எதிர்காலம் பற்றிய அச்சங்கள் கனவுகள் திட்டங்கள் , கடந்து போன நாட்களின் நிறைவேறாத ஆசைகள் இலக்குகள் மீதான ஏக்கங்கள் , குடும்ப உறவுகள் , உழைப்பு , சேமிப்பு, செலவு, நோய் நொடிகள் ,.... என்ற சுமைகளுடனேயே ஒவ்வொரு சராசரி மனிதனின் அதிகாலையும் விடிகின்றது.
இந்த சராசரி மானிட பெரு ஓட்டத்திற்கு இடையே மனித குல விடுதலைக்காகவும்
, நீதி , உரிமைகளுக்காகவும் தன்னை ஒப்புக்கொடுத்தவர்கள்
, மாமலை போல பேருரு கொண்ட அதிகாரத்திற்கும் கொடுங்கோன்மைக்கும் எதிராக ஒற்றை மனிதனாக
நிமிர்ந்து நிற்பவர்கள் என மிகச்சிறு குழுவினரைத்தான் நாம் காண முடிகின்றது.
உழைத்து நிம்மதியாக வாழ்க்கையை கழிப்பதை விட்டுவிட்டு தன்
தலையில் மண்ணை அள்ளிப்போட்டுகொண்டவர்கள் , ஊர் வம்பை விலை கொடுத்து வாங்கியவர்கள் என்பதாகவே
இந்த சிறு குழுவினரைப்பற்றி சராசரி பெரு ஓட்டக்காரர்களின் எண்ணப்போக்கு இருக்கும்.
ஆனால் இந்த பெரு ஓட்டக்காரர்கள் நினைப்பது உண்மைதானா ?
“ தனது “ என்கிற சிறைப்படுத்தும் சிறு வட்டத்தை தாண்டி நிற்கும் வலிமையை இந்த சிறு
குழுவினருக்கு வழங்கியது எது ?என்ற கேள்விகள் இயல்பாக முளைக்கின்றன.
இப்றாஹீம் ஒரு
இளைஞர். வாழ்க்கையை மொத்தமாக அள்ளிப்பருகத்தூண்டிக்கொண்டே இருக்கும் வேகம் நிறைந்த
பருவத்தின் நுனியில் நின்றாடும் வயதுக்கு உரிமையாளர்.
ஆனால் பெரும்பாலான இளைஞர்களைப்போல இப்றாஹீமோ சுழித்தோடும்
பருவ வயதின் இழுப்பிற்குள் சிக்கவில்லை.
தான் வாழும் நிலப்பரப்பில் முற்றதிகாரம் , ஆதிக்க மன நிலையின்
மொத்த வடிவமாக இருந்த ஆட்சியாளன் நம்ரூதிற்கு எதிராக இளைஞர் இப்றாஹீம் நின்றார்.
பிரபஞ்சங்களை படைத்து இயக்கும் மூல ஆற்றலுடனான மக்களின்
பிணைப்பை திசை திருப்பி சக மனிதர்களின் மேல் அடிமைத்தளையை நிரந்தரமாக்கும் சட்ட திட்டங்கள்,நடைமுறைகள்,
பண்பாட்டுக் குறியீடுகள் என அனைத்தையும் கேள்விக்கும் விவாதத்திற்கும் உள்ளாக்கினார்
இளைஞர் இப்றாஹீம்.
எல்லாக்காலங்களிலும் நடப்பதைப்போலவே ஆட்சியாளனினதும் பண்பாட்டுக்காவலர்களினதும்
கோபமும் சீற்றமும் இளைஞர் இப்றாஹீமிற்கு எதிராக
திரும்பியது. அவர்கள் அவரை தண்டித்து ஒடுக்க
நாடினார்கள்.
பெரும் அகழி ஒன்று தோண்டப்பட்டது. அதனுள் குவியல் குவியலாக
எரிபொருள் நிரப்பப்பட்டது. பின்னர் நெருப்பு மூட்டப்பட்டது. பசித்த விலங்கினத்தின்
நீண்ட நாக்கை போல பேரிரைச்சலுடன் ஆங்காரமாக
எழுந்தன நெருப்பின் சுடர்கள்.
தீ அகழியிலிருந்து இடைவிடாது மூண்டெழும் வெப்பம் புகையின்
விளைவாக யாரும் அதன் அருகில் நெருங்க கூட முடியவில்லை. ஒரு வழியாக ஒரு கவண் கல் பொறியின்
மூலமாக இப்றாஹீம் எரி அகழிக்குள் தூக்கி வீசப்பட்டார்.
“ தொலைந்தார் இப்றாஹீம் . முடிந்தது பிரச்னை. “ என மகிழ்ச்சியின்
உச்சத்தில் நின்று ஆர்ப்பரித்தனர் சுற்றியிருந்தோர்.
நெருப்பில் இடப்பட்டவை எரிந்தழிந்து போக வேண்டும் என்பது
உலக விதி.
ஆனால் நெருப்பு உள்ளிட்ட ஐம்பூதங்களையும் படைத்து இயக்கும்
மூல ஆற்றலின் தீர்மானமோ வேறொன்றாக இருந்தது.
‘ஓ! நெருப்பே (என் அடியார்) இப்ராஹீமுக்கு நீ இதம் தரும்
விதத்தில் குளிர்ந்து விடு’ (அல் குர்ஆன் 21;69) என்ற கட்டளை பிறந்தவுடன் நெருப்பானது
சுட்டெரிக்கும் தன் இயல்பை விட்டு பிறழ்ந்தது. விதி தன்னை விதித்தவனின் கட்டளைக்கு
பணிந்தது . அநீதியின் ஆளுமைகளும் சராசரி மனங்களும் எதிர்பார்த்தது அங்கு நடக்கவில்லை.
மெல்ல குளிர்ந்தது நெருப்பு . இப்றாஹீம் எந்த
சேதாரமுமின்றி மிக அமைதியாக பூக்கள் நிறைந்த படுக்கையிலிருந்து எழுந்து வருவது போல
நெருப்பு கிடங்கிலிருந்து வெளிவந்தார்.
இத்தகைய தகர்க்கவியலாத உறுதியைப் பெற்றிருந்த இறைத்தூதரான இப்ராஹீம் அவர்கள் இறைவனின் உற்ற நண்பரானார்கள்.
அவர்களின் தலைமுறையினரிலும் இறைத்தூதர்களை கொடுத்து பரிசளித்தான் இறைவன். செமித்திய மதங்களான யூதம், இஸ்லாம், கிறிஸ்தவம்
என்ற முந்நதிகளின் தந்தை அவர். அவரின் அந்த
மகா உறுதிக்காக முஸ்லிம்கள் தங்கள் ஐங்காலத்தொழுகையில் நபி இப்றாஹீமுக்காக பிரார்த்தித்து
அவரை நினைவு கொள்கின்றனர்.
வானங்களும் பூமிகளும்
அவற்றில் உள்ளவையும் நீதியின் மீதே நிலை நிற்கின்றன. அனைத்துலகும் நிலை பெற்றிருக்கும்
அந்த நீதியினாலேயே இப்றாஹீமைப்போன்று நீதிக்காக
நிற்போரும் வாழ்வோரும் பாதுகாக்கப்படுகின்றனர்.
நீதியின் அந்த உத்திரவாதத்தை உறுதியாக நம்பி அதன் வழி நடப்போருக்கு
மட்டுமே எந்த அநீதியையும் எதிர்த்து நிற்கும்
வலிமை வாய்க்கின்றது . அத்தகையோர் நீதிக்காக
வாழ்வதையும் அதன் வழியில் ஏற்படும் இன்னல்களை பொறுத்துக் கொள்வதையும் அதற்காகவே இறப்பதையும்
வேறுபடுத்தி பார்ப்பதில்லை. அவர்களைப்பொறுத்தவரை வாழ்வும் இறப்பும் சம எடை கொண்டவை.
சராசரி பெரும்பான்மையினரின் கண்களுக்கு இத்தகைய அரிய நீதி
மனிதர்களின் வாழ்க்கை நெருப்புக்குள்ளிருப்பது போலவே காட்சி தரும். ஆனால் உண்மை இதற்கு
நேர்மாறானது. நெருப்பானது அத்தகைய சராசரி பெரும்பான்மை
மனிதர்களுக்குள்ளும் , நீதி மனிதர்களின் மன உலகினுக்குள் அசையாத அமைதியும் நிம்மதியும்
வீரமும் உறுதியும் குடி கொண்டிருக்கும்.
நீதிக்காக வாழும் ஆளுமைகளையும் அவர்கள் வாழும் வாழ்க்கையின்
போக்கையும் சராசரி வாழ்க்கையின் அளவு கோலினால் அளக்கவே முடியாது. தங்களுடைய சொந்த புலன்களின்
நிறைவை மட்டுமே அறுதி இறுதி இலக்காக கொண்டு வாழும் மனிதர்களாலும் அதிகாரத்தின் உன்மத்தத்தை
அருந்திக்கிடக்கும் ஆதிக்கவாதிகளாலும் நீதி
மனிதர்களின் வாழ்வின் இயல்பையும் போக்கையும் ஒரு போதும் புரிந்து கொள்ள இயலாது.
10/06/2015
No comments:
Post a Comment