Sunday, 22 December 2019

சிலுவையும் பேரீத்தம்பழமும்


லியோ போல்டு வெய்ஸ் (எ) முஹம்மது அசாத்

விரிந்துப் பரந்த அம்மாளிகையில் ஓர் அறை. அவ்வறையின் நடுவில் ஒரு மேசை. மேசையின் எதிரும் புதிருமாக போடப்பட்டிருந்த இருக்கைகளில் மேனாள் ஸவூதி அரசர் ஃபைஸலும் , மேனாள் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸின்ஜரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து அமர்ந்திருக்கின்றனர்.

அம்மேசையின் மீது மூன்று கிண்ணங்கள்.முதல் கிண்ணத்தில் கனிந்த பேரீத்தம்பழங்கள். இரண்டாவதில் ஒட்டகப்பால். மூன்றாம் கிண்ணத்தில் ஒட்டக இறைச்சி.

மெல்லப் புன்முறுவலித்தவாறே இம்மூன்று கிண்ணங்களையும் சுட்டிக் காட்டிய்வாறே மன்னர் ஃபைஸல் ஹென்றி கிஸ்ஸின்ஜரை பார்த்து சொல்கிறார்.

“இன்றிருக்கும் எண்ணை வளமும் அதை ஒட்டிய பணப்புழக்கமும்  இல்லாமல் போனாலும் எங்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் நாங்களும் எங்கள் முன்னோர்களும் பாலைவனத்திலிருந்து வந்தவர்கள். பல நூறு ஆண்டுகள் இவற்றை உண்டுதான் எங்கள் வாழ்க்கை கழிந்திருக்கிறது.”

முஸ்லிம்களுக்கு எதிரான போரில் அமெரிக்க அரசு இஸ்ராயீலுக்கு செய்த போர் உதவிகளை கண்டிக்கும் முகமாக 1973 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணை வினியோகத்தை நிறுத்தினார் மன்னர் ஃபைஸல். அந்த எண்ணெய் தடையை நீக்க சொல்லி அவரை ஹென்றி கிஸ்ஸின்ஜர் மிரட்டியதும் அதற்கு மன்னர் ஃபைஸல் அளித்த விடையும் வரலாற்றின் நினைவுகளில் அழுத்தமாக அமர்ந்திருக்கின்றன.

நிரம்பிய மூன்று கிண்ணங்களின் நிகழ்வானது ஒரு கற்பனை என சொல்வோரும் உண்டு. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் மன்னர் ஃபைஸலை நோக்கி விடுத்த மிரட்டலுக்கு அவர் கொடுத்த மறுமொழியின் ஆழத்தை புரிந்துக் கொள்ள உதவுபவை இந்த முக்கிண்ண நிகழ்வுகள்

பின்னர் கவனமாக திட்டமிடப்பட்ட ஒரு சதியின் தொடர்ச்சியாக அரச குடும்பத்தைச் சார்ந்த தனது உறவினர் ஒருவராலேயே மன்னர் ஃபைஸல் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

ஸவூதி மன்னர் தலைமுறையின் தொடர்ச்சியில் வந்த ஃபைஸல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பேராளருக்குக் காட்டிய முக் கிண்ணங்களில்  நிரம்பியிருந்தது  அறபுகளின் எளிய வாழ்க்கை முறை.

அங்கு அருவமாக இருந்த நான்காவது கிண்ணத்தில் மன்னரின் மண்டியிடாத மனம் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. அதற்கான காரண செயல் தொடர் விளைவாக மன்னரின் கொலை நடந்தேறுகிறது.

படோடபமிக்க மன்னராட்சியும்  X   எளிமையான தொல்குடி வாழ்க்கை முறையும்  -- ஒன்றுக்கொன்று முரண்பட்ட வடிவங்கள். இம்முரண்பாடான இரு துருவங்களுக்கிடையே பயணித்தார் மன்னர் ஃபைஸல்.

ஆதிக்க வெறியின் முன் மண்டியிடாத மனத்தைப்பெற்றிருந்த அவர்  அப் பயணத்தின் விலையாக முடிவில் தன் உயிரைக் கொடுத்தார். இந்த இரு துருவ பயணத்தில் அவரை வழி நடத்திய பாலை வன வாழ்க்கையில் என்ன இருக்கிறது ?

அண்ட சராசரங்களைத் துருவி பல அறிவியல் உண்மைகளைக் காணும் ஒரு அய்ரோப்பியனின் பொது மனமானது ஏன்  இஸ்லாத்தின் மீதும் , இஸ்லாம் தவழ்ந்து வளர்ந்த பாலை நில  நாகரிகத் தொட்டிலின் மீதும் மிகுந்த காழ்ப்புணர்வுடனுள்ளது ?

 இது போன்ற கேள்விகள் பல நாட்கள் விடை தெரியாமல் மனதிற்குள் திரிந்திருக்கின்றன.

எளிமையும் நிதானமும் நிறைந்த பாலைவன தொல்குடி நாகரிகத்தை வெறுமையும்  வெப்பமும் மந்த கதியும் மண்டிய  பிற்போக்கான தோல்வியடைந்த பண்பாடாக உலக மக்களின் முன் சித்தரித்துக் காட்டப்படுகிறது.

உலகையே தன் கால்களுக்குள் கீழ் மிதித்து  நிற்கும் ஆட்சியதிகாரம் , விதம் விதமான நுகர்வு பொருட்கள் , தொழில் நுட்பம் , ஆடை , உணவு . மொழி ,வசிப்பிடங்கள் , கடை வீதிகள் என எங்கும் ஆதிக்கமும் பள பளப்பும் புதுமையும் இளமையும் வளர்ச்சியும், நிறைந்து ததும்பும் புத்தாக்கமிக்கதாக  அய்ரோப்பிய வாழ்வியல் முறைமை தூக்கிப்பிடிக்கப்படுகிறது.

திட்டமிட்ட இத்தொடர் சித்தரிப்பின் விளைவாக இஸ்லாம் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக இல்லை எனும் மனப்பதிவை உலகின் பெரும்பாலான மக்களிடையே ஏற்படுத்துவதில் குறிப்பான நோக்கமும் இலக்கும் கொண்ட சில ஆற்றல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.

இந்த அய்ரோப்பிய ஆற்றல்கள் உருவாக்கிய பொய் பிம்பத்தை உடைத்தெறியும் வேலையை இறைவன் ஒரு அய்ரோப்பியரைக் கொண்டே நடத்திக்காட்டுகிறான்.

லியோபால்டு வெய்ஸ்  (எ) முஹம்மத் அஸத் என்பவர்தான் அவ்வாளுமை. அவர் 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய THE ROAD TO MAKKAH  என்ற நூலின் தமிழாக்கமான’ எனது பயணம்’ நூலை வாசித்த போது மனம் நிறைந்தது. இந்நூலை எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமியின் மொழியாக்கத்தில் சென்னை ஸாஜிதா புக் சென்டர் வெளியிட்டிருக்கிறது.

பயணம் , வரலாறு , தத்துவம் , ஒப்பாய்வு என ஒவ்வொன்றுமே தனித்தனியான  மொழி ஆளுகைகளை வேண்டி நிற்கும் துறைகளாகும். நூலாசிரியர் அஸதின் இந்நான்கு நடைகளையும் சீரான விகிதத்தில் சம வேகத்தில் சுவை குறையாமால் மொழியாக்குவது என்பது மிகவும் அறைகூவலான பணி. எனினும் நூலில் சில விடுபடல்களும் தவிர்த்தல்களுமுள்ளன. அதற்கு மொழிபெயர்ப்பாளரின் சார்பு நிலையும் ஒரு காரணம். இந்தக்குறைகளைத் தாண்டி இப்படியானதொரு சிறந்த நூலை தமிழுக்குத்தந்த அபுல்ஹஸன் கலாமி பணி பாராட்டிற்குரியது.

தற்போதைய நூலில் காணப்படும் குறைபாடுகளைக் களையும் விதத்தில் மூல நூலுடன் அதன் இரண்டாம் பகுதியான Home Coming of the Heart Part II of the Road to Mecca  யையும் சிந்தாமல் சிதறாமல் விரைவில் தமிழுலகுக்குத் தரவிருக்கிறது சீர்மை பதிப்பகம் இன்ஷா அல்லாஹ்.

நூலாசிரியரான லியோ பால்டு பிறப்பால் அய்ரோப்பிய யூதர். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை கற்றத்தேர்ந்தவர். ஹீப்ரூ மொழியிலும் தேர்ச்சியுண்டு. நல்ல கல்விப் பின் புலம், பரந்த நூல் வாசிப்பு , மதங்கள் , தத்துவங்கள் பற்றிய ஆழமான ஆய்வு, விரிவான பயணப் பட்டறிவு , எழுத்தாற்றல் , கலை இலக்கிய நாட்டம் முதலானப் பன்முகங்கள் கொண்ட பட்டை தீட்டப்பட்டதாக  அவரது ஆளுமை விரிகிறது.

இஸ்லாத்தை நோக்கி லியோ பால்ட் அஸத் எடுத்து வைத்த பயணத்தின் முதல் எட்டானது வழமையாக நாம் எண்ணூவது போன்று பழைய ஏற்பாட்டின் வாயிலாகவோ அல்லது தலை முறை  தலை முறை வழியாக அவரிடம் வந்து சேர்ந்த யூத நம்பிக்கைகளின் வாயிலாகவோ தூண்டப்படவில்லை. அவரது அய்ரோப்பிய யூத பின்புலமானது இயல்பிலேயே ஆய்விற்கான உந்துதலாலும் புதியனவற்றைக் கண்டறியும் வேட்கையாலும் நிரம்பிய ஒன்றாக இருந்தது.

அவ்வியல்பானது அவருக்குள் உலக வாழ்க்கை , அதன் பொருள் , அதன் இறுதி அடைவிடம் , இடை வழி இலக்குகள் தொடர்பான எண்ணற்ற கூரிய வினாக்களை அலையலையாக  கிளப்பி விட்டிருந்தது.

தன் பிறப்புடன் ஒட்டியுள்ள அந்த இரு அடையாளங்களுக்கும் அன்றாட மனித வாழ்வை எதிர் கொள்ள தேவையான வலிமையோ உள்ளார்ந்த திறனோ  இல்லை என்பதை அவர் தனது வாழ்வின்  தொடக்கத்திலேயே கண்டுக் கொண்டார்.

யூத , கிறிஸ்தவ போதனைகள் மனிதனின் ஆன்மிக , இம்மை வாழ்வு தொடர்பை  சம நிலையுடன் இயக்குபவையாக முன்பு இருந்தன. தன்னலத்திலும் கட்டற்ற விருப்பங்களின் சுழலிலும் சிக்குண்ட அய்ரோப்பாவானது  அம்மதங்களின் உயிர்க் கருவை அறுத்தெறிந்து விட்டதை நேரடி சாட்சியாக இருந்து அவர் உணர்ந்தார்.

இதன் விளைவாக அவை வெறும் இனப் பெருமிதமாகவும் வெற்று சடங்குகளின் தொகுப்பாகவும் மாறி  தங்களது உயிரோட்டத்தை இழந்து விட்டிருந்தன. மனித குல விடுதலைக்காக வந்தவை நாளடைவில் அனைத்து வகையான பிற்போக்குத் தனங்களின் உறைவிடமாகவும் மனித இனத்தின்  முதுகிலும் கழுத்திலும் பெரும் தளைகளை சுமத்துபவையாகவும்  உருவிழந்து விட்டிருந்தன.

இப்போக்கின் எதிர் வினையாக கிளர்ந்த நாத்திகம் , பொதுவுடைமை , அறிவியல், வளர்ச்சி சார்புக் கோட்பாடுகள் அனைத்துமே மனிதனின் வெளிப்புற,உலகாயதத் தேவைகளை மட்டுமே கணக்கில் கொண்டன. மனித இனத்தின் அகம் சார்ந்த ஆன்மிக மனத் தேவைகளை அவை ஒரு போதும் பொருட்படுத்தவேயில்லை. அத்தகையத் தேவைகளை உணருமிடத்திலும் அவை இல்லை.

இதன் விளைவாக அய்ரோப்பிய உலகு மனிதனை உண்டு உறங்கி நுகர்ந்து களிக்கும் ஒரு உயிரியாகவும் விருப்பங்களின் தொகுப்பாகவும் மட்டுமே குறுக்கிப் பார்த்தது.

மனித மனத்தின் உன்னதம் , அதன் அளப்பரிய ஆற்றல் , அது கையாளப்பட வேண்டிய விதம் குறித்து எவ்விதமான பழக்கமோ பயிற்சியோ அய்ரோப்பாவிற்கு வாய்க்காமல் போனது ஒரு புறமிருக்க மறுபுறமோ ஆப்ரஹாமிய மதங்களின் வாயிலாக முன்னர் தனக்கு கிடைத்த விழுமியங்களையும் ஏற்கனவே கைகழுவி விட்டிருந்தது அய்ரோப்பா.

இந்த ஆன்மீக வறுமையின் காரணமாகத்தான் மீட்பு , விடுதலை , அர்ப்பணம் போன்ற உயர்ந்த குணாம்சங்களின் குறியீடாக கிறிஸ்தவம் பயன்படுத்தும் சிலுவையையே போருக்கான  முத்திரையாக அவர்கள் தவறாக பயன்படுத்தியதைக்காண முடிகிறது.

இன்னும் நீடித்து வரும் இந்த சிலுவைப்போர் மனப் போக்கின் ஊடாகத்தான் அய்ரோப்பா இஸ்லாத்தையும் அதன் எளிய நடைமுறை சாத்தியமான வாழ்க்கை முறையையும் முஸ்லிம்களையும் தொடர்ந்து படு மோசமாக உருவகப்படுத்தி வருகிறது.

அய்ரோப்பாவின்  இந்த ஆன்மீக ஓட்டாண்டித்தனமானது  லியோ பால்டுக்குள் ஒரு ஏமாற்றத்தை உண்டு பண்ணியது. அந்த ஏமாற்றமே அவருக்குள் ஒரு வித விசையுடன் கூடிய தீவிர உணர்ச்சியாக திரண்டெழுந்தது.

இவ்வுணர்வின் தகிப்பை அவர் ஆழ்ந்த வாசிப்பின் மூலமாக தணிக்க முயன்றபோதுதான் சீன தத்துவ ஞானி லா ஓ சே யின் தாவோயிஸ போதனைகள் வாயிலாக அவருக்கான நுழை வாயில் திறந்தது.

மனிதனை இயக்கும் மூல விசை அவனது இதயத்திலிருந்துதான் செயல்படுகிறது. அந்த மூல விசை ஊற்றெடுக்கும் மனமானது எவ்வித கீழான விருப்பங்களாலும் அடிமைப்படுத்தப்படக்கூடாது. தாழ்த்தும் தளைகளற்ற தூய்மையான விடுதலையை அம்மனது  பெற வேண்டும்.

அப்போது மட்டுமே  மனித குலத்தை பாதித்திருக்கும் அனைத்து விதமான சிக்கல்களிலிருந்தும் முழுமையான விடுதலையைப் பெற முடியும் என்பதை லா ஓ சேயின் சிந்தனையிலிருந்து அறிந்தார்.

பல நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த லியோ பால்டின் உள்ளுணர்வு லா ஓ சேயின் தத்துவப்புள்ளியோடு ஒத்திசைந்து சென்ற எழுச்சி மிகுந்த தருணமது. இது லியோ பால்டின் தேடுதலுக்கான விடையின் முன்னுரையாக இருந்தது.

முழுமையான விடைக்காக அவர் தனது பயணத்தை இஸ்லாம் பின்பற்றப்படுகின்ற, முஸ்லிம்கள் அடர்ந்து வாழுகிற  நாடுகளின் குறுக்காகவும் நெடுக்காகவும் நடத்தினார்.

உண்மையை அதன்  நிறைந்த வடிவில் கண்டுணர நாடுகள் , சம வெளிகள் , பள்ளத்தாக்குகள் , கணவாய்கள் , மலைப்பாங்கான பகுதிகள் காடுகள் என துறவி போல அலைந்துத்  திரிந்தார்.

பல்வேறுபட்ட நிலவெளிகளில் வேறுபட்ட மனிதர்களுடனும் பல்வகை வாழ்க்கை முறைகளுடனும் அவருக்கேற்பட்டப் பட்டறிவை விரிந்து பரந்த திரைச்சீலையில் வரையப்பட்ட வண்ண மயமான முழு ஓவியம் போல இந்நூலில் தீட்டிச்செல்கிறார் லியோ பால்டு.

பயண விவரிப்பு , தத்துவ ஆய்வு , ஒப்பாய்வு என அவரது வர்ணிப்புகள் வெளியெங்கும் சூழும் கதிரவனின் எண்ணற்றக் கிரணங்கள் போல விரிந்து படர்கின்றன. அவை வாசகர்களை ஒரே சமயத்தில் பல பயணங்களை நிகழ்த்துவதால் ஏற்படும் முடிவற்ற கிளர்ச்சிகளுக்குள் அழைத்துச் செல்கின்றன.

முஸ்லிம் உலகமெங்கும் வாழும்  சராசரியான வாழ்க்கை வாய்க்கப்பெற்ற எளிய மனிதர்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் எப்படி செயற்படுகிறது என்பதை அவதானிப்பதுதான் அவரது இலக்கு.

அன்றாட உணவு , இருப்பிடம் , பாலை வன வாழ்க்கையின் கடினம் போன்ற அறைகூவல்களும் போராட்டமும்  நிறைந்த அன்றாடத்தை அம்முஸ்லிம்கள் எப்படி எளிமையாக எதிர் கொள்கின்றனர் கையாளுகின்றனர்? வாழ்க்கையின் மலைக்க வைக்கும் தடைகளை வெறும் நீர்க்குமிழி போல ஊதித்தள்ளும் ஆழ்ந்த விசையெது? என்பன போன்ற வினாக்களுக்கான விடைகளை அவர் அடைவதுதான் இந்நூலின் தலையாய ஓட்டம்.

இஸ்லாமானது  ஆட்சி அதிகார பீடங்களில் இன்று இல்லை. ஆனால் அது  கோடானு கோடி எளிய மனிதர்களின் பற்றுக்கோடாக விளங்குகிறது. இப்பற்றுறுதிதான் வாழ்க்கைக் குறித்த அனைத்து அவ நம்பிக்கைகளிலிருந்தும் அவர்களை விடுவிக்கிறது. மனிதனின் விதியானது பிரபஞ்சத்தின் பென்னம் பெரிய  விதி என்ற நதி ஓட்டத்துடன் இணைந்த சிறு துளிதான்  என்ற  பருண்மையை உணர்த்துகிறது.

இவ்வறிதலின் வாயிலாக தனிமை , கைவிடப்பட்ட உணர்வு , தலைக்கனமிக்க பெருமை உணர்வு போன்ற அலைக்கழிக்கும் குணங்களிலிருந்து அவன் பாதுகாப்பைப் பெறுகிறான். அப்பயணங்களில் பற்றுறுதியின் இப்பெறுபேறுகளை அவர்  நேருக்கு நேர் உணர்கிறார்.

சீனத்தின் தாவோயிச தத்துவ ஞானி  லா ஓ சே யின் உரைகல்லில் தெறித்த தீப்பொறியானது அறபுப்பாலைவனங்களில் நிறைந்த வடிவத்தில் ஒளிர்ந்து அடையும் முழுமைக்கு முன்  அவரை நேர் நிற்க வைத்தது.

கீழான விருப்பங்களிலிருந்து விடுதலை பெறும் மனித மனதானது ஒரு உன்னத ஆற்றல் மையத்தின் ஆளுகையின் கீழ் வைக்கப்படும்போது மட்டுமே அதன் விடுதலையானது முழுமையடைகிறது.

அந்த உன்னத ஆற்றல் மையமானது மனம் , ஆன்மா , அண்ட சராசரங்களை படைத்து இயக்கி பாதுகாக்கும் இறைவன் ஒருவன்தான்  என்பதையும் அவர் கண்டறிகிறார்.

இஸ்லாமிய தீர்க்கதரிசிகளும் , நெறி அறிஞர்களும் மனித மனத்தின் ஆன்மாவின்  முழு உரிமையாளன் இறைவன் மட்டுமே என்ற பேருண்மையின் பால் வழிகாட்ட வந்தவர்களே.

அது தவிர மற்றபடி அவர்களுக்கு அந்த ஆளுகையில் எந்த வித பங்கும் பாத்தியதையுமில்லை. அவர்கள் பீடாதிபதிகளும் கிடையாது.

இந்த உத்திரவாதக் காப்பீடுதான் இஸ்லாமிய நெறியை புரோகிதமாக சீரழிவதிலிருந்து நிரந்தரமாகக் காத்து வருகிறது என்பதை அஸத் உறுதிப்படுத்திக் கொண்டார்.

உண்மையை நாடும் தனது உள்ளத்தின் வேட்கையை தணிக்க அவர் பாலைவனத்தில் மேற்கொண்டபயணமானது கற்பனை சாகசங்களை விவரிக்கும் கதை நூல்களை எல்லாம் தாழ்த்தி விடும். அந்த அளவிற்கு அவை  உண்மையான பல திருப்பங்கள் நிறைந்ததவை.

பாலை நிலத்தின் மாசற்ற மண் , விடுதலை உணர்வும் தன்மானமும் பொங்கி வழிகிற அன்றாட வாழ்வு ,  ஓடி விளையாடிடும் சிற்றுயிர்கள் , வெண் மணலில் கதிரவனின் ஒளிக்கோலம் , பாலை பழங்குடியினரின் அறிவு நுட்பம் , வாய்மை , தெளிந்த மனம் ,  ரீங்கரிக்கும் எளிய வாழ்க்கை முறை , விருந்தோம்பல் , ஒழுக்கம், போர்க்குணம் , பாலைவனத்தில் அவர் வழிதடுமாறி தட்டலைந்து சாவின் வாசல் வரை சென்று மீண்டது…. பற்றிய நுண்ணிய அழகியல் ததும்பும் விவரணைகளும் வர்ணனைகளும் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.

புயலின் அழிவும் உண்மையானது . புயலுக்கு முன் நிலவும் அமைதியும் உண்மையானது. இயற்கையின் இந்த முரணியக்கம் பாலை வன மனிதர்களிடமும் வெளிப்படுவதை ஒளிவு மறைவின்றி அஸத் பதிந்துள்ளார்.

இப்பாலை நில தொல் குடியினர் கண்ணியமும் அன்பும் நிறைந்தவர்கள்தான். அதே போல கற்பனையான நிகழ்வுகளின் தீண்டல்களால் வாளைச் சுழற்றவும் அவர்கள் தயங்குவதில்லை என்பதை “ எப்போதும் சுவர்க்கமும் நரகமும் அவர்களது அருகிலேயே இருக்கும் “( நூல் பக்கம் : 305 ) என்ற வரிகளின் மூலம் காட்சிப்படுத்துகிறார் அவர்.

சராசரி முஸ்லிம் மாந்தர்களோடும் பாலை மணல் பரப்போடும் அவரது ஆய்வு நின்றிடவில்லை.

 முஸ்லிம் கல்வி சாலைகள் , கல்வியாளர்கள் , உலமாக்கள் , பல்வேறு உட் சிந்தனை பிரிவுகள் , ஆட்சியாளர்கள் என அவரது பயணம் பெருங்கடலின் உள் நீரோட்டம் போல கண்டங்களைக் கடந்து அகலிக்கிறது.

வஹ்ஹாபிய , சூஃபிஸ சிந்தனை பிரிவுகளின் நலவுகள் , பிறழ்வுகள் போன்றவற்றை சார்பு நிலையின்றி ஆய்கிறார் லியோ பால்டு அஸத்.

மீட்பர் போல வந்து சுரண்டுவதில் வந்து முடிந்த ஸவூதி அரச குடும்பத்தின் வரலாறு பற்றிய துல்லியமான அவரது விமர்சனம் , முஸ்லிம்களின் தற்கால பின்னடைவின் தலையாய காரணங்களில் ஒன்றாக இஜ்திஹாத் என்ற அறிவியக்கத்தின் செயல்பாடு குறிப்பிட்ட நூற்றாண்டோடு   தேங்கிப்போனதுதான் என்பதை துல்லியமாக அடையாளங்காணுதல் என்பவற்றின் வாயிலாக வரலாற்று துலாக் கோலை நம்முன் நாட்டுகிறார் லியோ பால்டு.

அன்றைய இத்தலியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய லிபியாவின்  ஸனூசி இயக்கத்தினரோடும் உமர் முக்தார் உள்ளிட்ட அதன் தளபதிகளோடும் சேர்ந்து அஸதும் களமாடினார்.

ஜியோனிஸத்தலைவர் வெயிஸ்மானுடனான ஒரு சந்திப்பை அஸத் நடத்தினார். அச்சமயம் வெயிஸ்மானின்  முகத்திற்கு எதிரே இஸ்ராயீல் என்ற ஆக்கிரமிப்பு நாட்டின் உருவாக்கம் அநீதியானது என சிங்கம் போல எடுத்துரைத்தார்.

வரலாற்றின் இயக்கத்தை அவதானிக்கக்கூடியவராக மட்டுமில்லாமல் இந்நிகழ்வுகளின் மூலம் அதில் பங்கேற்பாளராகவும் அஸத் பரிணமிக்கிறார்.

அவரின் நூலை வாசித்து முடிப்பவர்கள் அவரது முன்னுரையின் இறுதி பத்திகளை மீண்டும் வாசிக்கும்போது அது முன்னுரையல்ல முடிவுரையின் நீட்சி என்பதை அறிந்து கொள்ளவியலும்.

அம்முன்னுரையில் அறபு நாடுகளின் எண்ணெய் வளமானது யானையின் காலில் சிக்கிய எறும்பை போல அவர்களது முந்தைய பாலை நில பழங்குடி வாழ்க்கையின் எளிமையையும் தனித்தன்மையையும் நசுக்கியிருப்பதை மிகுந்த மன வேதனையுடன் பதிகிறார்.

அவரது இவ்வேதனை மிக்க அவதானமானது  828 மீட்டர் உயரமும் , 163 தளங்களும்  கொண்ட துபையின் புர்ஜ் அல் கலீஃபாவின் வடிவில் வாழும் சாட்சியாக இன்று மெய்ப்பட்டுள்ளது. அய்க்கிய அரபு அமீரகத்தின் பாலை நிலமானது உலகின் மாபெரும் திறந்த வெளி நுகர்வுச் சந்தையாக மாற்றப்பட்டுள்ளது.

அஸதின் இந்நூலானது அவரது நேர்மையான மன ஓட்டத்தின் பதிவு மட்டுமே. யாரையும் நிறைவடையச்செய்யும் நோக்கங்கள் எதுவும் அவரது எழுத்துகளுக்கு இல்லை என்பதற்கான சான்றுகள் இவை.

இங்குதான் அஸதின் படைப்பானது அவரது இறப்பிற்கு பிறகும் நீடித்திருக்கும் தன்மையைப் பெற்றுக்கொள்கிறது.













.

No comments:

Post a Comment

பந்து மேச்