விஸ்வாசப்பூர்வம் மன்ஸூர் --- 2017 ஆம் ஆண்டில் வெளியான
மலையாளத்திரைப்படம்.
எழுத்து, இயக்கம் : பி.டி. குஞ்சு முஹம்மது
நடிப்பு : பிரக்யா மார்ட்டின், ரோஷன் மேத்யூ, ஜரீனா
வஹ்ஹாப்.
ஐயமும் நம்பிக்கையின்மையும் தனிமனிதரிடையே நிலவினால்
ஏதாவது ஒரு சிறிய சமரச முயற்சியில் அது மறைந்து போவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆனால் ஐயமும் நம்பிக்கையின்மையும் நிறுவனமயப்பட்டால்
பொதுப்புத்தியாக்கப்பட்டால் சமூகத்திற்குள் அது உண்டாக்கும் விளைவுகள் என்ன ?
கேரள திரைப்பட இயக்குனர் பி.டி. குஞ்சு முஹம்மதின்
எழுத்து இயக்கத்தில் இவ்வாண்டு வெளியான “ விசுவாசப்பூர்வம் மன்ஸூர் “ என்ற மலையாளத்திரைப்படம் இவற்றைப் பேசுகின்றது.
மும்பை வகுப்பு கலவரத்தில் பாதிக்கப்பட்ட தாயும்
( சாய்ரா பானு ) மகளும் ( மும்தாஜ் ) அடைக்கலம் தேடி திருஸ்ஸூர் நகரத்தில் உள்ள மன்ஸூரின்
வீட்டிற்கு வருகின்றனர். அவர்களை ஏற்றுக்கொள்ளும் அவனது தாயார் ஃபாத்தி பீ அவர்களை
தனது தொலை உறவினர்கள் எனக் கூறுகிறார்.
முன் பின் தெரியாதவர்களை வீட்டுக்குள் எப்படி தங்க
வைக்கலாம்? ஊரில் அது எவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்தும் ? என்ற மன்ஸூரின் ஆட்சேபனைக்கு,
மனிதர்கள் மனிதர்களை நம்பாததுதான் இப்போது சிக்கல் என மறுமொழிகிறார் ஃபாத்தி பீ.
மானுடத்தின் மீதான தனது தீராத நம்பிக்கையின் வழியாக
அந்த அவநம்பிக்கையை ஃபாத்தி பீயும் அவரது மகனும் தகர்க்க முயற்சிக்கின்றனர். அதற்காக
அவர்கள் கொடுத்த மிகக் கூடிய விலைதான் படத்தின் கதை
மன்ஸூர் ஒரு திரைப்பட வசன ஆசிரியர். அதோடு அவன் கம்யூனிஸ்டும்
கூட.
சாய்ரா பானுவும் , மும்தாஜும் அவனுடைய வீட்டில் தங்கி
வருவது பலரின் கண்களையும் உறுத்துகிறது. மன்ஸூரின் தாய் மாமன், காவல் நிலையம் தேநீர்க்கடை,
என எல்லா இடங்களிலிருந்தும் வரும் அழுத்தத்திற்கு மன்ஸூரும் அவனது தாயும் அசைந்து கொடுக்கவில்லை.
இதற்கிடையில் வன்செயல் குழு ஒன்று மன்ஸூரை மதத்தின் பெயரால் அணுகுகின்றது. அவன் அவர்களை நிராகரிக்கின்றான்.
மும்பையின் வெறுப்பானது நேற்றைக்குள்ளும், ஐயமும்
நிலையற்ற நிலையும் இன்றைக்குள்ளும், இருண்ட அகழியின் வாய் போல பிளந்து காத்திருக்கும்
நாளையுமாக ரம்பத்தால் அறுபட்டு விழும் மரத்துகள் போல சாய்ரா பானுவும் மும்தாஜூம் ஒவ்வொரு
கணமும் மன வதைக்குள்ளாகின்றனர்
கண்ணாடிச்சாளரத்தின் மீது மெல்ல படியும் பனித்திவலை
போல மன்ஸூரும் மும்தாஜும் பரஸ்பரம் ஈர்க்கப்படுகின்றனர். இதற்கிடையில் மும்தாஜின் தாய்
சாய்ரா பானு உடல் நலிந்து காலமாகி விடுகின்றார்.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது
மும்தாஜூக்கு வரும் தொலைபேசி அழைப்பானது வீட்டையும் மனங்களையும் வேட்டையாடுகின்றது.
மும்தாஜின் பழைய மும்பை வாழ்க்கைக்குள் இருந்த காதலனான ஃபிரோஸின்
தொலை பேசி அழைப்புதான் அது.
வாளும் நெருப்பும் குருதியும் வன்மமும் நிறைந்த ஒரு
தெருமுனை களேபரத்தில் தாக்குதலுக்கு ஆளாகி காணாமலாகின்றான் ஃபிரோஸ். .அவனைப்பற்றிய
எந்த தகவலும் இல்லாததால் அவன் கொல்லப்பட்டிருப்பான் என்ற முடிவிற்கு மும்தாஜூம் அவளது
தாயும் ஏற்கனவே வந்து விட்டிருந்தனர்.
இந்த நிலையில் இறந்ததாக கருதப்பட்டவனின் மீள் வருகை
ஏற்படுத்திய பலமுனை முரண் உணர்வலைகளால் மும்தாஜ் அலைக்கழிக்கப்படுகின்றாள்.
ஃபிரோஸுக்கு இவர்களை விட்டால் உறவு என சொல்லிக்கொள்ள
யாருமில்லாத சூழலில் மும்தாஜ் அவனோடு செல்கிறாள்.
ஏற்கனவே மன்ஸூரை அணுகிய அந்த வன்செயல் குழுவானது
குண்டு வைத்ததாக காவல்துறையிடம் பிடிபடுகின்றது காவல்துறையின் அடி தாங்கவியலாமல் மன்ஸூரின்
பெயரையும் சொல்கின்றனர்.
காவல்துறையினரால் மன்ஸுர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு
சிறையில் அடைக்கப்படுகின்றான். இதைத் தாளவியலாமல் அவனது தாயும் இறந்து விடுகின்றார்.
பிணையில் விடுதலையாகி வெளியே வரும் மன்சூரிடமிருந்து
அவனது நட்பு வட்டமும், பழக்கமான மனிதர்களும் அஞ்சி விலகுகின்றனர். மன்ஸூர் சார்ந்திருக்கும்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும் மன்ஸூரை குற்றத்தலைமுறையின் கண்ணியாகவே பார்க்கின்றார்.
ஒரே ஒரு கட்சி தோழரும் அவரது தாயும் மட்டுமே மன்ஸூரைப்புரிந்து
கொண்டு பரிவாகப் பேசுகின்றனர்.
தனிமையின் பெருந்தீரத்தில் ஒற்றையாக நிற்கும் மன்ஸூர்
ஊரை துறந்து செல்ல முடிவெடுத்து கிளம்புகின்றான்.
ஒரு வகுப்பு வன்முறையில் மனைவியின் கண் முன்னே ஃபிரோஸ்
கொல்லப்பட அவள் கைப்பிள்ளையுடன் கிளம்பி மன்ஸுரிடமே வந்து சேருகிறாள்.
‘பிற’ வற்றின்
மீதான வெறுப்பு அவதூறைப் பரப்புகிறது. அவதூறோ ஐயத்தை பிறப்பிக்கின்றது. ஐயமோ மனிதர்களுக்கு
உள்ளேயும் வெளியேயும் எண்ணற்ற தனிமைச் சிறைகளை கட்டி எழுப்பி சக மனிதனை அதில் போட்டு
வதைக்கின்றது. செய்த குற்றத்திற்காக கொடுக்கப்பட்ட பொருத்தமான தண்டனையாகவும் அந்த வதைக்குரூரத்தை
நியாயப்படுத்தியும் பார்க்கிறது பொது மனம் .
தனிமைக்குள் சிறை பிடிக்கப்படும் மன்ஸூரும் மும்தாஜூம்
தங்களிருவரின் தனிமையை பரிமாறிக்கொண்டு அதையே பரஸ்பர விடுதலையாகவும் ஆறுதலாகவும் மாற்றிக்கொள்ளும்
இறுதிக்காட்சி. இந்தக்காட்சியின் வழியாக வெறுப்பின் முடிவிலிச்சுழல் உண்டாக்கும் வெற்றிடத்தை
மானுடத்தின் உச்சத்தைக் கொண்டு மாற்றீடு செய்கின்றார் இயக்குனர்.
No comments:
Post a Comment