்கள், அரச பயங்கரவாதம், பெருவணிக கும்பல், இனக்கிளர்ச்சி ஆகிய காரணங்களினால்  சொந்த நிலங்களில் பிழைக்க முடியாதவர்களாக்கப்பட்டு முகங்கள் நீக்கப்பட்ட மனிதர்களாக எல்லாவகையிலும் அந்நியமான ஒரு  நிலப்பரப்பிற்குள் அத்தக் கூலிகளாக தள்ளப்படுகின்றனர்.

அவர்களின் உழைப்பு ஏமாற்றப்பட்டு தொழில் பாதுகாப்பு உடல்நலம் கேளிக்கை குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட எந்த உரிமைகளுமின்றி வாழும் துயரத்தை அவர்களைத் தவிர வேறொருவராலும் உணரவியலாது.

மாவோயிஸ்டுகள், இந்திய அரசிற்கெதிராக போராடும் பழங்குடிகள் ஆகியோரினால்  வாழ்விழந்த மைய நில  இந்தியர்களுக்கு சோறிடுவதே இந்தியா என்ற தேசத்தின் இருப்புதான் என்ற பீற்றலின் வழியாக குரலற்ற மனித பேரவலத்தினை மனித வளச்சுரண்டலினை வலதுசாரிகள் போர்த்தி மறைக்கப்பார்க்கின்றனர்.

பார்ப்பன பனியா பெரு வணிக முக்கூட்டிற்கு இத்தகைய  உழைப்படிமைகள் எப்போதும் தேவைப்படுகின்றது. எனவேதான் அடிமாட்டுக் கூலிக்கு ஆள் திரட்டும் வேலையை தேச ஒற்றுமையாக தேச வளர்ச்சியாக வரைந்து விதந்தோதுகின்றனர்.

இந்தியாவெங்கும் வாழும் ஆதிகுடிகளை அவர்கள் வாழுமிடங்களிலிருந்து கெல்லியெறியாமல் அரசு தனது நலத்திட்டங்களை முறையாக அங்கு செயல்படுத்தினாலே போதும். கொத்து கொத்தான மனித இடப்பெயர்வு என்ற பேரவலம்  நிகழாது.
------------------------------

திரைக்கலைஞரும் இயக்குநருமான கீது மோஹன்தாஸ் என்ற கேரளியரால் எழுதி இயக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி மொழி திரைப்படம்  LIAR’S DICE.

ஹிமாச்சலப்பிரதேசத்தின் அத்தான மூலை.  மலை பனி விசும்புகளின் பேரிணைவில்  துளிர்த்து நிற்கும் குக்கிராமம் அது. பனி மனிதர்கள். குடும்பத்தலைவன் எங்கோ கொடும் தொலைவிலிருக்கும் தில்லிக்கு கட்டுமானக்கூலியாக செல்கின்றான். அவனை செல்பேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயலுகின்றாள் மனைவி. சில நேரங்களில் மணி ஒலிக்கின்றது. பல நேரங்களில் தொடர்பெல்லைக்கு அப்பால் என்கின்றது.

தன் அன்பு துணையைத் தேடி தனது ஒற்றை மகளோடு தில்லி செல்லும்போது அவள் எதிர்கொள்பவைதான் மொத்தக் கதையும். அந்நிய நிலத்தின் வெம்மை, பிரிவின் உளைச்சல் இவை மொத்தமாக சிந்தாமல் சிதறாமல் திரையின் வழியாக நம்முள் இடம்பெயர்க்கப்படுகின்றது.

ஒருவேளை நம் வீட்டின் பணியிடத்தின் கீழே சத்தீஸ்கட் பெங்காலி ஒடிஸ்ஸா ஜார்க்கண்ட் உபிக்காரனையோ / காரியையோ  நாம் சந்திக்கக்கலாம். வெற்றிலைச்சாற்றை விழுங்குவது போல தன் துயரங்களை அவனோ அவளோ மென்று தன் நெஞ்சுக்குழிக்குள் போட்டு அடக்கியிருக்கக்கூடும்.  










No comments:

Post a Comment