Friday, 20 December 2019

LE GRAND VOYAGE -- பெரும் பயணம்


LE GRAND VOYAGE திரைப்படத்திலிருந்து

“காக்கா இந்தியாங்கிற நிலப்பரப்பு முடியுற இந்த எடத்துல நிக்கும்போது வித்தியாசமாயிருக்குல்ல ? “ .

அது உண்மதான். ஆனா இந்த பாத இங்க முடியுதுண்டா மறுபக்கம் தொடங்குதுதானே? அப்போ முடிவு எது தொடக்கம் எது?”

இரு வழிப்பாதைகளைக் கொண்ட வாரணாசி – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை எண்:44  முட்டி நிற்குமிடம்: கன்னியாகுமரி முக்கடல் கூடுகை.

2015 ஆம் ஆண்டு  நானும் மறைந்த எழுத்தாளர் ஷுஅய்ப் காக்காவும் ஒரு இலக்கியக்கூடலுக்காகக் கன்னியாகுமரி சென்றிருந்தோம். அச்சமயம் இந்த சந்தியில் நின்று கொண்டுதான்  நான் கேட்டதற்கு மறு மொழியாக அவர் என்னிடம் இக்கேள்வியைக் கேட்டார்.

பயணத்தின் வழியாக வாழ்க்கையை அறிதல், வாழ்க்கையையேப் பயணமாக உணர்தல் என ஒன்றையொன்று பிரிக்க முடியாத கண்ணியின் தொடர் சுழற்சியை உற்றுக் கவனித்தால் ஒரு விடயம் புரிய வரும். பயணம் எனும் பெருஞ்சுழல் வளையம் குறுகிக் குறுகி அறுதியில் மறுமைப் பெருவெளி என்ற மூலப்புள்ளிக்குள் ஒடுங்கும் வரை  முடிவுறுவதே இல்லை என்ற பேருண்மை.

இச்சுழற்சியின் முடிவிலியின்மையை திரைப்படமாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ‘LE GRAND VOYAGE’ என்ற ஃப்ரெஞ்ச் மொழிப்படம். இதன் பொருள் ‘பெரும் பயணம்.’ 108 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படம் இஸ்மாயீல் ஃபரூக்கியின் எழுத்து & இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த ஆண்டே இப்படம் தொராந்தோ,வெனீஸ் பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது.

திரைப்படக் கதை:

பிரான்சு நாட்டின்  தென் பகுதியில் மொராக்கிய முஸ்லிம் குடும்பமொன்று வாழ்ந்து வருகிறது. குடும்பத்தலைவர் முஹம்மத் மஜ்த் வயதானவர். அவருக்கு ஆணும் பெண்ணுமாகப் பிள்ளைகள் உள்ளனர்.

ஹஜ் பயணத்தை தன் மகிழுந்து மூலம் நிறைவேற்றத் தீர்மானிக்கிறார் முஹம்மத் மஜ்த். அவருக்கோ வண்டியோட்டத்தெரியாது. ஓட்டத்தெரிந்த மூத்த மகன் போதையில் போக்குவரத்து சமிக்ஞைகளை மீறியதால் ஓட்டுநர் உரிமம் பறிமுதலாகி விட்டது. இளைய மகன் ரிதாவை வண்டியை செலுத்த அழைக்கிறார் தந்தை. வேண்டா வெறுப்பாக அவன் உடன் செல்கிறான்.

வாழ்வின் மாலைப்பொழுதில் இருக்கும் தந்தை X  கட்டிளம் பருவத்தின் பொங்கு நுரையாக இருக்கும் மகன் ரிதாவிற்கும் இடையேயான முரண்கள் ஒவ்வொன்றாக பயணத்தில் மேலெழுந்து வருகின்றன.

தந்தை இஸ்லாமிய நடைமுறைகளைப் பேணி வாழும் முஸ்லிம். மகன் ரிதாவோ முழுக்க மேலைப் பண்பாட்டில் தோய்ந்தவன். பிரெஞ்ச் மொழியில் மட்டுமே உரையாடுவதை விரும்புபவன்.

பயணம் முழுக்க தந்தை அவனுடன் அறபியிலேயே பேசுகிறார். ரிதாவோ பிரெஞ்ச் மொழியில் உரையாடுகிறான். தொடர் பயணத்தில் ஓய்வெடுக்காமல் வண்டியை மிக வேகமாக செலுத்துகிறான் ரிதா. ஓய்வெடுத்து மெதுவாக செலுத்தும்படி கூறும் தந்தை “ வேகமாக சென்ற அனைவருமே இறந்துவிட்டார்கள் “ என அறிவுறுத்துகிறார்.

“மெதுவாக சென்றால் எப்போது போய் சேர்வது?” மகன் வினவுகிறான். தந்தையின் பேச்சை அவன் அலட்சியப்படுத்தியதால் அதி வேகத்தில் செல்லும் வண்டியின் பிரேக்கை அவர் திடுமெனப் போடுகிறார். நிலைகுலையும் வண்டியால் அதிர்ச்சியடையும் மகனிடம் “ இங்கே நான்தான் தீர்மானிப்பவன் “ என்கிறார்.

இத்தலி, ஸ்லோவேனியா, குரேஷியா, செர்பியா, பல்கேரியா, துருக்கி, சிரியா, ஜோர்தான் என்ற நாடுகளின் வழியாக இருவரும் பயணிக்கின்றனர். வெவ்வேறு வகையான மொழிகள், பண்பாடுகள், கொட்டும் பனி, கொதிக்கும் பாலை போன்ற பல்வகையான நிலப்பரப்புகளும் காலச்சூழ் நிலைகளும் மிக அழகியக் காட்சிகளாக மலர்கின்றன.

எளிதான வான்வழிப்பயணத்தை விட்டுவிட்டு கடினமான இந்த மகிழுந்துப் பயணத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?  என்ற மகனின் கேள்விக்கு “நானாவது மகிழுந்தில் வருகிறேன். ஆனால் எனது தந்தை அதுதான் உனது பாட்டனார் ஹஜ் பயணத்தை கோவேறு கழுதையில் மேற்கொண்டார். கடலிலுள்ள உப்பு நீரானது மேகங்களினால் எப்படித் தூய்மைப்படுத்தப்படுகிறதோ அதே போல ஹஜ் பயணத்திலிருந்து திரும்பும் ஹாஜியும் பாவங்களிலிருந்து நீங்குகிறார்“ என்கிறார்.

தந்தையின் நேரந்தவறா தொழுகை, குர்ஆன் ஓதல், திக்ருடன் பயணம் தொடர்கிறது. ஓரிடத்தில் வழி தவறி விடுகின்றனர். ஒரு பெண்ணிடம் வழி கேட்க அவரோ இவர்களின் வண்டியில் ஏறிக்கொள்கிறார். எதுவும் பேச பேசாமல் வரும்  அவர் வண்டியை விட்டு இறங்கவும் மறுக்கிறார். குறிப்பிட்ட தொலைவு வரை அவரை உடன் பயணிக்க இசைவதோடு அவருக்கு உணவும் அளிக்கின்றனர்.

மொழிச்சிக்கலின் விளைவாக துருக்கி நாட்டின் சோதனைச்சாவடியை கடப்பதில் நெருக்கடி வருகிறது. அப்போது முஸ்தஃபா என்ற துருக்கியர் உதவுகிறார். அது நட்பாக விரிகிறது. முதல் பார்வையிலேயே தனது நிறைந்தப் பட்டறிவின் வழியாக முஸ்தஃபாவை எடை போடும் தந்தை அந்நட்பை விரும்பவில்லை.

துருக்கியை சுற்றிப்பார்க்க விழையும் மகனைப் பார்த்து “நாம் நெடுந்தொலைவு போக வேண்டியுள்ளது . இடையில் சுற்றிப்பார்க்க நேரமில்லை” என அவனின் கோரிக்கையை நிராகரிக்கிறார் தந்தை.

தன் வீட்டில் தேனீர் விருந்தோம்பலுக்காக ரிதாவை அழைக்கிறார் முஸ்தஃபா. தந்தையின் கட்டுப்பாடுகளில் இறுகிப்போயிருக்கும் ரிதாவும் முஸ்தாஃபாவின் தோழமைக்கு தன்னை ஒப்புவிக்கிறான்.

மதுக்குப்பியைக்காட்டி ரிதாவுக்குள் ஒளிந்திருக்கும் விருப்பங்களை மெல்ல திறந்து விடுகிறார் முஸ்தஃபா. சிறிது தயங்கும் ரிதாவை நோக்கி  “ சிறிய நீர் குவளையில் கொஞ்சம் மதுவை கலந்தால் குவளை முழுவதும் மதுவாகிவிடும். ஆனால் அதே அளவு மதுவைக் கடலில் கலந்தால் ஒன்றும் ஆகி விடப்போவதில்லை“ என்ற சூஃபி ஞானியின் மேற்கோள் ஒன்றைக் கூறி அவனை மதுவுக்கு சம்மதிக்க வைக்கிறார்.

போதையில் மிதக்கும் ரிதாவை விடுதியில் விட்டு விட்டு செல்கிறார் முஸ்தஃபா. மறுநாள் காலை கண் விழிக்கும்போது “பணத்தைக்காணவில்லை“ என தந்தைப் பதறுகிறார்.

முஸ்தஃபாவின் மீது அய்யப்பார்வை விழ காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து செல்கின்றனர். விசாரணையில் தான் குற்றமற்றவன் எனஅவர் வாதிடுகிறார். முஸ்தஃபா பணம் திருடியதை தான் நேரடியாகக் காணாதபோது குற்றச்சாட்டை மேற்கொண்டும் வலியுறுத்த விரும்பவில்லை என ரிதாவின் தந்தை சொல்கிறார்.

ஹஜ் பயணத்திலிருந்து திரும்பும்போது தேவைப்படும் பணத்தை வேறொரு உறையில் போட்டு வைத்திருந்தார் தந்தை. அதைக் கொண்டு முட்டை , ரொட்டித்துண்டு என இருவரும்  சிக்கனமாக உணவருந்துகின்றனர் .

முட்டையும் ரொட்டியும் தனக்கு போதாது இறைச்சிதான் வேண்டும் என மகன் அடம் பிடிக்கவே அவனுக்காக ஒரு ஆட்டை வாங்கி அறுக்க முனைகிறார் தந்தை. ஆட்டை சரியாகப் பிடிக்கத்தெரியாத ரிதா அதைத்தப்ப விடுகிறான்.

இடைவழியில் இரக்கும் ஓர் ஏழைக்கு சதக்கா வழங்குகிறார் தந்தை. அவரின் சிக்கன நடவடிக்கைகளினாலும் இறைச்சி தின்ன முடியாத எரிச்சலிலும் இருந்த ரிதா அந்த ஏழையின் கையிலிருந்த அக்கொடைப்பணத்தை பிடுங்குகிறான். கோபத்தில் மகனை அறைகிறார் தந்தை.

இனி தன்னால் வண்டி ஓட்டி வர முடியாது என ரிதா மறுக்கிறான். ஒன்றாகப் பயணித்து வந்த இரு உறவுகளுக்கிடையில் உரசி வந்த இரு முரண்களும் திடீரென வலுத்து பிரிவிற்கான புள்ளியில் வந்து நிற்கின்றன. தந்தை மகனுக்கிடையே வலிமிக்க ஆழ் மௌனம் நிலை கொள்கிறது.

ஒரு தீர்மானத்திற்கு வந்தவராய் சங்கடமிக்க அந்த மௌனத்தை கலைக்கிறார் தந்தை. அடுத்த பெரிய ஊர் வரை ஊர்தியை ஓட்டி வருமாறும் அங்கு அவ்வண்டியை விற்றுக் கிடைக்கும் பணத்தில் ரிதாவை ஊருக்குத் திரும்ப அனுப்பி வைத்து விட்டு தனியனாக ஹஜ்ஜை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவிக்கிறார்.

தந்தையின் சொற்களில் தோய்ந்திருந்த முதிர்வும் கனிவும் உறுதியும் அமைதியும் தீக்குழியின் மீது பொழியும் மழை நீர் போல ரிதாவின் பிடிவாதத்தை அவிக்கிறது. ஒற்றைக் கணத்தில் மொத்தமாக மலரும் காடு போல தந்தை மீதான பாசம் ரிதாவுக்குள் மறு வரவாகிறது.

மீளத்தொடங்கும் பயணத்தில் தந்தை மகன் உறவின் புதிய விரிசல்கள் ஒட்டுதல்கள், காணாமல் போன பணத்தினால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதம், ஹஜ் பயணத்தின் போது ஏற்படும் நிகழ்வுகள் என படம் மெல்ல அவிழ்கிறது.

விலகி நிற்கும் மெய்ம்மைகளை இணைத்துக் காட்டி நேரடி பாடம் நடத்தும் வேலையை செய்யாமல் பார்வையாளர்களுக்கே விட்டு விடும் இயக்குனரின் உத்தி பாராட்டிற்குரியது .

தன் மக்களின் வளர்ப்பில் தான் தவற விட்டதை ஹஜ்ஜில் உணரும் முதியவருக்கு இப்பயணம் மீளக் கைமாறியது எதை?

முதியவர் முஹம்மத் மஜ்த் மக்காவை சென்றடையும் முன்னரே  பிற மனிதர்களுடனான அற நடத்தைகளினால் இறைவனை முன்னோக்கிய தன் பாதையின் கதவுகளை திறந்துக் கொண்டே செல்கிறார்.

பாவத்தைத் தொலைக்கும் முயற்சியான ஹஜ் பயணம் நிறைவேற முன்னரேயே அதற்கான விளைவுகள் முதியவர் முஹம்மத் மஜ்தின் உள்ளத்திலும் உடலிலும் சுனை நீர் போல சுரக்கின்றன. ஒவ்வொரு நாளும் குழந்தையாக  அவர் தன்னைப் புதுப்பிக்கிறார்.

தன் சொல்லிலும் செயலிலும் நோக்கத்திலும் ஒத்திசைவைத் தொடர்ந்து பேணும் முதியவரின் வாழ்வு வந்தடையும் இடம் என்ன? என்பதை திரைப்படத்தின் கடைசிக் காட்சிகளில் அற்புதமாகத் தீட்டியுள்ளார் இயக்குநர்.

ஆன்மத் தேடலின்பெரும்பாதைக்குள் ஏராளமானோர் பயணிக்கலாம்தான். ஆனால் எல்லாத் திசைகளிலும் அத் தடம் கிளைத்து கிளைத்து பரவுவதென்பது அவர்களனைவருக்கும் வாய்ப்பதில்லை..

No comments:

Post a Comment

பந்து மேச்