Sunday 22 December 2019

கரிய திரவத்து மீன்கள்...





சற்று அயர்ந்தால்
தூக்கம்
மரணமாகி விடும்
நட்பு காதலாவதைப்போல  ---- கவிஞர் இன்குலாப்

தூக்கம் மரணம் நட்பு காதல் என்ற உயிரியல் உணர்வு நிலை செயல்பாடுகளின் வாயிலாக  வாழ்வியல் முரண்களை இன்குலாப் சுட்டிக்காட்டுகின்றார். அந்த முரண்களில் ஒளிந்துள்ள அவலமும் சுவையும் யாராலும் கணிக்க முடியாத கால  இடை வெளியில் நிகழ முடியும் . அவற்றிற்கிடையே உள்ள பிரி கோடும் மிக மெலிதானது என்பதுதான் பிரமிக்க வைக்கும் உண்மை.

வாழ்க்கையின் முடிவில்லாத கொண்டாட்டத்தின் குறியீடாக நீண்டு செல்லும் இரவைப் பாடியவர்கள் பலர்.

 இராக்கால உல்லாச விடுதிகளின் மேடையில் மாறி மாறி பல வண்ண ஒளிக்கற்றைகளை இறைக்கும் ஒளி விளக்குகள். ஒளிக்கற்றைகளுக்கு போட்டியாக  குடியும் நடனமும் பாடலும் அரங்கமெங்கும் ததும்பிக்கொண்டே இருக்கின்றது . அவை முக்கால் இரவு வரை கிளர்ச்சியான மிதக்கும் உணர்வலைகளை பிறப்பித்துக்கொண்டே இருக்கின்றன.

பெரு நகர மயமாக்கத்தின் நுகர்வு பண்பாட்டின் அழுத்தமான அடையாளங்களில் ஒன்றாக இரவு கேளிக்கை விடுதிகள் மாற்றப்பட்டிருக்கின்றன.

செயற்கையாக கட்டி எழுப்பப்படும் போலி வாழ்வியல் அந்தஸ்துகளை இயற்கையானது தனது அன்றாட அழகியலால் உடைத்து எறிந்து கொண்டே இருக்கின்றது.

நீல வண்ணத்தையும் மரகதப்பச்சை நிறத்தையும் கலந்து உருக்கி ஒரு வாயகன்ற சட்டியில் கொதிக்க விட்டது போன்ற போன்ற அரபிக்கடலின் நீர் பரப்பு. அந்த வண்ண மய அரபிக்கடலில் ஏகாந்த வாசம் செய்யும் வட்டபவளத்திட்டுகள். 

இந்த திட்டுகள் திரண்டு தீவுக்கூட்டமாக லட்சத்தீவு என்ற பெயருடன் நிலை நிற்கின்றன. இது கேரள கரையிலிருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .

இங்கு சில ஆயிரம் பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மீனவர் ஒருவரை  கைரளி மலையாள தொலைக்காட்சியினர் சந்தித்தனர். அவர்தான் அந்த தீவிலேயே முதன்முதலாக படகு வாங்கியவர்.

அவர் பெயர் பெற்ற கை மருத்துவரும் கூட. சுருக்கமாக சொன்னால் பிரபலமானவர்.

அவரின்  வாழ்க்கையை பதிவு செய்த தொலைக்காட்சியினர் இறுதியாக அவரிடம் ஒரு கேள்வியைகேட்கின்றனர்.

உங்கள் வாழ்வின் ஆசீர்வாதமாக  எதை கருதுகின்றீர்கள் ?
எட்டு திசைகளிலும் கடல் நீர் சுற்றி வளைத்திருக்கின்றது. இருளானது கடலின் மேலும் அடியிலும் கரைந்து அமர்ந்திருக்கின்றது. தீவின் தனிமை தரும் ஆழ்ந்த அமைதி .இவை அனைத்தும் தீவு முழுக்க பாதுகாப்பு உணர்வை அள்ளி நிறைத்துள்ளது. அந்த அமைதியின் மடியில் இரவில் நிம்மதியாக எங்களால் உறங்க முடிகின்றதே ! இதை விட இறைவன் தந்த அருள் வளம் வேறு என்ன இருக்க முடியும் ? என அவர் திருப்பிக்கேட்டார்.

மனிதன் மட்டும் நிம்மதியாக உறங்கவில்லை இரவின் இதமான அணைப்பில் மரமும் ,விலங்குகளும் கூட நிம்மதியாக  தூங்குகின்றன.

மிகச்சிலருக்கு மட்டுமே இரவையும் தூக்கத்தையும் அருட்கொடையாக கருதும் மன நிலை வாய்த்திருக்கின்றது. மற்றவர்கள் இரவை உறக்கத்தை அன்றாட நடவடிக்கையாக உயிரியின் இயல்பான செயல்பாடாக அல்லது வெளியில் சொல்ல முடியாத  கேளிக்கைக்கான வெளியாக மட்டுமே கருதுகின்றனர்.

பூமி சுழல்வதின் விளைவாக ஏற்படும் ஒரு நிகழ்வுதான் இரவு  என்பதாக மட்டுமே அறிவியலாளர்களால் கருத முடிகின்றது. பூமி உட்பட எண்ணற்ற கோள்களையும் விண்மீன்களையும் படைத்து இயக்கும் ஒரு மகத்தான ஆற்றலின் பரிசளிப்பாக பகலையும் இரவையும் பார்க்க அவர்களால் முடிவதில்லை.

அத்துடன் அந்த மனிதன் அமைதி நிறைந்த இரவுடன் மோதுகின்றான், தேவைக்கதிகமாக ஆற்றல் வாய்ந்த மின் விளக்குகள் மூலம் இரவை பகலாக்கி இயற்கையின் சம நிலையை குலைக்கின்றான்.

என்னதான் இரவை செயற்கையாக  வெளிச்சமாக்கி காட்டினாலும் அந்த வெளிச்சம் தற்காலிகமானதே. அந்த வெளிச்ச துளிகள் கூட மிகுந்த முயற்சியின் விளைவாக கிடைத்தவை. அந்த துளிகளால் இருளை சற்று விலக்க மட்டுமே முடியும்.

மின் விளக்குகளின் வெளிச்ச பரவல் முடியும் எல்லையில் இருள் ஆழ அகலங்களுடன் நம்மை விழுங்க காத்துக்கொண்டிருக்கின்றது.  இருளின் பிரம்மாண்டத்தையும் அதனுள் ஒளிந்திருக்கும் மர்மங்களையும் புதைந்திருக்கும் கமுக்கங்களையும்  மின்சார விளக்குகளால் நெருங்க்கூட இயலாது.

கதிரவன் மயங்கி சரியும் மாலைப்பொழுதில் கிழக்கிலிருந்து இளம் இருளானது சாம்பல் நிறத்தில்  நாடக மேடைத்திரை போல் பூமியின் மீது இறங்கத் தொடங்குகின்றது.

பகல் முழுக்க படைப்பினுடைய வாழ்வினுடைய உன்னதங்கள் அற்புதங்கள் துயரங்களால் பல விதமான உணர்வுகள் மனித மனதில் கிளறப்படுகின்றன. அலை போல் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கும் அந்த உணர்வுகளுக்கு ஓய்வொன்று தேவை என அறிந்த இயற்கையின் இனிய ஏற்பாடுதான் இரவு வேளை.

அதனால்தான் கடல்  மலை பள்ளத்தாக்கு போன்ற உலகின் பிரம்மாண்டங்களெல்லாம் சரிந்து பரவும் இரவின் ஆதிக்கத்திற்கும் முன்னர்  தங்களது  கம்பீரத்தை மடக்கி சுருட்டி வைத்துக்கொள்கின்றன.

இரவு தொடங்கியதிலிருந்து சில மணி நேரம் கழிந்த பிறகு உடல் களைத்து படுக்கையில் சாய்கின்றோம்.உடல் ஒரு பக்கம் ஓய்வெடுத்து கொண்டிருக்கின்றது.

ஆனால் இரவின் கொடையாகிய தூக்கத்தையும் ஓய்வையும் கைக்கொள்ள மறுத்து செயற்கை வெளிச்சங்களால் இரவை துன்புறுத்துபவர்களுக்கு கிடைக்கும் பரிசு என்ன தெரியுமா ?

அவர்களின் உடலில் காட்டிகோஸ்டிரான் என்னும் நொதி சுரக்கின்றது.
இதன்விளைவாகதலை வலி , கண் எரிச்சல் , மன அழுத்தம் , கவனச்சிதறல் , எரிச்சலடைதல் , மனக்குழப்பம் , சக மனிதருடனான உறவில் விரிசல் , நரம்பு தளர்ச்சி ,குருதி அழுத்தம்  இதய நோய் , வலிப்பு , பக்கவாதம் என மனம் உடல் சார்ந்த நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகை புரியும்.

ஓய்வை புறக்கணிப்பவர்களை உழைப்பின் உற்சாகம் ஒரு போதும் நெருங்குவதில்லை.

தகவல் தொழில் நுட்ப துறையில் கை நிறைய ஊதியத்திற்காக வேலை செய்யும் இளைஞர்கள் இரவை பகலாக்கி உழைக்கின்றனர். இரவு பகல் சுழற்சிக்கு தகுந்தவாறு உடலின் இயக்கத்தை பேணும் உயிரி கடிகாரத்தின் செயல்பாடு இவர்கள் விஷயத்தில் குழம்பி விடுகின்றது.

இதனால் இவர்கள் இளமையைத்தொடாமலேயே முதுமைக்குள் சிக்கி விடுகின்றனர். பாவம் ! வாழ்விற்காக வாழ்வை விற்றவர்கள் 

அதனால்தான் கிராமப்புற விவசாயிகளை அவ்வளவு எளிதில் உடல் மன நோய்கள் அணுகுவதில்லை. காரணம் அவர்கள் அவர்கள் முன்னிரவில் கண்ணுறங்கி அதிகாலைக்கு முன்னரே துயில் கலைகின்றனர்.
.
இரவை உடலுக்கும் உள்ளத்திற்குமான ஓய்வு மட்டும்தான் என தட்டையாகவும் புரிய முடியாது.

படுக்கையில் ஓய்ந்து சாயும் உடலிலிருந்து ஆன்மா தற்காலிக விடை பெறுகின்றது. அப்போது  ஆன்மாவை இருளானது தனக்கே உரித்தான மர்மங்களோடும் கமுக்கங்களோடும் ஆபத்துக்களோடும் சூழ்கின்றது
மை போன்ற கரிய திரவமான இரவையும் அதனுள் நீந்தும் ஆன்மாவின் நுட்பங்களையும் முழுமையாக புரிந்து கொள்ள நம்மால்  முடிவதில்லை.

மனித மனதின் அடுக்குகளுக்குள் புகுந்து ஆன்மாவை ஆராய புறப்பட்ட ஸிக்மண்ட் ஃப்ராய்ட் உள்ளிட்ட நவீன உளவியலாளர்களால் ஒரு எல்லைக்கு மேல் செல்ல இயலவில்லை. அவர்களின் ஆய்வுகள் மனிதனின் தசை , நரம்பு , எழும்பு ,குருதியைத்தாண்டி உயரே எழும்ப முடியவில்லை. மனிதனையும் அவனை இயக்கும் மனத்தையும் வெறும் இச்சைகளின் குவியலாக மட்டுமே பார்க்க அவரால் முடிந்திருக்கின்றது.

ஆன்மாவின் உன்னதங்களையும் அண்ட வெளிகளை படைத்து இயக்கும் மகத்தான ஆற்றலோடு  தொடர்பு படும்போது அந்த ஆன்மா அடையும் மேன்மைகளையும்  அவ நம்பிக்கை கொண்ட மனதால் ஒருபோதும் அறிய இயலாது.

இரவிலும் பகலிலும் ஆன்மாவை சூழ்ந்திருக்கும் மறைவான விஷயங்களைப்பற்றிய உரையாடல்கள் காலந்தோறும் நம் சமூகத்தினுள் நடந்து வந்திருக்கின்றன.

இரவின் தாலாட்டில் நாம் உறங்கி விடுகின்றோம். அந்த உறக்கத்தில் பலவிதமான கனவுகளை காண்கின்றோம். அந்த கனவுகளில் பல காட்சிகள்  நிறைந்துள்ளன.. அந்த காட்சிகளில் சில நேரடியாக உள்ளன. சில படிமங்களாகவும் குறியீடுகளாகவும் தென்படுகின்றன அவற்றில் சில  பல பிற்காலங்களில் நடைமுறை வாழ்வில் பலிப்பதையும் நாம் உணருகின்றோம்.

பனாமா நாட்டின் குடியரசுத்தலைவர் ஓமர் டோரிஜோஸ். இவர் பன்னாட்டு பெரு நிதிய வணிக குழுமங்களின் சுரண்டல் வெறியை தீவிரமாக எதிர்த்தவர்.
ஓமர் டோரி ஜோஸ் சில கனவுகளை தொடர்ச்சியாக கண்டார். அக்கனவில் பிரம்மாண்டமான தீப்பிழம்போடு வானத்திலிருந்து தான் விழுவதாக கனவு கண்டார். அக்கனவு கண்ட சில மாதங்களிலேயே அவர் வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.

நிஜமாகும் கனவுகள் பிரபலங்களுக்குத்தான் வரும் என்றில்லை. சாமானியர்களுக்கும் வரும் என்பதற்கு பின் வரும் நிகழ்வே சாட்சி.
நான் சென்னையில் தொழில் நிமித்தம் வசித்து வருகின்றேன். 

ஒரு நாளிரவு கனவு ஒன்று கண்டேன். அக்கனவில் எனக்கு தொழில் முறையில் அறிமுகமான சீக்கியர் எனது வீட்டு ஏணிப்படிகளில் ஏறி வந்து கதவைத்தட்டுகின்றார். நான் கதவைத்திறந்து அவரை வரவேற்று அவரது வயதான தந்தையை குறித்து விசாரிக்கின்றேன். அப்படி விசாரித்துக்கொண்டிருக்கும்போதே  அந்த முதிய சீக்கியரும் வந்து சேர்வதாகவும் அந்த கனவு இருந்தது.

இத்தனைக்கும் அந்த சீக்கிய நண்பர்களை சந்தித்து இரண்டு வருடங்களுக்கு மேலாகின்றது. எங்களுக்கிடையில் எவ்வித தொலை பேசி தொடர்பும் கிடையாது. பரஸ்பரம் தொலை பேசி எண்களும் கூட கிடையது.

கனவு கண்ட அடுத்த நாள் காலை வீட்டு கதவு தட்டப்பட்டது. யாரென்று நான் கேட்க ஹிந்தியில் விடை வந்தது. கதவை திறந்தேன், அதன் பிறகு நடந்தவை அப்படியே அச்சு அசலாக கனவில் நடந்ததுதான். ஒரு பத்து நிமிடங்கள் வரை எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

இரவு தூக்கத்தில் மனித ஆன்மா ஓய்ந்து கிடப்பதில்லை . இவ்வுலக செயல்கள் , நிகழ்வுகள்  தீர்மானிக்கப்படும் மேல் உலகில் அது நடமாடுகின்றது, சில மர்மங்களை அது தரிசிக்கின்றது .  வீட்டு படுக்கையில் உறங்கும் மனிதனின் ஆன்மாவானது விண்ணுலக அற்புதங்கள்  குடியிருக்கும் மேல் வானங்களுக்கும் சென்று வருகின்றது என்பதை  ஒரு சராசரி மனிதனுக்கும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

இரவு உலாவில்  நிகழ் கால ஆன்மாக்களுடன் கடந்த கால ஆன்மாக்கள் எனப்படும் இறந்தவர்களின் ஆன்மாக்களும் இருக்கும் வாய்ப்பு உள்ளது. காலாவதி ஆன்மாக்களுடன் இரவு தூக்க ஆன்மாவும் நிரந்தரமாக சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றதே ! எனவேதான் நமது இரவு நித்திரையை அரை மரணம் என வர்ணிக்க முடியும்.

 அந்த ஆன்ம ஒன்று கூடல்களிலும் நாம் நமக்கும் பிறருக்கும் தீங்கு செய்யும் வாய்ப்பு உள்ளது.

பகலில் பிற மனிதர்களைப்பற்றிய தப்பெண்ணங்களை சுமக்கின்றோம். அந்த சுமைகளினால்  இரவிலும் கூட நமது ஆன்மாவை கனக்கச் செய்கின்றோம்.அந்த கனமானது உறக்கத்திலும் கூட  நமக்கும் பிறருக்கும் தீங்காக  அமைய முடியும்.

 இரவு உறங்கும் முன்னர் சக மனிதர்களின் மீதான தப்பெண்ணம் எதுவுமின்றி தன் மனதை போர்வையை உதறுவது போல் உதறி  விட்டு உறங்கச்சென்றார் ஒரு பாலைவனத்து வாசி. அந்த நற்குணத்தின் விளைவாக அவருக்கு எல்லா வளங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கையைப்பெற்றார் என மத்திய தரைக்கடல் நாகரீக தொன்மத்தில் இருக்கின்றது.

“ எல்லாம் வல்ல இறைவா ! உனக்கும் பிற மனிதர்களுக்கும் நான் செலுத்த வேண்டிய கடனை எங்கள் சார்பில் நீயே நிறைவேற்றுவாயாக “ என எனது நண்பரான விசுவாசி ஒருவர் இரவு தூங்கப்போகும் முன்னர் மனம் உருகி வேண்டுவார்.

இந்த வரிகளின் மெய் விளக்கத்திற்காக பல நாட்கள் நான் பல விதமாக சிந்தித்திருக்கின்றேன். இறுதியாக என் மனதில் கீழ்க்கண்ட விளக்கம்தான் மின்னி தோன்றியது. அதில் மனம் அமைதியாக நிலை பெற்று விட்டது

 இந்த நிலவுலகில் வாழும் மனிதன் அனைத்து விதமான வசதிகளையும் வளங்களையும் துய்த்து வாழுகின்றான். இந்த இன்பங்களையும் வசதிகளையும் இயற்கையின் மூல ஆற்றலானது  நேரடியாகவும் பிற மனிதர்கள் வாயிலாகவும் நமக்கு வழங்குகின்றது .சுருக்கமாகச்சொல்வதானால் நமக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்க்கைக்காக நாம் அண்ட சராசரத்தை இயக்கும் ஆற்றலுக்கும் மனித குலத்திற்கும் கடன்பட்டுள்ளோம்.

பொதுவாகவே கடன் என்றாலே பொருளாதார ரீதியான கடன் தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் அதையும் தாண்டி கடன் என்பதைப்பற்றி விசாலமாக இந்த வரிகள் பொருள்படுத்துவதாகவே படுகின்றது.

அதை பெருங்கடன் எனவும் அடைக்கலபொறுப்பு எனவும் விவரிக்கலாம். அந்த பெருங்கடனை திரும்ப செலுத்துவது என்பது இயற்கை சமநீதியை இம்மண்ணில் நிலை பெறச்செய்வதன் வழியாகவும்  மனித குலத்திற்கு தொண்டு செய்வதின் மூலமாகவுமே நடக்க வேண்டும் .

நம் தூக்கம் என்பதே இறப்பிற்கான தினசரி ஒத்திகைதானே . எப்போது வேண்டுமானாலும் அந்த ஒத்திகையானது  மெய்ப்பட முடியும்.

எனவே கடையை சாத்தும் முன்னர் கல்லா கட்டுவது போல நமது ஆன்மாவின் தினசரி கணக்கை இரவு தூக்கத்திற்கு முன் பார்ப்பதுவும் நல்லதுதானே.
கடந்து போன பகலில் மனிதன் தனது அடைக்கல பொறுப்பில் விட்ட பிழைகள் ,தவறுகளையும் நினைவுபடுத்திக்கொண்டு மீண்டும் அவை நிகழாமல் கவனமாக இருத்தல்.

பகல் பொழுதில் எந்த மனிதரையாவது புண்படுத்தியிருந்தாலோ அல்லது அவரின் உரிமைகளை பறித்திருந்தாலோ அதற்கான பரிகாரத்திற்கும் தீர்விற்குமாக தனது ஆன்மாவை சித்தமாக்குதல் என ஆன்ம கணக்கின் வரவு செலவு பட்டியல் நீள்கின்றது.

இறைவனுக்கும் மனிதனுக்குமான கடன் என்ற வரிகளின் ஆழ அகலம் கரையில்லாத பெருங்கடல் போல அகலித்து செல்கின்றது.  
.
 இவ்வாறாக ஒவ்வொரு நாளின் இறுதியிலும் இயற்கையின் வலிமை மிக்க மூல ஆற்றலுக்கு முன்னர் தன்னை ஒப்படைக்கும் ஒரு மனிதனின் உள்ளமும் எண்ணமும் தூய்மைப்படுத்தப் படுவது உறுதி. அவன் தனக்கும் பிறருக்கும் இப்பூவுலகுக்கும் பயனுள்ள மனிதனாக ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிறப்பை அடைவான்.

அடுத்த நாள் அவனுக்காக காத்திருக்கும் பாரிய கடமைகளை எதிர் கொள்ளும் விதத்தில் உள்ளார்ந்த வலிமையை அந்த ஒப்படைப்பு அவனுக்கு வழங்கும்..
.ஒரு நாளின் துளியாக விளங்கும் இரவும் உறக்கமும் வெறும் கேளிக்கைகள் வாயிலாக வீணடிக்கப்பட முடியாத அருட் கொடைகள்.

ஆன்மாவின் கடமைகள் , உரிமைகள் , பிரபஞ்சத்தின் கமுக்கங்கள் ,  , இலட்சியத்தின் எதிர்பார்ப்புகள் , ஆறுதல் , அபயம், எச்சரிக்கை , மன அமைதி , வாழ்வின் நிலையாமை , வாழ்க்கை பற்றிய நம்பிக்கை  நீண்ட கால குறுகிய கால இலக்குகள் போன்ற அனைத்தையும் இரவும் பகலும்  தனக்குள் பொதிந்து வைத்துள்ளன.

இந்த பொதியானது  கோடுகளையும் புள்ளிகளையும் போன்றது.
கோடுகளும் புள்ளிகளும் ஒவ்வொரு முறையும் புதுப்புது ஓவியங்களை படைத்தளிப்பது போல ஒவ்வொரு மனிதனுக்கும் விதம் விதமான அனுபவத்தை தரக்கூடியவை.

இரவையும் பகலையும் அதன் இயல்பான போக்கில் நாம் கடக்கும்போது ஒவ்வொரு மனிதனுடனும் அவை அந்தரங்க உரையாடலை நிகழ்த்தாமல் இருப்பதில்லை. அந்த அந்தரங்க அனுபவத்தை அவ நம்பிக்கைகளின் சுமையைக்கொண்டு மறுப்பதில் எந்த நியாயமும் இல்லை.

-----------------------

 20/04/2013


No comments:

Post a Comment