Sunday, 5 January 2020

வற்றாத ஊற்று





வீட்டின் பின்புறம் முன்னூறு சதுர அடியில் சிறிய தோட்டம் ஒன்று அவருக்கு இருந்தது.. அதில் ஒரு கிணறும் இருந்தது. தோட்டத்தில் வெண்டைக்காய், சுரைக்காய், கீரை வகைகள், வெள்ளரி, பப்பாளி, மா போன்றவை  நின்றன. அவை குறைவின்றி விளைச்சலை தந்து கொண்டிருந்தன.

அந்த வருடம் மழை பொய்த்து விட்டது. தீய்க்கும் வெயில். அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள கிணறுகளில் எல்லாம் நீர் மட்டம் தரையை தொட்டு விட்டது. இறைக்கும் நீரிலும் மண்  கலங்கியதாக இருந்தது.


இவர் வீட்டின் கிணற்றிலும் தண்ணீர் மட்டம் வெகுவாக இறங்கி காணப்பட்டது. ஆனாலும் அவர் வீட்டினுடைய அன்றாட தேவைகளுக்கும் தோட்டத்திற்குமான தெள்ளிய நீர் தட்டுப்பாடின்றி கிடைத்துதான் வந்தது.
ஒரு நாள் இவர் வீட்டிற்கு வந்த உறவினர்  இந்த கிணற்றின் நீர் மட்டம் மட்டும் தரையைத் தட்டாமல் இருப்பது எப்படி? என வியந்தார்.

தோட்டத்தின் மூலையில் இருந்த  கலன் ஒன்று இருந்தது. அதன் விளிம்பு வரை நீர் நிரம்பி இருந்தது. காக்கைகளும் குருவிகளும் அணில்களும் நீரருந்துவதற்காக அதை அவர் வைத்திருந்தார்.

 வீட்டின் உரிமையாளர்  அந்த கலனைக் காண்பித்து, “ இதிலிருந்துதான் கிணற்றுக்கான நீர் சுரக்கின்றது “ என்றார். உறவினர் குழம்பிப்போய் இவர் முகத்தை பார்த்தார்.

மெல்ல புன்னகைத்து விட்டு வீட்டின் உரிமையாளர் சொன்னார் , “ பிற  உயிரிகளின் தேவைகளை நீங்கள் நிறைவு செய்யும்போது உங்களுக்கான தேவைகள் தானே பொறுப்பெடுத்துக் கொள்ளப்படும் “ என்றார்.

 23/11/2017


No comments:

Post a Comment

An Evening Train in Central Sri Lanka