Sunday 16 February 2020

நாங்கள் வாழ்வதை வைத்து மதிப்பிடுங்கள். த்வீபா – கன்னடத்திரைப்படம்







கன்னட எழுத்தாளர் நாபட் டிஸவ்ஸாவின் நாவலான ‘ த்வீபா “( தீவு ) வை தழுவி கன்னட சினிமாவின்  புதிய அலை இயக்கத்தின் முன்னோடியான பத்மசிறீ கிரீஷ் கசரவள்ளியால் இயக்கப்பட்டு 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் திரைக்கதையையும் நாபட் டிஸவ்ஸாவே எழுதியுள்ளார்.

வளர்ச்சியின் பெயரால் தாங்கள் பிறந்த நிலத்திலிருந்து மக்கள் பிடுங்கி எறியப்படுவதன் வலி , குடும்பத்திற்குள் பெண்கள் சுவைக்கும் பிரிவுத்துயர் , அங்கீகாரமின்மை, மென் தீண்டாமை , ஒடுக்கப்படும் மனிதருக்குள்ளும் ஒளிந்திருக்கும் குரூரம், நம்பிக்கைகளின் முரண் என பல கிளைகளாக கதை ஊற்றெடுக்கின்றது.

கர்நாடகத்தில் சீதா பர்வதம் ( சீதா குன்று ) என்ற மலை குக்கிராமத்தை ஒட்டி அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவிற்கும் நீர் தேக்கப்பட வேண்டும் என அரசு முடிவெடுக்கின்றது. அப்போது சீதா பர்வதமும் மூழ்கி விடும் என்பதால் அங்கு வசிக்கின்ற மக்களை இழப்பீட்டு தோகை கொடுத்து வேறிடங்களுக்கு வெளியேற்றுகிறது அரசு.

அரசு கொடுப்பதை வாங்கிக் கொண்டு கிட்டதட்ட அனைவரும் பிறந்த மண்ணை விட்டு வெளியேறுகின்றனர். ஆனால்  துர்கப்பா என்ற முதியவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அதை விட்டு வெளியேற மனதில்லை. அவர்களின் தெய்வமான பகவதிக்கு  நேமா பூஜை செய்து அதன் மூலம் கிராம மக்களிடம் தனி மதிப்பை பெற்றுள்ள துர்கப்பாவிற்கு  தெய்வம் முன்னோர் மலை மரம் காடு நதி எல்லாம் தனதாக தெரிகின்றது. தன்னிலிருந்து தன்னை அவர் வெளியேற்ற அணியமாகவில்லை.

துர்கப்பாவின் மகன் கணப்பா தன் தகப்பனின் தப்படியை ஒழுகி  வாழ்கின்றவன். வனப்பும் உழைப்பும் நிறைந்த அவனது மனைவி நாகியோ இவர்களிலிருந்து விலகி நின்று சிந்திப்பவள். சீதா பர்வதத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற அவளது விருப்பத்தை  , பிறந்தகத்தை விட்டு எப்படி வெளியேறுவது ?  எனக்கூறி கணவன் கணப்பா மறுதலிக்கின்றான்.  நாங்கள் எங்களின் பிறந்தகத்தை விட்டு பிரிந்து உங்கள் வீடுகளில் வந்து குடியிருக்கவில்லையா? என்கிறாள் நாகி. கிரீஷ் கசரவள்ளியின்  பெண்ணுரிமைக்குரல் நாகியின் வழியாக ஒலிக்கின்றது.

வருவாய்த்துறை அலுவலரை போய் சந்திக்கின்றான் கணப்பா. சீதா பர்வதத்தில் தாங்கள் குடியிருந்ததற்கான சான்றுகளாக,  காலத்தில் தோய்ந்த நினைவுகளை சுமந்திருக்கும் ஒளிப்படங்களை காட்டுகின்றான். அதில் ஒரு படத்தில் அணை கட்டத்தொடங்கும்போது கட்டுமானப் பொறிக்குதனது தந்தை துர்கப்பா  பூஜை செய்யும் படத்தையும் காட்டுகின்றார். ஆனால் இவர்கள் குடியிருப்பதற்கான அரசு ஆவணங்கள் எதுவுமில்லை என்கின்றார் அங்குள்ள எழுத்தர். 

கணப்பாவோ தன் மதிப்பு மிக்க வாழ்க்கையின் புற அடையாளமான தலைப்பாகையை அலுவலரிடம் தொட்டுக் காட்டுகின்றார். உங்கள் அளவுகோலை வைத்து எங்கள் வாழ்க்கையை அளக்காதீர்கள். நாங்கள் வாழுவதை வைத்து மதிப்பிடுங்கள். பெருமிதத்தை நீங்கள் இழப்பீடு செய்ய முடியுமா? என அலுவலர்களிடம் வாதிடுகின்றார் கணப்பா.

கள ஆய்விற்காக வரும் அலுவலர்களிடம் இது ராமனும் சீதையும் சிரித்து மகிழ்ந்து வாழ்ந்த பூமி, தாங்கள் ராமனுக்கு குற்றேவல் செய்த தலைமுறை என ஆசை பொங்க ஓடி ஓடி ஒவ்வொரு அங்குலமாக திசை திசையாக சுட்டிக் காட்டுகின்றார் துர்கப்பா. நீங்கள் வாழ்ந்த பூமி என்பதற்கு தொன்மங்கள் போதாது. ஆவணங்களே பேசும் என எள்ளலோடு கூறுகின்றனர் அலுவலர்கள்.

இந்த மரம் உனதில்லை இந்த தெய்வம் உனதில்லை என்று சொல்பவர்கள் கடைசியாக இது உனதில்லை என கோவணத்தையும் பிடுங்கி விடுவார்கள். அவர்கள் விளைநிலத்தை மட்டும்தான் சொத்தாக கணக்கெடுக்கின்றனர். ஆனால் நாமோ மலை ஆறு காடு என எல்லாவற்றையும் நம்முடையது அரசினுடையது என பிரித்து பார்ப்பதில்லை என கொந்தளிக்கின்றார் துர்கப்பா.

கிராமத்தினர் ஒவ்வொருவராக வெளியேற வெளியேற கணப்பாவும் நாகிக்கும் வெளியேறும் ஆசை துளிர்க்கின்றது. புனிதமான சீதா பர்வதத்தையும் பகவதி அன்னை ஆலயத்தையும் வெள்ளம் தொடாது என உறுதியாக நம்பும் துர்கப்பா வெளியேற மறுக்கின்றார்.

அடுக்களைக்குள்ளும் பூஜையறைக்குள்ளும் நுழையக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தங்களின் வீட்டை  பயன்படுத்திக்கொள்ளும்படி கணப்பாவிடம் பிராமணக்குடும்பத்தினர் கூறுகின்றனர். சீதா பர்வதத்தை விட்டு வெளியேறும் இந்தக்குடும்பத்தினர் பூசாரி கோலம் பூண்டிருக்கும் துர்கப்பாவின் கையிலிருந்து ஆசியையும் பிரசாதத்தையும் பெறுகின்றனர். அன்றாடத்திற்குள் இயங்கும் நம்பிக்கைக்கும் நடைமுறை வாழ்க்கைக்குமான முரண் மோதலானது துருத்தலில்லாமல் காட்சியாகியுள்ளது.

தொடர் மழையினாலும் மதகுகள் மூடப்படுவதாலும் அணையின் நீர் மட்டம் உயர உயர  நீரின் பரப்பு துர்கப்பாவின் வீட்டை  வளைக்கத் தொடங்குகின்றது.  பிடிவாதம் பிடிக்கும் துர்கப்பாவை வலுக்கட்டாயமாக காவல்துறை மூலம் வெளியேற்றுகின்றனர்.

பெரு நிலத்திலுள்ள நாகியின் பெற்றோர் வீட்டில் தற்காலிகமாக குடியேறுகின்றனர் துர்கப்பாவின் குடும்பத்தினர்.

மும்பை வாழ்க்கையில் தோல்வியடைந்த இளைஞன் கிருஷ்ணா கணப்பாவின் குடும்பத்திற்குள்  நுழைகின்றான். இவன் கணப்பாவின் உறவினனும் கூட.  எல்லாப்பக்கமும் நீரினால் வளைத்து பிடிக்கப்பட்ட சீதா பர்வதத்தினுள் பொதியப்பட்ட  மௌனத்தை தன் மீது திணிக்கப்பட்ட ஒரு கட்டாய நிரலாக உணருகிறாள் நாகி. 

பாதி வேடிக்கை பாதி தீவிரம், இவற்றின் கலவையான கிருஷ்ணாவின் வரவு நாகியை மௌனத்தின் சுமையிலிருந்து விடுவிக்கின்றது. நாகி, கிருஷ்ணாவின் இயல்பான தொடர்பாடலினால் அகச் சம நிலை குலைகின்றான் கணப்பா. இந்த குமைச்சல் மண்டி மண்டி உள்ளம் கனல்கிறது. 

அணையின் நீர்மட்டம் பெருகி பெருகி பெரு நிலத்திற்கும் சீதா பர்வதத்திற்குமான எல்லா வழிகளையும்  அடைக்கின்றது. இதனால் மலையில் மேயப்போன கணப்பாவின் எருமையும் கன்றும் சிக்கிக் கொள்கின்றன. தொடரடியாக மழை பொழிந்து கொண்டேயிருக்கின்றது.

அவற்றை மீட்டு வருமாறு கணப்பாவிடம் கேட்கின்றாள் நாகி. அவனோ மர்மப்புன்னகையுடன் கிருஷ்ணாவை போகச் சொல்லுகின்றான். கிருஷ்ணாவும் போய் மீட்டு வரும்போது நீரின் ஆழத்தில் சிக்கிக் கொள்கின்றான். மும்பையில் தற்கொலைக்கு முயன்று தோற்றவன் இங்காவது வெல்லட்டுமே என்கிறான் கணப்பா. அவனது சிரிப்பிற்குள் ஒளிந்திருக்கும் கொல்லும் கொடூரத்தை மிக இயல்பாக வெளிப்படுத்துகின்றான்.

தொடர்மழையையும் வெள்ளத்தையும் விட கிருஷ்ணாவை பற்றிய எண்ணங்கள்தான் கணப்பாவை கூடுதல் உளைச்சலுக்குள்ளாக்குகின்றன. எனவே கிடைக்கும் இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொண்டு எங்காவது தொலைவு பகுதிக்கு சென்று குடியேறலாம் எனக்கூறி அரசு அலுவலர்கள் கொடுத்து விட்ட படிவத்தை தந்தை துர்கப்பாவிடம் நீட்டி கையெழுத்திடச் சொல்லுகின்றான் கணப்பா. கையெழுத்திட மறுக்கின்றார் தந்தை துர்கப்பா.

எல்லா நம்பிக்கைகளும் தரந்து போக குன்றின் உச்சியில் உள்ள பகவதி தேவதையின் வழிபாட்டிடத்தில் தன்னந்தனியாக உருக்கமாக  நேமா பூஜை செய்கின்றார் துர்கப்பா.

அரசு சீதா குன்று, எங்கள் வீடு என எல்லாவற்றையும் மூழ்கடிக்க பார்க்கின்றது. அவர்கள் ஒன்றை வளர்க்க இன்னொன்றை மூழ்கடிக்கின்றனர். இது கொடுமை இல்லையா ?   அநீதக்கார அரசனை கொன்ற தேவியே! நான் உன்னை வணங்குவது உண்மையாக இருந்தால் தீமைகளை அடித்து சென்று விடு என மன்றாடுகின்றார்.

ஏறிய நீர்மட்டத்திற்குள் அவரின் சடலம் மறுநாள் காலையில் மீட்கப்படுகின்றது.
தந்தையின் அகால இறப்பு, விடா மழை, மூழ்கடிக்கும் மூர்க்கத்துடன் உயர்த்தப்படும் வெள்ள மட்டம், கிருஷ்ணா என்ற முக்காரணிகளால் மனதளவில் முடங்குகின்றான் கணப்பா. கணவன் மனைவி முரண் முறுகலாகின்றது. இதன் விளைவாக கிருஷ்ணப்பா வெளியேற்றப்படுகின்றான். ஆனாலும் கணப்பாவின் நடவடிக்கைகளில் விரக்தியும் செயலின்மையும் தொடர்கின்றது.

வீட்டை சுற்றி வட்டமிடும் இக்கட்டுகளை தன்னந்தனியே சமாளிக்கின்றாள் நாகி. இதற்கிடையில் அணை நிரம்பி மறுகால் பாயத் தொடங்குகின்றது . மூழ்கும் இடர் நீங்கியதை கணவனும் மனைவியும் இணைந்து களி கூத்தாடுகின்றனர்.

அரசும் நண்பர்களும் கைவிட்டனர். ஆனால்  புனித ஆவி, தேவதை நம்மை கைவிடவில்லை என்கின்றான் கணப்பா.

நீரினாலும் மழையினாலும் நொறுங்கவிருந்த வீட்டை நிமிர்த்தியது யார்? கன்றை வேட்டையாட வந்த புலியை விரட்டியது யார்? நானல்லவா? நம் குடும்பத்தை வீட்டை காத்ததில் தேவதையுடன் எனக்கும் பங்குண்டுதானே? என கேட்கும் நாகியிடம் அதெல்லாம் இல்லை,  நீ புனித ஆவியின் தேவதையின் கைப்பாவை மட்டுமே என மறுக்கின்றான் கணப்பா.
உள்ளுக்குள் நொறுங்கிப் போகின்றாள் நாகி. படம் முடிவடைகின்றது.

--------------------

 நீரின் காதலனான கிரீஷ் கசரவள்ளி மழையையும் நீரையும் படிமமாக்கி அதனுள் தான் விரும்பும் மனித உணர்வுகளை உயிர் இயக்கங்களை நடமாட விட்டிருக்கின்றார்.

நீரின் மூலம் அரசு திணிக்கும் இடப்பெயர்வானது நேரடியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சீதா பர்வதத்தினதும் அதனது மானுட நீட்சிகளான துர்கப்பா குடும்பத்தினரதும் வாழ்வின் எல்லா இழைகளிலும் நீரை மெல்லொழுக்காக அழகுற கசிய விட்டிருக்கின்றார் நாபட் டிஸவ்ஸா. 
இயற்கையாக பொழிந்த மழையில் இத்திரைப்படத்தை ஒளிப்பதிந்துள்ளார் கிரீஷ் கசரவள்ளி.

வளர்ச்சியின் பெயரால் அரசு திணிக்கும் இடப்பெயர்வானது மனிதருக்குள் விழைவிக்கும் துயரை இடரை மிகச் சிறப்பாக சித்தரிக்கும் நாபட் டிஸவ்ஸா, கிரீஷ் கசரவள்ளி, அவ்வாறு தூக்கி எறியப்படும் மனிதருக்குள்ளும் இயங்கும் முரண்களை, கொடூரங்களை, மூட நம்பிக்கைகளை, பெண் ஒடுக்குதலை கூடுதல் எத்தனங்கள் எதுவுமின்றி நமக்கு சொல்லுகின்றனர். 

உன்னத கொண்டாட்டங்கள், அசாதாரணங்கள் நீக்கப்பட்ட  பருண்மையானது படைப்புக்களில் தட்டையாக வெளிப்படும் இடருண்டு. அதை மிக இயல்பாகவும் அழகாகவும் வெற்றிகரமாகவும் கடந்துள்ளனர் இரு படைப்பாளிகளும்.




No comments:

Post a Comment