Saturday 14 March 2020

பகுத்தறிவு பகடி




நேற்றிரவு எனக்கு மிகவும் நெருக்கமான நண்பரொருவர், மானுடத்தின் மீது பேரன்பு கொண்ட மத நம்பிக்கையற்றவர்,  ஒரு காணொளியை வட்ஸப்பில் அனுப்பியிருந்தார். அது அண்டை மாநிலத்து பகுத்தறிவு வாத தோழரின் உரை.


அதில் பேசுபவர், கொரோனா வைரஸ் பாதிப்பை இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்கள் எதிர்கொள்ளும் விதம் பற்றி  நீதமான சில கேள்விகள் கேட்பதுடன் எள்ளவும் செய்கின்றார். நான் முழு காணொளியையும் பார்த்தேன். சுவாரசியமாக இருந்தது. மதங்களை குருட்டுத்தனமாக பின்பற்றுபவர்கள் இது போன்ற எதிர் கேள்விகளுக்கு முகங்கொடுத்துதான் ஆக வேண்டும்.



அந்த காணொளியின் உரிமையாளருக்கு கூடுதலாக நான் சொல்ல விரும்புவது:


மதங்களின் வழியாக சமூகத்தில் நிலவும் குருட்டு நம்பிக்கைகளும் கடுங்கோட்பாட்டு வாதங்களும்  புரிதலின்மைகளும் மானுடத்திற்கு அழிவை ஏற்படுத்தியிருக்கின்றன  என்பதை மறுக்கவில்லை.


ஆனால் அதே மதக்கோட்பாடுகள்தான் எண்ணற்ற மக்களின் இறுதி பிடிமானமாக இருக்கின்றது. மதங்களின் ஆன்மீகத்தின் கைத்தலம் பற்றி மக்கள் கரையேறுகின்றனர். சக மனிதனால் அரசால் நிறுவனங்களால் சித்தாந்தங்களால் கைவிடப்பட்ட விளிம்பு மனிதர்களுக்கு கடவுள் அல்லது மத நம்பிக்கை ஒன்றே இறுதித்துரும்பாக மீட்கின்றது.


காலனியாதிக்கத்தை ஏனையவர்கள் எதிர்த்து போரிட்டது போலவோ அல்லது அதை விட கூடுதலாகவோ மதத்தின் பெயரால் மேலாதிக்கத்தை உக்கிரமாக எதிர்த்து  சமரசமின்றி சமரிடப்பட்ட வரலாறுகள் எத்தனையெத்தனை?


அதே நேரத்தில் எந்த மத நமபிக்கையற்றவர்களால் உலகில் எந்தவொரு பேரவலமும் ஏற்படவில்லையா என்ன? 


 நீங்களும் நானும் விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் இவ்வுலகில் நீதத்துடனோ  அநீதத்துடனோ மதங்களும் கோட்பாடுகளும் சித்தாந்தங்களும் நீடிக்கத்தான் போகின்றன. அவற்றின் இருள் மூலைகளை விமர்சிப்பது சரிதான். காலத்தின் தேவையும் கூட. ஆனால் தலைவலிக்காக தலையை வெட்டுவது எவ்வளவு சரி? என்பதை பரிசீலியுங்கள். அத்துடன் சிறுபான்மை மதங்களை பகைப்புலமாக காட்டி பிணஅரசியல் புரியும் ஃபாஸிஸ இருளாட்சியில் நீங்கள் வெளியிட்டுள்ள காணொளி யாருடைய அரசியலுக்கு உதவிடும் என்பதையும் நீங்கள் அறியாமலிருக்க மாட்டீர்கள்.


பின் குறிப்பு:

இந்தக்காணொளியை எனக்கு அனுப்பியிருந்த நண்பர் அதை ஒரு சங்கியின் முகநூலிலிருந்து எனக்கு படியெடுத்து அனுப்பியிருந்தார்.
இந்தக்காணொளியில் உரையாடிய தோழரும் செமித்திய மதங்களான இஸ்லாத்தையும் கிறித்தவத்தையும் மட்டுமே விமர்சித்து எள்ளியிருப்பதும் மனங்கொள்ளத்தக்கது.





No comments:

Post a Comment