Thursday 26 December 2019

2004 ஆழிப்பேரலை நினைவுகள்




எனது வாப்பா, வாப்பிச்சா வீட்டு அப்பா( வாப்பாவின் வாப்பா) ஆகியோருக்கு இலங்கையில்தான் தொழில். வாப்பா பிறந்ததுதான் இந்தியா. ஆனால் அவர்கள் படித்து வளர்ந்தது எல்லாம் கொழும்பில்தான்.

என் சகோதரர்கள் அனைவரும் இலங்கைக்கு தொழில் நிமித்தமாக சென்று வந்து கொண்டிருக்க எனக்கு மட்டும் இலங்கைக்கு போகும் வாய்ப்பு ஏற்படவில்லை.

2004 ஆம் ஆண்டு. நான் சகோதரர்களுடன் கூட்டாக தொழில் செய்து கொண்டிருந்த சமயத்தில் இலங்கை செல்லும் வாய்ப்பு பிறந்தது.

20/12/2004 திங்கள்கிழமையும் வந்தது. அதுதான் பயண நாள்.

அன்று எனது காக்கா ( அண்ணன் ) எனது கடவுச்சீட்டின் ஒளிப்படி, பயணச்சீட்டு ஆகியவற்றை எடுத்து தன் பையில் வைக்கப்போனார். 


எனது முதல் இலங்கைப்பயணத்தின் ஆவணம் என்னிடமே இருக்கட்டும் என்ற முறுமுறுப்பில் நான்  வைத்துக்கொள்கிறேனே என்றவுடன்,  இந்தாப்பிடி என்ற கரட்டு குரலில் நீட்டினார்.

இன்னொரு  காக்கா, காக்கா மகன்கள் சேர பயண துஆ( இறை வேட்டல்) ஓதி வழியனுப்ப  இளம் வெயில் விரவிக் கிடந்த காலைப்பொழுதில் கிளம்பினோம். 

கொழும்பு வானூர்தி நிலையத்தில் இறங்கும்போது இலங்கையின் உள்ளூர் நேரம் இந்தியாவை விட ஒரு மணி நேரம் கூடுதலாக இருந்தது. அப்போது நடந்து கொண்டிருந்தது சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சி. இந்தியாவின் மீதுள்ள வெறுப்பும் இப்படியான நேர மாற்றத்துக்கு காரணம் என தெரிந்தவர்களின் கிசுகிசுப்பு வேறு. நேரத்துக்கும் தேசத்துக்கும் என்ன தொடர்போ? எல்லாம் புவி அரசியலுக்கே வெளிச்சம்.


ஹஜ்ஜுக்கு போன பிறகு நான் போகும் முதல் வெளிநாட்டுப்பயணம். நான் இப்போது எனது தேச எல்லைக்கப்பால் இருக்கின்றேன். எனது பிறந்த மண்ணில் இல்லை. எனது பணம், செல்பேசி எண், எனது ஊர், நான் என எதுவுமே இங்கு செல்லாது என்ற அறிதலில் என்னை நான் எல்லையிலி பறவையைப்போல உணர்ந்தேன்.

கொழும்பில் நான் கால் வைத்த சில மணி நேரங்களில் இரண்டாம் குறுக்குத்தெருவில் இருந்த எனது வாப்பாவின் கடை இருந்த இடத்தைதான் முதலில் போய் பார்த்தேன். இலங்கையுடனான எனது மொத்த இளம் பருவத்து நினைவுகளும் ஒரு கணம் மீண்டு நிறைந்தது.வாப்பா வழியாக மட்டுமே இலங்கை பற்றிய கனவுகளை சிறு பிராயம் முழுக்க கண்டதன் விளைவு அது. 

புதிய நாடு உண்டாக்கும் பரபரப்பு அடங்குவதற்குள் அந்த நாள் வந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை சுபஹ் தொழுகை, நிஜாமிய்யா கடையின் நிறை குவளை தேநீர், சிறு கடி, குளியல் என எல்லாம் கழிந்து பேருவளைக்கு புறப்பட அணியமாக இருக்கும்போது அறையின் கதவை தள்ளிக் கொண்டு “தொர’ என்றவாறே வெற்றிலைக்கறை படிந்த பற்களுடன் நுழைந்தான் செல்வராஜ். 

அவன் இந்திய தலைமுறைத் தமிழன். வேர்கள் மதுரைப்பக்கம். எங்களூர்காரர்கள் அனைவரின் இருப்பிடங்களுக்கும் சென்று பணிவிடைகள் செய்து காலத்தை ஓட்டுபவன்.

"டேய் பொறப்புடுற நெரத்துல வந்திருக்கிறியே "என்றார் காக்கா. செல்வராஜ் தன் கையில் வைத்திருந்த மின்னேற்றம் செய்யக்கூடிய சுவர் விளக்கொன்றை அவரிடம் நீட்டினான். "இத வச்சுக்கிட்டு எழுநூறு ரூபாய் தாங்க தொர" என்றான். அவன் வரும்போது சரியாக காலை எட்டு மணி பத்து நிமிடங்கள்.

காக்கா அதை  கையில் வாங்கியவாறே தன் வெள்ளெழுத்து கண்ணாடியை மாட்டினார். மர நாற்காலியில் அமர்ந்து கையை ஊன்றிக் கொண்டு அந்த சுவர் விளக்கை புரட்டி கூர்ந்து பார்த்து வாசிக்க தொடங்கினார். "இந்த விளக்கு ரிப்பேராகி விட்டது சரியாக வேல செய்யாது எண்டு எழுதியிருக்குதுடா "என செல்வராஜ் காதுகளுக்கு தப்பாமல் கேட்கும்படியாக முனகினார்.

சிறிது ஏமாற்றமடைந்த செல்வராஜ் சுதாரித்துக் கொண்டு "அது பழுதுண்டுலாம் ஓரு கம்பனில போடவா செய்வாங்க தொர" என்றவாறே தன் காவி பற்களை திறந்தான். கண்ணுக்குள் குரங்கு சிரித்தது. ஒரு வழியாக இலங்கை பணம்  நானூறை  அவன் கையில் திணித்து விட்டு புறப்படும்போது மணி 08:25.

புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து காலி செல்லும் பேருந்தில் ஏறினோம். காலை வெயில் கடலின் உப்பு சேர்மானத்தோடு சுள்ளென தோலுக்குள் இறங்கியது. கொள்ளுப்பிட்டி,பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கல்கிஸ்ஸை என வேகமெடுத்த பேருந்து களுத்துறையை நெருங்கும்போது சாலையின் இரு மருங்குகளிலும் ஆட்கள் கையில் ஞெகிழி பைகளுடன் பதற்றமாக ஓடி வந்துக் கொண்டிருந்தனர். கொஞ்சம் பேருக்கு உள்ளாடை மட்டுமே இருந்தது. சரக்கு வண்டிகள் பேய் வேகத்தில் சாலைகளில் பாய்ந்து கொண்டிருந்தன. ஏதோ தொடர்வண்டி விபத்து என்பது போல வண்டிக்குள் பேசிக் கொண்டனர்.

களுத்துறையின் வங்காள விரிகுடாவில் சங்கமிக்கும் கலுகங்கை நதி மீதான பாலத்தில் பேருந்து வந்து கொண்டிருந்தது. நீர் பரப்பு மயில் தோகை போல படர்ந்து இளம் நீல நிறத்தில் திலங்கிக் கொண்டிருந்து,  இடது பக்க கரையோரம் இரு படகுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. விடலைப்பையனின் உயரமளவிற்கு தலை வளைந்த அலையொன்று கிளம்பி அந்த இரு படகுகளையும்  ஒன்றுக்கொன்று மோதச்செய்தது. டமார் ஓசை என் செவுளுக்குள் இறங்கியது. நதியில் அலை எழும்புவதை முதன் முதலில் இப்போதுதான் பார்க்கின்றேன்.

களுத்துறை கழிந்து கட்டுக்குருந்தன் தொடர்வண்டி நிலைய அணுகு சாலை சந்தியில் பேருந்தை பொதுமக்கள் மறித்தார்கள். இதற்கு மேல் பாதையில்லை. போகாதீர்கள். உயிருக்கு உத்திரவாதமில்லை என்றனர். அனைவரும் இறங்கினோம். காலை ஒன்பதரை மணி.

பேருவளைக்கு இன்னும் 11.50 கிமீ தொலைவிருக்கின்றது. கொழும்பு – காலி சாலையில் நடக்கத் தொடங்கினோம். எங்களுடன் பேருவளையைச்சார்ந்த ஒருவரும்வந்தார். சாலையில் ஆங்காங்கே உடைந்த கண்ணாடி சில்லு போல தண்ணீர் தேங்கிக் கிடந்தது.திடீரென சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து ஒருவர் ஓடி வந்து கதி கெட்ட பாங்கில் கைகளை  சுழற்றி “ வத்துரு ஆயினவா வத்துரு ஆயினவா”  என  சிங்களத்தில் கூக்குரலிட்டார்.

உடன் வந்த பேருவளைக்காரர், உடனே எங்களைப் பார்த்து தண்ணி வருவுதாம். உள்ளுக்குள்ள ஓடுங்க என்றார். பாதணிகளைக் கழற்றி கையிலெடுத்த மேனிக்கு உட்புற சாலையில் ஓடத் தொடங்கினோம்,  இறுதிப்பொழுது நெருங்கி விட்டது என மூளை முடிவெடுக்க கலிமாவை( இறை நம்பிக்கை சாட்சி சொல்) ஓதி விட்டேன்.

சிறு வயது சேட்டைகளின் எதிர் விளைவுகளிலிருந்து தப்புவதற்காக பாதணிகளைக் கழற்றி ஓடிய பிறகு  தண்ணீரின் விரட்டலில் இரண்டாம் முறையாக பாதணி நீக்கம்.

ஓடி ஓடி மேடான பகுதிக்கு வந்தோம். அங்கு நின்றிருந்த வீட்டின் வெளிப்புற சுவரை ஒருவர் சுட்டிக்காட்டினார். ஓராள் உயரம் அளவிற்கு கடல் நீர் வந்து நின்று போனதற்கான ஈரத்தடம் அதில் பதிந்திருந்தது. நிலைமையின் கடுமை அப்போதுதான் தலைக்கேறியது. காலை 09:20 மணிக்கு அடித்திருக்கின்றது ஆழிப்பேரலை. சில மணி நேரங்களிலேயே  மீட்பு பணிகளும் தொடங்கியிருந்தன. மண் வாரி பொறிகள் வந்திருந்தன.

மீண்டும் எங்கள் நடைபயணத்தை வயல்களுக்குள் தொடர்ந்தோம். என் கையிலிருந்த அரச செல் சேவை நிறுவனமான மொபிடெல் மட்டும் வேலை செய்தது. தனியார் செல் நிறுவன சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. அரசு அரசுதான். தனியார் தனியார்தான் என்ற பாடம் தலைக்குள் நடந்தது.  
வழி முழுக்க சிங்கள மீனவ கிராமங்கள். எல்லோருமே சொல்லிழந்து  நின்று கொண்டிருந்தனர். 

சில கிராமங்களில் கடல் வருகின்றது என்ற புரளியிலேயே மக்கள் தட்டழிந்து கொண்டிருந்தனர் இறுதியாக பேருவளையிலிருந்து ஆறரை கிமீ தொலைவுள்ள மக்கோனை கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். கடும் தாகமும் பசியும் அச்சமும் அலைக்கழித்தது..அங்கு காக்காவிற்கு தெரிந்த வணிகரொருவர் பல்ஸர் பைக்கில் எதிர்ப்பட்டார். எங்களை ஏற்றிக் கொண்டு அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரின் உணவு மேசை மீதிருந்த சின்னஞ்சிறு வானொலிப்பேழையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்தியறிக்கை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

இலங்கையில் மட்டுமில்லை இந்தியா , மாலத்தீவு, இந்தோனேஷியா, தாய்லாந்திலும் கடல் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அறிவித்தார்கள். செய்தி முடிவதற்குள் சுடு சோறும் பருப்பு கறியும் சுட்ட கருவாடும் வந்து சேர்ந்தது. கட்டுரையின் முன் பகுதியில், களுத்துறையில் சரக்கு ஊர்திகள் பேய் வேகத்தில் போயின என்ற வரியிருக்கும். பின்னர்தான் தெரிய வந்தது, அந்த வண்டிக்குள் சரக்குகளாக இருந்தவை  சடல கொத்துக்கள்.

உண்டியாசனம் முடித்து விட்டு ஆட்டோ ஒன்றை பிடித்து உள் கிராமங்களின் வழியாக பேருவளையை வந்தடைந்தோம். அப்போது மதியம் மணி மூன்று.  கொழும்பு – காலி பிரதான சாலைக்கு வந்தோம்.  நடுக்கடல் வாழ் பெரும் மீன் பிடி படகுகள் சாலைக்கு நட்ட நடுவே நின்று கொண்டிருந்தன. கடல் கொண்டு வந்து கொட்டிய குப்பை கூளங்களுக்கு நடுவே  நீள் முக்கு சுறா போல அவை காட்சியளித்தன. சாலையோரம் இருந்த சில வீடுகளின் முன்புற வாசலுக்குள் போய் செருகி கிடந்தன பெரும் மீன்பிடி தோணிகள்.

பேருவளை சீனன் கோட்டை நன்கு மேடான பகுதி என்பதால் பிரதான சாலைக்கு வந்த ஆழிப்பேரலை உள் நுழையவில்லை. அங்குள்ள ஜூமுஆ மஸ்ஜிதில் கரையோர மீனவ சிங்களர்களும் முஸ்லிம்களும் வெளிநாட்டவரும் தஞ்சம் புகுந்திருந்தனர். கொப்பரைகளில் அவர்களுக்கான உணவு வெந்து கொண்டிருந்தது. குழந்தைகளுக்கான பால் மா பொதி வண்டியில் இறங்கிக் கொண்டிருந்தது. பேருவளையின் கடல் பக்க குடியிருப்புக்களில்தான் இழப்பு கூடுதலாக இருந்தது.

மதியம் வாக்கில் பிரதான சாலையில் காக்காவை அவருக்கு பழக்கமான ஆளொருவர் சந்திததார். "மச்சான்! சுனாமிக்கு பொறவு காலய்லேருந்து கடல் ஸைலன்ஸ். இப்பத்தான் அது குரடிய( ஓசை எழுப்புகின்றது) அப்ப கடல் நோமல்" ( நாமல் – இயல்பு நிலை) என்று தன் தூக்கலான பற்கள் காட்டியவாறே நிம்மதியாக சிரித்தார்.  

ஊடகங்களில் இரவுதான் சுனாமி என்ற பெயர் உச்சரிக்கப்படுகின்றது. இதற்கிடையில் சென்னை மெரினா கடற்கரை தமிழகத்தின் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெருமளவிலான உயிர் பொருள் உடைமை சேதாரங்கள் பற்றி தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பத் தொடங்கி விட்டிருந்தன. சென்னை ஆழிப்பேரலை காட்சிகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். சிவப்பு நிற காரொன்று மெரினாவின் சுனாமிச்சுழலில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

பேருவளை கடைத்தெருவில் உள்ள கடைகளில் உள்ள அனைத்து பொருட்களும் கடல் நீரில் சேதாரமாகி விட்டன. மாடிக் கடைகள் மட்டுமே தப்பின.
இரண்டாம் நாளிலேயே சாலையில் குவிந்திருந்த ஆழிப்பேரலை கொட்டிய குப்பைகளையும் தோணி படகுகளையும் மீட்பு படையினர் அகற்றி போக்கு வரத்தை மீட்டனர்.

மீட்பு பணியில் இலங்கையினரின் துரித செயல்பாடு நம் நாட்டை விட பல மடங்கு கூடுதல்.

நாங்கள் கொழும்பு சென்று விட்டு இரண்டொரு நாள்கள் கழித்து மீண்டும் பேருவளையின் அருகமை ஊரான பய்யாகலவின் தொடர் வண்டி இருப்பு பாதைகளை பார்த்தோம். முறுக்கி பிழியப்பட்ட கயிறு வடம் போல தட்டாத்தி அரிசி முறுக்கு போல அவை திருகப்பட்டுக் கிடந்தன.

அங்கு தங்கியிருந்த ஒரு மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஆழிப்பேரலை நிகழ்வுகளை கேட்டுக் கொண்டேயிருந்தோம். தப்பியவர்கள் சொன்ன விரக்தியும் நன்றியுணர்ச்சியும் விரவிய வர்ணனைகளுடன்.

ஆழிப்பேரலைக்குள்  கறுப்பு நிறத்துடன் மண் கலங்கலாக வெந்நீரும் கலந்தே வந்திருக்கின்றது. உடலங்கள் வெந்திருந்திருக்கின்றன.  நீருடன் உப்பு மண்ணும் கலந்திருந்ததால் கொஞ்சம் நீரை உட்கொண்டவர்களும் பிழைக்கவில்லை.  வந்த அதே வேகத்தில் கடலுக்குள் மீண்டிருக்கின்றன அலைகள். வரும்போது தப்பித்தவர்களை திரும்பும்போது கொண்டு போயிருக்கின்றன.

 அலைகள் வரும்போது பெருஞ்சுவரொன்று ஓடி வருவது போல இருந்திருக்கின்றது. மருதமுனை போன்ற கிழக்கு மாகாண பகுதியில் பொங்கியெழுந்த ஆழிப்பேரலையின் திரையில் காலைக் கதிரவன் கூட மறைந்து இருள் படர்ந்திருக்கின்றது. 

கடலுக்குள் இழுபட்டுசென்ற சடலங்களை மீன்கள் உணவாக உண்டு வரும். எனவே மீன் உணவை சில மாதங்களுக்கு தவிர்ப்போம் என தவிர்த்தவருமுண்டு.

ஹிக்கடுவை பேரலிய அருகே கொழும்பிலிருந்து காலி சென்று கொண்டிருந்த தொடர்வண்டியில் பயணித்த அனைவரின் உயிர்களையும் உறிஞ்சி குடித்த பின் பெட்டியை அதன் பொறியுடன் சுழற்றி எறிந்திருக்கின்றது ஆழிப்பேரலை. அந்த பெட்டியில் பயணித்த கீழக்கரையைச்சார்ந்த, கொழும்பில் உணவகம் நடத்தி வருபவரின் மகன் ஒருவரையும்  எம்ஜியார் என்ற பட்ட பெயரிட்டு அழைக்கப்படும் எங்களூரின் கோமான் தெருவைச்சார்ந்த சமையல்காரர் ஒருவரையும் சேர்த்து கொண்டு போய் விட்டது.  

இரட்டைப்பிள்ளைகளை மூழ்கடித்த கடல் நீர் ஒரு பிள்ளையை விட்டு விட்டு மற்றொரு பிள்ளையை கொண்டு போனது, பள்ளிவாசல் கதவு நுனியில் ஆடையில்லாமல் தொங்கிக் கிடந்தது, தென்னை மரத்தை பற்றிக் கொண்டு தப்பியது, கண்,வயிறு உப்பி வெடித்த சடலங்கள் என நூறு நூறு ஆழிப்பேரலை கதைகள்  நினைவுகளின் ஆழத்தில் கிடந்து கீறிகொண்டேயிருக்கின்றன.

எந்த ஊரில் சென்று கடலையும் கரையையும் பார்த்தாலும் ஆழிப்பேரலை நினைவுகளும் உடன் எழுகின்றன. கூடவே எந்த வருடத்து டிசம்பர் வந்தாலும்தான்.











No comments:

Post a Comment