Sunday 5 January 2020

வாழ்வின் நிறம் கறுப்பு






“ சிவப்பு தரவு நூல் – ஒரு பிற்சேர்க்கை “ {THE RED DATA BOOK – an Appendix }. ஆவணப்படம்  { 72 நிமிடங்கள் / 2014  }

இயக்கம் : கே.பி. பிரதீப் , சிறீமித் ; பாதசாரி பட இயக்கம்  [ PEDESTRIAN PICTURE MOVEMENT ]


பச்சை நிறம் மொத்தமாக கொட்டி வைக்கப்பட்டிருக்கும் அட்டப்பாடியின் வனப்பகுதியின் இருளர் குடியிருப்பு பகுதி . அங்கு ஒரு சிறு குடிசை. விரியும் முன்னரே தீய்த்து எறியப்பட்ட மனித மொட்டு ஒன்று அதனுள் கிடத்தப்பட்டிருக்கின்றது.


அட்டப்பாடி பள்ளத்தாக்கும் அதன் மண்ணும் மரங்களும் அறிந்த முதல் முதலான மனித குழுக்களாக அங்கு வாழ்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் இருளர் இன மக்களின் குழந்தைகள் 2012 - 13 ஆம் ஆண்டு கொத்து கொத்தாக செத்து மடிந்தனர்.

இந்த பச்சிளங்குழந்தைகளின் இறப்பை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்ட கேரள அரசும் சுகாதார நலத்துறையும் இருளர் இன தாய்மார்களிடம் காணப்படும் குருதிச்சோகைதான் அகால இறப்பிற்கான காரணம் என்ற அறிக்கையின் மூலம் மனிதப் பிஞ்சுகளின் இழப்பை மிக எளிதாக சுருக்கி விட முயற்சித்தன.

 பாதசாரி பட இயக்கத்தைச் சேர்ந்த கே.பி. பிரதீப்பும் , சிறீமித்தும்  இயக்கிய “ சிவப்பு தரவு நூல் – ஒரு பிற்சேர்க்கை “ என்ற இந்த ஆவணப்படத்தின் வழியாக இருளர் தொல்குடி மீது பல முனைகளிலிருந்தும் தொடுக்கப்படும் பேரழிவை கவனப்படுத்தியிருக்கின்றனர்.

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது அட்டப்பாடி மலைப்பள்ளத்தாக்கு . இது உயிர்க்கோள காப்புக்காடாகவும் அரசினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இங்குள்ள மூன்று கிராம பஞ்சாயத்துக்களில் இருளர்கள் , முதுகர்கள் , குரும்பர்கள் என மூன்று இன ஆதிவாசிகளும் வசித்து வருகின்றனர். இவர்களில் இருளர் இனம்தான் பெரும்பான்மையினர் .

காலங்காலமாக இந்த பள்ளத்தாக்கில் வசித்து வரும் இருளர் தொல்குடிகளிடையே 2012 -13 ஆம் ஆண்டுகளில் மட்டும் ஊட்டச்சத்துக் குறைபாடும் பிஞ்சுகளின் இறப்பும் நடைபெறுவது ஏன் ?

ஒற்றை வரிகளில் விடை காண முடியாத நூறாண்டு கால துயரத்தின் வரலாறுதான் இதற்கான விடையும் விளக்கமுமாக இருக்க முடியும்.
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பிஞ்சுகளின் இறப்பு என்ற நிகழ்வின் வழியாக பிரச்னையின் நுனியிலிருந்து ஆழமும் இருளும் மண்டிய அதன் அடி நோக்கி அங்குலம் அங்குலமாக நகர்கின்றது படம்.

ஆவணப்படத்தின் இயக்குநர் இருளர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் அளிக்கும் மறுமொழிகளின் வழியாக நூறாண்டுகளாய் அட்டப்பாடி என்ற பூமியின் தாழ்மடியில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளின் சேகரம் படீரென உடைந்து நம்முன்னே பரவுகின்றது.

ஊட்டச்சத்து குறைவு ஏன் ?

போதிய சத்தான உணவில்லை.

உணவு ஏன் இல்லை ?

விளைச்சலில்லை.

விளைச்சல் ஏன் இல்லை ?

மழை இல்லை .

மழை ஏன் இல்லை ?

காடழிப்பு.

காடு ஏன் அழிக்கப்பட்டது ?

வெட்டு மர வணிகர்கள் , கேரள அரசின் வளர்ச்சி திட்டங்கள் , வெளியிடங்களிலிருந்து  மக்கள் குடியேற்றம் , குடியேற்ற  வாசிகளின் நில ஆக்கிரமிப்பு

அரசு உங்களுக்கு உதவவில்லையா ?

நியாய விலைக்கடைகள் வழியாக அரிசி வழங்கினார்கள்தான். ஆனால் அரிசி உணவு எங்களுக்கு அன்னியமானது. அதை எங்களால் உண்ண முடியவில்லை .

எங்கள் வாழ்விடங்களும் விவசாய நிலங்களும் பறி போய் விட்டதால் நாங்கள் காலங்காலமாக பயிர் செய்து உண்டு வந்த கேழ்வரகு , சோளம் , தினை , வரகு , சாமை , துவரை , தேன் , கிழங்கு வகைகள் , பல்வேறு வகையான மருந்து செடிகள் போன்றவற்றை இழந்து விட்டோம்.

அதனால் ரத்த சோகை , சத்துக் குறைவு , மூச்சுத்திணறல் , மூச்சடைப்பு , எடை குறைவாக பிறக்கும் பிள்ளைகள் என விதம் விதமாக நோய்கள் வந்து எங்கள் கண் முன்னே குழந்தைகளை பறி கொடுக்க வேண்டிய அவலத்திற்கு உள்ளாகி நிற்கின்றோம் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 நாட்டு வளர்ச்சி , தொழில் முன்னேற்றம் , பழங்குடி முன்னேற்றம் என்ற பெயரில் அட்டப்பாடி பழங்குடியினரின் மொத்த வாழ்வையும் பறிமுதல் செய்த உலக மயமாக்கமும் , கேரள அரசும் , குடிமைச்சமூகமும் தாங்கள் பீற்றிக்கொள்ளும் வளர்ச்சி , முன்னேற்றத்தின் கனிகளையாவது அந்த பழங்குடியினருக்கு வழங்கினார்களா ? என்ற கேள்வியும் விடையில்லாமலேயே அலைகின்றது.

வனம் அடர்ந்த அட்டப்பாடி பள்ளத்தாக்கின் பெரும்பான்மை குடிமக்களாகிய. இருளர்கள் கொங்கு மண்டலத்தின் ஆதி குடி தமிழர்கள் ஆவர் . பதின்மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சாதீய மேலாதிக்கம் அவர்களை தமிழக சமவெளியிலிருந்து அட்டப்பாடியின் வனத்திற்குள் விரட்டியது.

அட்டப்பாடியின் அடர்ந்த வனப்பகுதியின் பரப்பளவு 1959 ஆம் ஆண்டு 82 % ஆக இருந்தது. 1996 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அது 19.7 % ஆக  சுருக்கப்பட்டுள்ளது. 1951 ஆம் ஆண்டு 90 % ஆக இருந்த ஆதிவாசிகளின் மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டு 40.9 % ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எண்ணிக்கை / சதவிகிதங்களின் மாற்றம் நடந்தது எப்படி ?

வெள்ளையர் ஆட்சியின் வருகையில் வனத்துடன் ஒட்டிய இருளரின் வாழ்க்கையை வெட்டிப்பிரிக்கும் வேலை புதியதாக இயற்றப்பட்ட வனச்சட்டங்களின் பெயரில் தொடங்கியது.

எதைப்பலிகொடுத்தாவது கட்டிடங்களிலும் சாலைகளிலும் பணக்கத்தைகளிலும்  நவீன வளர்ச்சியின் பளபளப்பை காணத்துடிக்கும், தோட்ட முதலாளிகளும் வெட்டு மர வணிகர்களும் காட்டை அழித்து தங்கள் பங்களிப்பை செய்தனர்.

மறுபுறம் கேரளத்தின் மன்னார்க்காடு , கோட்டயம் பகுதியிலிருந்து குடியேறிய மலையாள தோட்டத்தொழிலாளர்களினாலும் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்தும் அட்டப்பாடியில் குடியேறி வரும் தமிழர்களினாலும் அட்டப்பாடியின் ஆதிவாசிகள் சிறுபான்மையினராக்கப்பட்டார்கள் .

அட்டப்பாடியில் குடியேறியுள்ள தமிழர்களை கேரள அரசு வெளியேற்ற முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டை  கேரள தமிழர் கூட்டமைப்பினர் முன்வைத்துள்ளனர். இதன் வாயிலாக அட்டப்பாடி ஆதிவாசிகளின் வாழ்க்கை  நெருக்கடிக்கு இன்னுமொரு புதிய வடிவம் வந்து சேர்ந்துள்ளது.

அட்டப்பாடியில் பொது விநியோகத்திட்டமும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவே இல்லை. கேரள மாநிலத்தின் மற்ற பகுதிகளில் முட்டை , பால் , பழம் என வழங்கும் அங்கன்வாடி மையங்கள் அட்டப்பாடியின் ஆதிவாசி குழந்தைகளுக்கு மட்டும் அவற்றை கண்ணில் கூட காட்டுவதில்லை.

  பேறுகாலத்திற்கு தேவையான மருந்துகளும் மருத்துவ உதவிகளும் அட்டப்பாடியின் தொல்குடிகளுக்கு போதுமான அளவில் வழங்கப்படுவதில்லை.
அரசு அறிவிக்கும் நிதி உதவி பொதிகள் எதுவும் அட்டப்பாடி ஆதிவாசிகளை வந்து சேரவேயில்லை.

பெரு நில மக்களுக்கு மட்டுமேயான வளர்ச்சி என்ற பெருந்தெய்வத்தின் பீடங்களில் இருளரின் வாழ்வு பலி கொடுக்கப்பட்டுள்ளது. தலை முறை தலைமுறையாக வாழ்ந்து வாழ்ந்து செதுக்கிய தங்களது சொந்த வாழ்க்கை திரட்டிலிருந்தும் பிய்த்து எறியப்பட்ட இருளர்களினால் பெரு நில மக்களின்  நவீன வாழ்வு முறைக்குள் இணையவும் முடியவில்லை . தங்களின் ஆதி வாழ்க்கை நிலைக்கு திரும்பிசெல்லவும் வழியில்லை.

இடை நிலையில் தொங்கும் அவர்களின் வாழ்விற்கு எவ்வித நிவாரணமும் இல்லை .  காலங்காலமாய் மண்ணுடனும் வனத்துடனும் பிற உயிரிகளுடனும் தங்கள் வாழ்வை பகிர்ந்து கொண்டு தற்சார்பாய் வாழ்ந்திருந்த இருளர் சமூக மக்கள் கூலித்தொழிலாளிகளாக மாற்றப்பட்டு  கேரள நகரங்களுக்குள் எறியப்பட்டுள்ளனர்.

இருளர்களின் மொழியும் வழிபாட்டு முறையும் பெரு நிலத்தின் ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கின்றது. பள்ளிக்கூடங்களில் மலையாளம் கற்பிக்கப்படுவதால் இருளர்களின் வரிவடிவமற்ற மொழியின் பயன்பாடு மெல்ல ஒழிக்கப்படுகின்றது.

முன்னோர்களையும் இயற்கையையும் வழிபட்டு வந்த இருளர்கள் கொஞ்சம் பேர் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டுள்ளனர் . கேரள அரசின் பதிவேடுகளில் அவர்கள் அனைவரும் ஹிந்துக்களாக பதிவு செய்யப்படுகின்றனர்.

மதம் , சாதியை தங்களின் அறிவின் வழியாக பகுத்தறிவாளர்கள் நிராகரிக்கலாம் . ஆனால் பிறப்பு , இறப்பு , கல்வி , சான்றிதழ்கள் , இட ஒதுக்கீட்டின் வழியாகவும் , வாழ்க்கையின் பண்பாட்டு கூறுகளின் வழியாகவும் மதமும் சாதியும் அவர்களின் வாழ்விற்குள் மீண்டும் மீண்டும் பின் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.

ஆனால் காடு , மலைகளில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்களோ மதம் , சாதி போன்ற எந்த முன்னொட்டும் பின்னொட்டும் இல்லாமலேயே பிறந்து வாழ்ந்து வருபவர்கள்.

ஒரே நாடு ஒரே மொழி ஒரே பண்பாடு என்ற பெரு நில மத  மொழி பெரும்பண்பாட்டு வாத அறைகூவலின் கூரிய பற்சக்கரங்களின் கீழ் இருளர்களின் வாழ்விடம் , மொழி , பண்பாடு என்பன அரைத்து சமப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்று மற்றொன்றை எதிர்த்து சமூக தளத்தில் அரசியல் செய்யும் இந்த பெரும் பண்பாட்டு வாதங்கள் இருளர் ஆதிகுடிகளை வேரறுக்கும் விஷயத்தில் மட்டும் அபூர்வமான ஒற்றுமையுடன் கைகோர்த்து நிற்கின்றன.

. இருளர்களின் வாழ்க்கை முறை , வாழிடம் , மொழி , வழிபாட்டு முறை போன்றவற்றை அழித்த பிறகு ஊட்டச்சத்துக் குறைபாடு என்ற நிகழ்வின் வழியாக அவர்களின் புதிய தலைமுறையும் கொல்லப்படுகின்றனர்.

கொலைக்கருவிகள் எதுவுமின்றி ஒரு இனத்தை அரவமில்லாமல் வேரறுக்க முடியும் என்பதற்கு  நம் கையெல்லையில் உள்ள அட்டப்பாடி இருளர் வாழ்க்கையை நிகழ்கண சாட்சியாக நம் முன் நிறுத்தும்  “ சிவப்பு தரவு நூல் – ஒரு பிற்சேர்க்கை “ என்ற இந்த ஆவணப்படமானது இனப்படுகொலை பற்றிய வரைவிலக்கணத்தின் எல்லைகள் விரிவடைந்திருப்பதை துல்லியமாக கவனிக்கின்றது .

நிறங்களின் சேர்க்கையில் பிறக்கும் ஜாலங்கள்  நம் வாழ்வின் பல தருணங்கள் மீது ஏற்படுத்தும் நேர் நிலை தாக்கத்தையே நாம் எப்போதும் உணர்ந்து  வருகின்றோம்.

காட்டின் பசுமையும் . சோகை பிடித்த குருதியின் சிவப்பும் வளர்ச்சியின் பளபளப்பும் கலந்த நிறங்களின் சேர்க்கையானது இருளர்களின் வாழ்வில் மாயஜாலங்களை உண்டுபண்ணவில்லை . மேலும் இருளைத்தான் கொண்டு வந்திருக்கின்றது .இருளர்களின் வாழ்வானது இருளின் மீளாத ஆழங்களில் புதைக்கப்படுகின்றது .



12/09/2015  



.



No comments:

Post a Comment