Tuesday 31 March 2020

ராஜீவ்காந்தி சாலை







விநாயக முருகனின் ‘ ராஜீவ்காந்தி சாலை ‘  நாவல் வெளியாகி ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. நீண்ட காலமாகவே வாசித்தேயாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தது  கொரோனா காலத்தில்தான் சாத்தியமாகியுள்ளது.


நாவல் எழுதப்படும்போது குறுந்தகவல்களின் காலம். அந்த காலம் நழுவி வட்ஸப், ட்விட்டரின் காலத்துக்குள் பூத்துக்கொண்டிருக்கின்றது. முதல் தலைமுறை தகவல் தொழில்நுட்பம் என்ற புதுப்புனல் இங்கு பாய்ந்து பெருகியபோது அந்த பாய்ச்சலில் புரட்டிப்போடப்பட்ட கலைத்து அழிக்கப்பட்ட வாழ்க்கையை  பற்றி பேசுகின்றது இந்த நாவல்.

மனித வாழ்க்கையென்பதே புதுமைகளுக்கும் எல்லா வித சாத்தியப்பாடுகளுக்குமான சோதனைக்களம்தான்.  ஆனால் எல்லா முயற்சிகளின் முடிவிலும்  மனிதம் என்னும் மலர் தன் இதழ்களை மேன்மேலும் வண்ணம் சேர்த்துதான் மிளிர வேண்டும். யானையின் கால் பட்ட எறும்பு போல முடிவில் மனிதம் தேய்ந்தழிவதை வளர்ச்சி என்று கொண்டாட முடியுமா?

இயல்புக்கு எதிரான வளர்ச்சியின் குறுக்கு வெட்டு தோற்றம், அந்த வளர்ச்சியின் மனிதர்களுக்குள் தொழிற்படுகின்ற உளவியலை கூறாய்வு செய்கின்றார் நாவலாசிரியர்.

யதார்த்தங்களுக்குள் என்றைக்குமே கால் ஊன்றிடாத, தன் முகத்தை தன் கைகளாலேயே உதிர்த்து போட்ட ஒரு தலைமுறையின் இறப்பு சாசனம்  இந்த  நாவல்.

கடுஞ்சுழலிக்காற்றுக்குப்பின் நாணல் தன் தலையை நிமிர்த்திக் கொள்வது போல எல்லாவித அழிமிதிகளுக்குப்பிறகும் வாழ்க்கை தன்னைத் தானே உயிர்ப்பித்துக் கொண்டுதான் இருக்கின்றது என்ற நம்பிக்கையையும் சேர்த்து விதைத்தே நாவல் நிறைவடைகின்றது.

No comments:

Post a Comment