Thursday, 12 December 2019

ஆஷூரா தின( (முஹர்ரம்) நினைவுகள்








பழங்கால எகிப்து நாட்டை ஃபாரோ மரபில் வந்த  மன்னர்கள் ஆண்டு வந்தனர். இந்த ஃபாரோக்களை ஃபிர்அவ்ன் என்றழைக்கும் திருக்குர்ஆன்  அந்த மரபில் வந்த மன்னன் இரண்டாம் மகா  ரமேஸஸிற்கும் இறைவனின் தூதர் மூஸா நபிக்கும் இடையே நடந்த விடுதலை போராட்டத்தை வரலாறாக பதிந்து வைத்துள்ளது.


 எகிப்தின் குடிமக்கள் தன்னை மட்டுமே கடவுளாக வழிபட வேண்டும் என கட்டளையிட்டு செயல்படுத்தி வந்த இரண்டாம் மகா ரமேஸஸ் ஃபிர்அவ்ன் பல விதமான கொடும்  சமூக தீமைகளை எவ்வித நாணமுமின்றி செயல்படுத்தி வந்தான். மக்கள் நலன் நாடும் மன்னனாக இல்லாமல் முற்றதிகாரியாக கொடுங்கோலனாகவும் ஆண்டு வந்தான்.


அரச மரபை காப்பதற்காக மகளையும் சகோதரியையும் மணத்தல், சொந்த குடிமக்களாகிய பனீ இஸ்ராயீல் யூத இன மக்களை தாழ்த்தப்பட்டவர்களாகவும் அடிமைகளைப்போலவும் நடத்துதல் என்பன அவனது பல கொடுங்கோன்மைகளில் சிலவாகும். 


பனீ இஸ்ராயீல் என்ற யூத சமூகத்திலிருந்து தனது கொடுமைகளை தட்டி கேட்க இனி எந்த ஆண் மகனும் பிறந்து விடக்கூடாது என்ற குரூர சிந்தனை அரசனுக்கிருந்தது. அதன் தொடர்ச்சியாக பனீ இஸ்ராயீல் யூத சமூகத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளை அரசனின் படை வீரர்கள் தேடித் தேடி கொன்றனர்.


ஏழு வானங்களுக்கும் ஏழு பூமிகளுக்கும் அதிபதியாகிய இறைவன் இந்த கொடுங்கோன்மையை முடிவுக்கு கொண்டு வர நாடினான். அதன் முதல் அடியாக பனீ இஸ்ராயீல் யூத சமூகத்தில் ஒரு ஆண் குழந்தையை பிறக்க வைக்கின்றான். அதனை ஃபிர்அவ்ன் மன்னனின் கையாலேயே வளர்க்கவும் வைக்கின்றான். 


ஃபிர்அவ்னின் கரங்களிலேயே அவனது கொட்டாரத்தின் நிழலில் அந்த ஆண் குழந்தையை இறை விருப்பப்படி வளர்ந்தது. அந்த குழந்தைதான் ஃபிர்அவ்ன் அஞ்சிய ஆண் குழந்தை. பனீ இஸ்ராயீலிய யூத சமூகத்தின் மீட்பர். இறைவனின் தீர்க்கதரிசி. அன்னாரது பெயர் மூஸா நபி என வரலாற்றில் அறியப்படுகின்றது.


தீர்க்கதரிசியான மூஸா இறைவனின் கட்டளைப்படி ஃபிர்அவ்னை அழகிய முறையில் மென்மையாக நேர்வழிக்கு அழைப்பு விடுக்கின்றார். தனது அழைப்பை மெய்ப்படுத்தும் ஒன்பது சான்றுகளை அவன் முன் வைக்கின்றார். .அரசன் வைக்கும் போட்டியொன்றில் இறை உதவியுடன் வென்றும் காட்டுகின்றார்.


ஆணவத்தின் உச்சத்தில் இருந்த ஃபிர்அவ்ன் மன்னனோ " என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை. நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் .மூஸாவைக் கொல்வதற்கு என்னை விட்டு விடுங்கள்! இவரை நம்பியோரின் ஆண் மக்களைக் கொன்று விடுங்கள்! அவர்களின் பெண்களை உயிருடன் விட்டு விடுங்கள் அவர் தனது இறைவனை அழைக்கட்டும்!'' என்று கூறியவனாக மூஸாவின் நீதிக்கான அழைப்பை மூர்க்கமாக மறுதலித்தான்.


தனது அழிவிற்கான வாயிலை அவனே சொந்த கரங்களாலேயே திறந்து கொண்டான். மூஸா நபியையும் அவரது சீடர்களையும் பனீ இஸ்ராயீல் யூத சமூகத்தவரையும் தண்டிப்பதற்கு தனது பெரும் படையை தானே முன்னின்று வழி நடத்தினான்.


ஃபிர்அவ்னின் படைகள் விரட்டிச் செல்லும் நிலையில் மூஸா நபியின் கூட்டத்தினர் தப்பி ஓடினர். இறுதியில் அவர்களுக்கு முன்னே ஆர்ப்பரித்து கொந்தளிக்கும் கடல் குறுக்கிட்டது. பின்புறமோ கொல்லும் வெறியுடன் ஆயுத படைகள். மூஸாவின் சமூகத்தவர் செய்வதறியாது திகைத்து நின்றனர். உடலும் மனமும் ஒருசேர கலங்கி தத்தளித்தது. மூஸா நபியை நோக்கி ஒரே குரலில், “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்” என கூறினர்.


ஆனால் மூஸா நபியின் அகத்திலும் புறத்திலும் அமைதியும் தெளிவும் உறுதியும் நிரம்பியிருந்தது. இது அவரின் குரலிலும் நடவடிக்கைகளிலும் தொனித்தது , "அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்'' என தனது சமூகத்தை ஆற்றுப்படுத்தினார்.


அந்த நிலையில், “உம் கைத்தடியால் கடளின் மீது அடியும்” என்ற இறைக்கட்டளை பிறந்தது. இதை பார்த்து கொண்டிருந்த ஒவ்வொரு சராசரி மனதும் பின்வருமாறு எண்ணுகிறது.  “மூஸாவிற்கு என்னவாயிற்று? தப்பிக்க வழியைக் கேட்டால் இவர் தடியால் தண்ணீரின் மீது அடிக்கின்றாரே. அய்யோ இவரை நம்பி மோசம் போனோமே” என அரற்றுகிறது.


அது வரைக்கும் நுண்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த இறை சித்தமானது எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் செயல்பட தொடங்கியது.
மூஸா நபி தம் கைத்தடியால் அடித்த கணம் கடல் இரு பெரும் துண்டங்களாக பிரிந்தது. ஒன்றையொன்று பார்த்து பொங்கி நின்ற நீரிலான இரு பெருஞ்சுவர்கள். நடுவில் இருந்த நிலமோ ஈரத்தின் சுவடு கூட இல்லாமல் காய்ந்த கெட்டித் தரையாக காட்சியளித்தது.  மூஸா நபியின் தலைமையில் அவரது சமூகத்தினர் வெற்றிகரமாக அதை மிதித்து கடந்தனர்.


அவர்களை வெறிக்கூச்சலுடன் பின் தொடர்ந்த ஃபிர்அவ்னையும் அவனது சேனை முழுவதையும் கடல் பேரிரைச்சலுடன் ஆட்கொண்டது. கொடுங்கோலாட்சியானது  நீருக்குள் சமாதியானது.


பெருந்திரள் மக்களின் ஒட்டு மொத்த பதைபதைப்பு, அரச படைகளின் முற்றுகை, கொந்தளிக்கும் கடல் என எல்லா பக்கமும் நெருக்கடியானது அதன் அதி உயர் நிலையை அடைந்து மூஸா நபி என்ற தனி மனிதனை வளைத்து பிடிக்கின்றது. எந்த வெளி உதவிகளும் சாத்தியமற்று போன இந்த தருணத்தில் மூஸா நபி என்ன செய்தார்?


அவரோ ஆழ்ந்த அமைதி கலந்த உறுதியுடன் தன் சமூகத்தினரை நோக்கி, “"அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்'' என கூறிய போதுதான் மீட்பையும் விடுதலையையும் உள்ளடக்கிய இறைவனின் வழிகாட்டுதல் மூஸா நபியை வந்தடைகின்றது. கைத்தடியின் தீண்டல் வழியாக கடல் தன்னை பிளந்து கொண்டது.


உலகிலுள்ள அஃறிணை உயர்திணை உயிருள்ள உயிரற்ற பொருட்கள் படைப்புக்கள்  எதுவாயினும் அவை எத்துணை வலியதாயினும் அவை குறித்து கலங்கவோ மனம் சிதறவோ தேவையில்லை. காரணம் அவற்றின் பிடியும் கடிவாளமும் வேறு ஒரு இடத்தில் இருக்கின்றன என்ற அறிதல்தான் மூஸா நபியை அங்ஙனம் செயல்பட வைத்தது.


இந்த உலகம் உள்ளிட்ட அனைத்து அண்ட பேரண்டங்களையும் படைத்து வளர்க்கும் ஒற்றை மூல ஆற்றலின் விசை நாணுக்குள்தான் மொத்த இயக்கமும் பொதிந்துள்ளது என்ற மெய்யறிதல்தான் அது.

No comments:

Post a Comment

An Evening Train in Central Sri Lanka